தலைப்பு

சனி, 28 மே, 2022

பாபா கையில் பஞ்சபூதங்கள் வெறும் பஞ்சுமிட்டாய்களே!

மகான்கள் பஞ்சு பூதங்களை தவ பலத்தால் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருபவர்கள்... ஆனால் இறைவன் பாபாவிடம் பஞ்சபூதங்களே தானாக காலைச் சுற்றிக் குழையும் வீட்டுப் பூனைகள் போல் கட்டுப்பட்டு விடும்... அது பாபாவின் பேரன்புக்கான கட்டுப்பாடு... இந்தப் பேருண்மையை விளக்கும் ஓரிரு தெய்வத்திரு நிகழ்வுகள் சுவாரஸ்யமாய் இதோ...


அது நவராத்திரி வருவதற்கான சமயம்... பாபாவின் பரமபக்தை நாகமணி அம்மையார் புட்டபர்த்திக்கு சென்று அந்த வைபவத்தை கண்டு ஆன்ம பலன் அடைய வேண்டும் என தாகம் கொண்டிருக்கிறார்... ஆனால் அவர்களின் ஆன்ம தாகத்தை அப்போது பெய்த மழை வந்து மூழ்கடித்தது... மழையோ மழை! வெள்ளமோ வெள்ளம்...! அந்த அம்மையாரின் கணவர் பூர்ணையாவோ ரயில்வேயில் மட்டுமல்ல வீட்டிலேயும் அவர் குரலே ஓங்கி இருக்கும்... இந்த மழையில் தன்னை அவர் புட்டபர்த்திக்கு விட வாய்ப்பே இல்லை என நாகமணி அம்மையாருக்கே நன்கு தெரியும்! மின்சாரம் வேறு துண்டிக்கப்படுகிறது... ஊரடங்கு போல் சாலையில் ஒரே நீரடங்கு! காவல்துறை உயர் அதிகாரி தொலைபேசியில் அழைத்து பேருந்தே எங்கும் ஓடவில்லை என சொல்லிவிடுகிறார்.. பூர்ணையாவுக்கு இது தெரியாது! "சுவாமி ! புட்டபர்த்தி வரவேண்டும் என்பதற்காக என் கணவரிடம் நான் ஒரு பொய் சொல்லப்போகிறேன்... அந்தப் பொய்யை அவர் கண்டுபிடிக்க முடியாதபடி செய்து விடு!" என மனதிற்குள் வேண்டுகிறார்... அவர் சொல்லப்போவது பொய்யல்ல புரை தீர்ந்த நன்மையைப் பயக்கப்போகும் வள்ளுவ மெய்!


"இன்று பேருந்து ஓடுகிறது..ஃபோன் வந்தது... நான் புட்டபர்த்திக்கு சென்று வருகிறேன்!" என கணவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுகிறார் நாகமணி அம்மையார்! நெஞ்சில் அவ்வளவு தைரியம்... மழையோ வெள்ளமோ எதற்கும் பயமே இல்லை.. இது தான் பாபாவிடம் அவர் வைத்த உறுதியான பக்தி! காஸ்-வே பாலம் வரை பேருந்து ஓடியது.. இந்த முறை அந்தப் பாலத்தையும் கடந்துவிட்டது... பயணிகள் பின்னால் திரும்பியபோது.. அந்த பாலமே வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு அக்கரையில் வந்து நின்ற மற்றொரு பேருந்து அப்படியே நின்று கொண்டிருந்தது... பேரதிசயப்பட்டு பெருமூச்சு விடுகிறார் நாகமணி அம்மையார்... அம்மையார் பயணித்த பேருந்து படகு போல் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் கொண்டு சேர்த்தது... அம்மையார் பாபாவின் பாதத்தில் விழுகிறார்...  "உன் பக்தியும் வைராக்கியமுமே இங்கே உன்னை அழைத்து வந்திருக்கிறது..." என தானே அவரை அழைத்து வந்த போதும்.. அந்த கிரெடிட்'டை பக்தைக்கே சொந்தமாக்குகிறார் பாபா...! "இப்படித்தான் இன்னும் 10 நாள் நிலைமை இருக்கும்... இங்கேயே அமைதியாக சேவை செய்து கொண்டிரு!" எனச் சொல்லி ஆசீர்வதிக்கிறார்!


பாபாவின் அடுத்த பேராவதாரமான ஸ்ரீ பிரேம சுவாமிக்காக மைசூரில் கோவில் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருக்கிற சமயம்... கார் மேகம் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை தரிசிக்க சூழ்கிறது.. வாழ்க வாழ்க என இடி பேசுகிறது... இன்னும் ஓரிரு நிமிடங்களில் மழை அட்சதை பலமாக தூவப்படலாம்... என்ன செய்வது? அந்தக் கட்டுமானப்பணிகளை தலைமை தாங்கிய டாக்டர் முத்தே கௌடா "சாயிராம் சாயிராம் என்று சொல்லி வேலையைத் தொடருங்கள்.. சுவாமி கவனித்துக் கொள்வார்!" எனச் சொல்கிறார்... அவர் சொல்லி அடுத்த நொடியே மழை தூவ ஆரம்பிக்கிறது.. ஆனால் அவர்களைச் சுற்றி 100 அடி தூரத்திற்கே மழை பெய்கிறதே அன்றி.. ஒரு சொட்டு நீர் கூட அந்தக் கட்டுமானத்தையோ பணி செய்பவர்களையோ  தொடவே இல்லை...! ஆச்சர்யப்பட்டுக் கொண்டே அவர்களும் சாயிராம் எனச் சொல்லி தங்களது வேலையைத் தொடர்கிறார்கள்! 


ஒருமுறை நல்ல வெய்யில்... சென்னை வெய்யில் போல் படுபயங்கர கொளுத்துதல்... எரிமலைக் குழம்பையே தலையில் கொட்டுவது போல் வான் லோகமே எமலோகமாக வாட்டி வதைக்கிறது.. பாபா தனது பக்திக் குடும்பமான அர்ஸ் குடும்பத்தை அழைத்து உணவு உட்கொள்ள திறந்த வெளியில் உட்காரச் சொல்கிறார்! திடுக்கிடுக்கிறார்கள்... 

"கொளுத்துகிறதே! சுவாமி!" என்கிறார்கள்! 

"சுவாமி சொன்னா கேட்க மாட்டீங்களா?" என்கிறார் பாபா.

உடனே அந்த கொதிக்கும் கொப்பரை போல் இருக்கும் பூமியில் உட்காருகிறார்கள்... பாபா உடனே வானத்தை நோக்கி கை அசைத்து "வாங்க வாங்க" என்கிறார்... பாபா சொல்லிய அடுத்த நொடி மேகக் கூட்டங்கள் சுவாமி மாணவர்கள் பாபாவிடம் நெருங்குவதைப் போல் சரியாக அவர்கள் அமர்ந்த தலைமாட்டில் நெருங்கிச் சூழ்கின்றன‌... ஒரு குடையின் கீழ் அமர்வதைப் போல் அர்ஸ் குடும்பம் உணர்கிறது... புல்லரிக்கிறது அவர்களுக்கு...

     ஒருமுறை அர்ஸ் குடும்பம் ஜீப்பில் செல்கிறது... அந்த ஜீப் எதிர்பாரா விதமாக குடை சாய்கிறது.. எப்படியோ மீண்டு எழுந்த அவர்கள்... குடை சார்ந்த ஜீப்பில் அவர்களோடு வந்த சிறுவன் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதைக்கிறார்கள்... அந்த ஜீப்பை அவர்களால் நிமிர்த்தவே முடியவில்லை... குடை சாய்ந்த மனங்களை தர்மவழி நிமிர்த்தவே அவதரித்த பாபா காரில் வர... அவர்களின் அருகே வர... மெல்லிய தேகமே ஆன பாபா குடை சாய்ந்த அந்த ஜீப் அருகே செல்கிறார்...தனது சிறிய சீரிய ஒரே ஒரு விரலால் ஜீப்பை தொடுகிறார்..

ஜீப் அடுத்த நொடியே நிமிர்ந்து விடுகிறது...  இதனையும் நூலாசிரியர் பரவசமுடன் பதிவு செய்கிறார்... 

பஞ்சபூதங்கள் மட்டுமல்ல எந்த இயந்திரமும் பாபாவின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதே என்பதை உணரமுடிகிறது!


அதே அர்ஸ் குடும்பம் பாபாவை கூனுருக்கு அழைத்துச் செல்கின்றனர்... நள்ளிரவு... ஒரே மழை... இடி இடிக்க எழுந்து பார்க்கிறார்கள்... பாபாவை காணவில்லை.. தேடிப்பார்த்தபடி.. வருகிறார்கள்... வெளியே பாபா அந்த மழையில் நின்று கொண்டிருக்கிறார்...

"அய்யய்யோ சுவாமி நனைகிறாரே!" என பதைபதைத்து ஓடி அவர்கள் பாபாவின் அருகே செல்ல... பாபாவின் தெய்வத்திரு மேனியில் ஒருதுளி மழை கூட நனைக்கவில்லை... கருணை ஈரத்தோடு சொட்டச் சொட்ட இதயம் நனைந்திருக்கும் சுவாமியை அந்த மழை ஒன்றுமே செய்யவில்லை! பார்த்து ஆச்சர்யப்படுகிறது அர்ஸ் குடும்பம்!


பாபாவின் பரமபக்தரான கே.ஏ.ராஜா... அருணாச்சல பிரதேசத்தில் லெஃப்டினன்ட் கவர்னராக பணியாற்றிய சமயம்... அங்கே வீடு வாசல்களில் எல்லாம் மூங்கில் வேலைப்பாடுகளே அதிகம்... ஒரு தினம் அவரது வீட்டு லானை ஒட்டிய 15 அடி உயர மூங்கில் தடிகள் திடீரென பற்றிக் கொண்டு தீத்தாண்டவம் புரிகின்றன... அருணாச்சலேஸ்வரர் தீப்பிழம்பாய் அடிமுடி காணாமல் தன்னை செய்து கொண்டது போல் அருணாச்சல பிரதேசத்தில் ஒரே தீப்பிழம்பு... ஒடிவருகிற திருமதி ராஜா அதைக் கண்டு திடுக்கிட்டு செய்வதறியாது... "சாயிராம் சாயிராம்" எனக் கத்துகிறார்... அதைத் தீச்செவிகள் உள்வாங்கி அப்படியே அத் தீஞ்ஜ்வாலை தானாக  அணைந்து போகின்றன... "அதற்கு வாய்ப்பே இல்லை முழுக்க சுவாமியின் லீலை தான்... இன்னமும் எரிந்து முடிக்க வேண்டிய மூங்கில்கள் நிறைய இருந்தன... தீயணைப்புத்துறை வந்தாலும் கூட அவ்வளவு சீக்கிரத்தில் அணைந்துவிடாத தீக்கூட்டம் அது..!" என மனம் திறந்து கண்கலங்கி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் பக்தர் ராஜா!

தீயின் குணத்தையும் தீய குணத்தையும்  இறைவன் பாபாவை தவிர யாரால் தணிவிக்க முடியும்?!


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம் : 91 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


இறைவன் பாபாவின் பஞ்சவிரல்களில் பஞ்சபூதங்களும் அடங்கிவிடும்... காரணம் வேறொன்றுமில்லை... அவற்றை சிருஷ்டி செய்ததே பாபா தான்! அவருக்கு அது பெரிய விஷயமே இல்லை...! பாபாவால் இயலாதது எதுவுமில்லை... பாபா சங்கல்பிக்காமல் உலகில் எதுவும் நிகழ்வதில்லை... மனிதன் என்னதான் கடும்முயற்சி செய்த போதும்... பாபா அனுமதி இல்லையேல் எச்செயலும் நிகழாது! ஆக தான் செய்கிறேன் என்ற மாய எண்ணத்தை விடுத்து பாபாவிடம் நாம் சரணாகதி அடைந்து... வெறும் கருவியாக அவர் கரங்களில் நம்மையே நாம் ஒப்படைத்துவிட வேண்டும்... இந்த ஒப்படைப்பே ஆன்மீகம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: