திருப்பதி பாலாஜியும் புட்டபர்த்தி பாபா'ஜியும் ஒன்றே எனும் சத்திய உணர்தலை ஒரு பெருமாள் பக்தைக்கு ஏற்படுத்தி அவர்களுக்கு நல்லதொரு வாழ்வை எவ்வாறு ஸ்ரீ சத்ய சாயி பெருமாள் அமைத்து தருகிறார் என்பது சுவாரஸ்யமாய் இதோ...
ஜெயமணி என்பவர் திருப்பதி பெருமாள் பக்தை. அவரே அவருக்கு எல்லாம். மதுரையில் பெற்றோருடன் வசிக்கிறார். "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" எனும் பாடலாய் ஜெயமணி இதயம் பக்தியில் உருகும்... அவரது பின்வீட்டில் ஒரு கேரளா குடும்பம். ஒவ்வொரு வியாழனும் சுவாமி பஜன் நிகழ்த்தும். ஜெயமணி யின் இதய ஓசை "பெருமாளே பெருமாளே " என ஒலிப்பதால் பஜனை ஓசையை அவர் பெரிதுபடுத்துவதில்லை. 1971 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜெயமணியின் தாயார் அந்த சுவாமி பஜனைக்கு செல்கிறார்... பஜனையின் இனிமையும்.. சுவாமியின் பேரதிர்வலைகள் பரப்புகிற சாந்தமும் தாயாருக்குப் பிடித்துப் போகிறது... அதை பகிர்ந்தபோதும் ஜெயமணி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... அடுத்த வாரம் சென்று வருகிற போது சுவாமியின் திருப்படத்தை கையில் ஏந்தி தாயார் வர... பூஜையறையில் மாட்டாதே... ஷோ கேஸில் வைத்து விடு என்கிறார் ஜெயமணி.. உலகமே ஒரு ஷோ கேஸ் அல்லவா...அது அனைத்தும் சுவாமிக்கே உரிமையானதாக இருக்கிறது! வெறும் ஷோ இந்த உலகம். அதன் பார்வையாளர்களே மனிதர்கள் உரிமையாளர்கள் அல்ல...!
அன்றொரு நாள்... அற்புதமாய் ஜெயமணி பெருமாளுக்கு பூஜை செய்கிறார்! வீட்டில் பெற்றோர் இல்லை.. தனியாக இருக்கிறார்.. பெருமாளை அடைய வேண்டும் என்ற பக்தி நோக்கில் தனக்கு திருமணமே வேண்டாம் என இருப்பவர் செல்வி ஜெயமணி.. பக்தியே இறைவனோடு ஒருவர் மேற்கொள்ளும் திருமணமே! உலகாயத பந்தத்தை விட பக்தி பந்தம் உறுதியானது.. அது மட்டுமே ஜென்ம ஜென்மமாய் தொடர்வது! சாரம் அற்ற சம்சாரத்தை விட வாழ்வின் சாரத்தை பிழிந்து தருவது சுவாமியோடு நாம் பிணைந்திருக்கும் பக்தி பந்தமே! அதுவே தீப்பந்தமாய் நம் அறியாமையை பொசுக்கி விடுகிறது! அழகழகாய் அந்த பூஜையில் தியாகராஜர் கிருதிகளை எல்லாம் பரவசமாய்ப் பாடுகிறது... பாடி முடித்து ஆரத்தி எடுத்து பூஜையறை விட்டு வெளியே வர... ஒரு திருரூபம் ஜெயமணியின் கதவருகே எட்டிப் பார்க்கிறது.. புஸ் புஸ் என்று கேசம்.. மந்தஹாஸ வதனம்... விரலை அந்த கதவில் பிடித்தபடி குறும்பாய் எட்டிப் பார்க்கிறது.. லேசாக வெண்ணுடை தெரிகிறது.. அது பாபாவே எனப் புரிந்து கொள்கிறார்... ஜெயமணிக்கு புதிர் கலந்த ஆச்சர்யம்.. விறுவிறு என கதவருகே அவர் விரைந்து போக சுவாமியின் திருரூபம் மறைந்து விடுகிறது! அது கற்பனை இல்லை... காரணம் ஜெயமணி சுவாமியை கற்பனை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை... அவர் சுவாமி ரூப பக்தை இல்லை... பெருமாள் ரூப பக்தையே! சுவாமி - சுவாமி பஜன் என்பதில் எல்லாம் ஒதுங்கியே இருந்தவர்... அப்படி ஒரு ஓர தரிசனம் காட்டி ஓரவஞ்சனையாக மறைந்துவிட்டு ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் ஜெயமணியின் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறார்! இதைத் தொடர்ந்து அடுத்த வாரமே பின் வீட்டு கேரளா குடும்பத்து சுவாமி பஜனில் கலந்து கொள்கிறார். தாயே ஆச்சர்யப்படுகிறார். சுவாமி பஜனை மிகவும் பிடித்துப் போகிறது.. அடுத்த வாரமே சுவாமி பற்றி ஹிந்தியில் பஜன் எழுதிப் பாடுகிறார்.. அனைவரும் ஆச்சர்யப்படுகிறார்கள்! இப்படி 100 பாடல்கள் மேல் சுவாமி பற்றி இயற்றி பாடுகிறார்! பூஜையறையில் பெருமாள் படம் இப்போது சுவாமி திருரூபமாய் மாறி இருந்தது! இருவரும் ஒருவரே என்பதை பலவித சோதனைகள் செய்தபடி உணர்ந்து கொள்கிறார்! சிலாரூபம் விட நிஜரூபமே பிரத்யட்சம்... நிஜரூபமே ஜென்ம சாபல்யம்... நிஜரூபத்தோடு மிக எளிதாக பக்தரின் இதயம் இணைந்து கொள்கிறது!
1971ல் பர்த்தி செல்லும் மதுரை பஸ்ஸில் அவருக்காகவே ஒரே ஒரு டிக்கட் காத்திருக்கிறது.. பர்த்தி செல்கிறார் ஜெயமணி... சுவாமியின் முதல் தரிசனம்.. பிரம்ம முகூர்த்தத்தில் வெள்ளிக் கதவு திறந்து அபய ஹஸ்தம் காட்டுகிறார் சுவாமி... தன் வீட்டின் கதவருகே ஓர தரிசனம் தந்த அதே ரூபம்.. அதே உடை.. இப்போது நேர் தரிசனம் தருகிறது... எத்தனை நாள் பெருமாளை உருகி உருகி வேண்டிக் கொண்டிருந்தவருக்கு பெருமாளே தரிசனம் தருகிறார்... அதை அணுஅணுவாக அனுபவிக்கிறார் ஜெயமணி...! பிறகு சுவாமியின் 50 ஆவது அவதார வைபவத் திருநாள் அன்று அருகே ஆனந்த தரிசனம்! பூர்ண சந்திர ஹாலில் சுவாமி அரங்கேற்றிய திருஊஞ்சல் தரிசனம்...பிறகு சென்னைக்கு வந்து சேவாதளர் பிரிவில் சேர்ந்து பர்த்தி சேவை நிறைய புரிகிறார் ஜெயமணி... அவருக்கு ஜாதக வரன் வருகிறது.. "சுவாமி ஆசீர்வதிக்கும் எந்த வரன் ஆயினும் திருமணம் செய்து கொள்கிறேன்" என்கிறார்! எவரெவருக்கு எவ்வகை கர்மாவோ அவரவர்க்கு அவ்வகையை அழகழகாய் அரங்கேற்றி வைப்பவர் சுவாமி! உடனே தாயார் ஜெயமணி வரன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு சுவாமி விஜயம் புரியும் தரிசன வரிசையில் காத்திருக்க... சுவாமி ஜெயமணி தாயார் முன் வந்து ஜாதகம் தொட்டு ஆசீர்வதித்து " மஞ்சிது- சந்தோஷம்" என்கிறார்.. பிறகு ஜெயமணி அமர்ந்திருக்கும் பின்வரிசையில் அவரை நோக்கி புன்னகை செய்து ஆசீர்வதிக்கிறார்!
ஜெயமணி யின் கணவராக வரப்போகிறவர் பெயர் மோகன். மும்பை அருகே உள்ள கோலிவாடாவில் இருக்கும் பாலாஜி பக்தர்... ஒருமுறை அவர் அங்கே தரிசிக்கும் போது ஜெயமணி ரூபத்தை மகாலட்சுமி ரூபத்தில் கண்டிருக்கிறார்.. பிறகு திருமண நிச்சயதார்த்தத்தில் "உங்கள் முகம் எனக்கு ஏற்கனவே பரிட்சயம்" என்றிருக்கிறார் மோகன்! இப்படித் தான் இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைக்கிறார் சுவாமி! பிறகு ஜெயமணி கணவர் குழத்தையோடு டெல்லியில் செட்டில் ஆகிறார்.. பாலவிகாஸ் குருவாகவும் திகழ்கிறார்!
ஏழுமலையின் ஐக்கியமே பர்த்தி... சிலாரூப பெருமாளே சிறுரூப பெருமாளாய் சுவாமி... அவரின் ஆதிசேஷனே திருக்கேசம்... அந்த பரம சாந்தமே புவனங்களை ஈர்க்கும் சத்தியம் எனும் பிரசாந்தம்!
(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -3 / பக்கம் : 95 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு)
பழம்பெரும் பக்தர் அனுபவங்கள் உன்னத உதாரணங்களே! இன்றளவும் இவ்வகை அனுபவங்களை சுவாமி ஏராளமாய் புரிந்து கொண்டு தான் வருகிறார்! சுவாமிக்கு சதா பக்தர்களின் சிந்தனையே! தேடித் தேடிப் போய் அனுகிரகிப்பவர் சுவாமி! ஜெயமணி அனுபவமே பெரிய உதாரணம்! அதில் துளியும் சுவாமிக்கான எந்த ஒரு சுயநலமும் இல்லை... பக்தர்களின் நலன் மட்டுமே சுவாமியின் ஒரே உள்நோக்கமும்... வெளி நோக்கமும்... சுவாமியின் திருப்பாதமே நமது ஒரே வீடாய் இருக்கிற போது நம் இதயமே கோவிலாகிறது! இழுத்து விடும் மூச்சே சுவாமிக்கு அருவ அபிஷேகமாகிறது! உள்ளத்தின் உருக்கமே சுவாமிக்கான நெருக்கமாகிறது! சுவாமியிடமான சரணாகதி... அது ஒன்று தான் நமக்கு வழிபாட்டு பலனைத் தருகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக