தலைப்பு

செவ்வாய், 31 மே, 2022

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி அறிவித்த "வெற்றிக்கான ஆறு குணங்கள்!


வெற்றிக்கான குணங்களாக சுவாமி குறிப்பிடும் இவை, உலகாயத வெற்றிகளுக்கானதாகக்  காணப்படலாம். ஆனால் சரியான புரிதலுடன் ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் ஒருவர்க்கு, வெற்றி என்பது "இறைவனின் இதயத்தில் இடம் பிடிப்பது ஒன்றே" ஆகும்...

 

"உத்ஸாஹம், சாஹசம், தைரியம், புத்தி, சக்தி, பராக்கிரமம் ஆகிய ஆறு மதிப்புமிக்க குணங்களைக் கொண்ட ஒருவருக்கு எந்தத் துறையிலும், எந்த நேரத்திலும், எங்கும், வெற்றி நிச்சயம்." என்று சுவாமி சொல்கிறார்கள். எந்தத் துறையிலும் என்று சுவாமி உரைத்ததில், பக்தி மார்க்கமும் அடங்குமல்லவா!. தேர்வு/போட்டி இவைகளில்  வெற்றிபெறுதல், பெரும் பேர்/பரிசு பெறுதல்,பணம் சம்பாதித்தில், சமுதாயத்தில் உயர்தல் என்று வெற்றிக்கான களங்கள் ஆயிரம் உள்ளது உலகில். ஆனால் அவையெல்லாம், கடவுளின் பிரம்மாண்டத்தின் முன்னர் "காபி பொடி" விஷயங்கள் என்பது நாமனைவரும் அறிந்ததே!.


1. உத்ஸாஹம் /உற்சாகம் -  அன்றாடம் புதிதாகப் பிறந்ததாக உணர்ந்து, நிகழ் காலத்தில் ஸ்திரமாக உயிர்ப்புடன் இருந்தால் மட்டுமே உண்மையான பக்தியை வெளிப்படுத்த முடியும். ஆங்கிலத்தில் "Present is Omnipresent" என்று சுவாமி அடிக்கடி குறிப்பிடுவதை இங்கே நினைவு கூறலாம். அதன் பொருள், நிகழ் காலமே ( நிகழ் கணமே) எங்கும் நிறைந்த பூரணம் என்பதாகும். எப்போதோ நிகழ்ந்த நிகழ்வுகளை எண்ணி கடந்த காலத்திலும், 'இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?' எனும்படியான எதிர்காலக்  கற்பனையிலும்,  "நிகழ்கணம்" என்னும் மந்திரச் சாவியைத் தொலைத்தவர்களாக துவண்டு போதல் தவிர்க்க வேண்டும். நிகழ்கின்ற கணத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்து நமைச் சுற்றி உள்ளோர்க்கும் உயிர்ச்சாகமளிக்க வேண்டும்.


2. சாஹசம் - மனஉறுதியுடன் கூடிய  துணிவும் அதனால் விளையும் செயல்களும், ஆன்மீக மார்க்கத்தில் மிக அவசியமாகும். ஒருவித பயத்தின் காரணமாக அல்லது புண்ணியத்தை எதிநோக்கி, உள்ளர்த்தம் தெரியாமலே செய்யப்படும்  பூஜை புனஸ்காரங்கள் எந்தவிதப் பலனையும் அளிக்கப் போவதில்லை. 

நீங்கள் வாழும் இடத்திற்கு, காலத்திற்கு ஏற்றாற்போல புதிய சேவைக் காரியங்களைத் தேவையறிந்து மேற்கொள்ள வேண்டும். எந்திரத்தனமான பூஜையறைச் செயல்பாடுகளை விட துணிச்சலான சேவை முயற்சிகள் பகவானின் இதயத்தில் இடம் பிடிக்கின்றன.  


3. தைரியம் - “தைரியமின்மை சந்தேகம், விரக்தி, மனச்சோர்வு மற்றும் துயரார்ந்த நிலைக்கு வழிவகுக்கிறது. தடைகள் வரும்போது தைரியமாக சந்திக்க வேண்டும். ஏனென்றால் தடைகளே உன்னை உறுதிப்படுத்துகின்றன, வலுப்படுத்துகின்றன" என்று ஊக்கமளிக்கிறார் நம் பகவான். உதாரணத்திற்கு; ஒருவருக்கு உதவி செய்யப்போக நமக்கு சிக்கல் வந்துவிடுமமோ? என்ற பயத்தினாலேயே பலரும் உதவி செய்வதைத் தவிர்த்தது விடுகின்றனர். அது சரியல்ல! பகவானை நன்கு பிரார்த்தனை செய்தபின்... அவருடைய பெயரால் செய்யப்படும் உதவியானது எந்த வித ஆபத்தையும் தகர்க்கும் சக்தி பெற்றதாகும்.


4. புத்தி - "புத்திசாலித்தனமே வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அன்றாட வாழ்வில், அலைகள் போல் பல சிரமங்களும் பிரச்சனைகளும் எழுகின்றன, அதை மனிதன் தீர்க்க வேண்டும். இந்த சிரமங்களைத் தீர்ப்பதற்கான அடிப்படை முகமை புத்தியே. புத்தியின் தலையீடு இல்லாமல் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படாது" என்று பகவான் உறுதிபட விளக்குகிறார். எனவே புத்திகொண்டு மனம் ஆளப்பட வேண்டும்!


5. சக்தி - சக்தி அல்லது திறனைப் பொறுத்தவரையில்; சுவாமி, “திறமை என்பது கடவுள் கொடுத்த வரம் அல்ல, திறமையே கடவுள்!" என்று ஆணித்தரமாக சொன்னதை நாம் நினைவு படுத்த வேண்டும். நம்முடைய திறனும் சக்தியும் தெய்வமே அன்றி வேறில்லை. அதைப்  புறந்தள்ளி தேக்கமுற்று இருந்துவிட்டு; பின்னர் "ஸ்வாமி சங்கல்பமில்லை சாயிராம்.. அதனால் தான் எனக்கு நகர சங்கீர்த்தனம் வர முடியவில்லை", "ஸ்வாமி சங்கல்பத்தினால் நான் சேவைக்கு வரத்  தாமதமானது" என்றெல்லாம் சாக்கு சொல்வதெல்லாம் அற்பமான செயலாகும்.


6. பராக்கிரமம் - பக்தி மார்க்கம் சோம்பித்திருக்கும் வலுவற்ற மார்க்கமன்று! பிரஹலாதன் போன்று எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் இடைவிடாது செயலாற்றும் உற்சாகமான மார்க்கம். "அவர் சங்கல்பம்... என்னிடம் ஒன்றுமில்லை" என்று பொய்க்காரணம் சொல்லி ஸ்வாமியின் வார்த்தைகளைக் கடைபிடிக்காமல்  தள்ளிப்போடும் மனோபாவம் பக்தி அல்ல!. அதே சமயத்தில், மாபெரும் காரியங்களை ஆற்றுவது மட்டுமே பராக்கிரமம் என்பதல்ல. உதாரணத்திற்கு; ஒரே பஜன் பாடலை எந்த சுருதியுமின்றி ஆண்டாண்டு காலமாகப் பாடாமல், அதனை மெருகேற்ற பயிற்சி செய்வது (அல்லது) புதிய பஜன் பாடல்களைக் கற்றுக்கொண்டு பக்தியுடன் சமர்ப்பிப்பதும் கூட பராக்கிரமமே!. யாரோ ஒரு மூத்தவர் கடுகடுவெனப் பேசி எல்லோரையும் சேவைசெய்ய வைக்கிறார் என்பதால் நாமும் அது போலவே இளையவர்களிடம் கடுகடுவெனப் பேசி வேலை வாங்காமல் மாறாக  அன்புடன் விளக்கிச் சொல்லுதல் கூட பராக்கிரமமே ! 

1993ம் வருடம் புத்தாண்டு தினத்தன்று நிகழ்த்திய தெய்வீகப் பேருரையில், சுவாமி பின்வருமாறு அறிவித்தார்கள்: "எதிர்பார்ப்புகள் இல்லாதிருத்தல், தூய்மை, மனவுறுதி , எது நடந்தாலும் கவலைப்படாமல் இருத்தல் ,மனவேதனை இல்லாதிருத்தல், ஆடம்பரமின்மை ~ இத்தகைய தூய பண்புகளை வளர்த்துக்கொள்ளாத பக்தி என்பது வெறும்  மன மயக்கமே!" . 

அந்த அறிவிப்பு நம்மை தெளிவாக எச்சரிக்கை செய்கிறது. சுவாமி கூறிய குணங்களை, பண்புகளைக்  கருத்தில் கொண்டு நாம் உண்மையான பக்தியை நம்முள் வளர்க்கிறோமோ? அல்லது பக்தியெனும் பெயரால் மனமயக்கத்தில் வாழ்கிறோமா? என்பது நம்மை நாமே ஆராய்ந்து தெளிய வேண்டிய முக்கியக்கேள்வியும்  பயிற்சியுமாகும்.


மருள் நீக்கும் சாயி உன் மலர்ப்பாதம் சரணடைந்தோம்!


✍️ தொகுப்பு: கவிஞர் சாய்புஷ்கர், பர்த்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக