தலைப்பு

வியாழன், 12 மே, 2022

ஸ்ரீ பிரேம சாயி அவதாரம் பற்றி ஒரு நேர்காணலில் முதன்முறையாகப் பேசிய சுவாமி - 1976- The BLITZ INTERVIEW

சுவாமி எவ்வாறு தனது மூன்று சாயி அவதாரங்கள் பற்றியும்... அவதார வழிமுறை அணுகுமுறை செயல்பாடு பற்றி ஒரு முன்னோட்டமாக பகிர்ந்திருக்கிறார் என்பதைப் பற்றியும் இதோ சுவாரஸ்ய சுருக்கமாய்...


சுவாமி தனது தனிப்பேட்டியை ஒவ்வொருவருக்கும் அல்லது ஒரு குடும்பம் அல்லது ஒரு தேசம் சார்ந்தவர்க்கும் நேர்காணல் அறையிலேயே வழங்கி இருக்கிறாரே அன்றி பத்திரிகை நேர்காணல் என்பது மிகவும் குறைவு! ஆம் புண்ணியம் கட்டிக் கொண்டது The BLITZ. அதன் ஆசிரியர் கரஞ்சியா...எப்பேர்ப்பட்ட புண்ணியவான் அவர்... இறைவனின் நேர்காணலை தனது பத்திரிகை இதழில் பதிவு செய்வதற்கு... இதோ அவர் கேட்ட கேள்விகளும்.. சுவாமி அதற்கு தீர்க்கமாய் அளித்த திருவிடைகளும் முதன்முறையாக தமிழில் இதோ...

அது செப்டம்பர் 1976. செப்டம்பர் தனது செம்மையை சுவாமியின் நேர்காணல் வழி சுவீகரித்துக் கொள்கிறது.. ஆசிரியர் கரஞ்சியா கேட்ட கேள்விகளுக்கு கடவுள் அளித்த பதில்கள்..


கேள்வி: உங்களின் மூன்று சாயி அவதாரமான ஷிர்டி சாயி-சத்ய சாயி- பிரேம சாயி பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

சுவாமி: ம்ம்... முதலில் நீங்கள் இந்த மூன்று சாயி அவதாரங்களின் ஒற்றுமையை உணர முற்பட வேண்டும்...! எப்படி கடந்த யுகங்களில் ஸ்ரீராமரும் ஸ்ரீகிருஷ்ணரும் ஒன்றோ.. அதே வரிசையிலான ஒருமித்த ஒருமையே இம்மூவரும்..! தற்போதைய அவதாரங்களையே மனிதரால் உணர முடியாத போது இரு யுகத்து அவதாரங்களை எல்வாறு உணர முடியும்? 

ஸ்ரீ ராமர் எழுந்தது சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட.. ஸ்ரீ கிருஷ்ணர் எழுந்தது பேரன்பையும்,பேரமைதியையும் விருட்சமாய் நட... தற்போதைய மூன்று சாயி அவதாரங்களும் மனித பலவீனங்களை மாற்றி.. தீய எண்ணங்களை அழித்து தெய்வீகத்தை அவர்களுக்குள் நிறுவுவதற்கே ....

கால சூழல் வர்த்தமானங்களை கணக்கிடுகையில் ஸ்ரீ ராமர் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சாயி அவதாரங்கள் அனைத்தும் முழுமையானவையே!


கேள்வி: தற்போதைய அவதாரமெனில் சாயிபாபாவாகிய உங்களையும் சேர்த்தே சொல்கிறீர்களா? 

சுவாமி: ஆம் ! நான் காலப் பரிமாணங்கள் தோறும் அவதரித்துக் கொண்டே இருக்கிறேன்! எப்போது தர்மம் நலிவடைந்து அதர்மம் தலைதூக்கி ஆடுகிறதோ அப்போது இந்த மனிதகுலத்தில் அவதரித்து அன்பையும்... சமநிலையையும்... பேரமைதியையும் நிலை நாட்டுகிறேன்!


கேள்வி: புரிகிறது! ஆனால்  கடவுள் ஏன் அதற்கு மனித வடிவத்தில் வர வேண்டும்?

சுவாமி: அப்போது தான் மனிதனுக்குள்ளே இருக்கும் இறைவனை மனிதன் உணர முடியும்! இறைவனே மனிதனாக நடமிடும்போதே அதே தெய்வீகம் தனக்குள்ளே உறைந்திருக்கிறது எனும் பேருண்மையை கண்டடைவதற்கு பெரும் கிரியா ஊக்கியாக திகழும்... ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் எதிரிகள் என தனி நபரை அழித்தது போல் இப்போது யுகமில்லை... பொய்யும் வஞ்சகமும் புறையோடிப் போய் இருப்பதால் நபர்களை அல்ல தீய குணங்களை அழிப்பதற்கும்... மனிதனுக்குள் பொதிந்திருக்கும் தெய்வீகத்தை வெளிக்கொண்டு வருவதற்குமே இந்த மூன்று சாயி அவதாரங்கள்...!

       என் பூர்வ அவதாரத்தில் நான் ஷிர்டி சாயியாக இருக்கிற போது "கடமையே கடவுள்" என்றேன்... தற்போது எனது ஸ்ரீ சத்ய சாயி வடிவத்தில்... "அந்த கடவுளே அனைவரிடத்திலும் உறைந்திருக்கிறார்" என்கிறேன்.. நான் அவதரிக்கப்போகிற ஸ்ரீ பிரேம சாயி அவதாரத்தில் "நீயே அந்த கடவுள்" என்பேன்! இதுவே மூன்று சாயி அவதாரங்களின் மகத்துவம்... "கடமை (சேவை) - வழிபாடு- ஞானம்" இதுவே மூன்று சாயி அவதாரங்களின் அடிப்படையான அருட்சாராம்சம்!!


கேள்வி: ஆக... இது தான் உங்களுடைய தெய்வீகப் பணியும்... மூன்று அவதாரங்களின் சாரம்சமுமா?

சுவாமி: ஆம்!! அதன் சாராம்சமமே.. ஜாதி மத தேச இன பேதமின்றி அனைவரும் ஒன்றென...ஆத்ம ஞானத்தை சமமாய் அளித்து.. நல்லது நினை- சொல்- செய் என்பதற்கான அடிப்படையில்... அதை கட்டமைக்க பள்ளி கல்லூரிகளிலேயே அதற்கான ஆன்ம ஞான விதைகளைத் தூவுவது...பிரபஞ்ச பேரன்பை உணரும் நோக்கில் அனைவரும் செயல்படுவது...அகந்தையை கடவுளிடம் சமர்பித்து அந்த பிரபஞ்சப் பேரன்பை அதற்கு பதிலாகப் பெறுவது...

 உதாரணத்திற்கு "இது கைக்குட்டை" (சுவாமி விரிக்கிறார்) இதில் பல்வேறு நூல்கள் பின்னப்பட்டிருக்கின்றன... எல்லாம் சேர்த்துத்தான் கைக்குட்டை... நூலைப் பிரித்துவிட்டால் கைக்குட்டை தனது வடிவத்தை இழந்து விடுகின்றது... அது போலவே ஜக ஒற்றுமைக்கு அக அன்பும் அதை நிகழ்த்த யுக அவதாரமும் அவசியப்படுகிறது!


கேள்வி: எட்டு ஆண்டிற்குப் பிறகு நான் அவதரிப்பேன் என ஷிர்டி சாயி எங்கேயும் சொல்லியிருக்கிறாரா?

சுவாமி: ஆம் சொல்லி இருக்கிறார்! அதை காகா தீட்சித் எனும் பக்தரும்... பல்வேறு பக்தரும் பதிவு செய்திருக்கிறார்கள்! 


கேள்வி: நீங்கள் தான் ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா என்பதற்கு என்ன ஆதாரத்தை வழங்குகிறீர்கள்?

சுவாமி: என்னுடைய சுயமான அனுபவமே... நான் ஏற்கனவே என் பூர்வ பிறவியில் ஏற்பட்ட நிகழ்வுகளில் அடைந்த  அந்த அனுபவமே... ஆகவே தான் நான் ஷிர்டி சாயியாக இருக்கையில் எங்கே பிறந்தேன்? யாருக்குப் பிறந்தேன்? என என்னால் துல்லியமாக சொல்ல முடிவதற்கான காரணம் வேறொன்றுமில்லை... அது என் வாழ்க்கை என்பதால் தான்..."நான் தான் சாயிபாபா" என 36 வருடங்களுக்கு முன்பு நான் சொன்ன போது... ஷிர்டி சாயிபாபாவை நான் அவதரித்த தென்பகுதிகளில் யாருக்குமே பரவலாகத் தெரியாது! 


கேள்வி: நீங்கள் தர்மங்களை நிலைநிறுத்துவதை குருஷேத்ரம் மாதிரியான மகாபாரதப் போர் நிகழ்ந்த பிறகே செய்வீர்களா?

சுவாமி: இல்லை மகாபாரதப் போர் என்பது மிகப் பெரிய அழிவு.. அது வேறு வகை... இப்போது சிறு சிறு போர்கள் ஆங்காங்கே நிகழலாம்... ஆனால் அழிப்பதற்காக அல்ல இந்த சாயி அவதாரங்கள்... மனிதனை இறைநிலைக்கு அழைத்துப் போவதற்காகவே எழுந்திருக்கிறது!


கேள்வி: அப்போது கடவுளுக்கும் மனிதனுக்கும் பெரிய வேறுபாடில்லை என சொல்ல வருகிறீர்களா? 

சுவாமி: ஆம்... ஏனெனில் கடவுளிடமிருந்து வந்தவனே மனிதன்.. ஆகவே தான்  கடவுளை தனக்குள்ளேயே வைத்தபடி மனிதன் பிறக்கிறான்... அவனுக்குள்ளேயே உயிர்ப்போடிருக்கும் அந்த இறைநிலையை எழுப்பி அவனுக்கு இறை அனுபவத்தை உணர்த்துவதற்காகவே இறைவனே மனித உருவெடுத்து வர வேண்டி இருக்கிறது!

வாழ்க்கை + ஆசை = மனிதன்

வாழ்க்கை - ஆசை = இறைவன்

என இதையே தான் சொல்கிறேன்! 


கேள்வி : எப்படி ஆசைகளை விட்டால் மனிதன் தான் இறைவன் என உணர முடியும்?

சுவாமி: ஆசையே அகந்தைக்கும் காரணம்... ஆசையே அவனது இறைநிலையை மறைத்தபடி அவனை அதர்மம் செய்யத் தூண்டுகிறது... ஆசையே துயரத்தில் அகப்படுகிறது... ஆசையே ஜென்ம சுழலில் அவனை சிக்க வைக்கிறது... இறைநிலை எனும் தன்னுடைய சத்தியத்தை மனிதன் உணர ஆசையை துறக்க வேண்டும் என்று தான் புராதன ஞானமாகிய வேதாந்தமும் வலியுறுத்துகிறது!


கேள்வி: அப்போது மனம் தான் மனிதனுக்கும் இறைவனுக்குமான பிரிவினையை நிகழ்த்துகிறது என்கிறீர்களா?

சுவாமி: ஆம்.. உண்மை தான்! மனம் அகந்தையின் விளைவே... அதுவே மனிதனின் ஆத்ம தரிசனத்தை தடுக்கிறது! மனமே துணியாக மனிதனின் ஆன்ம பேருணர்வை மறைத்திருக்கிறது...

ஆசைகள் புலன்களை- மூளையைச் சார்ந்த விஷயம்... அது விலகிடும் போது ஆத்மப் பேருணர்வை மனிதன் அனுபவிக்க முடிகிறது! அப்படி உணர்கிற போது பிரபஞ்ச பெருஞ்சக்தியோடு ஒன்றிவிட முடிகிறது! அப்படி ஒன்றுகையில் நானே இறைவன் எனும் பேரனுபவத்தை மனிதன் அடைகிறான்!

ஆதாரம் : saibaba.ws/ Articles2 / blitz interview


இந்த "நானே இறைவன்" தான் வரப்போகிற ஸ்ரீ பிரேம சுவாமியின் திருஅவதார சாராம்சம்! "என் பக்தர்கள் அனைவரையும் இந்த உலகத்தையே தன் ஒரு குடும்பமாக உணர்வர்!" என இப்படி அந்த நேர்காணல் ஆத்ம ஞானத்தாலும்... சுவாமியின் கருணையாலும் நிரம்பி வழிகிறது..‌! அணுஆயுதப் போரைப் பற்றியும் ஆசிரியர் கேட்கிறார்...அதற்கு இறைவனாகிய நான் காரணமே அல்ல... மனிதனே காரணம் என்கிறார் சுவாமி... இப்படி பல்வேறு கேள்விகள்... மின்னல் போல் தெறிக்கிறது பதில்... காரணம் பதில் சொல்வது இறைவன் மனிதனல்ல...! இந்த நேர்காணலின் வழி முதன்முறையாக  பத்திரிகைப் பேட்டியாக சுவாமி தனது அடுத்த அவதாரத்தைப் பற்றி ஆணித்தரமாக மிகவும் உறுதியாக வெளிப்படுத்துகிறார்...! மூன்றுமே ஒன்று என்கிறார்... இதில் "நான்" என சுவாமி சொல்கிற போதே மூன்று சாயி அவதாரங்களையும் சேர்த்தே நாம் புரிந்துணர வேண்டும்! இப்படி ஸ்ரீ பிரேம சுவாமி விஜயத்திற்கான பல்வேறு சத்தியப் பகிர்வுகளை சுவாமி பல இடங்களில் பகிர..அதை இன்றளவும் பல புத்தகங்களும் அந்த பிரேம சத்தியத்தை எதிரொலித்து வருகிறது! 


ஆங்கில நேர்காணலின் சுருக்க மொழிப் பெயர்ப்பு:

கவிஞர் வைரபாரதி

1 கருத்து: