தலைப்பு

வியாழன், 21 ஜூலை, 2022

சுவாமி காருண்யானந்தா | புணியாத்மாக்கள்


"புண்ணியாத்மாக்கள்" என்னும் தலைப்பு கொண்ட இந்தத் தொடரில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் அனன்ய பக்தர்களாக, அணுக்கத் தொண்டர்களாக வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரண புருஷர்களாகத் திகழ்ந்தவர்களை பற்றிக் காணவிருக்கிறோம். அந்த வரிசையில் இந்தப் பகுதியில் நம் இதயங்களைப் பரவசப்படுத்த வருகிறார் ஶ்ரீகிருஷ்ணருக்கு யசோதை போல ஸ்ரீ சத்ய சாயிக்கு கலியுக யசோதையான ஸ்ரீீமதி கர்ணம் சுப்பம்மா இதோ...!




சுவாமியின் அந்தக்காலப் புகைப்படங்களில், சுவாமிக்கு அருகில் நின்று குடை பிடித்தபடியும், குறிப்பாக காவி உடையணிந்தபடியும் காணப்படுவது சுவாமி காருண்யானந்தராகத் தான் இருக்கும். பேராசிரியர் N கஸ்தூரி அவர்களைப் போலவே  சுவாமியின் விபூதி அபிஷேக (ஷீரடி பாபாவிற்கான அபிஷேக) லீலையின்போது விபூதிக் குடத்தை ஏந்தும் பெரும்பாக்கியம் பெற்றவர் இவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள், பகவானுக்கு மிகவும் அணுக்கமான தொண்டராக அருகிலேயே தங்கிச் சேவையாற்றியவர். இளம் வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து மனிதகுல சேவைக்காக தன்னை அர்ப்பணித்த மாணிக்கங்களுள் சுவாமி காருண்யநந்தா அவர்களும் ஒருவர்.


🌷இளமைப் பருவம்:

1890ம் ஆண்டு, அப்போதைய மதராஸ் மாகாணத்தின் சித்தூர் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வெங்கட சுப்பையா. தாயார் இளம்வயதிலேயே இறந்ததால் சிறுவன், கிராமத் தலைவரின் (கர்ணம்) பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டான். அந்தத் தம்பதியினர், மிகுதியாக வேலை வாங்கினரே தவிர படிப்பைக் கவனிக்கவில்லை. பின்னர் சிறுவன், பிற உறவினர்களிடம் அனுப்பப்பட்டு   ஆரம்பக் கல்வியைப் பெற்றான். சீக்கிரத்தில் தந்தையும் அகால மரணமடைந்தார்; உறவினர்கள் சொத்துக்களை அபகரித்தனர், வெங்கடசுப்பையா அனாதையானார்.


🌷பால சுப்ப ராமதாஸ் பின்னர் சுவாமி காருண்யானந்தா:       

கர்ணம் வீட்டிலும் உறவினர்களுடனும்  தங்கியிருந்த காலத்தில், வெங்கடசுப்பையா அமரகோசம் புத்தகத்தைப் படித்தார், கோயில்களுக்குச் சென்றார், பக்தி பாடல்களைக் குறிப்பாக பத்ராசல ராமதாஸின் பாடல்களைப் பாடினார். சாதுக்கள் மற்றும் துறவிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி, அவர்களுக்குச் சேவை செய்தார்.  பெரியோர்கள் இந்த பக்தியை வியந்து அவரை பால சுப்ப ராமதாஸ் என்று அழைக்க ஆரம்பித்தனர்.  பாலசுப்பராமதாஸ் தனது ஆன்மீகத் தேடலின் விளைவாக, ரமண மஹரிஷியை திருவண்ணாமலை சென்று சந்தித்தார். பின்னர், இரண்டு புகழ்பெற்ற ஆலயங்களான ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் திருப்பதிக்கு நடுவில் அமைந்துள்ள ஏர்பேடு என்ற கிராமத்தில் மலையாள சுவாமிகளின் வியாசாஸ்ரமத்தை அடைந்து அவரது சீடரானார். ஸ்ரீ மலையாள ஸ்வாமிகள், வெங்கடசுப்பையாவை துறவு ஏற்கச்செய்து அவருக்கு 'சுவாமி காருண்யானந்தா' என்று பெயரிட்டார். பின்னர்  ரிஷிகேசத்தின் சுவாமி சிவானந்தரிடத்தும் நெருங்கியிருந்து ஆன்மீக வாழ்வை மேற்கொண்டார். 

அதன்பின், கௌதமி ஜீவகாருண்ய சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பலவிதமான சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.


🌷 இரண்டாம் "முதல் சந்திப்பு":

1958ம் ஆண்டு பகவான் பாபா, ராஜமுந்திரிக்கு விஜயம் செய்தபோது, அந்தக் கூட்டத்தில் சுவாமி காருண்யானந்தாவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியேற எழுந்தபோது,நெருங்கிப் பழகியவர் போல... பாபா அவரிடம் "நான் இங்கிருந்து காக்கிநாடா செல்கிறேன். என்னுடன் வருவீர்களா?" என்றார்; காருண்யானந்தாவும் ஒப்புக்கொண்டார். அந்தப் பயணத்தின்போது பாபா, காருண்யானந்தாவின் வாழ்க்கையிலிருந்து (காருண்யானந்தா மட்டுமே அறிந்திருந்த) பல சம்பவங்களை வெளிப்படுத்தினார். தன்னைவிட வயதில் மிகவும் இளையவரான பாபாவுக்கு எப்படி அந்த சம்பவங்கள் எல்லாம் தெரியும் என்று சுவாமி காருண்யானந்தா ஆச்சரியப்பட்டார். காருண்யானந்தா அதன்பிறகு, புட்டபர்த்திக்கு அடிக்கடி செல்லலானார்.


ஆனால் இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, தெய்வீகக்குழந்தை ஒன்று வந்திருப்பதாகக் கூறி பத்ராசலம் நகரில் ஊர்வலமாக "சத்ய நாராயண ராஜுவை"  அதாவது சத்யசாயி பாபாவைக் கொண்டு சென்றனர். நகரத்தின் பெருந்திரளான மக்கள் அந்த ஊர்வலத்தைக் கண்டனர். அந்த சமயத்தில் அங்கிருந்த சுவாமி காருண்யானந்தா  'யார் தான் கடவுளின் குழந்தை அல்ல?' என்று எண்ணமிட்டபடி அந்தக் குழந்தையின்மேல் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார். 

சுவாமி காருண்யானந்தா மட்டுமல்ல; "அடடா! பல ஆண்டுகளுக்கு முன்பே சத்யசாயி பாபாவைப் பற்றி அறிந்தேனே! அனால் கவனிக்காது விட்டுவிட்டேனே!” என்று வருந்தும் பக்தர்கள்  இன்றளவும் எத்தனையோ பேர் உள்ளனர். எனினும், இறைவனின் சங்கல்பமா? அல்லது மனிதனின் அலட்சியமா? என்ற கேள்விக்கு விடை, பகவானுக்கு மட்டுமே தெரியும்!


🌷உங்கள் வாகனம் எங்கே?:                                
1959ம் ஆண்டு ஒருமுறை காருண்யானந்தா பஸ்சில் புட்டபர்த்திக்குச் சென்றார். பயணத்தின்போது பஸ் பழுதடைந்ததால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

 காருண்யானந்தா தன் மனதிற்குள் பின்வருமாறு யோசித்தார், "இந்த பாபாக்கள் ஏன் சாமானியர்களுக்கு எட்டாத தொலைதூர இடங்களில் வசித்து, பக்தர்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்குகிறார்கள்?".

பஸ் சரிசெய்யப்பட்டு, அதிகாலை புட்டபர்த்தியை அடைந்தார். ஸ்ரீ கஸ்தூரி மூலம், காருண்யானந்தாவைத்  தன்னிடம் அழைத்து வரும்படி கேட்டுக் கொண்ட சுவாமி அவரிடம் "உங்களிடம் எத்தனை கார்கள் உள்ளன?" என்று கேட்டார். ஸ்ரீ காருண்யானந்தர், "எங்களிடம் 2 ஜீப், 1 கார் மற்றும் 1 வேன் உள்ளது" என்று பணிவுடன் பதிலளித்தார். பாபா மீண்டும் வினவினார், "அப்படியானால் நீங்கள் ஏன் பேருந்தில் பயணம் செய்தீர்கள்?" பாபா மேலும் குறிப்பிட்டார், "’4 வாகனங்கள் இருந்தும் நீங்கள் பேருந்தில் வந்தீர்கள், ஆனால் இந்த பாபாக்கள் ஏன் பக்தர்களின் கைக்கு எட்டாத தொலைதூர இடங்களில் வசிக்கிறார்கள் - என்றும் நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள் என்றார். இந்த சம்பவம் பகவான் பாபாவின் அன்றாட நிகழ்வுகளில் சர்வ சாதாரணமான ஒன்றுதான். ஆனால் கருணையானந்தாவுக்கோ அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பகவானின், எங்கும்நிறைப் பேரறிவுக்கு மற்றொரு சான்று அவருக்குக் கிடைத்தது.


 🌷 வெள்ளத்தின்போது ஆற்றைக் கடத்தல்:

ஒருமுறை, பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவும், சுவாமி காருண்யானந்தாவும் கோவூர் வழியாக ராஜமுந்திரிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படலாம் என மக்கள் அச்சமடைந்தனர். வெள்ள அபாய எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டரும், போலீஸ் சுப்பரின்டெண்டும் இதை நேரடியாக ரோந்துசென்று கண்காணித்தபடி இருந்தனர். பாபா கோவூர் அருகே ஆற்றைக் கடந்து மறுகரையில் உள்ள ராஜமுந்திரியை அடைய விரும்பினார், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் முறையிட்டனர். 

ஆனால் பகவான் தன் பக்தர்களைச் சந்திக்க, அப்போதே ஆற்றைக் கடந்து செல்ல வேண்டுமென வலியுறுத்தினார். அதுமட்டுமல்லாமல் "எதுவும் நடக்காது என்று எழுத்துப்பூர்வமாக" அதிகாரிகளிடம் எழுதியும்கூட கொடுத்தார். பகவான் பாபாவும் ஸ்ரீ காருண்யானந்தாவும் மோட்டார் படகில் ஏறிப் பயணப்பட்ட சிறிது நேரத்தில் ஆற்றின் மறுபுறத்தை சென்றடைந்தனர். இந்த நிகழ்வை மக்கள் பலத்த ஆரவாரத்துடன் பார்த்து அதிசயித்தனர்


🌷டிரான்ஸ் லீலைகள்:

அந்த சம்பவத்திற்குப் பிறகு, பாபாவைச் சந்திக்கவும் அவருடைய தெய்வீகத்தை அனுபவிக்கவும் காருண்யானந்தாவுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. பாபா அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, துன்பத்தில் இருக்கும் பக்தர்களை மீட்பதற்காக உடலை விட்டுவிட்டு (டிரான்ஸ் நிலையில்), தூர இடங்களுக்குச் செல்வார். அந்த சம்பவங்கள் பின்னர் பாபாவால் காப்பாற்றப்பட்ட அந்த பக்தர்களால் உறுதிப்படுத்தப்படும்.  இதுபோன்ற அற்புத சம்பவங்களுக்கு பலமுறை சாட்சியாக இருந்ததால், பகவான் பாபாவின் தெய்வீகத்தன்மையில் முழு நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதில் காருண்யானந்தாவுக்கு எந்த சிரமமும் இல்லை. பல ஆன்மீகப் பெரியவர்களுடன் நெருங்கிவாழும் அனுபவம் பெற்றிருந்த சுவாமி கருணையானந்தாவிற்கு, பகவான் பாபா எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லமை படைத்தவர் என்று எளிதில் விளங்கியது. ஸ்ரீ சத்ய சாயி பாபா, ஒரு அவதாரம் என்ற முடிவுக்கு வந்தார் அவர்.









🌷விபூதி வரவழைப்பு - ஓர் மாயவித்தையோ?:

சுவாமி காருண்யானந்தா  தன் ஆரம்பகாலத்தில், பகவான் பாபா தன் கையை அசைத்து அனாயசமாக விபூதி வரவழைப்பதைப் பார்க்கும்போது, ​​இது ஒருவித காட்சி-மாயம் என்று நினைத்தார். ஒரு சமயம் சுவாமி வரவழைத்துக் கொடுத்த விபூதியை, ஒரு சிறிய காற்றுப் புகாத உலோகபெட்டியில் விரைவாகப் போட்டு சாவியால் பூட்டினார். பல நாட்கள் கழித்து திறந்து பார்த்தார்; விபூதி அப்படியே இருந்தது. அது மறைந்துவிடக்கூடிய மாயாஜாலம் அல்ல என்று அவரை நம்பவைத்தது. ஆனால் அவருக்குப் பெரிய ஆச்சர்யம் ஒன்று தசரா பண்டிகையின்போது காத்திருந்தது.

 

தசராவின்போது, அபிஷேகத்திற்காக மேடையருகே இருந்த ஒரு சிறிய மரப்பானையை எடுத்து ஷீரடி பாபாவின் சிலைக்கு மேலே கவிழ்த்த நிலையில் காருண்யானந்தாவைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னார் பாபா. பின், தனது அங்கியின் கைகளை முழங்கைக்கு அப்பால் ஏற்றிவிட்டுக் கொண்டு  தனது வலது கையை காலியான பானைக்குள் நுழைத்தார். நொடிப்பொழுதில் அது மிகவும் கனமாகிவிட்டதை உணர்ந்தார் காருண்யானந்தா. அடுத்த கணம், சுவாமி தனது கையைச் சுழற்றத் தொடங்கினார், மேலும் மேலும் விபூதி பானையிலிருந்து, வெள்ளி சிலையின் மீது ஏராளமாக கொட்டத் தொடங்கியது. சுவாமி சிரித்துக்கொண்டே பானையிலிருந்து கையை வெளியே எடுத்தார். விபூதி மழை நின்றது! ஸ்வாமி பின்னர் மற்றொரு கையைப் பானைக்குள் விட்டு சுழற்ற ஆரம்பித்தார். விபூதி மழை மீண்டும் தொடங்கியது; சிலை விபூதிக் குவிப்பில் மூழ்கியது. காருண்யானந்தாவின் சந்தேகங்கள் அனைத்தும் கரைந்தன. அதன் பின்னர் பல ஆண்டுகள் தசராவின் போது அபிஷேக மரப்பானையை வைத்திருக்கும் அந்த தெய்வீக வாய்ப்பை பகவான் பாபா, காருன்யானந்தருக்கு அருளினார்.            


🌷 குப்பையிலிட்ட உணவு - குப்பையிலிருந்தே உண்ணப்படும்:

ஒருமுறை காருண்யானந்தா சுவாமியுடன் மும்பை சென்றிருந்தார். தர்மக்ஷேத்ராவின் கீழ்த்தளத்தில் காருண்யானந்தா தனது அறைக்கதவை உள்ளிருந்து பூட்டி விட்டு ஓய்வெடுக்க முடிவு செய்தார். அப்போது அந்த அறையின் ஜன்னல் வழியாக சுவருக்கு அப்பால் இருந்த சேரியினை அவர் பார்க்க நேர்ந்தது. சில குழந்தைகள், தூக்கி எறியப்பட்ட சாப்பாட்டு இலைகளிலிருந்து மீதவுணவை எடுத்து உண்ணத் தெருநாய்களுடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர்! இந்தக் காட்சி அவருக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.

"கடவுள் மனித உருவில் இருக்கும் போதுமனிதர்கள் தூக்கி எறியப்பட்ட உணவை சாப்பிட நாய்களுடன் போட்டியிடுவது எவ்வளவு முரண்?" என்று திகைப்புடன் சிந்திக்கத் துவங்கினார். அந்த எண்ணத்தை அவர் முழுதாக சிந்தித்து முடிக்கும் முன்பே, அவரின்  தோளின்மேல்  ஒரு மென்மையான ஸ்பரிசத்தை உணர்ந்தார் காருண்யானந்தா. திரும்பிப் பார்த்தால் அங்கே அவர்முன் சுவாமி நின்றுகொண்டிருந்தார்.

சுவாமிநான் கதவை உள்ளிருந்து பூட்டினேனே... எப்படி என் அறைக்குள் நுழைந்தீர்கள்?

காருண்யானந்தாநான் உள்ளே வர விரும்பினால்ஒரு தாழ்பாள் என்னைத் தடுக்குமாநான் உன்னை சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்ல வந்தேன்” என்றார் சுவாமி.

மூடிய கதவு வழியாக சுவாமி வந்ததை காருண்யானந்தா ஜீரணிக்க சில நொடிகள் ஆனது. அவர் ஜன்னலின் வழியாகக் கண்டிருந்த  காட்சியின் பாதிப்பால், "எனக்கு சாப்பிட மனமில்லை சுவாமி" என்றார். "ஏன்?"; வினவினார் சுவாமி.

"சுவாமிஎனக்கு ஒரு சின்ன சந்தேகம்.  கடவுளின்  அவதாரமாக இந்த உடலில் இந்த நொடியில் இங்கே இருக்கிறீர்கள். ஆனால் அங்கே பாருங்கள்அந்தச் சுவருக்குப் பின்னால்சில குழந்தைகள் தெருநாய்களுடன் சண்டையிட்டு குப்பையிலிருந்து உணவு சேகரிக்கிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது சுவாமி?"


சுவாமி மிகுந்த பொறுமையுடன் பின்வருமாறு விளக்கினார். “காருண்யானந்தாநீங்கள் பார்ப்பதை நான் பார்க்கவில்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால் நான் காண்பதை நீங்கள் அறியமாடீர்கள். அங்கு நீங்கள் பார்க்கும் பிறவிகள் தங்களுடைய முந்தைய வாழ்க்கையை எளிதாகவும் ஆடம்பரமாகவும் கழித்தனர். விதவிதமான செழுமையான உணவுகள் நிறைந்த மேசைகளில் இருந்துஇங்கும் அங்குமாக சிறிது சாப்பிட்டுவிட்டுவெறுக்கத்தக்க வகையில் உணவுப் பதார்த்தங்களை வீணடித்தார்கள். விலைமதிப்பற்ற உணவைஅவர்கள் சாப்பிட்டதை விட அதிகமாக வீணாக்கினர். அவர்கள் முன்பு அலட்சியமாக வீணடித்துகுப்பையில் போட்ட அத்தகைய உணவை இந்தப் பிறவியில் எடுத்து உண்கிறார்கள்". காருண்யானந்தாவுக்கு அது ஒரு முக்கியமான பாடமாக இருந்தது. கடவுளின் ஞானத்தை நாம் கேள்வி கேட்கும்போது, நமது 'ஞானம்' சிறந்தது அல்லது நமது இதயம் அவரை விட 'இரக்கமானது' என்ற அனுமானத்தை நாம் செய்துள்ளோம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சி (அல்லது) படிப்பினைகுப்பையிலிருந்து உணவு பொறுக்கும் ஏழைகளை நாம் அலட்சியப் படுத்துவதற்காக சொல்லப் பட்டதல்லஉணவை வீண் செய்தலின் பின்னே உள்ள மாபெரும் கர்மவிளைவைப் புரிந்து கொள்வதற்காக! என்று உணர வேண்டும்.

 

🌷தங்கமும் கரியும் சாயிக்கு சமமே:

சுவாமிக்கு தங்கத்தேர் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திரு சுப்ரமணியம் செட்டியாரின் குடும்பத்தினரும் இன்னும் சில பெரியவர்களும் சுவாமி காருண்யானந்தாவை நிகழ்ச்சிக்கு அழைக்கச் சென்றனர்.   அவர் அந்த சமயத்தில் சுவாமியின் ஓர் அங்கியின்  கிழிந்த கைப்பகுதியை நூல்கொண்டு தைத்துக் கொண்டிருந்தார். மறுநாள் தங்க ரத்தத்தில் பவனி வரும் சுவாமியின் ஆடை தையலிடப்பட்ட பழைய ஆடையாஎன்று  வந்திருந்தவர்கள் பெரிதளவில் அதிர்ச்சியடைந்தனர். செட்டியார் கேட்டார், "ஏன்? (சுவாமிக்கு)இவ்வளவு பெரிய அறக்கட்டளை மற்றும் பணம் இருந்தும்ஸ்வாமிக்கு ஆடை எதுவும் இல்லையா?". அதற்கு காருண்யானந்தா, "பக்தர்கள் அவருக்கு ஆடை சமர்ப்பித்தால் ஏற்றுக்கொள்வார். ஆனால் அதற்காக அறக்கட்டளை பணத்தை அவர் பயன்படுத்த மாட்டார். நாளை அவர் கிழிசல் மறைக்கப்பட்ட இந்த அங்கியில் தான் தரிசனத்திற்கு வருவார்" என்றார். செட்டியார் உடனே தன்  பாதுகா டிரஸ்ட் உறுப்பினர்களிடம், "நாம் அனைவரும் சுவாமிக்கு பல வஸ்திரங்களை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்தினமும் சுவாமி ஒரு [புதிய] அங்கியில் வர வேண்டும்" என்று கூறினார்.

 


பின்னர், திட்டமிட்டபடியே பல தையல்காரர்களை நியமித்து, நிறைய அங்கிகள் தைக்கப்பட்டு சுவாமிக்கு சமர்ப்பிக்கவும் செய்தனர். ஆனால் சுவாமி, மறுநாள் முதல் வெளிநாட்டு சாயி சென்டர்களின் தலைவர்களுக்குப் பேட்டி கொடுக்கும் போதெல்லாம், அந்த ஆடைகளை ஒவ்வொன்றாக பிரசாதமாக கொடுத்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல ஒருமுறை பக்தர்கள் சுவாமிக்கு கனகாபிஷேகம் செய்ய விரும்பினர். கனகாபிஷேகம் செய்யக் கொணர்ந்த பொற்காசுகளை சுவாமி (வழக்கமாக) சாக்லேட்டுகளை வீசுவதுபோல தரிசனத்திற்காக மணலில் அமர்ந்திருந்த  மக்களின் மீது வீசி பிரசாதமாக அருளினார். சுவாமிக்கு கரியும் தங்கமும் சமமேசுவாமி மதிப்பதெல்லாம் நமது பிரேமை ஒன்றையே !

 

🌷நிறைவான பயணம்:

காருண்யானந்தா 1972ம் ஆண்டு தன்னுடைய சொந்த ஜீவ காருண்ய சங்கத்தையும்கூட மூடிவிட்டு தன் முழு ஆற்றலையும் சத்யசாயி பாபாவின் சேவைக்கே செலவிட்டார். பின்னர் 1987 செப்டம்பரில், பிரசாந்தி நிலையத்திற்கு வந்து நிரந்தரமாகக் குடியேறினார்.


விழாக்களின் போது பாபாவின் நாற்காலியின் பின்னால் சுவாமி காருண்யானந்தா அமர்ந்திருப்பார். மேலும், சுவாமி வெளியூர்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவருடன் செல்வார். தினமும் பாபாவுடன் உணவருந்துவார். நூற்றாண்டை எட்டியவர் என்றாலும், எப்போதும் சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் தோன்றினார்; நல்ல பார்வையுடன் ஆரோக்கியமாக இருந்தார், மேலும் பகவான் பாபாவின் அருளால் வாக்கிங்-ஸ்டிக் உதவியின்றி நேராக நடந்தார். சுவாமி காருண்யானந்தா தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து மனிதர்களுக்கும் தன்னலமின்றி ஆற்றிய சேவைகளுக்கான தெய்வீக அங்கீகாரத்திற்கு அவரது வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.


துறவி காருண்யானந்தா 1997ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி தனது இறைவனின் தாமரைப் பாதங்களில் இணைந்தார். அன்று மாலை சுவாமி, தன் தசரா சொற்பொழிவில்... காருண்யாந்தா அவர்களின் நிறைவான வாழ்க்கையைப் பற்றியும், அவரின் அமைதியான இறப்பைப் பற்றியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக