பாபா தனது பக்தரை எவ்வாறு நடத்தினார், அணுகினார் என்பதில் கருணை ரசம் சொட்டச் சொட்ட பரவசப்பட வைக்கும் பதிவுகள்.. அப்போது மட்டுமல்ல இப்போதும் பாபா தனது அடியாரை நடத்துகிற பரிபக்குவ பரிவுப் பாங்கு பரவசமாய் இதோ...
ஒருமுறை பாபாவின் நேர்காணல்... ஒரு பெண்மணியிடம் பெங்களூர் மல்லேசுவரத்தில் ஒரு முகவரியைக் கூறிவிட்டு "அங்கே வியாழன் தோறும் பஜனை நடத்தும் ஒருவர் இருக்கிறார் (அவர் பெயர் சொல்லி) அவரைப் பார்த்து.. இப்போது நான் சொல்லப் போவதை சொல்!" என்கிறார் பாபா!
பாபா தனது சுய சங்கல்பப்படி தனது திருச் செய்திகளை நேரடியாகவும்... கனவு / தியானம் / கடிதம் வழியாகவும்... இன்னொருவர்க்கு சொல்லியும் சொல்லச் சொல்கிறார்... அது போல் அந்த பெண்மணியிடம் பாபா "நான் யார்? உன் வேலைக்காரன்! உன்னை நான் மூன்று முறை மாரடைப்பிலிருந்து காப்பாற்றும்படி நேர்ந்துவிட்டது... உன் கால்களை பிறர் தொடுவதற்கு நீ அனுமதிப்பதாலேயே அது நிகழ்ந்தது... உனக்கு இதய நோய் வர அதுவே காரணம்... அப்படி அனுமதிக்க நீ ஒன்றும் முனிவரல்ல!" என்கிறார்!
கேட்ட அந்த பெண்மணிக்கே அதிர்ச்சியாகி விட்டது! கால்களில் விழ அனுமதிக்கும் அவருக்குப் போய் தான் வேலைக்காரன் என்கிறாரே சுவாமி என ஒரே அதிர்ச்சியும் ஆச்சர்யமும்... அது தான் இறைவன் பாபா... ஒரு விஷயம் சொல்ல வேண்டுமானால் அதை நயம்படச் சொல்பவர்! மனம் நோகாதவாறு ஞானத்தை அளிப்பவர்... பாபா மொழி சத்திய மொழி... திரேதாயுகத்திலிருந்தே பாபாவுக்கு இதே சுபாவம் தான்! மனைவியை கவர்ந்து சென்ற இராவணனிடம் பாபா நயந்தே பேசினார்... நயம் என்பது பயம் அறியாதது! அது இதய முதிர்வையே காட்டுகிறது! துரியோதனன் செய்தது தர்ம அத்துமீறல் எனத் தெரிந்தும் பாபா தூதாகச் சென்று நயம்படவே பேசினார்!
தூய துறவிகளின் கால்களில் விழுவது அவர்களை எந்த நிலையிலும் பாதிக்காது.. அவர்கள் நெருப்பைப் போன்றவர்கள்... ஆனால் அந்த பற்றறு நிலை உதிக்காமல் அப்படி கால்களில் விழ அனுமதிப்பது தீங்கையே விளைவிக்கும் என்று தெளிவுபடுத்துகிறார் பாபா!
ஆக அந்த மல்லேசுவர பக்தரும் கண்கலங்கி உணர்ந்து கொள்கிறார்! கணவரை இழந்து கண்கலங்கி வரும் முதிர்ந்து பெண்மணியிடம் பாபா "அவருக்கு சேவா பாக்கியம் முழுமையாகிவிட்டதால் பாதகதி (முக்தி) கொடுத்துவிட்டேன்... ஆகவே கலங்காதே! உனக்கு சேவா பாக்கியம் பாக்கி இருக்கிறது... நீயும் தன்நலமிலா சேவை புரிந்தால் உனக்கும் உன் கணவருக்கு வழங்கியது போல் முக்தி வழங்குவேன்!" என்கிறார்..
இது தான் இறைவன் பாபா.. பாபா மொழிகள் தூய்மையானது... பொதுநல நோக்குடையது... அது நம்மை அகநோக்கமாக்கி அவரோடு ஐக்கியப்படுத்தும் அக ரசவாதம் மிக்கது!
ஒரு முதிர்வயது பெண்மணியை அவரது குழந்தைகள் அழைத்துப் போக வருகிறார்கள்.. அப்போது அவர்களிடம் பாபா "சுவாமி கம்ப்பல் பண்ணவே இல்லை... நீயே யோசிச்சு பாரு! தம்பதியா சுவாமிகிட்ட வந்தீங்க... அவருக்கு ஸித்தி கிடைச்சாச்சு...நீங்க சுவாமியை விட்டுட்டு போய் மறுபடியும் மருமகள் பேரக்குழந்தைகள் என சம்சார நினைப்பிலேயே மாட்டிக் கொண்டா என்ன பண்றது?" என கேட்கிறார்... பூத் தூவும் போதிமரத்தடிக் கேள்வி அது! அந்த பரம சத்திய ஞானக்கேள்விக்கு முன் எப்படி அந்த முதிர்ப்பெண்மணியால் பாபாவை விட்டு கிளம்ப முடியும்?! பாபா எதைச் சொன்ன போதும் அது அவரவர் நன்மைக்கே!
மேலும் பாபா அந்த முதிர்ப்பெண்மணியிடம் தொடர்கிறார் "சுவாமி உங்களை காப்பத்தறேன்.. சேவா கொடுத்து... உபதேசம் பண்ணி சீக்கிரமா ஜபமாலை தரேன்...காலம் வரட்டும்... உங்க கணவருக்கு கொடுத்த மாதிரியே உங்களுக்கும் முக்தி தரேன்... எங்கேஜ்டா இருக்கற மாதிரி பாத்துக்கறேன்...நீங்களே சொல்லுங்க... இங்கயே இருக்கீங்களா? இல்ல உங்க பசங்களோட போறீங்களா?" எனக் கேட்கிறார் பாபா!
பிருந்தாவனத்திற்குள் வந்திறங்கிய பட்டாம்பூச்சி எங்கேயாவது பாம்புப் புற்றுக்குள் போகுமா?
அந்தப் பெண்மணியின் மகனிடம் "உன் அம்மாவை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாதே! உன்னை விட உன் அம்மாவை நன்றாகப் பார்த்துக்கறேன்! நாயனா அவங்க கடைசி காலத்துல சத்கதி அடைவதற்கான சூழ்நிலைய விட்டு மாறிப்போனா எப்படி முக்தி கிடைக்கும்.. அதை நீயே தடுக்கலாமா? அம்மாவுக்கு அம்மாவா... மகனுக்கு மகனா சுவாமியே அவங்கள பாத்துக்கறேன்!" என்கிறார் பாபா... திரும்பி பெண்மணியை நோக்கி...
"மகனோட போகலையேன்னு நினைக்காதே! சுவாமி தான் உன் மகன்!" என்கிறார்.. இறைவன் பாபாவின் அந்த இதயப் பெரும் மொழிகளுக்கு அவர்களால் எப்படி கண்கலங்காமல் இருக்க முடியும்!!
(ஆதாரம் : அன்பு அறுபது / பக்கம் : 223 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)
பாபாவின் பேரன்பு மொழியில் கசடுகள் தூய்மையாகின்றன... அசடுகள் பரிபக்குவமாகின்றன... நிரந்தரமில்லா உலக வாழ்வை நமது வாழ்க்கையின் மூலமாகவே நமக்கு உணர வைத்து நிரந்தரமான ஆன்ம வாழ்வில் நம்மை ஆழப்படுத்துவதற்கே பாபா அவதரித்து உணர்த்துகிற அடிப்படை ஆன்மீக நடைமுறை... வெறும் ஏட்டளவில் வெறும் உதட்டளவில் இருக்கும் ஆன்மீக ஞானத்தால் யாருக்கும் எந்த நன்மையும் ஒருபோதும் இல்லை... நற்குண மாற்றம் வராமல்.. பற்றறு நிலை வராமல்... ஒரு அங்குல உயரம் கூட ஆன்ம வாழ்வில் முன்னேற முடிவதில்லை! பக்தி தியானத்தால் ஞானமாகிறது! ஞானம் வைராக்கியத்தால் முக்தியாகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக