காரத்தை இனிப்பாகவும்... அகங்காரத்தை பணிவாகவும்... அதிகாரத்தை அடி வருட வைக்கவும் பாபாவால் சர்வ சாதாரணமாய் முடிகிற திருச்செயல்... அதில் பச்சடியை பாயாசமாக்கி பாபா புரிந்த விநோதம் சுவாரஸ்யமாய் இதோ...
நூலாசிரியர் தனது அனுபவத்தை விவரிப்பதற்கு முன் சென்னையில் ஒரு வீட்டில் சுவாமியின் திருப்படத்திலிருந்து கடிதம் போடுவதை பகிர்ந்து கொள்கிறார்... இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை... தனது ஆத்மார்த்த பக்தருடன் பாபா எவ்வகையிலும் தொடர்புக்கு வருகிறார்... ஒரு முறையாவது பாபாவை கனவில் அனுபவிக்காத பக்தர்களே இருக்க முடியாது! தனது பேரிருப்பையும் தனது பிரேமையையும் பாபா இன்றளவும் உணர்த்திக் கொண்டே வருகிறார்... பாபா தொடர்புக்கு வரும் பல ஊடகங்களில் ஒன்று கடிதம் போடுதல்... இதில் பிரசாதங்கள் என்ன சமர்ப்பிக்க வேண்டும்...? எப்படி அதன் சுவை இருந்தது? என்பது வரை கடிதம் வரும்...
ஒருமுறை அதே சென்னை குடும்பத்தில் வீட்டு பூஜையறை முழுக்க விபூதி கொட்டிக் குவிந்திருந்தது... பூஜையறையில் கால் வைக்கவே இடம் இல்லை... "அய்யய்யோ எப்படி நாங்கள் உள்ளே நுழைவது சுவாமி?" என அங்கலாய்க்கிறார்கள்... உடனே தனது திருப்படத்திலிருந்து ஒரு கடிதம் போடுகிறார் பாபா... பெரும்பாலும் தமிழிலேயே வருகின்ற கடிதம்... அந்த முறை ஆங்கிலத்தில் வருகிறது...
"If you don't like I will stop it! (உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் நிறுத்திக் கொள்கிறேன்)" என்று அந்த கடிதத்தில் பாபா எழுதியதை அவர்கள் வாசிக்க... திடுக்கிடுகிறார்கள்... அவர்கள் மனமோ... "அப்படி நினைக்கவில்லை சுவாமி... உங்கள் பேரன்பில் திக்குமுக்காடிப் போகிறோம்!" என மனதில் நினைத்து கண்கலங்குகிறார்கள்... அவர்களின் மன ஓட்டத்திற்கு மறு நொடியே "ok 1 Leela 1 day" (சரி.. ஒரு லீலை ஒரு நாளைக்கு) என்று வந்தவுடன் ஆனந்தப்படுகிறார்கள்... பக்தர்களின் மகிழ்ச்சியே எப்போதும் பாபாவுக்கு மகிழ்ச்சி!
நூலாசிரியர் ஒருமுறை புட்டபர்த்திக்கு பாபா தரிசனத்திற்காக வருகிறார்.. அப்போது திருமண விருந்து ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது... பாபா நூலாசிரியரையும் அமர்ந்து உண்ணச் சொல்கிறார்... பாபா அமர்ந்த எதிர் பந்தியில் அமர்ந்து கொள்கிறார்... ஒவ்வொரு பதார்த்தமாக வந்த வண்ணம் இருக்கிறது... நூலாசிரியர் தேகத்தில் குசேலர்... எழுதுவதில் குபரேர்...ஆனால் சாப்பிடுவதிலோ கடோத்கஜன் இல்லை... எழுதிக் குவிப்பாரே அன்றி சாப்பிடுவதில் அவருக்கு நிறைய நியமம் இருந்தது.. புளி காரம் என்றாலே அவருக்கு ஒவ்வாது! "அய்யய்யோ சுவாமி வேறு நம்மையே குறு குறு குறுவென பார்த்துக் கொண்டிருக்கிறாரே... இலையில் மிச்சம் வைத்தால் சுவாமி முறைப்பாரே.. எப்படி தப்பிக்கப் போகிறோமோ!" என்றவாரே இலை மீது ஒரு கை வைத்துக் கொள்கிறார்.. பாபாவோ அவரின் இலை மீது ஒரு கண் வைத்துக் கொள்கிறார்...
வித வித பதார்த்தம்... பிரம்மிக்கிறார் நூலாசிரியர்... "ஹப்பா பருப்பா... அதைப் பிசைந்தே சமாளித்துக் கொள்ளலாம்...!" என பருப்பு சாப்பிடுகிறார்... ஆந்திரா சமையல் காரமாக இருக்குமே... எதைத் தொட்டுக் கொள்வது... ஓ பாயாசமா.. பேஷ் பேஷ்.. இதைக் கூட பிசைந்து சாப்பிட்டு இந்தப் பந்தியிலிருந்து தப்பித்து விட வேண்டும் என நினைத்தபடி சாப்பிடுகிறார்...
அது என்ன வெள்ளையாக இருக்கிறது என தொட்டுப் பார்க்கிறார்.. தயிரா... தயிர்ப் பச்சடியா? ஆஹா தன் வயிற்றில் பால் வார்ப்பதற்கு பதிலாக தயிரையே வார்த்துவிட்டாரே சுவாமி என மகிழ்ச்சியோடு தயிர்ப்பச்சடியை தொடும் போது பெரிய பச்சை மிளகாய்... பாபாவோ நூலாசிரியரையே உற்றுப் பார்க்கிறார்... கை வரை வந்தது வாய் வரை சென்றால் காரமாக இருக்குமே... சரி சாப்பிட்டாக வேண்டும்... வேறு வழியே இல்லை என வாய்க்குள் தயிர்ப்பச்சடி சென்ற உடன் முகம் அஷ்ட கோணலாகப் போகாமல் ஆனந்தமாக மாறுகிறது.. இது என்ன பாயாசமாக இனிக்கிறது.. எனப் பலமுறை அதைத் தொட்டு சாப்பிட்டதும்... அதே பாயாச ருசி... பாயாசம் அவர் இலையில் இல்லவே இல்லை.. காரணம் அவர் அதை ஏற்கனவே காலி செய்துவிட்டிருந்தார்... என்ன சுவை இது.. இப்படி ஒரு சுவையைத் தான் சாப்பிட்டதே இல்லை என நூலாசிரியர் பதிவு செய்கிறார்! சாப்பிட்டு முடித்ததும் அக்கம் பக்கத்தில் விசாரிக்க.. அவர்கள் அனைவரும் சாப்பாடு ஒரே காரமாகத்தான் இருந்தது எனச் சொல்லியதைக் கேட்டு... தனக்கு மட்டுமே பாபா அவ்விருந்தை இனிப்பாக மாற்றியதை உணர்ந்து கொள்கிறார் நூலாசிரியர்... அன்று ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டும் எப்போதும் வருகிற ஜீரணக் கோளாறு எதுவுமே இன்றி... அது விருந்தல்ல பாபா மகிமை மருந்து எனக் கண்கலங்குகிறார்... அவருக்கு அது காரத்தால் ஏற்பட்ட கண்கலங்குதல் அல்ல... பாபாவின் கருணையால் ஏற்பட்ட கண் கலங்குதல்...!
(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம் : 43/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)
பக்தருக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பதை முதலில் கவனித்து எது பிடிக்க வேண்டும்! எது பிடிக்கக் கூடாது! எனும் உயர் தளத்திற்கு மாற்றுவதே பாபா புரிந்து வருகிற அகமாற்றங்கள்! "என் பக்தர் கஷ்டப்படக் கூடாது!" என கர்ம வீர்யத்தைக் குறைத்துத் தருவதும்... சில கர்மாக்களை அனுபவித்தே நீ கடந்தாக வேண்டும் என்று நெஞ்சில் நமக்கு தைரியம் தருவதும்... அனுபவித்த பின் பற்றின்மையும், ஆன்மீக வலிமை தருவதும் இறைவன் பாபாவால் மட்டுமே முடிகிற திருச்செயல்... அந்தக் கருணைக்கும் அந்தக் காவலுக்கும் நாம் நம்மையே பாபாவின் பாதங்களில் ஒப்படைக்கிற போது காரம் - அகங்காரம்- அதிகாரம் எல்லாம் இனிப்பாக மாறிவிடுகிறது! அதுவே பாபாவின் ஆன்மீக ரசவாதம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக