தலைப்பு

வெள்ளி, 6 மே, 2022

நாத்திக கூட்டத்தினரிடையே நடக்கவிருந்த பாபாவை நினைந்து வருந்திய ஈஸ்வரன்னை!

இறைவன் பாபாவுக்கும்... அவரின் தாய்க்குமான பிணைப்பு சாதாரண மானுடப் பிணைப்பல்ல... சுவாமி மேலான ஈஸ்வராம்பாவின் அன்பும் அக்கறையும் அப்பேர்ப்பட்டது...எந்த ஒரு இக்கட்டான சூழலும் பாபாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்த உன்னதத் தாயின் உணர்வுப்பூர்வ அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...


பாபாவை ஈஸ்வரன்னை சுவாமி என்றே அழைப்பார்... அவர் இறைவனே என்பதை படிப்படியாக அனுபவித்து உணர்ந்தவர் இறை அன்னை ஸ்ரீ ஈஸ்வராம்ப்பா.. வேளா வேளைக்கு சாப்பிட மாட்டேன் என்கிறாரே...ஊர் ஊராய் இப்படி அலைகிறாரே... என கிராம தேவதைகளை வேண்டவும் செய்வார்.. அந்த கிராம தேவதைகளே பாபாவை வேண்டிக் கொண்டிருக்க.. அன்னை கிராம தேவதையை வேண்டியது தான் தூய தாய்பாசம்...

மற்ற தாய் போல் இல்லை இறைவனை பெற்ற தாய்! ஊருக்கே நல்லது அவரால் தான் பாபா வழி விளைந்தது!


சனாதன சாரதியில் பாபா எழுதி வந்த உபநிஷத் தொடர்களை மெச்சி தலை மேல் தாங்கி வாங்கிப் படித்து போற்றியவர்கள் ஏராளமானோர்! ஈஸ்வரன்னை அதை விசாரிக்கிறார்.. அற்புதம் அற்புதம் என்கிறார்கள்... "என்னமோ சத்யா பத்தாவது கூட பாஸ் பண்ணல... கொழந்த பண்டிதர் முன்னால ஏதாவது தர்க்கத்துல மாட்டிக்காம இருந்தா சரி!" என்கிறார் ஈஸ்வரன்னை.. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற வெகுளித் தாய் ஈஸ்வரன்னை...

     ஒருமுறை பாபா நாத்திகர்களின் கூட்டத்தினிடையே வலம் வரப் போவதான தகவல் ஈஸ்வரன்னையின் காதுகளை எட்டியது... அய்யோ ஏதேனும் பிரச்சனை வரப்போகிறது என பதைபதைக்கிறார்... தனது மூச்சைப் பிடித்து மாடிப்படி ஏறி பாபாவிடம் வருகிறார்... மூச்சு இறைக்கிறது! "என்ன கலவரம்?" என்கிறார் பாபா...

"நீங்க எனக்கொரு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும்"

"என்னது?"

"நான் சொல்லாம நீங்க எங்கேயும் போகக் கூடாது" 

"ஆங்காங்கே அருள் புரியத்தானே நான் மேலிருந்து கீழே வந்தேன்!"

"அது இல்லை சுவாமி... அந்த நாத்திக கூட்டத்துல நீங்க போகறச்சே...ஏதாவது அசம்பாவிதம் ஆகிடப் போகுது.. வேண்டாம் சுவாமி!" என தாய் கண் கலங்குகிறார்...

"நோயாளிகளை தேடி வைத்தியர் போகாம... வேறு யார் போறது? ஒரு பிரச்சனையும் வராது.. கவலைப்படாதே!" என்கிறார் பாபா. 

சாப்பிட்டு முடிக்கிறார் பாபா.. பெரும்பாலும் பாபா சாப்பிடும் போது குறைவாகவே எடுத்துக் கொள்வார் என்பதால் ஈஸ்வரன்னை அந்த உணவு வேளையில் பாபா அருகே அவர்  இருப்பதில்லை... தாய் மனம் தாங்காது! பாபா எழுந்து வந்து கனிந்த மொழிபேசி அன்னையை சமாதானம் செய்கிறார்... தாய்க்கிளி கண்கலங்குகிறது.. அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவரின் அருகில் சென்று "பாபாவை பார்த்துக் கொள்ளுங்கள்!" என்கிறார்.. அகில உலகத்தையே பார்த்துக் கொள்ளும் பாபாவை யார் பார்த்துக் கொள்ள இருக்கிறது?! அப்படி ஒரு அப்பாவித்தாய் ஈஸ்வரன்னை.. பாபா எல்லாம் வல்ல இறைவன் என்பதை காலம் கனியக் கனியவே உணர்ந்து கொள்கிறார் அன்னை!


பாபா அங்கே செல்ல.. தாய் இங்கே ஒரே வேண்டுதல்... சுவாமி அந்த நாத்திக கூட்டத்தினரிடையே நுழைந்து பேசி.. பிறகு ஆசிரமம் வருகிற போது... தாய் முந்திக் கொண்டு சுவாமியை வரவேற்க.. "அந்தப் பாம்புகளின் பற்களை எடுத்துவிட்டேன்!" என பாபா புன்னகைத்துக் கூற.. பெருமூச்சு விடுகிறார் தாய்! 

ஒருமுறை பாபா செல்வதான ரிஷிகேஷ் பயணத்திலும் தாய்க்கு அதே பதைபதைப்பு தான்... அங்கே மலை - குளிர்- ஆகாரம் கிடைக்குமா? - ஸ்வெட்டர் எடுத்து வைக்க வேண்டாமா? அங்கே பண்டிதர்கள் இருப்பார்களே- என ஆயிரம் கவலை அன்னைக்கு! பரம பக்தர் கஸ்தூரியோ தாயை சமாதானம் செய்ய வேண்டி.. "நீங்கள் கவலைப்படவே செய்யாதீர்கள்.. எப்போதும் நான் சுவாமி அருகே இருந்து காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பேன்!" எனப் புன்னகைக்கிறார்! "நல்ல சொல்லுங்க.. சொல்லிட்டே இருங்க!" என்கிறார் தாய்!

 

அந்த காயத்ரி தேவிக்கே பாபா தான் அருள் வார்க்கிறார் என சிகர பக்தர் கஸ்தூரிக்கு தெரியாதா!? தெரியும்! இருந்தும் தாயை சமாதானப்படுத்தியாக வேண்டுமே! அதற்காக அப்படி சொல்கிறார்.. அங்கே பண்டிதர்கள் இருப்பார்களே... ஏதாவது தர்க்கம் நேர்ந்துவிடப் போகிறது...என அன்னை  அங்கலாய்க்க... சுவாமியின் உபநிஷத் ஞானத்தை உணர்ந்தே ரிஷிகேஷ் பெருந்துறவி சிவானந்தரே தனது சீடர் சச்சிதானந்தரை அனுப்பி இருக்கிறார் என்பதை கஸ்தூரி அன்னையிடம் தெரிவிக்க சமாதானம் அடைந்து.. சுவாமியின் பயணத்திற்கு தேவையானதை எடுத்து வைக்க அந்த இடம் விட்டு சென்றுவிடுகிறார்! அது தான் இறைத் தாய் ஈஸ்வராம்பா!


(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 1 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)


தன் பிள்ளையை தெய்வம் புகழ்ந்தால் பூரிப்படையும் தாய்மார்கள்...பக்கத்து வீட்டுப் பிள்ளையைப் புகழ்ந்தால் முகம் சுண்டிப் போய்விடுவார்கள்... இப்படி தன் பிள்ளையே உயர்வு என வாழும் சுயநலமான தாய்மார்களின் முன்னே ஊரார் பிள்ளைகளுக்காக தன் பிள்ளையிடம் பள்ளி கேட்டவள், தண்ணீர் கேட்டவள், மருத்துவமனை கேட்டவள்.. ஸ்ரீ ஈஸ்வராம்பா ஒருவரே! ஈஸ்வரன்னையின் திருப்படத்தை பூஜையறையில் வைத்து வழிபட்டால் அவரைப் போல் நமக்கும் பரிசுத்தமான இதயம் வரும்... மேலும் அது ஆன்மீக உதயம் பெறும்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக