தலைப்பு

செவ்வாய், 24 மே, 2022

'குடி' நீரை கொக்கோ கோலாவாக்கி பாபா மதுவை குடிநீராக்கிய லீலைகள்!


ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாற முடியும் என விஞ்ஞானம் (E = MC2) சொல்கிறது... அதைப் பிரபஞ்ச சக்தியே மாற்றுகிறது என மெய்ஞானம் சொல்கிறது... தங்களது ஸித்தியை, தபோ பலத்தைப் பயன்படுத்தி மகான்கள் மாற்றுகிறார்கள்... ஆனால் தனது சங்கல்ப மாத்திரத்திலேயே இறைவன் மாற்றுகிறார்... அப்பேர்ப்பட்ட இறைவனே பாபா என உணர்த்தும் சிறிய உதாரண சுவாரஸ்ய பதிவு இதோ...


ஒருமுறை பிரசாந்தி நிலைய ஆசிரமத்திற்கு ஒரு வெளிநாட்டவர் வருகிறார்... தங்கும் அறைக்கு வந்ததும் வராததுமாக விஸ்கியை திறக்கிறார்... ஒரு  கோப்பையில் சிறிதாக ஊற்றி பாபா படத்திற்கு படைக்கிறார்... அறியாமைச் செயல் தான்! பாவம் செய்வதற்கு முன் பாபா திருப்படத்தின் முன் சொல்லி விட்டுச் செய்தால் மட்டும் புனிதமாவதில்லையே...! அப்படியே அந்தக் கோப்பை பாபா படத்தின் முன் வைத்து அப்படியே காட்டி... இன்னொரு கோப்பையில் தனக்கென ஊற்றி வாய் வழியே தொண்டையில் இறக்கும் போது... அமிலத்தன்மையே இல்லை...வியந்து போகிறார்... மீண்டும் ஊற்றிக் குடிக்கிறார்... அது பச்சைத் தண்ணீர் போல் இருக்கிறது... வியந்து போகிறார்... பொதுவாக மது சாப்பிடுகையில் எரியும் வயிற்றில் அந்த வெளிநாட்டவர் வயிற்றை தண்ணீரூற்றி மது உண்ணாமை எனும் செடி வளர்க்க ஆரம்பித்துவிடுகிறார் பாபா... பாபா படத்தின் முன் படைக்கப்பட்ட மதுக் கோப்பையைப் பார்க்கிறார்... அது நிறமற்றுப் போயிருக்கிறது! அந்த நொடியிலிருந்து அவர் மது அருந்துவதையே நிறுத்திவிடுகிறார்... பாபா எங்கும் நிறைந்தவர்... மூடிய அறையிலும் மாதவ சாயி நிறைத்திருக்கிறார் எனும் மகா சத்தியத்தை அவர் உணர்ந்து கொள்கிறார்...!


அடுத்த நாள் பாபா தரிசனத்திற்காக அமர்ந்திருக்கும் அவரிடம் பாபா மெதுவாக வந்து... அவர் எவ்வாறு முன் இரவு தனக்கு விஸ்கியை படைத்தாரோ அதை அப்படியே கைகளால் பாசாங்கு செய்தவாறு அவரை உற்று நோக்கியபடி சிரித்தவாறு கடந்து செல்கிறார்... பரமபிதா எனும் பாபா எவ்வாறு தண்ணீரை இயேசுநாதரை வைத்து திராட்சை ரசமாக்கினாரோ அவ்வாறு இப்போது தாமே விஸ்கியை தண்ணீராக்கி அந்த வெள்ளையரை மனம் திருந்த வைக்கிறார்!

சோப்ரா எனும் பாபா பக்தர் தனது பூஜையறையில் பாபாவின் திருப்படத்திற்கு முன் ஒரு கோப்பை தண்ணீர் வைக்கிறார்... மீண்டும் வந்து பார்க்கையில் அது பெருகி வழிந்து கொண்டிருந்தது... அதனை அனைவரோடும்  பகிர்ந்து கொண்டு அவர் பருகிய போது அது அவர் வைத்த தண்ணீராகவே இல்லை... அப்படி ஒரு சுவை தண்ணீருக்கு இல்லை... பரவசப்படுகிறார்... அமுதமே தான் படைத்த கோப்பையில் வழிந்ததை உணர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்... கோப்பையின் அமுதம்  கண்களில் அமுதத்தை பெருக வைக்கிறது... இந்த பூஜையறை மகிமை அவர் வீட்டில் தொடர்கிறது... 


தொழில் ரீதியான பார்ட்டிக்கு சோப்ரா செல்கையில் மதுவை ஊற்றி அவரை ஒருமுறை குடிக்கச் சொல்கின்றனர்.. தர்ம சங்கடப்பட வைக்கின்றனர்...  முழிக்கிறார்... மனம் வலிக்கிறது... பாபாவை மனதிற்குள் வேண்டுகிறார்.. "சுவாமி நான் குடிப்பது போல் வாய்க்குள் வைத்து மறைவிடத்தில் கொப்பளித்து விடுகிறேன்!" என மனதிற்குள் எண்ணுகிறார்... கோப்பை அவர் கைக்குப் போகிறது.. அப்படியே வாய்க்குள் ஊற்றி உதட்டுத் தாழ்பாளைப் போடுகிறார்... அருவெறுப்பான முகம் ஆச்சர்யப்படுகிறது! சோப்ராவால் நம்பவே முடியவில்லை... இது என்ன கொக்கோ கோலாவா? நாம் ஏற்கனவே கொக்கோ கோலா குடித்திருக்கிறோமே என அதைப் பருகுகிறார்... சோப்ரா கண் எதிரே விஸ்கி பாட்டிலில் இருந்து அவருக்காக ஊற்றப்பட்டது விஸ்கி தான் கொக்கோ கோலா இல்லை.. ஆனால் அதை அவர் பருகும் போது கொக்கோ கோலாவாக மாறி இருப்பில் பாபா மகிமையே என உணர்கிறார்... சோப்ராவின் தர்மசங்கடமான சூழலை பாபா தனது மகிமா லீலையால் மிகுந்த கருணைக் கரம் நீட்டிக் காப்பாற்றி விடுகிறார்... பாபாவுக்கு இரண்டு கரம் மட்டுமே என நினைத்தால் அது நம் அறியாமையே... காற்றெல்லாம் பாபாவின் கரமே... பாபாவின் பேரிருப்பே... காற்றா தீண்டுகிறது? இல்லை பாபாவே நம்மை தீண்டுகிறார் என்பது ஆன்ம சாதனை பழகப் பழக உணர்கிறோம்!


அனுமந்தப்பா எனும் பாபா பக்தர்.. அவரை 12 ஆண்டுகள் காக்க வைத்த பிறகே பாபா அவரை ஆட்கொள்கிறார்... ஆட்கொண்ட உடனேயே அவர் வீட்டில் உணவருந்த ஒப்புக் கொள்கிறார்... இருவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்கிறார்கள்... அவரது மகனோ நிறைய சுரைக்காயை அனுமந்தப்பா தட்டில் கொட்டிவிடுகிறார்... அனுமந்தப்பாவுக்கு சுரைக்காய் என்றாலே பிடிக்காது.. பிடித்த பொருளை காசியில் விடுவதற்கு பதிலாக பிடிக்காத சுரைக்காயை விட்டுவிட்டு இப்போது அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்... "தட்டில் மிச்சம் வைத்தால் சுவாமிக்கு பிடிக்காதே... என்ன சொல்வாரோ...? காசியில் சுரைக்காய்க்கு பதிலாக நாம் புலால் உண்பதைத்தான் விட்டிருக்க வேண்டும்... நாம் உண்பது பாபாவுக்கு தெரியுமா? என்ன நினைத்துக் கொள்வார்? " என்றெல்லாம் யோசித்து யோசித்து சுரைக்காயை சாப்பிடுகிறார் அனுமந்தப்பா...

பாபா உடனே அனுமந்தப்பாவின் மகனிடம் "நாயனா...இப்படியா சர்வ் செய்வாய்? யாருக்கு எது பிடிக்குமோ... பிடிக்காதோ... அதை மனதில் கொண்டு தான் பரிமாற வேண்டும்! சிலர் காசியில் சிலவற்றை விட்டிருப்பார்கள் அல்லவா... நீ ஏன் புலாலை பரிமாறுவது போல் பரிமாறுகிறாய்?" என உட்பொருள் வைத்துப் பேசுகிறார்... இது தான் பாபா பாணி... உடனே அனுமந்தப்பாவுக்கு உறைக்கிறது...அன்று முதல் புலால் உண்பதை அனுமந்தப்பா விட்டுவிடுகிறார்!


அமெரிக்க போஸ்டனில் மனநல நிபுணராக இருப்பவர் டாக்டர் ஜான் லெய்ஃப்... மனநோயாளிகளிடம் பழகிப்பழகி அவர் மன உளைச்சலுக்கே உள்ளாகிறார்... அவருக்கே மனநல சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்! அப்போது ஒரு நாள் பாபா அவரது கனவில் தரிசனம் தருகிறார்.. ஒரு சர்ச்சில் பத்மாசனமிட்டு பாபா அமர்ந்திருக்கிறார்... பாபாவை மனம் குளிர... அகம் சிலிர்க்க தரிசிக்கிறார்.. கனவு தரிசனம் அது...! மனதிற்கு புதுத் தெம்பு தருகிறது! பிறகு 8 ஆண்டுகள் கடந்து புட்டபர்த்திக்கு வருகிறார்... பாபாவிடமிருந்து பாத நமஸ்காரம் பெறுகிறார்! தனக்குள்ளே இருந்த மனத்தடைகள், மன உளைச்சல்கள் சுக்கு நூறாக உடைவதன் பேருணர்வை அனுபவமாகப் பெறுகிறார்!

அவரிடம் நேர்காணலில் பாபா "எஸ்டெர்டே ஹேப்பி.. டுடே அன்ஹேப்பி! லைஃப் இஸ் அன்செட்டைன்" (நேற்று சந்தோஷம்... இன்று துக்கம்... வாழ்க்கை நிரந்தரமில்லாதது!) என அவரிடம் சொல்லி... உலக வாழ்வின் நிரந்தமின்மை எனும் ஞானத்தை உணர்த்துகிறார்! அது முதல் தனது தொழிலில் பற்றின்றி பணிபுரிகிறார் லைஃப்... மன நல சிகிச்சையில் சில பொழுது சில மன நோயாளிகளை தொட்டு குணப்படுத்தும் சமயம் வரும் போதும் கூட அவர்களின் உடல் உணர்வையே தான் அடைவதில்லை என தனது உன்னத அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்!

          அக மாற்றமே பாபாவின் இலக்கு! அதற்காக... அன்பே பாபாவின் ஆயுதம்!


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி/ பக்கம் : 67/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


மதுவோ புலாலோ மன உளைச்சலோ எதனையும் பாபா அருள் நம்மை எளிதாக கடந்துவிடும்படிச் செய்துவிடுகிறது! பாபாவிடம் உறுதியான நம்பிக்கையும் எதிர்பார்ப்பற்ற பக்தியும் வைத்து "நீயே கவனித்துக் கொள் பாபா!" எனச் சொல்லிவிட்டால் போதுமானது...மது சுழலிலோ... புலால் இருட்டிலோ ... மன பூகம்பத்திலோ நாம் எதிலும் துயரப்படுவதே இல்லை! பாபா நம்மை காப்பாற்றி விடுகிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக