தலைப்பு

சனி, 7 மே, 2022

ஒரு கம்யூனிஸ்ட் ஸ்ரீ சத்யசாயி சேவா லிஸ்ட்'டில் சேர்ந்த கதை!

கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு பாபா பக்தரானார் எனும் ஒரு பரவச அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...


அவர் பெயர் ஸ்ரீநரசிம்மரின் பெயர்... கல்லூரி காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட் கொள்கைப் பிடிமானம் உடையவராக இருக்கிறார்! அதற்காக கல்யாணமே அவர் செய்யப்போவதில்லை என்ற முடிவிலும் திகழ்கிறார்! வேறுபாடுகள் மறந்து மனிதரை ஒன்று கூடி ஒற்றுமையாக வாழச் சொல்லும் கடவுள் அவதாரங்களே கம்யூனிஸ்ட்டாக இருக்கிற போது கம்யூனிஸ்ட்டுகள் ஏன் நாத்திகராக இருக்கிறார்கள் என்பதில் அவர்கள் உணர்தலின் குறைபாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது! அந்த நபரின் சகமாணவர் பரமஹம்சரின் பெரிய பக்தர்.. விவேகானந்தரின் புத்தகத்தில் மூழ்கி முத்துக் குளிப்பவர்... ஒருமுறை இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை முற்றுகிறது... கடவுள் தான் உலகத்தை படைத்தார்.. உயிர்களைப் படைத்தார் என்பதற்கான ஆதாரமே இல்லை என்பதாக அந்த கம்யூனிஸ்ட் நபர் கடலுக்குள் இருந்தபடியே மீன் கடலே இல்லை என சொல்வதைப் போல் கதற.. அவரின் நண்பர் உண்மை தான் என  ஒப்புக் கொள்ள... ஆயினும் வாதத்தில் வென்றதைக் குறித்த மகிழ்ச்சியே இன்றி.. "என்ன தான் இருந்தாலும் என் மனம் வெறுமையாக இருக்கிறது... ஒரு பிடிமானம் இல்லை.. மனம் அமைதியாக இல்லை... எல்லாம் உடல் அளவே என்று நினைக்கிற போது மரண பயம் எனது முதுகைத் தொற்றிக் கொண்டு இதயத்தைப் பிசையத்தான் செய்கிறது.. மறுப்பதற்கில்லை!" என உண்மையை வெளிப்படையாகப் பேசுகிறார் அந்த கம்யூனிஸ்ட் நபர்! அந்த ஒப்புக் கொள்ளும் நிலை அதிலிருந்து உயர் தளத்திற்கு ஒருவரை உயர்த்துகிறது... அந்த நேர்மையும் உண்மையும் அவரிடம் இருந்தது! 


"இதற்கு மருந்து தரும் இறைவன் ஒருவன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என கேட்டுவிட்டு நள்ளிரவு 3 மணிக்கு கண்ணயர்ந்து 7 மணிக்கு எழுந்து கொள்கிறார்! மனதில் உறுத்திய கேள்வி முள்ளின் சுவடே இல்லை... மரண பயம் போன இடமே தெரியவில்லை...கொஞ்சம் கொஞ்சமாக இதயம் இறைவனின் பால் சரிய ஆரம்பிக்கிறது! அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் இருக்கிறது என்பதன் உட்பொருளை அறிய முற்படுகிறார்! நன்னெறி குறித்த உபன்யாசங்களுக்கு செல்கிறார்... அங்கே மடியாலா நாராயண பட் அந்த உபன்யாசத்தில் இறைவன் பாபாவை பற்றி இமாலய அளவு வியந்து நயந்து பேசுகிறார்.. அந்த கம்யூனிஸ்ட் பெயரில் உள்ள சிங்கம் வெளியே சீறி கர்ஜிக்கிறது.. "அது என்ன யார் யாரையோ அவதாரம் என்கிறீர்கள்?" என கோபம் கொள்கிறார்.. அதற்கு பட் பட்டென "நீங்கள் அவரை பார்த்திருக்கிறீர்களா? பேசியிருக்கிறீர்களா? அவர் எழுதிய புத்தகம் அல்லது அவரின் பக்தர்கள் எழுதிய புத்தகம்? அதையாவது வாசித்திருக்கிறீர்களா? என வரிசையாகக் கேட்கிறார் பட்... எல்லா கேள்விகளுக்கும் "இல்லை!" என்றே பதில் சொல்கிறார் அவர்.. உங்கள் லாஜிக்கின் படி பார்த்தால் கூட நீங்கள் உங்கள் கொள்கைப்படி இல்லை.. எதையும் பாராமல் .. ஆராயாமல் அனுபவிக்காமல் எப்படி ஒன்றை மறுக்க முடியும்? என்கிறார் பட்... பட்டென உறைக்கிறது அவருக்கு... 


உடனே பிரசாந்தி நிலையம் விரைகிறார் அந்த கம்யூனிஸ்ட்... அப்போது பகல் 12 மணி.. அனைவரும் பாபா தரிசனத்துக்கு காத்திருக்கிறார்கள்.. பால்கனியில் அந்த பால்முகம் கனிரசப் புன்னகையோடு வரும் என்ற பேரார்வ பக்தியில் நின்றபடியே இருக்கிறார்கள்.. அவருக்கோ பசி வயிற்றைக் கிள்ளுகிறது... அருகே நிற்பவரை கேட்கிறார் "வருவாரா பாபா?" என.. இப்போதுதான் பஜனை முடிந்து மேலே சென்றார்.. மதிய உணவுக்கு அப்படித்தான் வருவார் என்கிறார்... அங்கு நிற்பவர்கள் எல்லாம் ஏதோ ஜென்ம ஜென்மமாய் காத்திருப்பதைப் போல் காத்திருப்பதற்கான உருக்கமான முக பாவனை.. ஏதோ அந்த பாபாவிடம் என்னவோ இருக்கிறது என நினைத்துக் கொள்கிறார் அவர்.. பாபா உணவு உட்கொள்ள வருகிறார்.. பக்கவாட்டு தரிசனம் பெறுகிறார் அவர்.. ஆனாலும் கூட்டம் கலைந்தபாடில்லை... ஏன் என விசாரிப்பதற்கு.. "மீண்டும் இப்படியே வருவார்!" என்கிறார்கள்... அவரும் நிற்கிறார்.. மீண்டும் அதேவித தரிசனம்..

ஆனாலும் மனதில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை அவருக்கு... பாபா பக்தர்களை நினைத்துத்தான் "அவர்களுக்கு என்ன பக்தி என்ன பக்தி!" என பிரம்மிக்கிறார்! மாலை நேர்காணல் அறை முன்பு அமர்ந்து கொள்கிறார்... அந்த காலம் அது.. அலுவல் பக்தர்கள் யாரும் அங்கு அமராத காலகட்டம்... அவர் அமர்ந்த இடத்திற்கு அருகே பாபா பத்ரிநாத்'தில் குதிரை மேல் அமர்ந்த திருப்படம்... அதனை உற்றுப்பார்க்கிறார்.. படத்தின் கீழே "சம்பவாமி யுகே யுகே!" என எழுதப்பட்டிருக்கிறது... "நீங்கள் தான் கிருஷ்ண அவதாரம் என்றால் எனக்கு இந்த நொடியே அருகே வந்து தரிசனம் தர வேண்டும்!" என ஆழமாய் மனதில் நினைத்துக் கொள்கிறார் அந்த கம்யூனிஸ்ட்.. அடுத்த நொடி நேர்காணல் அறை படார் எனத் திறக்கப்படுகிறது.. நடுநடுங்கிப் போகிறார்.. கை எடுத்துக் கும்பிடுகிறார்... கண்ணீர் சித்ராவதிக்கு போட்டியாய் கரை புரண்டோடுகிறது... பாபா காலடியில் விழுகிறார்.. அந்த நொடி அதே நொடி.. அந்த கம்யூனிஸ்ட் கடவுள் சேவா லிஸ்ட்'டில் சேர்ந்து எண்ணற்ற சேவையை இப்போதும் செய்து வருகிறார்!


(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 163 /ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


யாவும் இறைவன் பாபா சங்கல்பப்படியே நிகழ்கிறது! நமக்கு பிடித்தமானவை எல்லாம் பாபா நிகழ்த்துகிறார்... பிடிக்காதவையை பாபா நிகழ்த்தவில்லை என நினைப்பதெல்லாம் நமது அறியாமையே! பாபா இன்றி ஓர் புல்லும் முளைப்பதில்லை! இந்த பூமியை பாபா நடத்துவதற்கு எந்த மனிதரின் ஒப்புதலும் அவர் கேட்பதில்லை... கேட்க வேண்டிய அவசியமும் இல்லை... யாரை எப்போது தன் பக்தராக்குவது... எவரெவருக்கு என்னென்ன சேவையை மாற்றித் தருவது என பாபாவே நன்கு அறிந்து வைத்திருக்கிறார்! ஆக நம் அக முன்னேற்றத்தை மட்டுமே நாம் கவனம் செலுத்தி... அடுத்தவரிடம் குறை காண்பதை நிறுத்துவதே நாம் உருப்படுவதற்கான ஒரே உயரிய வழி!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக