பொறுமை - நம்பிக்கை இவற்றையே இருகண்ணாக பொருத்திய ஷிர்டி சுவாமி தனது பர்த்தி அவதாரத்திலும் அதனையே தனது பக்தர்க்கு அருளிச் செய்தார்... பொறுமையை எவ்வாறெல்லாம் பாபா போ(சோ)தித்தார் என்பதற்கான சுவாரஸ்ய அனுபவங்கள் இதோ...
ஒரு முறை அஞ்சனா அம்மையாரின் புதல்வி மாலதி சுப்ரமண்யத்திற்கு கையும் காலும் முடங்கிப் போய்விடுகிறது... ஹைதராபாத் மஹிளா விபாக்கில் முக்கிய பங்கு வகித்திருந்தார்... அப்போது ஹைதராபாத் வருகிற பாபா தனது இல்லத்திற்கு வருவார் என காத்திருந்தார்... அஞ்சனாவும் அப்போது தனது மகளை பாதுகாத்து பராமரிக்க அங்கே இருக்கிறார்... எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் பாபாவுக்காக... எதிர்பாரா நேரத்தில் அருள்வது தான் இறைவன் சுபாவம்... முருகப் பெருமான் தனது கைகளால் தாங்கிப் பிடிப்பார் என எதிர்பார்த்தா அண்ணாமலை உச்சி கோபுரத்தில் இருந்து அவர் கீழே குதித்தார்... எதிர்பார்த்து புரிவது பக்தியே அல்ல... அஞ்சனாவிடம் விழா ஏற்பாட்டு சேவாதளருக்கு உணவு தரும்படி சொல்கிறார்.. அப்போதும் அனைத்தும் அறிந்த பாபா அவரின் மகள் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லையே என்ற கசப்பு... இப்படித்தான் இதயத்திற்கு பக்குவம் தருகிறார் பாபா...பிறகு மாலதியை ஒருநாள் தாமிருக்கும் இடத்திற்கு அழைக்கிறார் பாபா... எப்படி அழைத்துப் போவது.. நத்தை நிலை என்றால் கூட ஊர்ந்து போகலாம்.. உறைந்து போகிறார் மாலதி தாயார் அஞ்சனா... ஆனால் மாலதி கணவர் சுப்ரமண்யமோ பொறுமையோடு பாபா மேல் உள்ள நம்பிக்கையோடு சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்கிறார்... அப்போது கலை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது.. அந்த க்ரீன் ரூமிற்கே அழைத்தே வரப்பட்டு பாபாவே கீழிறங்கி அந்த அறைக்குச் சென்று சிருஷ்டி விபூதி வரவழைத்து..நடக்கும் வரமளிக்கிறார்.. பொறுமையின் சிகரமான கணவர் பூரித்துப் போகிறார்!
பம்பாயை சேர்ந்த படேல் என்பவர் மிகுந்த வலியோடு பாபாவை தரிசிக்க வருகிறார்.. ஒரு இடி அல்ல.. இரண்டு இடி.. படேலின் ஒரே மகள் வாய் பேச முடியாதவராகவும்... நடக்க முடியாதவராகவும் இருக்கிறார்... பாபா ஏதாவது வழி அமைப்பார் என மிகுந்த நம்பிக்கையோடு வருகிறார்.. அவரின் முன்வரிசை பின்வரிசை பக்தர்களை தனது நேர்காணலுக்கு அழைக்கிறாரே அன்றி படேலை அழைக்கவே இல்லை... துவண்டு போகிறார்...பாபாவே கைவிட்டபின் உயிர் எதற்கு? என தண்டவாளத்தில் தலை வைக்கிறார் ...
ஏதோ திடீர் உந்துதல் ஏற்பட நடை பிணமாய் எழுந்து கொள்கிறார்... நடக்கிறார்.. மனம் நின்றுபோய்விட்டிருக்கிறது... மருத்துவர் சரிப்படுத்த வில்லை எனில் மகான்களிடம் செல்லலாம்... மகான்கள் சரிப்படுத்தவில்லை எனில் மகேஷ்வரனிடம் செல்லலாம்.. அந்த பர்த்தி மகேஷ்வரனே கைவிட்டால்... இதயம் கிடந்து வேகிறது.. வீட்டின் கதவை திறக்கிறார் படேல்... "அப்பா... வா" என மனம் குளிர அழைக்கிறாள் மகள்... அதிர்ச்சி கலந்த ஆனந்தம்... சுவாமியின் திருப்படத்திற்கு முன் சாஷ்டாங்கமாய் விழுகிறார் படேல்...
1973 ல் ஜான் கில்பெர்ட் என்பவர் அரிய வகை புற்று நோயோடு நியூயார்க்'கில் இருந்து பர்த்தி வருகிறார்... 8 மாதங்கள் ஆகியும் பாபா கண்டுகொள்ளவில்லை... சரி உயிர் போகப் போகிறது அதை அமைதியாக எதிர்கொள்வோம் என்ற முடிவுக்கு வருகிறார்.. அது தான் சிறந்த வழி.. அமைதியாக மரணத்தை எதிர்கொள்வது என்பதை மனம் பக்குவமடைந்தால் தான் அவ்வாறு எதிர்கொள்ள முடியும்... இல்லை எனில் பிடிவாத குழந்தையை பிடிக்காத பள்ளிக்கு பிடித்து இழுத்துச் செல்வதைப் போல் மனம் அலறும்.. முகம் வாடும்.. இதயம் பதறும்.. பற்று என்பது மரணப்படுக்கையில் நெருஞ்சி முட்களை வீசும்... ஆனால் ஜான் அமைதியாக எதிர்கொள்ள திட்டமிடுகிற போது...
மருத்துவர் கே.ஸி. பாணி பர்த்தி வந்து ஜானை பரிசோதனை இட்டு பத்து நாட்களுக்கு வாழ இயலாத நிலையை உணர்ந்து பெங்களூர் மருத்துவமனையில் சேர்க்கலாமா சுவாமி ? எனக் கேட்க.. "செய்யேன்!" என பாபா அனுமதிக்க...
அங்கே ரத்த பரிசோதனைக்காக ஜான் ஒரு இடத்திற்கு செல்ல... அங்கே தண்ணீர் தொட்டியில் விழுந்த ஒரு குழந்தை மரண நொடிகளை எண்ணிக் கொண்டிருக்க... யாருக்கும் வேண்டாத ஜான் "நீ உன்னை யார் எனச் சொல்லிக் கொள்கிறாயோ... அதுவே நீ என்பது உண்மையானால் அந்த குழந்தையை காப்பாற்று பாபா" என ஜான் வேண்டிக் கொள்ளும் ஓரிரு நொடிகளில் முன்பின் தெரியாத குழந்தைக்கு ஆச்சர்யமாய் மூச்சு வருகிறது... பாபா இறைவனே என உணர்ந்து கொள்கிறார்! தன் நோயும் குணமாகும் என நம்பிக்கை வருவதில் தன் தேசத்திற்கே பயணம் மேற்கொள்கிறார்.. அந்த அரிய வகைப் புற்று நோயை (ஹாட்ஜ்கின் ) பாபா பறந்தோடச் செய்கிறார்...
மீண்டும் அது லேசாக எட்டிப்பார்க்க...
"மனத்தின் சலனத்தால் உனக்கு இப்படி நேர்ந்திருக்கிறது.. 3 மாதத்தில் குணமாகிவிடுவாய் !" என்கிறார் பர்த்தி நேர்காணலில் பாபா! மனித நோய்களுக்கு மனமே தொட்டில்...! என்கிறார் மகத்துவ சாயி!
(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 262 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)
பாபாவின் பாராமுகம் என்பதே பக்குவப்படுத்தத்தான்! காய்ச்சாத பாலும் பயன்பாட்டிற்கு உதவாத பாழே... பால் அல்ல! பணம்,பதவி,புகழ், உறவு,இனம் எனும் கற்பனைகளே அகந்தையை வரவழைக்கிறது... அந்த கற்பனைகள் சுட வேண்டும்.. அப்போதே பக்குவம் வருகிறது.. பற்று விட வேண்டும் அப்போதே சரணாகதி சாத்தியப்படுகிறது! பாபா மனித மனதிற்கு சாமரம் வீசுபவர் அல்ல மனப்பேயை சவுக்கால் அடித்து ஓட்டுபவர்... அதில் பொறுமை பரிசோதிக்கப்படுகிறது... நம்பிக்கை அசைத்துப் பார்க்கப்படுகிறது... சாதாரண காருக்கே டெஸ்ட் டிரைவ் அவசியமெனில் பாபாவின் வாகனமான மனிதனுக்கு? சோதனைகள் ஆன்ம சாதனைகளால் தாண்டப்படுகின்றன!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக