தலைப்பு

வெள்ளி, 13 மே, 2022

சத்யம் சிவம் சுந்தரம் மற்றும் மேன் ஆஃப் மிராகிள்ஸ் நூலை பிரைல் மொழியில் மாற்றிய பார்வையற்றோர்!


பாபாவின் பேரன்பு என்பது விசித்திரமானது... அது எப்போதுமே எதிர்பாரா மழை... நினைவுகளுக்கு அப்பாற்பட்ட ஆச்சர்யம்... அது ஆதிமுதல் காலம் தொடங்கியே உருகி ஓடுவது‌... அப்படி உருகி ஓடுவதில் ஏற்பட்ட மகிமை வெள்ளோட்டம் இதோ...


தான் அவதாரம் என அறிவித்த காலத்திற்கு முன்பே பாபா பேரன்பு மயமானவர்... தண்ணீர்க் காவடிகள் முதல் சக மாணவர்க்கான உதவிகள் என அது அவரது நடவடிக்கைகளை வைத்தே உணர்ந்து கொள்ளலாம்‌... "நான் அவதாரம்! ஆகையால் என்னிடம் அடங்கியே இருக்க வேண்டும்!" என்ற அடக்குமுறையோ‌... நான் மட்டுமே கடவுள்.. வேறு கடவுளர் கடவுளரே அல்லர்" என்ற ஒடுக்குமுறையோ... ஆணவப் போக்கின் நடைமுறையோ பாபாவிடம் என்றும் இருந்ததே இல்லை! அதுதான் பரப்பிரம்ம பாபாவின் ஆன்மீக ஏகத்துவம்! அது தான் சர்வம் சாயி மயம் ஜகத்!


அப்படியே தான் தனது பக்தர்களுக்காக பகல் 2 மணி வரை சாப்பிடாமல் காத்திருப்பார்... அவர்கள் தூரத்தில் இருந்து வருவதைக் கண்டுவிட்டால்... ஓடிப் போய் வரவேற்று "எவ்வளவு சிரமத்தோடு வருகிறீர்கள்! வாருங்கள் சாப்பிடலாம்!" என தானே தன் கையால் உருண்டை பிடித்து உணவு தருவார்! தனது நாலு மூழ வேஷ்டியை மடித்துக் கொண்டு குடத்தை வாங்கி தண்ணீர் கொட்டுவார்... ஆசிரம கட்டிடங்களுக்கு பாபாவே கல்லும் மண்ணும் சுமந்திருக்கிறார்... ஈஸ்வராம்பா தாயோடு சேர்த்து...  சமையற்கட்டில் தானே காய்கறிகளை நறுக்குவார்... பாபாவுக்கு பக்தர் கூட்டம் சிறிதளவில் இருந்து பெரிதளவான போதும் தனது பேரன்பு சுபாவத்தை அவர் மாற்றிக் கொண்டதே இல்லை... யாரையும் அதட்டி வேலை வாங்கியதே இல்லை! அன்றைய காலக்கட்டத்தில் வேடிக்கையாகப் பேசி... சிலருக்கு ஆறுதல் சொல்லியும்... பலருக்கு ஆன்ம தைரியம் ஏற்படுத்தியும்... மாலை வேளையில் சித்ராவதி நதி தீரத்தில் சிருஷ்டி லீலைகள் நிகழ்த்தியும்... இருட்டிய பிறகு ஒவ்வொருவரையும் தானே பத்திரமாக அவரவர் வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டுத் தான் பாத மந்திரமே செல்வார்! "இப்போது தான் எனக்கு நிம்மதி! நாளைக்கு பார்க்கலாமா?" என்பாராம் அவர்களிடம்... அப்படி தனது அத்யந்த (நெருங்கிய) பக்தரை கண்ணும் கருத்துமாக இன்றளவும் பாபா கவனித்துக் கொண்டே வருகிறார்!


இவற்றை எல்லாம் நினைவுப்படுத்திய பிறகு ஒரு முக்கிய சம்பவத்தை விவரிக்கிறார் நூலாசிரியர்... 1981 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி சென்னை சுந்தரத்தில் பாபா விஜயம் செய்திருந்த போது இரண்டு இளைஞர்கள்‌... இருவரும் பார்வையற்றோர்... தங்களைப் போல் பிற பார்வையற்றோரும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே சேவா திலகமும் ஸ்ரீ பிரேம சுவாமியின் தாயாக பிறந்திருக்கும் பாக்கியம் பெற்ற ஸ்ரீமான் கஸ்தூரி அவர்கள் இயற்றிய "சத்தியம் சிவம் சுந்தரம் " நூலையும்... வெளிநாட்டு பக்தரான மர்ஃபட் எழுதிய "மேன் ஆஃப் மிராக்கிள்ஸ்" எனும் நூலையும் பிரைல் மொழியில் (பார்வையற்றோர் தடவி வாசிக்கும் துளை மொழி) மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள்... அவர்களை பாபாவிடம் அறிமுகம் செய்கிறார்கள்... அவர்கள் இருவரையும் கண்டு பேரானந்தத்தில் கட்டி அரவணைக்கிறார் இறைவன் பாபா! பாபாவின் புன்னகை பகல் வெளிச்சத்தை விடவும் பிரகாசமாக வழிந்தோடுகிறது! அந்த ஆரத்தழுவலை நூலாசிரியரும் கண்டு ஆனந்தமடைகிறார்... அப்படி அவர் ஆனந்தப்படும் போது பாபா பால பாபாவாக திகழ்ந்த போது நிகழ்த்திய பேரன்பு மகிமா சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன...


அந்த இரு இளைஞரையும் அருகருகே வைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் பாபா..‌ அப்போது ஒரு இளைஞர் முகத்தை கேமரா முன் இன்றி எங்கேயோ வைக்க... பாபாவே தனது திருக்கரத்தால் அவரை அன்புவந்து சரிசெய்கிறார்... புகைப்படம் க்ளிக் செய்யப்படுகிறது!அதில் பதிந்தது பேரன்பு... அதில் பதிந்தது கருணை... அதில் பதிந்தது ஆன்ம சேவை... ஃபிரேம் செய்து இதயத்தில் மாட்டப்பட வேண்டியதே இறைவன் பாபாவின் இதிகாச மகிமை!


(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 284 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


கருணையால் நம்மை கட்டிப்போடுவதில் பாபாவுக்கு நிகர் பாபாவே... வாஞ்சையால் நம் மனதை வளைய வைப்பவர் பாபா... புல்லாங்குழலில் இருந்து வரும் இசையை மட்டுமல்ல தனது பேரன்பால் அந்த புல்லாங்குழலையே வளைப்பவர் இறைவன் பாபா! அப்படித் தான் ஆன்மீகம் இயங்குகிறதே அன்றி அடக்குமுறையாலும் ஒடுக்குமுறையாலும் எந்த நன்மையும் எதுவும் ஆன்மீகம் என்ற பெயரில் விளைவதில்லை... அதட்டினால் பூனை கூட நம் பேச்சை கேட்பதில்லை... வயிற்றில் எரிந்து கொண்டிருக்கும் பலரது நெருப்பை இதயம் எனும்  விளக்கில் எரிய வைப்பதே பாபா ஆன்மீகம் புரிகின்ற முதல் ரசவாதம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக