சுவாமியின் நோய் தீர்க்கும் திருப்பாணி மிகவும் வித்தியாசமானது... நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல் சுவாமி ஒவ்வொரு பக்தருக்கும் ஒவ்வொரு வகையில் புரியும் குணப்படுத்தும் லீலையில் ஒரு நூதன முறையான திருலீலை சுவாரஸ்யமாக இதோ...
ராஜு என்கிற அந்த பாலகன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை... பிள்ளைகள் என்றாலே பெற்றோர்கள் தங்கள் வாரிசுகள் என பாசத்தோடு இருப்பர்... ஒரே ஒரு பிள்ளை என்றால் சொல்லவே தேவையில்லை...எல்லா வகையான பாசத்தையும் அந்தப் பிள்ளையிடமே கொட்டி அவனை திக்குமுக்காட வைப்பர். அப்படி அருமையாக அவர்கள் வளர்க்கிற அந்த பாலகன் ராஜுவுக்கு 18 வயது அடைகிற போது... ஒரு நாள்... திடீரென காய்ச்சல் ஏற்படுகிறது! 103 டிகிரி காய்ச்சல்.. உடம்பு கொல்லன் பட்டறையாய் கொதிக்கிறது! சூரியன் அஸ்தமனமானாலும் ராஜுவின் காய்ச்சலோ அஸ்தமனமே ஆகவில்லை!! ராஜு உடம்பில் எத்தனை ஊசிகள் போய்விட்டு வந்தாலும் அந்தக் காய்ச்சல் ஊசிப்போகவே இல்லை...! மருத்துவர்கள் சோதனை இட.. இது சாதாரண காய்ச்சல் அல்ல மூளைக்காய்ச்சல் எனச் சொல்லி விடுகிறார்கள்... பெற்றோர்களுக்கு இதயமே வெடித்துப் போகிறது! மருத்துவமனையில் அட்மிட் செய்கிறார்கள்! மூன்று மாதங்கள் கடந்து போகின்றன... எந்தவித முன்னேற்றமும் இல்லை... மருத்துவர்கள் சிக்கலான கேஸாக இருந்தால் பொதுவாக கண்ணாடியைக் கழற்றி "இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!" என உணர்ச்சியே இல்லாமல் சொல்வது போல்... "எங்களால் ஆவது ஏதுமில்லை!" எனச் சொல்லிவிடுகிறார்கள்!
ராஜுவின் வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்து கொண்டே இருப்பதில் அதை சிறு துணியால் துடைத்த வண்ணம் இருக்கிறார்கள் பெற்றோர்... டாக்டர் தனது இயலாமையை சொல்லியபிறகு பிரமை பிடித்தது போல் தாய் அமர்ந்து விடுகிறார்.. பெற்ற வயிறு பரிதவிக்கிறது! 10 மாதம் பெற்ற சிசு 3 மாதம் மரண விளிம்பில் இருக்க... செய்தவறியாது சிந்தை சிதைகிறார்கள்! பெற்றோர்கள் சுவாமி பக்தர்கள் இல்லை... சுவாமியை எந்த இறை ரூபத்தில் வழிபட்டாலும் அது தன்னிடமே சென்று சேர்வதாகச் சொல்கிறார்!! ஆக இறைவனை வழிபடும் உலகத்தவர் அனைவரும் சுவாமி பக்தர்களே!! அந்த பாலகன் ராஜு நோயாளியாக சேர்ந்திருக்கிற மருத்துவமனைக்கு சுவாமி ஒருநாள் விஜயம் புரிகிறார்! நோயாளிகளை வார்ட் வெளியிலிருந்தே தனது திருப்பார்வையால் பார்வையிட்டுக் கொண்டே வந்தவர்... ராஜுவின் வார்ட் வந்தபோது உள்ளே நுழைகிறார்!
அவசரமாக சுவாமி ராஜுவின் மருத்துவப் படுக்கை முன் நின்று... எந்த வித அருவெறுப்பும்... முக சுழிப்பும் அடையாமல் அந்த உமிழ்நீர் வடிந்த சிறு துணியை கையில் எடுக்கிறார்! எத்தனையோ புனிதத் திருநீறு சிருஷ்டித்த கரம் அது... பிரபஞ்சத்தையே படைத்து ஐந்தொழில் ஆற்றும் கரம் அது...எத்தனையோ பேர்களின் கர்மாக்களை வழிமாற்றிடும் அந்த சுவாமியின் புனிதத் திருக்கரம்... பாஞ்சஜன்யம் ஊதிய திருக்கரம்... பரசுவையும் சுதர்சனத்தையும் ஏந்திய அதே சுவாமியின் திருக்கரம் அந்த உமிழ்நீர் வடிந்திருக்கும் அந்த சிறு துணியை கையில் எடுக்கிறது... அறையில் ராஜுவோ மயங்கிய நிலையில்... தாய் பிரமை பிடித்தது போல் அறையின் ஓரத்தில்... சுவாமி அந்த துணியில் மூன்று முடிச்சுகள் இடுகிறார்... அப்படி மூன்று மர்ம முடிச்சுகள் இட்டு வெளியே சென்றுவிடுகிறார்...! ஓடி வரும் நர்ஸுகள் ராஜுவின் தாயை சுய உணர்வுக்கு வரவழைத்து "இப்போது இங்கே சாயிபாபா வந்தாரே கவனித்தீர்களா?" என்கின்றனர்... "இல்லையே! நான் பார்க்கவில்லையே.." என கணவரை தேடுகிறார்... கணவர் வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் வாங்கி சரியாக உள்ளே நுழைகிறார்...
இருவரும் தங்களின் ஒரே மகன் நீட்டிப் படுத்திருக்கும் மருத்துவப் படுக்கைக்குச் செல்கிறார்கள்... அப்போது அந்த பாலகன் ராஜுவோ தனக்கு ஏதும் நிகழாதது போல் கண்விழித்து அமர்ந்து கொண்டிருக்கிறான்...! அந்த உமிழ்நீர் கசியும் சிறு துணியில் மூன்று முடிச்சுகள் இடப்பட்டிருப்பதை பெற்றோர் கவனிக்கின்றனர்... தாய் மகனை அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்... அது சர்வாந்தர்யாமியான சுவாமிக்கு பாத அபிஷேகமாக அமைந்துவிடுகிறது!
(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 13 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு)
சுவாமியின் திருச்செயல் என்பதுமனித யோசனைக்கும், யூகத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டது...! அவருக்கு இந்த பூமியின் மேலும் பூமியின் ஜீவன்களின் மேலும் எந்த அருவெறுப்போ அல்லது வெறுப்போ இல்லை... காரணம் சுவாமியே அனைத்து ஜீவன்களுக்கான ஒரே தாய்! ஒரு தாய் எப்படி தனது பிள்ளைகளைப் பார்த்து முகம் சுழிப்பாள்? அப்படிப்பட்ட சத்தியத் திருத்தாயான சுவாமி அந்த உமிழ்நீர் வடிந்த அந்த சிறு துணியை கையில் எடுத்தது வள்ளலார் உணர்த்திய தனிப்பெருங் கருணையையே காட்டுகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக