தலைப்பு

திங்கள், 9 மே, 2022

உலக நடிகர் மோகன்லாலின் மோகன சாயி அனுபவங்கள்!


நடிகர் மோகன்லால் உலக நடிகர்களில் முக்கியமானவர். உணர்வுகளைத் துல்லியமாகப் பார்வையாளர்களிடம் கடத்துபவர். அவரின் கலை எனும் பதார்த்தத்தில்... ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் நடிக்காமல் அதிலேயே வாழ்ந்து காண்பிக்கும் அற்புதமான நடிகர். 

நடிகர் மோகன்லால் அவர்கள் பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியை வழிபடுவதற்கு முன்பே அவரின் இல்லத்தில் சுவாமி படம் இடம் பெற்றிருந்தது. அவரின் குடும்பத்தினர் வழிபட்டு வந்தனர்.
திரு மோகன்லால் தனது திருமணத்தன்று அதிகாலை மண்டபத்திற்கு கிளம்பும் முன்னர்  வீட்டின் பூஜை அறையில் வழிபடும்போது... 

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியைப் பார்க்க வேண்டுமென நீண்ட நாளாக அவர் ஆசைப்பட்டிருக்கிறார். Uncle Bun படப்பிடிப்பில் கோடைக்கானலில் இருக்கிறார். அங்கே ஸ்ரீ சத்ய சாயி ஆன்மிக முகாமிட்டிருக்கிறார்.
தரிசிக்க வேண்டும் எனப் பல முறை அவர் நினைத்துக் கொண்டாலும்..
இயற்கைக்கு மாறான சற்று பருமனான உடல்வாகு கொண்ட அந்தக் கதாபாத்திரமும் .. அதைக் கலைக்க முற்படும்போது நள்ளிரவு ஆகிவிடுகிறது ஒவ்வொரு நாளும்..
சூழ்நிலை கைதியாகிறார் நடிகர் மோகன்லால்.


படப்பிடிப்பு முடிப்பதற்கு முன்பே சுவாமி கோடையிலிருந்து கிளம்புகிறார்.
படப்பிடிப்புத் தளத்தில் அத்தனைப் பேர் இருந்தும் கூட தனித்துவிடப்பட்டது போல் உணர்வுகிறார் அந்த மகா நடிகர்.
பக்தியின் விதை ஆழமாக ஊன்றப்பட ஆரம்பித்திருக்கிறது மோகன்லாலுக்கு.

தாகம் தொண்டையைக் கவ்விப்பிடித்துக் கொண்டிருக்கையில் ஒரே ஒரு குவளை தண்ணீர் குடித்தாலும் அமுதமாய் அடித் தொண்டை வரை இனிக்கும்.. அது போலவே கடவுளுக்காக ஏங்கிப் பிறகு அவரை தரிசிக்கும் அந்த அமுத நிமிடங்கள்.

அந்தத் தனித்து விடப்பட்ட சூழலில் "சீடன் தயாராக இருக்கும் போதே குரு அவன் முன் தோன்றுவார்" எனும் சத்திய வாக்கு மோகன்லாலுக்கு நினைவுக்கு வருகிறது.

உட்புகுந்து ஞானம் ஊட்டுவதில் பேரிறைவன் சத்ய சாயிக்கு நிகர் அவரே!

புட்டபர்த்திக்கு ஒரு சிலர் அழைப்புவிடுத்தும் கடைசி நேரத்தில் தட்டிப் போகிறது.
ஒரு கோடி குதிரையைக் கட்டி தேரோட்டி வந்தாலும் கடவுள் சாயி அனுமதி இன்றி அவரின் எல்லைக்குள் எப்படி நுழைய முடியும்?

தனது பால்ய நண்பரான சித்தமருத்துவர் டாக்டர் விப்பின் சங்கையா அவரின் ஆத்மார்த்தமான அழைப்பின் பேரில் புட்டபர்த்திக்கு அழைக்கப்படுகிறார் மோகன்லால்.

பேரிறைவனின் 84வது அவதார வைபவத்தில் புட்டபர்த்தியே கோலகலமாய் கலை கட்டிக் கொண்டிருந்த பொழுது அது..


ஏற்கனவே தவறவிட்ட பல தரிசன சந்தர்ப்பங்கள் எல்லாம் இந்த அரிய அற்புத வைபவத்தைக் காண்பதற்காகத் தான் என மனதில் உறுதிப்படுத்தி உற்சாகமாகிறார் மோகன்லால்.

அவதார வைபவத்தின் முந்தைய நாள் மதியம் மகிளா தினத்தில் கலந்து கொள்கிறார் மோகன்லால்.

முக்கியமான அடுத்த நாளிலும் தரிசனத்திற்காகச் செல்கிறார்.

பேரா.முகுந்தன், கேரள ஸ்ரீ சத்ய சாயி நிறுவன தலைவர் மற்றும் டாக்டர் வேணுகோபால் இருவரும் மோகன்லால் அவர்களை வராண்டாவின் முன்னர் ஒரு இருக்கையில் அமரச் சொல்கின்றனர்.
முதியவர்கள் பலரின் முன் அப்படி அமர்வது மோகன்லால் அவர்களுக்கு விருப்பம் இல்லை. வேண்டாம் என சங்கோஜப்படுகிறார். ஆனால் அவர்களோ விடாப்பிடியாக இருக்கையில் அவரை அமர வைக்கின்றனர்.

சுவாமி வருகிறார். கேக் வெட்டுகிறார்.
கூட வந்த டாக்டரோ மோகன்லாலை இறைவனுக்கு அருகே அழைத்துப் போகிறார். 

பல வருடங்களாக மோகன்லால் சுமந்த தரிசன வேட்கை தணியப்போகிற நொடி அது.. பல வருடங்களாக மனதில் தேங்கிக் கிடந்த அதிசயக் கற்பனைப் பொழுதுகள் நிஜத்தில் அரங்கேறப் போகிற நிமிடம் அது.


"நான் மோகன்லால்.. கேரளாவில் இருந்து வருகிறேன். ஒரு திரைப்பட  நடிகன்" என்கிறார் மிக மெதுவாக.. இறைவன் ஸ்ரீ சத்யசாயி பாதம் அருகே வந்து கையில் ஒரு பக்தி ரோஜாவை ஏந்திக் கொண்டே...

ஒரு அகண்ட புன்னகையோடு அந்த பக்தி ரோஜாவை ஏற்றுக் கொண்டு அந்த ரோஜாவை வைத்தே மோகன்லாலின் சஹஸ்ரஹாரமான உச்சந்தலையில் அடித்து ஆசீர்வதித்திருக்கிறார் இறைவன்.

அந்த ஆசிர்வாத ரோஜா மலர் மேலும்  அருள்வயமான இதழ்களை தன் வாழ்நாளில் வளர்க்கும்.. அதற்காக பொறுமையோடு காத்திருப்பதாகவும் மோகன்லால் மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.

அந்த தரிசன நிமிடங்கள் எப்படி இருந்ததென பலரும் தொலைபேசி மூலம் மோகன்லால் அவர்களைக் கேட்க முயல...
அது வார்த்தைக்கு அப்பாற்பட்டதென...
அப்படி ஒரு வெளிச்சமிகு குளிர்ச்சிகர அதிர்வலைகளை  முதன்முறையாக தான் அனுபவித்ததாக வியந்து சொல்கிறார்.

ஒரு கணம் போதும். ஒரு நொடி போதும்.. நீண்ட ஆண்டுகள் தேவையில்லை. இதயம் திறந்திருக்குமாயின் இறைவனின் பேரனுபவத்தை எடுத்து நிரப்ப கண்ணிமைக்கும் ஒரே ஒரு வியன் விநாடியே போதுமானதாக இருக்கிறது.

தான் புட்டபர்த்தி சென்றது எதற்காகவும் இல்லை. எதை வேண்டிக் கொண்டும் இல்லை. பரமாத்மாவின் பாதார விந்தத்தில் மனதை இளைப்பாறச் செய்யவே என்கிறார் மோகன்லால்.
கள்ளம் கபடமற்ற அந்தக் குழந்தை புன்னகையையும் அந்தக் கண்களையும் தரிசனம் செய்ததாகவும்..

அந்தப் பேரருட் பார்வை தன்னைக் காப்பாற்றட்டும் .. தான் தடுக்கி விழ முற்படும் சூழலில் எல்லாம் தாங்கிப் பிடிக்கட்டும் என்கிறார் பக்தி பூர்வமான இந்த உலக நடிகர்.


(ஆதாரம்: Light of the cool night -- by actor mohanlal -- Nov 2009 -- mathrubhoomi - Malayalam daily) 

உலகம் ஒரு திரைமேடை. மாயையே அதன் திரை.. நாம் எல்லாம் நடிகர்களே.. இந்த அண்ட சராசரத்திலிருந்து நம்மையும் சேர்த்து இயக்குவது ஒரே இயக்குநரே..அது பேரிறைவன் சத்ய சாயி ஒருவரே.

பக்தியுடன் 
வைரபாரதி

1 கருத்து:

  1. அருமையான பகிர்வு👍மனிதர்களின் வாழ்க்கை எத்தகையது என பார்க்காமல்..அவர்களின் பக்தியையும்..நம்பிக்கையையும் மட்டுமே பார்க்கிறார் நம் பகவான் ! அவருடைய இந்த தன்மை நமக்கும் வந்தால்தான் அவருடைய பக்தர்கள் என நாம் சொல்லிக் கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு