தலைப்பு

புதன், 4 மே, 2022

சகல ஜீவராசிகளிடமும் பேரன்பு காட்டிய ஜீவகாருண்ய சாயி!

பாபாவின் பேரன்பு பிரபஞ்சம் விடப் பெரியது... வெறும் வாசகம் அல்ல இது வாழ்வியல் நடைமுறையாக இதனை பின்பற்றுபவர் பாபா... அதோடு அல்லாமல் தனது பக்தர்களையும் உயிரினங்களை நேசிக்கச் சொல்லும் பாபா எனும் உத்தம இறைவனால் பெற்ற அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...


லட்விக் என்பவர் பாபா பக்தர்.. அவரது மனைவி பெயர் ஆக்னெஸ்... ஒரு நாள் உடல் நலிவுற்றிருக்கிறார்... தொடர்கிறது...இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இந்த வேதனை என படுக்கையில் புரள்கிறார் பாவம்... பக்கத்தில் ஒருக்களித்துப் படுத்திருந்த கணவர் ஏதோ தூக்கத்தில் பேசுகிறார்... என்ன என்பது போல் அவரை எழுப்புகிறார்... அப்போது தான் தன் கனவில் பாபா வந்து பேசியதையும் அதற்கு அவர் பதில் சொன்னதையும் உணர்கிறார்!

கனவில் தோன்றுகிற பாபா "ஆக்னஸ் இன்னும்  எத்தனை நாள் இப்படியே இருப்பது என கவலைப்படுகிறாள்... சுவாமி அவளை குணப்படுத்துகிறேன்... ஆனால் அவள் ரெகுலராக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்... அதுவே பிளட் சர்க்குலேஷனை அதிகரிக்கச் செய்யும்! இது ஏதோ கனவு என்று சந்தேகிக்காதே...! நான் உனக்கு சொல்வது நிஜம்... இதை நீ நம்ப வேண்டுமானால் உனக்கு ஒன்று சொல்கிறேன்... நீ வளர்க்கிற முயல் குட்டிகள் இதுவரை உன் அருகிலேயே வராமல் அடம் பிடித்தது அல்லவா.. நாளை அதன் அருகே செல்! ஓடி உன் மடி மீது தாவும்!" என்கிறார் பாபா... அந்த கனவு அனுபவங்களை மனைவியோடு பகிர்ந்து கொள்கிறார் லட்விக்! அடுத்த நாள் காலை பாபா சொல்லியதைச் சோதித்துப் பார்க்க தான் வளர்க்கும் முயல்களின் இடத்திற்குச் சென்று.. அந்தக் கூண்டைத் திறக்கிறார்... எப்போதும் ஒதுங்கியே போகும் அவை... அன்று அவர் முன் ஓடி மடியில் ஏறிக் கொள்கிறது.. கண்ணீர் தேங்கி நிற்கிறது லட்விக்'கிற்கு... அதனோடு ஆசையாக விளையாடி பொழுதைப் போக்க வேண்டும் என நினைத்த எண்ணம் அன்றிலிருந்து மறைந்து போக...அதனை அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது அவருக்கு...! இரை சாப்பிடும் நாய்கள் நம்மீது நன்றியோடு இருப்பதைப் போல்... நாமும் நாய்களிடம் நன்றியோடிருக்க வேண்டும் எனும் உண்மை புலனாகிறது... அன்பு என்பது பரஸ்பரம் இரு ஜீவன்களுக்குமானது.. அது ஒற்றை அடிப்பாதை இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறார் அவர்!


ஒருமுறை பாபாவின் பல்கலைக்கழகத்தின் சார்பில் உடற்பயிற்சி விளையாட்டுகள் நடக்கின்றன‌... அதை மேடையில் அமர்ந்தவாறு தனது திருப்பார்வையை செலுத்திக் கொண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்... அப்போது கர்ப்பமோடிருந்த ஒரு பெண் நாய் நேராக மெதுமெதுவாக நடந்து வருகிறது... மேடையை நோக்கி மிகவும் சிரமப்பட்டு ஏறுகிறது.. அனைவரின் பார்வையும் அந்த நாய் மேலேயே இருக்கிறது... அவர்கள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்... பாபா முன்னிலையில் தடுக்கவோ விரட்டவோ யாருக்கும் மனம் வரவில்லை... நேராக பாபா முன் வந்து நிற்கிறது.. கழுத்தை நீட்டி பாபாவையே பார்க்கிறது... வாலை ஆட்டுகிறது.. பாபா புன்னகை செய்து கொண்டே அதற்கு தின்பண்டங்கள் தருகிறார்.. அதுவும் வாலை ஆட்டிக் கொண்டே தின்கிறது... உடற்பயிற்சி செய்யும் மாணவர் கூட அதனை கவனித்து ஆச்சர்யப்படுகின்றனர்.. சற்று நேரத்திற்குப் பிறகு எழுந்து கொண்டு... தின்பண்டத்தை தனது திருக்கரம் நிறைய எடுத்து ஊட்டிவிடுகிறார்... அந்த கர்ப்பம் தரித்த நாயின் கண்கள் கலங்கிப் போகின்றன...


பசுக்களுக்காக கோகுலம்.. சாயி கீதா என்ற பெரும் பக்த யானைக்காக பெரிய கொட்டகை... நிற மீன்களுக்காக அக்வேரியம்... பறவைகளுக்காக சிறிய சரணாலயம் என தனது நிறைவான பேரன்பை செயல்வடிவமாக்கி இருக்கிறார் பாபா! பாபா விலங்குகள் மற்றும் பறவைகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை உற்றுப் பார்த்தால் அதில் பாபாவின் பேரன்பு ததும்பி ஓடும்...! எப்படி நாம் வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து காண்பித்தார் பாபா.. அது தான் பேரவதார லட்சணமே! "இதுக்கு எப்படி சாப்பாடு போடுகிறீர்கள்... ? என்னவகையான உணவு? எங்கிருந்து வாங்குகிறீர்கள்? தரமாக இருக்கிறதா? என ஒவ்வொன்றையும் மிக மிக அக்கறையோடு விசாரிப்பவர்!

ஒருமுறை ஏசுநாதர் பற்றிய ஒரு நிகழ்வை நாடகமாக நடிக்கிற போது ஏசுநாதர் பறவைகளைக் கூண்டிருந்து திறந்துவிடும் ஒரு காட்சி... அதில் அப்படி பறந்த ஒரு பறவை.. நேராக பாபாவின் திருவுருவம் தாங்கிய பெரிய கட் அவுட் அதை நோக்கி பறந்து சென்று.. பாபாவின் கட்அவுட் தோள்களின் மீது அமர்ந்து கொள்கிறது! அந்த நாடகம் கண்ட அனைவரும் ஆச்சர்யப்படுகின்றனர்... வெறும் கட் அவுட்'டில் கூட பாபாவின் பேரன்பை உணர முடிகிறது பறவைகளால் என்பதையே நமக்கு அந்தச் செயல் வலியுறுத்துகிறது!


(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 201 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


பாபா ஜீவராசிகளுக்குள் வேறுபாடே பார்த்தது இல்லை...! ஒரு எறும்பைக் கூட மனிதனை நேசிப்பது போல் சமமாக  நேசிப்பவர் பாபா... வள்ளலார் வலியுறுத்திய ஜீவகாருண்யத்தின் ஜீவிதப் பேரவதாரம் பாபா! அகவே தான் புலால் உண்ணுதலை பெரும் பாவம் என்கிறார்! வள்ளுவரும் வள்ளலாரும் அதையே தான் ஆணித்தரமாய் மனதில் பதியும் படி சொல்லிச் சென்றனர்.. காரணம் சத்தியம் ஒன்றே! ஆன்ம பேதமே இறைவன் பாபா பார்த்தது இல்லை! ஆகவே தான் அவர் இறைவன்...! இறைவனின் சுபாவம் அது! அந்த சுபாவத்தை நாம் நமது வாழ்க்கையாக்கும் போதே இறைவன் பாபாவின் பக்தர்களாக நம்மால் திகழ முடிகிறது!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக