நோய்கள் கர்ம விளைவுகளால் வருபவை... மன நோய்களும் அவ்வகையே... அப்படி கேன்சர் எனும் கொடும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் நாட்களும்... அவளது அணுகுமுறையும் சிலிர்க்கக் கூடிய அனுபவம் நெகிழ்வாய் இதோ...
1967 ல் ராதிகா எனும் பெயர் கொண்ட குழந்தை பிறக்கிறது... 1970 ல் அவளது 3 வயதிலேயே பாலவிகாஸ் வகுப்பில் ராதையாக அசத்தலாக நடித்து பார்வையாளரை மெய் மறக்கச் செய்கிறார்! ராதிக ஜுவனா கிருஷ்ண ஜனார்த்தனா எனும் படி அவள் பாபா பக்தை... கேந்த்ரிய வித்யாலயத்தில் 85 சதவிகிதம் மதிப்பெண் பெறும் மதியான பெண் குழந்தை ராதிகா... அது மட்டுமல்ல பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டி, கை வண்ண ஓவிய கலையிலும் சிறந்து விளங்குகிறாள் சகல கலா வல்லியான குழந்தை ராதிகா! இது அபூர்வம்... பல கலைகளிலும் கோலோச்சுவது பாபா அருளே... அது மட்டுமல்ல அவளின் சிறப்பம்சம்... அப்பேர்ப்பட்ட திறமை இருந்தும் கர்வமில்லாமல் இருப்பது... பணிவே உயர் ஜோதியை உயிரில் ஏற்றுகிறது! அறுசுவை உணவு அருகிலிருந்தும் ஜீரணம் ஆகாத உணவாக இருந்தால் யார் அதை அணுகுவர்? அது போல் தான் பணிவில்லா திறமை பாதாளத்தில் விழுகின்ற அருவிக்கு சமம்!
ஒருமுறை அவளது கை வினை கலை நயங்கள் கண் காட்சிக்கு வைக்கப்படுகிற போது "நான் போன பிறகும் இவை எல்லாம் என்னை உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்!" என அர்த்தமாய்ப் புன்னகைக்கிறாள்... காரணம் அவளுக்கு ஏற்பட்ட ஒரு வகையான அபூர்வ புற்றுநோய்... பெயர் galloping cancer... நுரையீரல் புற்றுநோய்...13 ஆவது வயது நிறைகிறது ராதிகாவுக்கு.. அது 1981... அவளது மருத்துவமனை தங்குதலிலும் அவளது முகம் மலர்ந்தே இருக்கிறது!
"உனக்கு வலியே இல்லையா?" என மருத்துவர் கேட்க...
"வலிக்கிறது என நான் வாடிப் போனால் என்னை பார்க்க வருகிறவர்கள் எவ்வளவு வாடிப் போவார்கள்...? அதனால் தான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்! எனக்கு வந்திருப்பது உயிராபத்தான நோய் என்று தெரியும்! ஆனாலும் நான் பயப்படவில்லை!" என்கிறாள்... அப்போது ராதிகாவுக்கு 13 முடிந்து 14 ஆவது வயது...!
"அதெப்படி பயமில்லாமல் இருக்கிறாய்?" என மருத்துவர் ஆச்சர்யப்பட்டுக் கேட்கிறார்...
"பயமா...? எனக்கா...? (சிரிக்கிறாள்) என் பிரபு என்னை கவனித்துக் கொள்கிறார் என்பதால் எனக்கு எந்த பயமும் இல்லை !" என்கிறாள் மிக நிதானமாக...
"அது யார் உன் பிரபு?" என டாக்டர் ஆச்சர்யம் பூச்சொரியும் அளவிற்கு கேட்கிறார்!
"யாரா? பகவான் சத்ய சாயி பாபா! எனக்கு சகலமும் அவர் தான்!" என நெகிழ்ந்து போகிறாள்...
"அய்யய்யோ சுவாமி என்னை காப்பாற்றி விடு! இதென்ன அநியாயம்... நான் என்ன பாவம் செய்தேன்?" என்றெல்லாம் அவள் பாபாவிடம் கெஞ்சிக் கதறி மன்றாடி வேண்டிக் கொள்ளவில்லை.. நிதானமாக அமைதியாக இருக்கிறாள்... அது தான் பக்தி!
டாக்டரே கண் கலங்கிவிடுகிறார்... "கண்ணா... மெய்யாகவே பாபா உன்னை கவனித்துக் கொள்ளட்டும் !" என அவள் தலை தடவி கன்னம் தடவி விட்டு கண்கலங்கிச் செல்கிறார்!
அப்படியே நாட்கள் ஆமையாய் நகர... பழரசம் தவிர எதையும் பருக முடியாத சூழ்நிலை ராதிகாவுக்கு ஏற்படுகிறது... தன்னைப் பார்க்க வரும் நபர்கள் கொண்டு வரும் பழங்கள் பிஸ்கட்டுகள் அவற்றை எல்லாம் "நான் சாப்பிட முடியாட்டா என்ன? பாவம் அவங்க சாப்ட்டாங்களா தெரியல.. நான் போய் கொடுத்துட்டு வரேன்!" என பக்கத்து பெட் முதல் பக்கத்து வார்ட் வரை அவளது கருணைக் கரங்கள் நீள்கிறது... இதில் பாபா விபூதியை எடுத்து "உங்க இஷ்ட தெய்வத்த நெனச்சுக்கோங்க!" என நோயாளிகளுக்கு தன் கையாலேயே விபூதி இட்டு வாயிலும் போடுகிறாள்...! இந்த வைராக்கிய பிரேமையை எங்கிருந்து ராதிகா பெற முடியும் ஆன்ம ஞானத்தை பாபா வழங்காமல்...!
பாட்டி ஒருமுறை வந்து ஓவென அழுகிறாள்... "நான் போய்ட்டா நீ எப்படி அழுவ ன்னு என்னால பார்க்க முடியாது... அதனால இப்பவே அழுது காட்டறயா?" என ராதிகா சிரிக்கிறாள்... அந்தப் பிஞ்சால் எப்படி இத்தகைய ஆன்ம ஞானத்தில் பழுக்க முடிந்திருக்கிறது! இத்தகைய மனநிலையை தாண்டிய துறவு நிலை ஏதுமில்லை!
தீபாவளி சமயம் அப்படியே சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு புன்னகை ததும்ப வெடி வெடிப்பதைப் பார்க்கிறது ராதிகா எனும் ஞான ஜோதி..
வீட்டு பஜனையில் பாபா கீதங்கள் பாடுகிறது அந்த பிரேம கங்கை ராதிகா! அவள் ஏதோ இது சொர்க்கம் என பூமிக்கு முகவரி தவறி வந்த ரிஷிதேவதை என்றே தோன்றுகிறது!
பிறகு மருத்துவமனையில் பரிசோதனைக்குச் செல்லும் ராதிகா "நான் சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்... என்னோடு ஒருவர் இருந்தால் போதுமே.. மற்றவர் மற்ற நோயாளிகளிடம் போய் பேச்சு கொடுங்கள்... அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்!" என்கிறார் ஞானப்பழம் ராதிகா... "சிஸ்டர் என் ஃபெல் எண் 500693.. அதை எடுத்து வாருங்கள்!" என்கிறாள்.. நர்ஸ் சோதிக்கிற போது அதே எண்.. இவளுக்கு எப்படி தெரியும் ஆச்சர்யப்பட்டுத் தருகிறார்...
நவம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனை சூப்பரின்டென்ட் சுப்பாராவை ராதிகா கைநீட்டி அவர் வானொலியில் பேசியதற்காக "வெரி என்லைட்டிங்!" என வாழ்த்துகிறாள்... இவள் சாதாரண குழந்தை இல்லை என ஆச்சர்யப்படுதிறார் அவர்!
பிறகு நிறைவு தவறுகிறது.. கோமா நிலைக்குச் செல்கிறாள்...தந்தை சங்கரன் கண்கலங்கப் பார்க்கிறார்... பாபா அனுப்பி கர்னல் ஜோகாராவ் ராதிகா தந்தை சங்கரனை தேடி வந்து பாபா கொடுத்து அனுப்பிய கடிதத்தையும் , படத்தையும் விபூதியையும் பெற்றுக் கொள்கிறார்..
"நாளை இரவு 12.30 மணிக்கு அவளை என்னுடன் இணைத்துக் கொள்கிறேன்!" எனும் செய்தி வாசிக்கிற போது... அந்த நாள் அன்றைய நாள்...
நினைவற்றிருந்த ராதிகாவுக்கு பாபா அனுப்பிய விபூதியை நெற்றியில் இட்டு பாபா அனுப்பிய பாபா படத்தை அவளது இதயப்பகுதியில் வைத்துவிட்டு... அந்த இரவு கண்கலங்கிய படி மணி என்ன என்ன? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்... சரியாக நள்ளிரவு 12.30... பாபா அனுப்பிய செய்தியின் படியே... அவளது மூச்சு பாபா எனும் அகண்ட வெளியோடு ஐக்கியமாகிறது!
அந்தப் புன்னகை உதடு மாறவே இல்லை.. ஏதோ ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவே அவள் முகம் தோன்றியது... ஜொலித்தது! 14 லே வயதான பரிபக்குவக் குழந்தை "குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி பாபா!" எனும் படி வாழ்ந்து பூமியை விட்டு பறந்து போனது... குழந்தை ராதிகா உண்மையில் நமக்கு உணர்த்துகிற வாழ்க்கைப் பாடம் "இறைவன் பாபா நம் கூடவே இருக்கையில் நமக்கென்ன குறை?!" என்பதே!
(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 263 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)
வாழ்க்கையில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்... வாழ்வை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் தான் நம் ஆன்ம முன்னேற்றம் அடங்கி இருக்கிறது! புறமல்ல அகம் சார்ந்ததே வாழ்க்கை! வலித்தாலும் புன்னகைக்கிற பரிபக்குவ நிலையே ஆன்மீக நிலை... அதை அடைவதற்கான பேரன்பும் ஆன்ம தியானமும் நமக்கு பாபா அருளட்டும்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக