தலைப்பு

வியாழன், 5 மே, 2022

தாய் சொல்லை தட்டாத தனிப்பெரும் தெய்வ சாயி!

தாய்க்கும் தெய்வ சேய்க்குமான பந்தம் தனித்துவமானது.. பெரும் மகத்துவமானது... அப்படி தாய் சொல்லி தெய்வம் ஆற்றிய அற்புத மகிமை ஒன்று சுவாரஸ்யமாய் இதோ‌...


ஈஸ்வர பாபாவுக்கும் ஈஸ்வர அன்னைக்கும் உள்ள பிணைப்பு லௌகீகமானது அல்ல... ஆன்மீகமானது.. பெரும் தெய்வீகமானது...! இல்லையேல் தாய் சொல்லி தெய்வம் ஆற்றிய சேவைகள் தன் குடும்பத்திற்கு மட்டுமே இருந்திருக்கும்... தன் வீட்டை எளிமையில் வைத்துக் கொண்டு எந்த தாயும் பிறருக்கு மருத்துவமனை கட்டிக்கொடு... பள்ளி அமைத்துக் கொடு என்று சொன்னதாக சரித்திரமே இல்லை... எந்த தாய் சொல்லி பூமியில் எந்த மகனும் கேட்டது கூட இல்லை... அதற்கு முதியோர் இல்லங்களே சாட்சி! அப்படி ஒரு அன்னை இந்த பூமிக்கே தாய்மையின் தனிப்பெரும் ஒரே அடையாளம்! எப்போதும் சுவாமி தனது பௌதீகத் தாயிடம் ஹாஸ்யமாகப் பேசுவார்.. "என்ன ஜம்மென்று சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறாயா?!" என நாற்காலி அமர்வை சிம்மாசன அமர்வு போல் பெருமிதப்படுத்திக் கூறுவார்... சரிவர பள்ளிக்கூடம் போய் கல்வி கற்கா சுவாமி கோடைகால வகுப்புகளில் தனது மாணவர்க்கு சுவாமி எடுக்கும் ஆன்மீக வகுப்புகளை கண்கொட்டாமல் கண்டு களிப்பார்... பூரித்துப் போவார்.. பிறர் பாராட்டும் போது பேராச்சர்யப்பட்டு வியப்பார்.. பாபாவின் தனிப்பெரும் தெய்வீகத்தை அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து உள்ளாழ்ந்து அன்னை பக்தையாக பரிணமித்தார்!


பிரசாந்தி ஆசிரமம் இரவு ஒன்பது மணிக்கே நடை சாற்றப்படும்! நான்கு மணிக்கு திறக்கப்படும்.. அதிகாலை துயில் எழுதல் என்பது பாபா சொல்லும் நம் அதிமுக்கிய ஆன்மீகக் கடமை! இரவு பத்து மணிக்கு விளக்கணைத்துக் கொண்டால் அதிகாலை தான் எரியும்! யாரும் பாபாவின் அறையை தட்டி தொந்தரவு செய்யவே மாட்டார்கள்! ஒருமுறை நள்ளிரவில் ஒரு தம்பதியினர் தனது குற்றுயிரான குழந்தையை எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வருகின்றனர்.. ஈஸ்வரன்னை குடிலோரம் வந்து "அம்மா அம்மா" என தாயை எழுப்புகிறார்கள்.. "எங்க புள்ள சாகக் கிடக்குது.. சாமி தான் காப்பாத்தணும்!" என கையில் மயங்கிக் கிடக்கும் குழந்தையை தூக்கியபடி கதறுகிறார்கள்... வெண்ணெய் உள்ளம் ஈஸ்வராம்பாவுக்கு... உடனே நெய்யாகி உருகுகிறார்.. நள்ளிரவு என்று கூட பார்க்காமல் உடனே விறுவிறுவென சுவாமியின்  அறைக்குச் சென்று ... "சத்யா சத்யா" என கூக்குரல் எழுப்புகிறார்... எப்போதும் "சுவாமி" எனிறே பாபாவை அழைப்பவர் அப்போது "சத்யா சத்யா " என அழைக்கிறார்... ஒரு நொடி கூட தாமதிக்காமல் விளக்கு எரிகிறது.. பாபா வெளியே வருகிறார்.. தெய்வத்திரு முகத்தில் தூங்கிய களைப்பு எதுவும் இல்லை..."சத்யா.. குழந்த சாகக் கெடக்குது நீ தான் காப்பாத்தணும்!" என தாய் உரிமையோடு சொல்ல.. பாபா கையசைவில் சிருஷ்டி விபூதி அளித்து மயங்கிய குழந்தையின் மார்பிலும் நெற்றியிலும் வாயிலும் இடுகிறார்... மயங்கிய குழந்தை மறு நொடியே கண் திறக்கிறது.. பெற்றோர் மட்டுமல்ல ஈஸ்வராம்பா கூட நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்! ஏழை எளியவர்க்காக இரங்கிய தாய் அவர்! அந்த இரக்கமே ஆன்மீகம்... அந்த ஈவுத்தன்மையே தெய்வீகம்... ஏழ்மையையும் எளிய வாழ்வையும் வாழ்ந்தவர் ஈஸ்வராம்பா.. ஆகவே தான் அவரால் ஏழை எளியவரின் மனதில் அமர்ந்து உணர்வுகளை உள்வாங்க முடிந்தது! அவர்களுக்கான ஓர் மனசாட்சியின் குரலாய் ஒலிக்க முடிந்தது.. "நான் சொல்லித்தான் சத்யா மருத்துவமனை - குடிநீர்- பள்ளி எல்லாம் உங்களுக்கு எல்லாம் செய்து கொடுத்தான்!" என ஒருநாள் கூட  ஸ்ரீ ஈஸ்வராம்பா சொல்லிக் காட்டியதோ... மனதிற்குள் அதை நினைத்து கர்வப்பட்டதோ இல்லை...!


(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 94 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


அப்படி ஒரு தாய் இதுவரை அவனியில் இல்லை.. அப்படி ஒரு அவதாரம் அதுவரை அகிலத்தில் இல்லை...! கைகேயி சொல்லித்தான் சுவாமி கானகத்திற்கே சென்றார்... மாற்றான் தாய் என அப்போதும் அவர் நினைத்ததில்லை... சுப்பம்மா எனும் கலியுக யசோதையை கூட ஈஸ்வராம்பாவை எவ்வாறு நடத்தினாரோ அவ்வாறே நடத்தினார்... பாபா பேதம் பார்ப்பதே இல்லை! பாபா காட்டியது சுயநல குண்டுச்சட்டியில் ஓட்டப்படும் பாசக்குதிரை அல்ல...இறைப் பேரன்பு என்பது பரந்துவிரிந்த மானஸரோவர் எனும் இமய நதி!


  பக்தியுடன்

வைரபாரதி

1 கருத்து: