தலைப்பு

திங்கள், 23 மே, 2022

ஒரு யூதரை திருத்தி பக்தித் தூதராக மாற்றிய பாபாவின் மாம்பழ மகிமை!


தீய பழக்கத்திலிருந்து பாபா நல்ல பழக்கத்திற்கு ஒருவரை மாற்றுவது அவரின் கருணை ததும்பிடும் பேரருள்... தீய குணத்திலிருந்து நல்ல குணத்திற்கு மாறுவதே ஆன்மீக வாழ்க்கை என்பதெல்லாம்.. அதனை பக்தர்க்கு உணர வைத்து பாபா உயர்த்திய உன்னத பொழுதுகள் சுவாரஸ்யமாய் இதோ...


அவர் பெயர் நஸ்ஸின் மிஷான்... யூத இனத்தைச் சார்ந்தவர்... மத்திய அமெரிக்காவில் காதேமாலாவில் வாழ்பவர்... யூத இனத்தவர் பெரும்பாலும் நாத்திகராக இருப்பதில்லை... ஆனால் அவருக்கோ கடவுள் மீது எந்தவித நம்பிக்கையும் இருக்கவில்லை... யூதர் திறமையானவர்கள்...‌ மிஷான் ஒரு பொருளீட்டாளர்... பொருளீட்டுவது பூமியில் கடினமே இல்லை..‌அருளீட்டுவதே அவ்வளவு கடினம்! ஆனாலும் அதற்கொரு நேரம் அவருக்கு பாபா அருளால் உதிக்கிறது...  உதிக்கும் புனித சூரியனும் சரி மனித செயல்களும் சரி யாவும் பாபா சங்கல்பமே!


ஒருமுறை அவருக்கு தாம் ஈட்டும் செல்வமும் , பாசம் மீட்டும் உறவும், சமூகப் பெயரும்... உடம்போடு ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் உயிரும் நிரந்தரமா? என்ற வினா எழுகிறது... இந்த வினா தான் நான் யார்? எனும் பகவான் ரமணர் சொன்ன வினாவுக்கான தாய்! எவருக்கு எப்போதும் வரலாம்.. வராமலும் ஜென்ம ஜென்மமாய் கண்ணாமூச்சி ஆடலாம்... ஆனால் பிறவிகளின் கடைசி நிறுத்தத்தில் இருப்பவர்க்கு வந்தே தீரும் எனும்படி அவருக்கு ஒருநாள் அவ்வினா உதிக்கிறது... அதே சமயத்தில் டில்லிக்கு வந்திருந்த மிஷான் ஒருநாள் பாபா பஜனைக்குச் செல்கிறார்..

 அந்த வினாவுக்கான விடையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்... அந்த அறையே தெய்வீகம் சூழ்ந்திருந்தது... பாபா சாந்நித்யம் ஆழ்ந்திருந்தது! பஜன் பாடல் அவரின் ஆன்மாவை தாலாட்டுகிறது... பாபாவின் திருப்படங்களோ இதயத்திற்குப் பாலூட்டுகிறது... பஜனை நிறைவில் சூர்யோதயமாய் ஆரத்தி... ஆரத்தியின் முடிவில் பாபா முன் படைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய மாம்பழத்தை பஜன் நடத்தியவர் தர... அவர் அதன் கனத்தை கைகளாலும் மணத்தை காற்றாலும் உணர்ந்து... ருசித்து ருசித்துச் சாப்பிடுகிறார்...! அப்படி ஒரு சுவையான மாம்பழத்தை அவர் எங்குமே சாப்பிட்டதில்லை... அது சாதாரண கனி அல்ல விநாயகருக்கு சிவசக்தி அளித்த ஞானக்கனி என அப்போது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...


அதைச் சாப்பிட்டு முடித்ததும் மோட்சத்தில் இருப்பதை போன்ற ஆனந்த அனுபவமாக இருந்ததாக பகிர்கிறார் மிஷான்...! மாம்பழம் சாப்பிட்டதெல்லாம் மகிமையா? என வாசகர் நினைத்தால்‌.. அது அல்ல க்ளைமாக்ஸ்...

அந்த நொடியிலிருந்து மிஷானுக்கு மது, மாமிசம் , சிகரெட் மூன்றுமே அவருள் போக மறுத்துவிட்டது என பாபா மகிமையை வியந்து மனம் திறக்கிறார்!

அவர் பாபாவை தரிசனமும் செய்யவில்லை... பாபா பேசவும் இல்லை... பாபா திருப்படத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மாம்பழமே அவருக்கு அகமாற்றம் தர பாபாவுக்கு போதுமானதாக இருந்தது... அதனால் தான் பாபா இறைவன்... சர்வாந்தர்யாமி... முழு சூரியனின் சூட்டை நம்மால் தாங்க முடியாது.. ஒரு சிறு கீற்றே நம் வெளிச்சத்திற்கு போதுமானது.. அந்த சூரியனுக்கே ஒளி கொடுக்கும் பரப்பிரம்மமான பாபா என்பது வெறும் வாய்மொழி அல்ல... ஆன்ம சாதனாப்பூர்வ அனுபவம்!


இதைப் போன்ற சில பரவச சம்பவங்களை மேலும் விளக்குகிறார் நூலாசிரியர்... மிஷானுக்கு தொண்டை வழியே மாம்பழச்சாறு மட்டுமல்ல பக்தி இறங்கியது... புனிதத்துவம் இறங்கியது... பணத்தை சேவைக்குச் செலவிட வேண்டும் என்ற நல்ல புத்தி இறங்கியது... தனக்குள்ளே அவர் பாபாவை உணரும் மனப்பக்குவம் இறங்கியது.. இதனை இதயம் திறந்து அவரே பதிவு செய்கிறார்.. அவரைப் போலவே... ஒருமுறை புத்தகக் கடை மோடி பாபாவின் நேர்காணல் அறையிலிருந்து வெளியே வந்து... வெளியே சென்று புகைக்க ஓடுகிறார்... ஒரு சிகரெட் பற்ற வைக்கிறார்... புகை வருகிறதே தவிர போதை வரவில்லை...எந்தக் காட்டமும் இல்லை... வாட்டமோடு மீண்டும் மீண்டும் என ஒரு அட்டை சிகரெட்டையும் கொளுத்திக் கொளுத்தி ஊதி ஊதி ரயில் விடுகிறார்... ஆனால் சுரணையே இல்லை.. சப்ப் என்று இருக்கிறது... அன்று முதல் சிகரெட் பழக்கத்தையே விட்டு விடுகிறார்...

அந்தக் கடைசி சிகரெட் பெட்டியே அவரின் சிகரெட் பழக்கத்திற்கு சவப்பெட்டியாக மாறிவிடுகிறது!


ஒரு பக்தரிடம் தரிசனத்தில் பாபா போகிற போக்கில் மிக மெதுவாக "கெட்ட ஹாபிட்" (தீய பழக்கம்) என புன்னகைத்தபடி சொல்லிவிட்டுப் போகிறார்... தரிசனம் முடித்து வெளியே வரும் அவருக்கு புகைக்க வேண்டும் என்ற உந்துதலே போய்விடுகிறது! ஆச்சர்யப்படுகிறார்... சிகரெட்டை சிந்தித்துப் பார்க்கிறார்...ஆனால் அது தலைக்கு மேல் கடந்து போகிற மேகம் போல சுவடே இன்றி போய்விடுகிறது.. பாபாவின் கருணையை நினைந்து ஆனந்தப் பெருமூச்சுவிடுகிறார்... அந்த மூச்சு புகை சூழா மூச்சாக காற்றில் பரவி பக்தி வாசனைப் பரப்புகிறது!


1973 வரை புகைப்பதற்கும் மது அருந்துவதற்கும், சீட்டாட்ட கேளிக்கைகளுக்கும் கிளப் ஆக இருக்கிறது ஜாகர்த்தாவில் நாரி குப்சந்தானியின் வீடு... ஒருமுறை அவர் அந்நகரில் சாயி பஜனில் கலந்து கொள்கிறார்.. நல்ல குரல் வளம் உள்ள அவர் பஜனையால் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து செல்கிறார்.. தானும் பாட ஆரம்பிக்கிறார்... பக்தியால் அல்ல தனது சாரீரத்தை பிறருக்கு காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்தில் பஜனையில் பாடுகிறார் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் அவரது மனைவி தீபா!

      1975 ல் பாபா ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார்... பஜனை பாடுவோர் மது, புகை, மாமிசங்களை விட்டுவிட வேண்டும் எனும் ஓர் இறை அறிக்கை... அது பண்படுத்துவதற்கான சுற்றறிக்கை...! சுற்றறிக்கை என்பது இன்னமும் நம்மை பக்குவப்படுத்துவதாகவே அமைதல் வேண்டும் பாகுபடுத்துவதாக அல்ல...! அப்படி பண்படுத்துவதாக அமைந்த போதிலும் அந்த சுற்றறிக்கையைக் கேட்ட பிறகு விட்டுவிடுகிறார்... புகையையோ மதுவையோ அல்ல பஜனையை...

ஆனால் அவர் விட்டாலும் பாபா அவரை விடுவதாக இல்லை.. அது தான் இறைவன் பாபாவின் நீள் கருணை...!

அது முதல் மதுவை விழுங்க தொண்டை சண்டை போடுகிறது! புகையை இழுக்க வாய் மறியல் செய்கிறது! மாமிசம் தொட இதயம் ஊரடங்கு நிகழ்த்துகிறது... மூன்று தீய குணங்களுமே அவரை விட்டு தூரம் போகிறது... பாடத் தொடங்குகிறார்... அது முதல் அவர் குரல் வழி பஜனைக் காற்றில் பக்தி எனும் ஈரம் பரவுகிறது!


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி/ பக்கம் : 60 / ஆசிரியர் : அமரர் ரா‌.கணபதி)


மது மதியை இழக்கச் செய்கிறது... மனிதன் ஏற்கனவே தனது அகந்தையால் மதியை இழந்திருக்கிற போது மது மேலும் அதை மழுங்கடிக்கிறது... பொறாமை நெருப்பு போல் புகை நெருப்பும் கெடுதல்... பொறாமை மனதையும் புகை உடம்பையும் கெடுத்துவிடுகிறது...! புலால் உண்ணும் எவருக்கும் இறை அருள் சாத்தியமே இல்லை... ஆனால் பாபாவின் நிழலில் வந்துவிட்டவர்கள் அதிலிருந்து விடுபடுகிறார்கள்! நம்மை மென்மையாகவும் மேன்மையாகவும் மாற்றுவதே இறைவன் பாபாவின் இறைத்தன்மை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக