தலைப்பு

திங்கள், 30 மே, 2022

அந்தரத்தில் தடுமாறிய விமானத்தின் ரேடியோவில் பேசிய பாபா!

பக்தர்களின் அனுபவங்கள் சொல்லி மாளாது... அதற்கு ஒரு வரையறையும் இல்லை... கால நேரமும் பாபாவுக்கு எப்போதும் இல்லை... இது தான் பாபாவால் இயலும்... இது இயலாது என பாபாவுக்கு எந்த ஒரு எல்லைக்கோடுகளுமே இல்லை என்பதை வலியுறுத்தும் மெய் சிலிர்க்கும் அனுபவப் பகிர்வுகள் இதோ...


பாபா வருடந்தோறும் கோடை காலத்தில் மாணவர்களுக்காக ஆன்மீக கலாச்சார பயிற்சி முகாம் நடத்தி வருகிறார்... மாணவர்கள் தங்கள் விடுமுறை நாட்களைக் கூட வீணடிக்காமல் அக விடுதலைக்காக  விதை தூவிட வேண்டும் என்பது பாபாவின் தீர்க்க தரிசனம்! அந்த ஆன்மீக முகாமிற்கு ஒரிஸ்ஸாவிலிருந்து வந்திருந்த  இரண்டு மாணவர்கள் டாக்டர்களுக்கே பிடிபடாத காய்ச்சலில் விழுகிறார்கள்...

அந்த சமயம் அங்கு டாக்டர் ஏ.பாப்பி ராஜு தலைமையில் சில மருத்துவர்கள் பணி புரிகிறார்கள்... தினமும் 8 மணிக்கு 106 டிகிரியும்... மாலையில் ஒரே ஒரு டிகிரி மட்டும் இறங்கியும் காய்ச்சல் கொதித்துக் கொண்டிருக்கிறது! பாபா அந்த காய்ச்சல் மாணவர்களை பார்க்க வருகிறார்... 


"மருத்துவர்கள் உங்களால் இது என்ன என்பதைக் கூட கண்டறிய முடியலையா? இவர்கள் வாங்கிய டிகிரியை நீங்கள் வாங்கிய டிகிரி குணப்படுத்த மாட்டாதா? 8 நாளும் எந்த முன்னேற்றமும் இல்லையே... சரி... டைஃபாய்ட் காய்ச்சலுக்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.. பாய்ஸ் சரி ஆகிடுவாங்க!" என்கிறார் பாபா! 

டாக்டர்களுக்கு தூக்கி வாரிப் போடுகிறது... காரணம் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இது டைஃபாய்ட் இல்லை என்று தான் முடிவு செய்திருந்தார்கள்.. ஆகவே தான் பாபா சொல்லைக் கேட்டு அதிர்ச்சி ஆனாலும் கூட... பாபா சொல்படியே டைஃபாய்ட் காய்ச்சலுக்கே சிகிச்சை செய்கிறார்கள்... அக்னி நட்சத்திரமாய் கொதித்துக் கொண்டிருந்த அந்த மாணவர்களின் உடல் தணிந்து நிலவாகிறது...! 


விமானப் பணியிலே உயர் பதவி அடைந்து கொண்டிருந்த ஏ.சக்ரவர்த்தி... அவர் ஸ்க்வாட்ரன் லீடராகிறார் அவர்.. திடீரென அவர் வாழ்வில் ஒரு கர்மத் தடுமாற்றம்! அவரது மனைவிக்கு கருப்பையில் நோய் ஏற்படுகிறது.. அது தொற்று வியாதி என்பதால் அது சகர்வர்த்தியையும் தாக்குகிறது.. இனி திருமதி சக்ரவர்த்தி குழந்தைப்பேறு அடைவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்...விமானம் குடை சாய்ந்துவிடுவது போல் அவர் மனம் சாய்ந்தது...

ஒரு நாள் அவர் மட்டும் பாபாவிடம் வருகிறார்! "இரண்டு கைகளையும் சேர்த்து கிண்ணம் போல் பிடி!" என்கிறார் பாபா! அவரும் அப்படியே செய்ய... ஆம்! சக்ரவர்த்தியே கையேந்தியபடி இருக்க... பாபா சிருஷ்டி விபூதி தன் கரம் அசையத் தருகிறார்... அதை  அங்கேயே உண்கிறார் சக்ரவர்த்தி.. அடுத்த நாளும் அவ்வாறே நிகழ்கிறது... அவர் நோய் முழுவதும் குணமாகிறது... வீட்டிற்கு வருகிறார்... அவர் மனைவி நோயும் குணமாகி விடுகிறது! அது எப்படி சாத்தியம்? அடியேன் ஜுஸ் குடித்தால் உங்களுக்கு எப்படி வயிறு நிரம்பும்? இதை எப்படி விவரித்து வியப்பது? அவர் விபூதி உண்டார் நோய் குணமானது சரியே... ஆனால் அவர் மனைவிக்கும் சேர்ந்து எப்படி குணமானது? ஆகவே தான் பாபா இறைவன்! அவர் உண்ட விபூதி அவரின் மனைவியின் நோயையும் குணப்படுத்திய மகத்துவம் இறைவன் பாபாவை தவிர எவரால் இயலும்? 


அதிசயம் அதோடு நிற்கவில்லை... "உங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறது!" என்கிறார் பாபா. ஆனால் அதற்கான அறிகுறியே தெரியவில்லை அவர்களின் கர்ப்பப்பையில்... "நவம்பர் மாதம் குழந்தை பிறக்கும்!" என்கிறார் பாபா... அதற்கு இன்னும் பத்து மாதம் கூட‌ இல்லை... திருமதி சக்ரவர்த்திக்கு வயிற்றில் எந்த ஒரு உணர்வுமே இல்லை.. டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கரு ஏதும் உருவாகவில்லை எனச் சொல்லிவிடுகிறார்கள்... பாபாவிடம் மீண்டும் வந்து முறையிட "சுவாமி ஏற்கனவே சொல்லியாச்சே... சுவாமி சொன்னால் நடக்காமல் போகுமா?" என்று சொல்லி.. நவம்பர் 23 ஆம் தேதி அன்று குழந்தை பிறக்கும் என்கிறார் பாபா! அவர்களுக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கிறது... அன்று இரவே வயிற்றில் ஒரு ஜீவன் புரள்வதை உணர்கிறார் திருமதி சக்ரவர்த்தி... 


மருத்துவர்கள் அது கரு தான் என ஆச்சர்யப்பட்டுக் கொண்டே உறுதிப்படுத்துகிறார்கள்! அன்று நவம்பர் 23 ... மகப்பேறு வலியே இல்லை இருந்தாலும் மருத்துவமனைக்கு வருகிறார்... இன்னும் கொஞ்ச நாள் ஆகும் என்கிறார் டாக்டர்.. நர்ஸோ பாபா சொல்லியதை கேள்விப்பட்டு ... "பாபா இன்று தான் எனச் சொன்னதால் இன்றே பிரசவமாகும்... பாபாவை நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்! பாபா சொன்னால் நடக்காமல் போகவே போகாது!" என்கிறார்... இவ்வளவுக்கும் அந்த நர்ஸ் பாபா பக்தை கூட இல்லை... பாபாவை கேள்விப்பட்டவர் மட்டுமே! ஆம் அன்று  பாபாவின் 37 ஆவது அவதார ஜெயந்தி... அன்றே திருமதி சக்ரவர்த்திக்கு ஆண் குழந்தை பிறக்கிறது... குழந்தை ஆரோக்கியமாக புஷ்டியாக இருக்கிறது... மற்ற பிரசவம் போல் பத்து மாதம் சுமந்து பெற்ற பிரசவம் இல்லை...  கோரிப் பிறந்ததால் கோரக்கர் பிறந்தார் என்பார்கள் அது போல் பாபா சொல்லிப் பிறந்த சுந்தரக் குழந்தை அது! பாபாவே பெயர் சூட்டுகிறார் "கிருஷ்ண கிஷோர்!" என...

விஞ்ஞானம் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? மனித அனுமானங்களுக்கு அப்பாற்பட்டதே பிரபஞ்சத்தை இயக்கும் பாபாவின் பராசக்தி என்பதற்கான ஒரு துளி சான்றே இது!


விமான அற்புதம் நிறைய புரிந்திருக்கிறார் பாபா... கடத்திய விமானத்திலிருந்து பயணிகளை மீட்பது முதல் விமான ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் திடீர் இயந்திரக் கோளாறுகளை சரி செய்வது வரை நிறைய அற்புதங்கள்! அப்படி ஒருமுறை அமெரிக்க விமானப்படை மற்றும் 'நாஸா' முதலியவற்றின் ஆலோசகராக இருந்த அல் ட்ரக்கரின் விமானம் கலிஃபோர்னியாவின் ஸியெர்ரா நிவாடா மலைப்பகுதியில் திடீரென பயங்கர புயல் ஏற்படுகிறது... 12,000 அடி உயரத்திலேயே நிகழ்கிற கோர தாண்டவம்! ட்ரக்கரின் விமானம் புயலின் நடுவில் சிக்கிய பொரி உருண்டையாய் மாட்டிக் கொள்கிறது... ஆம் கலிஃபோர்னியா 'கலி' ஃபோர்னியாவாக மாறியதான பீதியான உணர்வுப் பொழுது அது!*


அந்த துர்பாக்கியப் பொழுதில் அபாயம் கூறி அபயம் கோரி அவர் ரேடியோ மூலம் பதிவு செய்த 'மேடே' விண்ணப்பங்கள் விண்ணை விட்டு நகரவே இல்லை! உதவ யாருமே இல்லை...! கடவுளே என மனதிற்குள் வேண்டுகிறார்.. பாபாவை அப்போது அவர் அறியக் கூட இல்லை! ஆகவே இறைவா கடவுளே என வேண்டிக் கொள்கிறார்! 

      வெளித் தொடர்பு அந்தப் புயலில் முற்றிலும் துண்டிக்கப்படுகிறது! 

செய்வதறியாது விழி பிதுங்குகிறார்.. வேர்த்துக் கொட்டுகிறது.. மூச்சு அவ்வப்போது விட்டுவிட்டு மறியல் செய்கிறது... "மரணம் தான் முடிவா? அப்படி நேர்ந்தால் தன் உடல் கூட தன் உறவுகளுக்கு கிடைக்காதே!" என்ற  வலி உணர்வு... அந்த சுழல் சூழலில் எதிர்பாராத விதமாக ஒரு குரல் ரேடியோ வழியே கேட்கிறது...


"விமானத்தை அப்படியே 60 டிகிரி வலது பக்கம் திருப்பி அப்புறம் இடது பக்கம் ஒடித்துக் கொண்டாய் என்றால் உன்னை அடையாளம் தெரிந்து கொள்வேன்! கவலைப்படாதே நான் வழிகாட்டியபடி உன்னை மெதுவாக தரை இறக்குகிறேன்!" என்கிறது அந்தக் குரல்.. மிக மென்மையான குரல்... அதற்கு முன் அப்படி ஒரு கருணையும் பிரேமையும் தளுதளுக்கும் குரலை அவர் கேட்டதே இல்லை! அப்படியே அந்தக் குரல் அவரை காப்பாற்றி தரை இறங்கச் செய்கிறது! அவரை மட்டுமா? எத்தனைப் பேர்களை அந்தக் குரல் இன்றளவும் கரையேற்றிக் கொண்டிருக்கிறது... பல ஆண்டுகள் கடந்த பிறகே அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் யார்? என்பதை அறிந்து கொள்கிறார் அல் ட்ரக்கர்... குரலுக்கு மட்டுமா ? இந்த பிரபஞ்சத்துக்கே அவர் ஒருவரே சொந்தக்காரர்... வேறு யார்? சாட்சாத் இறைவன் பாபாவே!


(ஆதாரம் : தீராத விளையாட்டு சாயி / பக்கம் : 107 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


ஆக்கல், அழித்தல் ,காத்தல், மறைத்தல், அருளல் ஆகியவை இறைவன் பாபாவின்  ஐந்தொழில்... அந்த அருளல் எனும் தெய்வத்திருச் செயலின் மிக முக்கியமான அம்சம் மீட்பது! பாபா சிறப்பம்சமே மன்னிப்பதும் - மீட்பதும்... இது மனிதனுக்கு இல்லாத அரிய குணம்... இறைவனுக்கே உரித்தான கல்யாண குணம்! அப்பெரும் பிரபஞ்ச இறைவனான பாபாவை வழிபடுகிறோம் என்பது கிடைத்தற்கு அரிய மகாப்பேறு... ஞானத்தின் மகப்பேறு! அவரிடம் நம்மை ஒப்படைப்பதே நாம் உயிர்ப்பிப்பதற்கான ஒரே வழி!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக