தலைப்பு

செவ்வாய், 3 மே, 2022

விசித்திர சிருஷ்டி கணையாழி தந்து விபத்திலிருந்து காப்பாற்றிய விநய சாயி!

பாபா ஒருவருக்கு சிருஷ்டித்து தருகிற அற்புதப் பொருட்கள் மிகப் பெரிய காவலின் கருணை அடையாளங்கள் எனும் பரம சத்தியத்தை உணர்த்தும் சுவாரஸ்ய பதிவு இதோ...


கொல்கத்தாவை சேர்ந்தவர் எஸ்.என் சிங். ஒருமுறை பாபாவை தரிசிக்கச் செல்கிறார்... அப்போது பாபா அவருக்கு ஒரு சிருஷ்டி மோதிரத்தை தனது தெய்வத் திருக்கரம் சுற்றி கருணை பொழியப் பொழிய தருகிறார்... சுவாமி திரேதாயுகத்தில் அனுமனுக்கு சுவாமி தந்த கணையாழியை விடவும் கருணை வாய்ந்தது இது... காரணம் அதுவோ காதலின் அடையாளம்.. இதுவோ காவலின் அடையாளம்! அவர் அந்த சிருஷ்டி மோதிரத்தை ஏன் அணிய வேண்டும் என யோசிக்கிறார்.. பாபாவுக்கு தெரியாத ஒரு மன எண்ணம் கூட மனிதனிடமிருந்து எழுந்து எங்கும் மறைந்து போய்விட முடியாது! உடனே பாபா "இதை அணிந்து கொள்.. இது வெறும் மோதிரம் அல்ல.. பெரிய ரட்சை...உன்னை காக்கும்!" என்கிறார்.. அதில் பெரிய நம்பிக்கை இல்லாவிடினும் பாபா சொல்வதற்காக அணிந்து கொள்கிறார் சிங். பாபா ஒரு தெய்வத்திருச் செயல் புரிகிறார் எனில் அதில் உள்ளார்ந்த அர்த்தம் இருக்கும்... அது மனிதனுக்கு எளிதில் புரியாது.. புரிய வேண்டிய அவசியமும் இல்லை.. புரிந்து கொண்டுவிட்டால் மனிதன் மகானாகவே உயர்ந்திருப்பான்!


சிங் லண்டனுக்கு பயணப்படுகிறார்... அங்கே ஒரு நாள் அவர் காரில் பயணித்த போது திடும் என அவர் சாலை ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்.. அவர் பயணித்து வந்த காரோ அப்பளமாய் நொறுங்கிப் போயிருக்கிறது.. பேரதிர்ச்சி அவருக்கு... அந்த பெரும் விபத்து எப்படி நேர்ந்தது.. நொடிப் பொழுதில் தான் மட்டும் எங்ஙனம் தப்பித்து சாலை ஓரம் அமர்த்தப்பட்டோம்..என எதுவும் பிடிபடவில்லை... பிரமை பிடித்தது போல் இருக்கிறது...மனம் நின்று விட்டிருந்தது... யோசிக்க முயல்கிறார்.. தான் கார் ஓட்டி பயணித்தது மட்டுமே நினைவிலிருக்கிறது... ஆனால் எது மோதியது.. எப்படி வெளியே வந்தோம்? எதுவும் மனதில் பதிவாகவில்லை... கையில் உள்ள மோதிரத்தை அப்போது பார்க்கிறார்... பாபா சொன்னதெல்லாம் அப்போது நினைவில் எழ... ஒரு சிறு ரத்த சிராய்ப்பு கூட இல்லாமல் பெரும் விபத்திலிருந்து தப்பித்திருப்பதை எண்ணி மானசீகமாக சுவாமிக்கு நன்றி சொல்லி வீட்டிற்குச் செல்கிறார்... அங்கே ஒரு தந்தி...!


தந்தியைப் பிரிக்கிறார்.. தந்தியோ சிவபூஜையில் நந்தி போல் சிங் அவரது உணர்வை முழுமைப் படுத்துகிறது.. ஆம் அந்த தந்தி பாபாவிடமிருந்தே வந்திருந்தது... அதில் பாபா "நான் உன் கூடவே இருக்கிறேன்... சந்தோஷமாக இரு! விபத்தைத் பற்றி எதுவும் நினைக்காதே -- பாபா" என எழுதி இருப்பதை வாசித்து கண்கலங்கிப் போகிறார்.. அப்போது கண்ணீர்த் துளிகள் ஆச்சர்யக்குறிகளாக அந்த தந்தியில் விழுகின்றன...!

(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 328 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


பாபா ஒன்றை தருகிறார் என்றால் அது கருணையே... அதனால் நமக்கு நன்மையே... பாபா ஒன்றை எடுக்கிறார் என்றால் அதுவும் கருணையே... அதனாலும் நமக்கு நன்மையே... கொடுப்பவர் அவரே‌... கொடுப்பவர்க்கே எல்லாம் சொந்தம்... இரவல் வாங்கிக் கொள்பவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை! கொடுப்பவரிடமே மீண்டும் ஒருநாள் நாம் எல்லாவற்றையும் ஒப்படைத்தாக வேண்டும்.. அது பொருளோ/ உறவோ...உயிரோ எதுவாயினும்...!  இதை உணர்ந்து கொண்டுவிட்டால் பாபாவின் கருணையே காவலாக மாறி இருப்பதை கணம் தோறும் நம்மால் அனுபவிக்க முடிகிறது!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக