தலைப்பு

செவ்வாய், 17 மே, 2022

பாபா விபூதியை பசிஃபிக் கடலில் கொட்டியவருக்கு பாபா காட்டிய அற்புதம்!


தன்னை வெறுப்பவர்க்கும் தயை காட்டும் தாயை யாரேனும் கண்டதுண்டா? தன்னை அவதூறாக பேசுபவர்க்கும் தன் அளவிடமுடியாத கருணையை காட்டிய கடவுள் உண்டா? தன்னை கொல்ல நினைத்தவரின் மனதை மாட்சிமை பொருந்திய தனது பேரன்பால் வெல்ல நினைத்த இறைவன் உண்டா? ஆம் உண்டு எனும்படி நம்மை ஆண்டு வரும் பரப்பிரம்ம இறைவன் ஸ்ரீ சத்ய சாயி என்பதற்கு இந்த நூதன அனுபவம் ஓர் சிறந்த உதாரணம்...


அவர் பெயர் ரமண்லால் பாலா... ஃபிஜி கடற்கரையில் உலவிக் கொண்டிருக்கிறார்.. ஏதேதோ சிந்தனை... திடீரென பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுக்கிறார்... அப்படி அவர் எடுக்கும் போது கீழே ஒரு வெள்ளைப் பொடி பொட்டலத்தோடு விழுகிறது.. என்ன என்று கீழே குனிந்து பார்க்கிறார்... என்ன இது.. ஓ விபூதியா... அந்த ஆள் விபூதி என பாபா விபூதியை அலட்சியமாக எடுக்கிறார்... அவருக்கு பாபா மீது பெரிதாக நம்பிக்கை எதுவும் இல்லை... அவர் தாய் அவரிடம் வைக்கச் சொல்லியதால் எப்போதோ பர்ஸில் வைத்தது இப்போது விழுகிறது...


பாபாவை பலர் சொல்லியபடி மகான் என முதலில் கேள்விப்படுகிறார் பாலா.. பிறகு புட்டபர்த்தி சென்று தரிசிக்கிறார்...ஆனாலும் பக்தி விதை முளைக்கவில்லை... சந்தேகப்படுகிறார்... இவரைப் போயா மகான் என்கிறார்கள்... சரியான ஏமாற்றுப் பேர்வழி என மனதிற்குள் நகைத்துவிட்டுத் திரும்பிவிடுகிறார்...

திரைச்சீலையால் சாற்றிய ஜன்னலுக்குள் இருந்து இருட்டறையில் அமர்ந்தபடி சூர்யோதயமாவது ? சுண்டக்காயாவது? அது எல்லாம் வெறும் கட்டுக்கதை என நினைப்பது போல் அவரது மனநிலை இருண்டிருக்கிறது!


தனது தாய் சொல்லைத் தட்ட மனமின்றி பாபா விபூதியை வைத்துக் கொண்டாரே அன்றி அவருக்கு ஒரு பொட்டு நம்பிக்கையும் இல்லை... சரி நாம் இதை இந்தக் கடலிலேயே கொட்டிவிடலாம்.. எதற்காக இன்னமும் அதை தேவையில்லாமல் வைத்திருக்க வேண்டும்.. அது சாதாரண ஒரு சாம்பல்... என பாபா விபூதிப் பொட்டலத்தைப் பிரிக்கிறார்... கடலலை நுரைப்பற்களால் அவரைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறது... காற்று அந்த விபூதியை தேடி வந்துத் தீண்டியதில் வெண்புகை கிளம்புகிறது... அப்படியே கடலலைக்கு அருகே வருகிறார் பாலா... அப்படியே அந்தப் பொட்டலத்தை கவிழ்த்தி அந்த விபூதி மடித்த பேப்பரையும் கடலலையிலேயே வீசிவிடுகிறார்... கடலுக்கு கடவுள் விபூதியை ஏற்பதில் ஏக  குஷி... விபூதியை அருந்திய பிறகு ஆனந்தக் கூத்தாடுகின்றன அலைகள்... மாலை மசங்குகிறது... இருட்டு இப்போது பாலாவின் மனதில் மட்டுமல்ல வானத்திலும் விரிய ஆரம்பிக்கிறது... மாலை சரிய ஆரம்பிக்கிறது... அப்படியே வீடு வந்து சேர்கிறார் பாலா...


இல்லத்தில் நுழைந்த உடனேயே மனைவி இஸ் இஸ் இஸ் என எதையோ முகர்ந்தபடி... என்ன ஒரே விபூதி மணமாக இருக்கிறது என கணவர் பாலாவை அவரது மனைவி கேட்க... அதெல்லாம் ஒன்றும் இருக்காது.. உன் மன பிரமை... உன்னிடமிருந்து கறி மசாலா வாசனை தான் வீசுகிறது என கூலாக சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து காலாட்டிய படியே பேசுகிறார்... இல்லை இல்லை அது விபூதி மணமே தான்... உங்களுக்கு என்ன மூக்கடைப்பா? என மனைவி எதிர் கேள்வி கேட்கிறார்... நாம் விபூதியை கடலில் கொட்டியது இவளுக்கு தெரிந்திருக்குமோ... அப்போது யாருமே என் அருகில் இல்லையே... என்ன இப்படி பேசுகிறாள் என்றபடி புருவத்தை நெளித்துப் பார்த்து... மோப்ப வாசனையை அறை முழுவதும் வீசியதில்... உண்மையிலேயே விபூதி வாசனை... அதற்குள் பாலாவின் மனைவி அங்கும் இங்கும் தேடிப் பார்க்கிற போது பாபாவின் திருப்படத்திலிருந்து விபூதி கொட்டுகிறது... மனைவி பரவசப்படுகிறார்... பாலா அந்த நொடியே பாபா பரப்பிரம்மம் என்பதை உணர்கிறார்... ஒவ்வொரு பாபா படங்களாக விபூதி கொட்ட ஆரம்பிக்கிறது...கடலலையில் சேர்த்த விபூதி... விபூதி அலைகளாக வீட்டில் எழுவதைக் கண்டு.. பாபா மேல் தனக்கு இருந்த அலட்சியத்தை நினைத்து வருந்துகிறார்... பாபாவிடம் மன்னிப்புக் கேட்கிறார்... விபூதி மட்டுமில்லை பாலாவுக்கு பிடித்தமான ஏசுவின் சிலுவையிலிருந்து நீர் பெருகுகிறது... அந்த கங்கைப்  பெருக்கைக் கண்டு அப்படியே உறைந்து போகிறார்‌... பாபாவின் புகைப்படம் இருக்கும் திசை நோக்கி விழுந்து வணங்குகிறார்... தன் தவறை மட்டும் அவர் உணரவில்லை.. பாபாவின் கருணையையும் சேர்த்தே அவர் உணர்கிறார்...! அப்படி விழுந்து வணங்குகிற போது அந்த பசிஃபிக் கடலலை பாலாவின் கண்களின் வழி நன்றிப் பெருக்காய் வழிந்தோடுகிறது!


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம்: 27 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்கிறது தமிழ்! அப்படியே கருணையும் கருணை சார்ந்த கடவுளே பாபா...! இதற்கு பாலா போன்றோரின் அனுபவமே சாட்சி! வெறுப்பு வெறுப்பை விரட்டாது என்கிறார் பாபா தனது புத்த அவதாரத்தில்... ஆகவே தான் பாபா அனைத்து ஜீவராசிகளின் இடத்திலும் கருணையோடு திகழ்கிறார்... கடவுள் பாபா நம்மிடையே இப்போதும் வாழ்வதால் தான் உலகில் கருணையும் வாழ்கிறது... பாபா நம் மீது காட்டும் கருணைக்கான நன்றி வெளிப்பாடே நமது சரணாகதி தோய்ந்த பக்தியும்  மற்றும் நமது நல்ல குணங்களும் வழிபாடாகி பாபாவின் பாத மலர்களாகட்டும்!


   பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக