தலைப்பு

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கவிதா வாஹினி! (பக்கம் -2) -கவிஞர் வைரபாரதி

32) ஷிர்டி சாயி சத்ய சாயி:

ஷிர்டியில் வாழ்ந்த 
அதே ஜோதி தான் 
பர்த்தியில் பிறந்தது 

அகல் விளக்கா 
குத்து விளக்கா 
எதில் 
எந்த ஜோதி சிறந்தது? 

சிலர் 
ஷிர்டி சாயியே
நிஜம் என்கின்றனர் 

மூக்கின் 
இரு துளையில் 
எந்தத் துளையின் வழி
போய் வரும் காற்று நிஜம்? 

ஒரு கண்ணை மூடி
மறு கண்ணால் பார்த்து 
வேறு காட்சி என்கிறார்கள் 

அறியாமையை ரசிக்கும் 
ஆண்டவன் நீ 

வாண வேடிக்கையை 
வானம் ரசிப்பதாக 
வைரங்களை 
விண்மீன்கள் ரசிப்பதாக

முன் ஜென்ம 
பின் ஜென்ம 
ரகசியம் புரியாதவர்கள்
பேதம் பார்க்கிறார்கள் 

எண்ணங்கள் 
இறந்த பின்னும் தொடர்வதாக 
இறைவா நீ தொடர்ந்து வருகிறாய்

எண்ணங்கள் அடங்கும் போது 
ஷிர்டி பர்த்தி எனும் 
பேதம் அடங்கி 
உனக்குள்ளே நிறைந்துவிடுவர் 

இருளில் 
பொருட்கள் புலப்படாதது போல் 
மாயையில் மனம் 
பரம்பொருளைப் 
புரிந்து கொள்வதில்லை 

ராமனாய் வந்த நீயே
 கண்ணனாய் வந்து 
ஷிர்டியில் தங்கிய நீ 
பர்த்தியில் பரமார்த்தமாய்ப் 
பொங்கினாய் 

இவர்கள் 
சிசுபாலர்கள் 
உனக்கு
கண்ணனை விட
கருணை குணம் 

நீ ஒவ்வொரு 
யுகத்திற்கு இறங்கி வருகையில் 
உன் குணம் 
ஒவ்வொரு வடிவத்திற்கும்
இரங்கி வருகிறது 

ஷிர்டி ஸாயியின் உக்ரம் 
உனக்கில்லை 

அப்போது 
நெருப்பிலிருந்து நீ 
காப்பாற்றிய குழந்தை 
மீண்டும் விழுகிறது 

இதோ 
வெறுப்பிலிருந்தும் அதை 
நீயே காப்பாற்றுகிறாய் 

விறகெரித்து 
உதி தந்த நீ 
இப்போது
விரலசைத்து 
விபூதி தருகிறாய் 

அதை விட இது 
மிருதுவாகவே மணக்கிறது 

ஒவ்வொரு வடிவத்திற்கும் 
உன் கருணை 
பெருகித் தான் போயிருக்கிறது 

ஆறடி இருந்தும் 
அகிலத்திற்கு தெரியாத நீ 
நாலரை அடி இருந்தே 
நிகழ்த்தினாய் உன் 
விஸ்வரூபத்தை ...

உன் சூட்சுமம் 
உனக்கே புரியும் சுவாமி 

உன்னை 
உணர்ந்த விஞ்ஞானி 
பக்தனாகிறான் 
உன்னை ஆராய்ச்சி செய்யப் போய் 
பக்தன் 
விஞ்ஞானியாகவே 
விடை புரியாமல் 
விழித்துக் கொண்டிருக்கிறான் 

கலையும் தவமும் 
குணமும் 
பிறவி தோறும் 
மனிதர்க்குத் தொடர்கிறது 

மனிதரைத் தொடர்வதற்காக 
கடவுளே நீயும் 
பிறந்து பிறந்து 
அருள்கிறாய் 

நீயும் அருள்வதை விடுவதாக இல்லை 
அவனும் சந்தேகப்படுவதை
விடுவதாக இல்லை 

கர்மாவைத் தளர்த்து சுவாமி 

அறியாமை இரவு 
ஆயிரம் மணி நேரங்களா 
இருட்டி இருப்பது ?

அனுபவ விடியல் கொடு 
அவனுக்கு 

பேதங்கள் கடந்த 
அத்வைதம் அடைய வை
அவனை...

அவன் விரும்பும் ரூபத்தில் நீ
வரவேண்டி இருந்தால் 
ஒவ்வொரு நொடிக்கும் நீ 
ஒவ்வொரு ரூபம் எடுக்க வேண்டி இருக்கும்

அவன் விருப்பம் 
கற்களாய் இல்லை 
ஒரே இடத்தில் நிலைக்க 

கொசுக்களாய் 
பரவிக் கொண்டிருக்கிறது

இந்த 
இரண்டு ரூபமும்
இறைவா உன் சங்கல்பம் 

நாங்கள் மட்டுமென்ன 
ஒரே வடிவத்தை 
ஒவ்வொரு பிறவிக்குமா 
எடுக்கிறோம் 

மனித பாணியை 
நீ
பின்பற்றியே 
நீ மனிதனைப் பிடித்து
உனது பாணியை 
பின்பற்ற வைக்கிறாய்
பின் பற்ற வைக்கிறாய் 

ஆன்ம ஜோதி எரிந்து கொண்டிருப்பதை 
நெற்றியில் அகலிட்டுக் காட்டுகிறாய்

வெறும் கண்ணீர் நாங்கள் 
உன் காவி தொட்டு 
ஓவியம் தீட்டுகிறாய்

விறகாக வருகிறோம் 
அப்போதும் 
மடி அமர்த்தி 
மீட்டுகிறாய் 

சக்கரங்கள் இல்லா 
சப்பரங்கள் நாங்கள் 
உன் முதுகு தாங்கி 
எங்கள் வாழ்வை ஓட்டுகிறாய்

தண்ணீரில் ஏற்றிய நீ 
அடுத்த பிறவியில் 
கண்ணீரில் ஏற்றுகிறாய் 

தீபங்கள் எங்கள் 
புன்னகையாகப் பிரகாசிக்கிறது 

இடத்தை மட்டும் மாளிகையாக்கினாய் 
உன் இதயம் 
ஷிர்டியில் இருந்த 
அதே எளிமை தான் 

அதிகம் பேர் வந்துன்னை
ஆராதிக்க வில்லை 
இப்போது 
பதிகமே பாட வைக்கிறாய் 
உள் புகுந்தும் 
வெளி நிறைந்தும் 

சுவாமி எனக்கு உன் 
இந்த வடிவமே 
இஷ்டம்

உன் கார்முடிக்குள் 
என் 
ஆன்மாவைத் தொலைக்கச் செய்துவிட்டு
உன் பாதத்தில் என்னைத் 
தேட வைக்கிறாய் 

உன் மச்சத்தில் 
என் கண்ணின்
கருமணியை 
ஒட்ட வைத்து 
இன்னொன்றை நான் 
எடுப்பதற்குள் 
மூன்றாவது கண்ணில் 
மூண்டு விட்டாய்

ஷிர்டி மக்கள் 
உனக்கு சேவை செய்தனர் 
இன்று
பர்த்தி மக்களுக்கு மட்டுமா 
பிரபஞ்ச சிக்கலுக்கே 
நீ தான் 
சமன் சேவையாற்றுகிறாய்

ஒரு புல்லாங்குழல் 
ஒரே புல்லாங்குழல் 
அதில்
ஒவ்வொரு காலத்தில் 
ஒவ்வொரு பாடல் 
ஆனால் நீ 
ஒரே புல்லாங்குழல் தான்

எந்தக் காற்றை எல்லாம் நீ வாசிக்க அனுமதிக்கிறாயோ 
அதனுள்ளே 
இசையாகிவிடுகிறாய் 

அந்தப் பாடலுக்கு 
எப்படிப் புரியும் 
அது பிறந்தது 
புல்லாங்குழலாலா 
இல்லை 
காற்றாலா 

சுவாமி
புல்லாங்குழல் நீ 
காற்று பக்தி 
பாடல் நான்

33) மஞ்சள் மகிமா மங்கள சாயி:



மஞ்சள் விளைகிறது உன்
மங்கள உடையில் ...
பூசிக் கொள்கிறோம் இதயத்தில்

காவி உடை
உனக்கான
தவக் கோலம்
மஞ்சள் உடை
உனக்கான
தாட்சண்ய கோலம்

கழன்ற நெருப்பு காவி
குளிர்ந்த நெருப்பு மஞ்சள்

நீ
காவியில் காந்தமாகி
மஞ்சளில் சாந்தமாகிறாய்

சூரிய இயக்கம் நீ
சூரியகாந்தியாய்
சூடு தணிந்திருக்கிறாய்

கோரிக்கைகளை
மஞ்சள் மூர்த்தியிடம்
மனு தரச் சொல்கிறாய்

நிதம் உன்
மஞ்சளை தரிசித்தால்
மங்களமாகும்

விசேஷங்கள்
வீடு தேடி வரும்

சுப காரியங்கள்
சுரக்கும்

கல்யாணப் பத்திரிகையாய்க்
காட்சி அளிக்கிறாய்
சுவாமி

உன் திருக்கல்யாணம்
உன்னத பக்தியோடு

நீ நபரைப் பார்க்காமல்
தன்மையைப் பார்க்கிறாய்

பங்காரு பகவான் நீ
நீயே வந்து உரசுகிறாய்

பசுந்தங்கம் நீ
உரச உரச
பித்தளை நான்
தங்கமாகிறேன்

நீ இப்படி உரசுவதில்
பேரிச்சம்பழத்திற்கு நான்
விலை போகாமல்
உன்
போதிமரத்திற்கல்லவா
விலை போகிவிட்டேன்

மஞ்சளில் அலைமகளாய் ‌..
காவியில் மலைமகளாய் ...
வெண்மையில் கலைமகளாய் ...

எவரெவர்க்கு எதுயெது வேண்டுமோ
அவரவர்க்கு
அந்தந்த உடையோடு
அருள்கிறாய்

உடைகள் மாறுகிறது
உன்
கைக்குட்டை மட்டும் மாறுவதே இல்லை

சிவனடியார் அது
உன் விபூதி எல்லாம்
அதுவே
வாங்கிக் கொள்கிறது

அந்தக் கைக்குட்டை
நூலை வைத்துத் தான்
நெய்யப்பட்டிருக்கிறது
நூல் தான்
திருவாசக நூல்
மணிவாசகர் அல்லவா அது

மஞ்சள் பூக்களை
மஞ்சள் மூர்த்தி உனக்கு
சாற்றுகிறேன்

சாற்றிவிட்டு
பூ எது பட்டாம்பூச்சி எது
என
வித்தியாசம் தெரியவில்லை ..

பூக்களுக்கும்
சிறகு முளைக்கிறது
நீயும் இதழ் விரிக்கிறாய்

மற்ற பூக்கள் எல்லாம்
தேன் நிரப்பிய கோப்பைகள்

மஞ்சள் பூ நீ
அமிர்தம் நிரப்பிய
அண்டம்

பூக்களின் தேனுக்கே
சுற்றி வரும் வண்டு
உனது அமிர்தம் ருசித்தால் ...

தேன் கூடு
 கட்டுவதை நிறுத்தி
அமிர்தக் கூடாகி
அகத்தை ருசித்தபடி இந்த
ஜகத்தை சுற்றி வரும்

உன் படங்களைப் பார்ப்பதாக நினைக்கிறார்கள்
இல்லை
அது பார்ப்பது இல்லை
அதுவும் தரிசனமே

அதே அதிர்வலைகள் தான்
உன் படத்திலும்

புகைப்படம் தான்

உன் கேசம்
என் மாயையை விரட்ட
நீ போட்ட புகை

நெருப்பில்லாமல் புகையுமா
நெருப்பல்லவா நீ

நெருப்பின் தலையில் தானே
புகை எழும்

நீ ஜோதி என்பதால் தான்
இந்த ரூபம் என
இவர்களுக்குப் புரிய வை

வெளுத்திருந்தது உன்
இதயம் மட்டும் தான்
கடைசி வரை உன்
கேசம் கருப்பாகவே

இவ்வளவு
 புகையை நீ போடுவதால் தான்
இம்மி அளவாவது கனிந்து கொண்டிருக்கிறது என் இதய மாங்காய்

துகிலை நீ கீழே உடுத்தி
முகிலை நீ மேலே உடுத்தியிருக்கிறாய்

கருணையை நீ பொழிந்து கொண்டிருக்கிறாய்
உன் மழையும் நிற்பதில்லை
அந்தக் கார்மேகமும் கலைவதில்லை

எந்தப் பாத்திரத்தில் நிரப்ப ?

எங்களையே பாத்திரமாக்கினால் அன்றி
எதில் நிரப்ப !

பொற்காசுகளை
தைத்து உடுத்திய
கனகதாரா நீ

நெல்லிக்கனிகள் கூட
அவசியமில்லை

வேர்க்கடலைக்கே
நீ என்னை
விருத்தம் பாட வைக்கிறாய்

சூழலுக்கு ஏற்றார் போல்
பாக்களிலும் புதுமை செய்கிறாய்

மஞ்சள் பூ வாரம்
உன்
மகிமை தேவாரம் பாட

பரம்பொருளே
உட்பொருளை ஒன்றாக்கி
உணர்வை இன்னும்
வலுவாக்கி
கவி வடிவத்தில்
நவீனம் நவில்கிறாய்

உன் எழுத்தாணியாய்
இருந்த போதும்
பேனாவாய்ப்
பிறந்த போதும்
பேனா வாய் வழி நீயே
பேசுகிறாய்

தியானத்தில்
குருடு நான்
நீயே காட்டுகிறாய்
ஞானத்தில்
செவிடு நான்
நீயே கேட்க வைக்கிறாய்
ஆன்மத்தில்
முடம் நான்

இந்த
முடம் அதை
புடம் போட்டு
கைப் பிடித்து நடக்கிறாய்

மஞ்சள் சுவாமியே
கிருமி நாசினி நீ

என்
உள்ளிருக்கும் கிருமிகளை
ஒவ்வொன்றாக அழிக்கிறாய்

ஒரு கையால் அழித்து
மறு கையால்
அட்சதை தெளிக்கிறாய்

உன்
அருள் மழை
ஆன்மாவை நனைக்கிறது

உன்
அட்சதை மழை
எனக்குள் உன்னை
மணக்கிறது
என்னில் நீயாக
மணக்கிறது

சுவாமி இனி
நொடி தோறும் வேண்டும்
நம்

டும் டும் டும்

34) தீர்த்த சாயி தயா சாயி:



நதியாவதற்கு முன்பே
நடந்து போகும் ஒடையை 
கடலே நீ 
கையில் ஏந்தி
கடலாக்குகிறாய் 

விதியாவதற்கு முன்பே 
விருப்பங்களோடு ஓடும் 
மனதை 
விழியால் முறித்து நீ 
வெளிச்சமூட்டுகிறாய்

எதற்கோ ஓடுவதை 
எதற்கு நீ வழிமறிக்கிறாய் சுவாமி 

தன் விழிமறித்து ஓடுவதை நீ 
வழிமறித்தால் தானதன் 
வினை எரிக்க முடியும் 

துளியாகி இருந்தால் 
கொடுத்தாட் கொள்கிறாய் 

நதியாகி இருந்தால் 
தடுத்தாட்கொள்கிறாய்

ஓடையாகி இருப்பதால் 
எடுத்தாட்கொள்கிறாய் 

மனிதரை 
கொடுத்தாட்கொண்டு 
போகியரை 
தடுத்தாட்கொண்டு
பக்தரை நீ 
எடுத்தாட்கொள்கிறாய் 

ஆட்கொல்லிகளிடம் இருந்து நீ எங்களை 
ஆட்கொள்வதற்கே 
அவதரித்திருக்கிறாய் 

உன் தாகம் தீர்வதற்கா 
ஏந்துகிறாய் ? 
இல்லை உன் 
இதழ் சுவை தர வேண்டியே 
ஆனந்தத்திலதை ஓடவிட்டு 
அருளாய் நீந்துகிறாய் 

மல்லாந்த நீரை 
மேல்நோக்கி வா என்கிறாய் 

ஓடையின்
கண்ணீரை 
கைத்தூக்கி நிறுத்துகிறாய்

இப்படி 
நீரை நெருப்பாக்குவது 
உன்னால் மட்டுமே
முடியும்
சுவாமி 

நீ மீட்கின்ற 
பொருளெல்லாம் 
பரம் பொருளாகிறது 

நீ ஏற்காதவையெல்லாம் 
வெறும் பொருளாகிறது 

பேதமுண்டா உனக்கு ?

தாமரையைத் தான் 
உனக்கு அர்ச்சிக்கிறோம் 

அது அமர்ந்த 
சேற்றையா உனக்கு 
அபிஷேகிக்கிறோம் ?

உயர்ந்தவன் நீ 
அதனால் தான் 
எழச் சொல்கிறாய் 

எழுந்தால் தானே
உன்னை
தரிசிக்க முடியும் 

இளகி இருப்பதற்கே 
இதயம் திறக்கிறாய்

இரும்புப் பெட்டிக்குள் அடைபட நீ என்ன 
பணமா? 

உருகி ஓடுவதன்
உள்ளம் நுழைகிறாய் 

இறுகி இருப்பதை நீ 
சூடேற்றுகிறாய் 
பள்ளம் வீழ்ந்தோரை 
மேடேற்றுகிறாய் 
ஏலாததை எல்லாம் 
ஏடேற்றுகிறாய் 

ஆச்சர்யமே இல்லை 
எனக்கு 

பூமி ஒரு 
பைத்தியக்கார விடுதி 
காப்பாளன் நீயே 
மருத்துவனாகவும் 
சிகிச்சை அளிக்கிறாய்

மூளைக்குள் 
நிலையாமை மின்சாரமளித்து 
பேதளிப்பை 
சீதளமாய்க் குளிர வைக்கிறாய் 

உனக்கு நாங்கள் 
விளக்கேற்ற வேண்டாமா !
இருள் எங்களை 
ஒளிர வைக்கிறாய் 

தர்ப்பைப் புல் எங்களை 
தளிர வைக்கிறாய் 
முடக்கு வாதங்களான 
எங்களையும் 
மலர வைக்கிறாய் 

அநிச்சையான
உன் கருணை 
அநிச்சமான 
உன் இதயம் 
அயர்ச்சியற்ற
உன் அருள் 
அதிர்ச்சியற்ற 
உன் பார்வை 
முதிர்ச்சியற்ற எங்களை
முதிர வைக்கிறாய் 

முட்கள் எங்களை 
உதிர வைக்கிறாய் 
வெற்றுக் காம்பில் 
வந்து நீ 
உதிரி வைக்கிறாய் 

விபூதி வரவழைத்து 
விரலை 
உதறி வைக்கிறாய் 

உதறினால் தானே 
உனைச் சுற்றும் காற்றுக்கும் 
கருணை கிடைக்கும் 

ஓடையில் உன் 
ஆவாஹனங்களும் 
பாடையில் உன் 
ஆரோஹணங்களும் 

உயிர்ப்பித்து
எழ வைக்கிறது
அதை 
பிறப்பித்து 
எழுத வைக்கிறது

நீ தீண்டிய கணம் 
கடலாகிவிட்டோமென 
அலையாடி இருக்கும் 

குமிழிகளிலும் 
கதிரொளி 
கலையோடி இருக்கும் 

பர்த்தியிலும் உன் 
பாதங்களிலும்
கங்கையை வரவழைத்த நீ 

தேடிச் சென்று 
ஓடைக்கு 
மகிமை என்னும் 
மேடை அமைத்துத் தருகிறாய் 

எதை நீ தொட்டாலும் 
அதுவாக 
பிறந்திருக்கக் கூடாதா
என
நினைந்துருகுகிறேன் 

ஒற்றையடிப் பாதையில் 
யாரோ உனக்கனுப்பிய
திரவக் கடிதங்களை 
நீ 
வாங்கிக் கொள்கிறாய் 

எங்களின் 
தலை எழுத்தே 
புரிந்த உனக்கு

கண்ணீரின் கையெழுத்து
புரியாதா சுவாமி !

மேகம் இருண்டிருக்கிறதே 
சூரியன் எப்படி
பிரகாசிக்கிறது 
என்றல்லவா நீ 
தலை குனிகையில் 
இந்த ஓடை நினைத்திருக்கும்

வெளிப்படையானதை 
வெளிப்படையாய் உன்
விரல் ஏற்கிறது 

உள்ளொன்று வைத்தவர்களை 
உள் சென்றே நீ 
உட்கொள்ள வேண்டி இருக்கிறது

உன் தாகத்திற்காகவா 
அதன் அருகே வந்தாய் 
அதன் தாகத்தை
அறிந்தல்லவா 
அதன் கரை நின்றாய் 

சுற்றி நிற்கின்ற 
புற்கள் 
கற்களாய் மாறத் தவித்திருக்கும் 
சுவாமி நீ 
கால் வைக்க மாட்டாயா என...

ஓடை சுமக்கும் மணலும் 
கோடை சுமக்கும் அனலாய் 
உன் காட்சியைப்
பிரதிபலித்து 
காவியாகி இருக்கும் 

அலைபாய்தல் 
காலியாகி இருக்கும் 

தன் சுய நினைவுக்கு வர 
சற்று நாழியாகி இருக்கும் 

அதன் ஓடுகின்ற 
ஆதி தாளமெல்லாம் 
உனைப் பிரசன்னம் பார்க்க 
உருட்டிப் போடும் சோழியாகிருக்கும் 

அது என்ன 
வெள்ளையாய் 
கைக்குட்டையா ?
எங்கே சென்றாலும் 
அதை விட மாட்டாயா 

இலக்குவன்
தொடர்கின்ற அண்ணனா நீ 

ஓடை அழுகிறதென்றா 
உன்
கைக்குட்டையையும் 
சேர்த்துச் சுமந்தாய் ?  

உன் விரலே போதுமே சுவாமி 
எங்களுக்கது தான் 
கண்ணீருக்கான கைக்குட்டையும் 
கதகதப்புக்கான 
கம்பளியும் 
ஆன்மாவுக்கான 
போர்வையும் 
விபூதிக்கான 
ஊட்டமும் 
அனுபூதிக்கான 
ஊட்டலும் 

ஓடியது போதும் 
ஆவியாகி விடு என்றா 
சூரியன் நீ 
அருகில் வந்தாய் !

கலவை சுமந்தது போதும்
நிலவைச் சுமந்து கொள் என்றா 
சந்திரன் நீ 
தழுவ வந்தாய்! 

இது தான் 
நீரில் பூத்த 
நெருப்பா !

அப்பப்பா 
அப்பாலும் அருகாமையாய் 

அகத்திய கமண்டலத்தை 
நீ இன்னும்
அடைக்கவில்லையா !

சிவனே நீ இறங்கி இருக்கையில் 
தான் எதற்கு என 
தொலைந்த அகத்தியன் 
கிடைக்கவில்லையா ! 

சுவாமி
இப்படியே 
குனிந்து கொண்டிருந்தால் 
உன் குவிந்த சடையிலிருந்து அவள் 
குதித்தபின் 
கங்கை நீரெது 
ஓடை நீரெது என
எப்படி நாங்கள் 
வித்தியாசம் உணர்வது ? 

கங்கைக்கு உன் மேல் 
தாகம் என
நீரே கொண்டீரோ 
இங்கே அவளை கொஞ்சம் 
இறக்கி விடலாம் என 
ஓடைக்கு வந்தீரோ 

உன் கேச முகிலில் 
எந்தத் துண்டுகள் 
தவறி விழுந்ததென 
எடுக்க வந்தாய் சுவாமி !

ஓடைக்குமுள்ள 
பீடையைப் போக்க 
பகவானே நீ காட்சி தந்தாய் 

நஞ்சைத் தொண்டையிலும் 
நெஞ்சைத் 
தொண்டிலும் வைத்த 
என் சுவாமி 

அஞ்சை 
ஆறாகப் பாயவிடுகிறாய் 
அது ஒழுங்காகப்
பாய்கிறதா என்பதையும் 
பார்த்துவிடுகிறாய் 

உன் 
கருணை ஜாடை
கரைகளை உடைக்கின்ற தருணம் 
என் 
கண்ணீர் ஓடை 
தரைகளை உடைக்கிறது 

நீ தொட்டெழுப்பிய நீரைத் தெளித்துக் கொள்ள வேண்டும்

கை விட்டெழுப்பிய 
ஓடைக்குள் 
மூழ்கி விட வேண்டும்

அதுவே சுவாமி
எங்களுக்கான 
நிஜ ஞானஸ்நானம்

35) நாராயண சேவ நாராயண சாயி:



சுவாமி நீயே 
பரிமாறுகிறாய் 
உணவுப் பசி 
உதிர்ந்து போக 
உணர்வுப் பசி ஆரம்பிக்கிறது 

நாராயண சேவையாற்றும் 
நாராயணா 

சாயி சாயி இது 
பக்தனின் 
பாராயணம் 
சேவா சேவா இது 
நாராயணா உனது 
பாராயணம் 

சுவாமி நீ 
பிரபஞ்ச சக்கரவர்த்தி 
இப்படி குனிகிறாயே 
உன் 
இறக்கத்திற்கும் 
இரக்கத்திற்கும் ஒரு
அளவே இல்லையா 

ஆணையிட்டால் 
ஆள் இல்லையா 
நீயே பரிமாறி 
நீயே பசியாறி 
உன் 
ஏக அநேகத்தில் 
ஏகாந்தம் எத்தனை !

பராரியின்
முராரி நீ 
முகாரியை மாற்றும் 
பூபாளம் உன் 
பஜனைத் தாளம் 

உன்
முட்டி மீது விரல் வைத்து
பிடிமானம் கொள்கிறாய்
நாங்கள் 
முட்டிக் கொள்கையில் 
நீயே விரல் தொட்டு 
பிடிமானம் ஆகிறாய் 

பசிப் பணி முதலில் 
பிறவிப் பிணி அடுத்தது என
உன் படிநிலை சேவையில் 

பிறவி நோயை நீ 
போக்க வேண்டுமென 
இப்போது பசிக்கிறது 

உன்னைத் தவிர 
உலகத்திலேதும் 
சுவாரஸ்யமில்லை 

உன்னை விட 
வாழ்க்கையில் எதனாலும்
விடுதலை இல்லை 

கட்டிப் போடப்பட்ட
கர்மாக்களுக்கான 
கத்திரிக்கோல் நீ 

அவிழ்த்து விடப்பட்ட 
ஆன்மாவுக்கான 
செங்கோல் நீ  

வெளுத்து விரிபட்ட
இதயங்களுக்கான 
எழுதுகோல் நீ 

வயிறொன்று 
இல்லாமலே இருந்தால் 
அலைச்சல் குறையுமே 
சுவாமி 

மூளையொன்று 
மூளாமலே இருந்தால் 
அகந்தை அழியுமே சுவாமி 

மனமொன்று தொடராமலிருந்தால் 
சஞ்சலம் தீருமே சுவாமி

பிறவிகள் தந்து ஏன்
பழி வாங்குகிறாய் ?

கர்ப்பத்தில் இருப்பதற்கு முன் உன் 
இதய 
வெப்பத்தில் தானே இருந்தோம் 

ஏன் சுவாமி 
உடல் தந்தாய்? 

எண்ணங்களைப் போக்கும் உன் 
ஏற்பாடுகளை எல்லாம் 
மனிதன் 
எண்ணிப் பார்ப்பதே இல்லை 

சிந்தனையை
 எண்ணச் சொல்கிறாய் 
அவன் 
சில்லறைகளை எண்ணுகிறான் 

பக்தியைச் சேர்க்கச் சொல்கிறாய் 
அவன் 
பணத்தைச் சேர்க்கிறான்

நாளையை நீ
நாளை மறுநாள் 
வா என்றால் 
அது 
நாளை மறுநாள் தான் வரும்

அவன் 
நாளையின் சிந்தனையில் 
நாயகனே உன்னை 
நினைப்பதே இல்லை 

சிவனே நீ 
அழைத்தால் தான் வருவாய் 
எமனோ நாங்கள்
அழைக்காவிட்டாலும் 
வருவானே 

வருகின்ற வலி 
செல்வந்தன் இவன் என
பயந்து போய் விடுமா?

மூச்சை விற்று சேர்த்த 
மாய தனத்தை எல்லாம் 
மருத்துவப் பிடாரியிடமே
வாரி இறைக்கிறானே 

மருந்துக்காவது 
தர்மம் செய்கிறானா ?
தான் 
திருந்தவாவது 
தானம் செய்கிறானா ?

உடம்பை  
ஒரு நாள் நீ காலி செய்யச் சொல்வாயே 

சொந்த வீட்டுக்காரனும் 
வாடகை வீட்டுக்காரனும் 
சேர்ந்தே அல்லவா 
வீட்டை காலி செய்தாக வேண்டும் 

தேவைக்கு வேண்டும் 
என
தேர்ந்தெடுப்பவன் மனிதன் 

சேவைக்கு வேண்டுமென 
சேகரிப்பவன் பக்தன் 

பூசைக்குக் கூடும் 
பூக்களே வாடியாக வேண்டும் 
ஆசைக்கு ஆடும் 
மனிதன் மட்டும் 
அப்படியே நிலைப்பானா?

முடித்து விடுவது 
மரணம் 
முடிவுக்குப் பின்னும் 
தொடரச் செய்வது 
சுவாமி உன் சரணம் 

சுவாமி 
என் தேவை 
எல்லாம் நீ தான் 

எத்தனை நாளைக்கு 
உனக்கு நான் சேவையாற்றுவது ?
சுவாமி ஏற்றுக் கொள் 
நானே உனக்கு 
சேவையாகிவிடுகிறேன் !

பக்திக்கு முன்னால் 
சேவை வேறு
சேவகன் வேறு உன் 
சக்திக்கு முன்னால் 
சேவை வேறு 
சேவகன் வேறா?

36) ஸ்வாகத சாயி சரணாகத சாயி:




வழி தவறிப் போனவர்களை 
இதோ 
அழைக்கிறாய்!

வழியே முதலில் 
உன்னைப் பின் தொடர்கிறது 
பிறகே 
இவர்கள் இணைகிறார்கள்

வேடிக்கைப் பார்ப்பதிலேயே 
விரயமாகிறது காலத்தின் தங்கச் சொட்டுக்கள் 

வேடிக்கை எனும் 
அந்தக் கையை 
இதோ உன் வலது கையே
தடுக்கிறது 

ஏய் இந்தப் பக்கம் 
எனுமுன் அழைப்பை 
புத்தக அட்டையே 
முதலில் 
புரிந்து கொள்கிறது 

மனிதச் சட்டை 
கடைசியில் தான் 
கவனிக்கிறது 

எருமையாய் இருக்கிறான் மனிதன் 
அவனிடம் 
அவனை விட 
பொறுமையாய் இருக்கிறாய் நீ 

நீ இல்லை எனில் 
அந்த இல்லாத இடம் 
காலியாகக் கூட இருக்காது 

காலியிலும் நீதானே 
நிரம்பி வழிகிறாய் 

எந்த வழியும் 
உன் வழிக்கே 
விட்டுச் செல்கிறது 

எந்தப் பாதையும் 
நெளிந்து வளைந்து 
உனை நோக்கியே 
இட்டுச் செல்கிறது 

எந்தப் பயணமும் 
உனை அடைவதற்கே 
ஏற்படுகிறது 

தப்ப வழியே இல்லை 
தப்பித்தல் கூட உன்னிடம்
தப்பிக்க முடிவதில்லை 

நாத்திகனுக்கும் அருளும் 
நன்நெஞ்சு உனக்கு 

சுவாமி 
ஆத்திகன் உன் இருப்பை
ஆராதிக்கிறான் 

நாத்திகன் உன் 
இல்லாமையை 
நம்புகிறான் 

இருப்பிலும்
இல்லாமையிலும் நீயே
இரண்டறக் கலந்திருக்கிறாய் சுவாமி

வெளியிலும் உள்ளேயும் நீயே
வீற்றிருக்கிறாய்

எப்படிக் காற்று 
மூடியக் கோப்பையிலும் 
திறந்த கோப்பையிலும் 
திகழ்கிறதோ அப்படி 

எப்படி வாசலின் வெளித் தோட்டமும்
வீட்டின் 
உள் தோற்றமும்
கட்டியவனுக்கு உரிமையாகிறதோ அப்படி 

ஓட்டைகளை 
அடைத்து விட்டால் 
நாதஸ்வரம் கம்பாகிவிடுகிறது 

கதவுகளைப் பூசிவிட்டால்
வீடு 
சமாதியாகிறது 

திறக்காதவரை
வாசனைகள் உலவாமல் 
பூக்கள் வெறும் 
புற்களாக இருக்கிறது 

ஒரு வேளை நீ இல்லையோ 
என அவனும் 
ஒரு வேளை நீ 
இருக்கிறாயோ 
என இவனும் 

நீ எழுதிய 
உலகத் திரைக்கதையின் 
சுவாரஸ்யக் கதாப்பாத்திரங்கள் 

நீசனுக்கும் அருளும் 
ஈசன் நீ 

ஏசுபவனையும் 
நேசிக்கும் 
ஏசுவின் தந்தை நீ 

கல்லால் எறிந்தால் 
கனிகளாய் அவன் 
கைகளிலேயே விழுகிறாய் 

சொல்லால் எறிந்தால் 
அவனுக்கே நீ 
மந்திரோபதேசம் அளிக்கிறாய் 

குடலை உருவாமல்
அவன் 
உடலுள் புகுந்து 
நகத்தால் கிழிக்காமல் 
அவன் 
அகத்தால் அகந்தையைக் 
கிழித்தெறியும் 

இந்த யுகத்து
வித்தியாச நரசிம்மன் நீ 

இன்று போய் 
என்று கூட நீ 
சொல்வதில்லை 
இன்றே வா 
நாளையும் வா என 
நன்நயம் பேசும் 
சாயி ராமன் நீ 

உன் 
சுதர்ஷன சக்கரத்திற்கு
வேலையே இல்லை
திரிசூலம் உன் 
அருட் பட்டறையில் 
படுத்தே உறங்குகிறது 

கதையும் உன் 
கதை படித்து ஆனந்தக்
கண்ணீர் வடிக்கிறது 

ஏன் சுவாமி உனக்கு 
இத்தனைக் கருணை !

முன் ஜென்ம 
குண பாதிப்பு 
கடவுளே உனக்கு மட்டும் இருப்பதில்லை 

சுவாமி நீ 
சம்ஹார மூர்த்தியும் அல்ல
சம்சார மூர்த்தியும் அல்ல
சன்யாச மூர்த்தியும் அல்ல

சனாதன மூர்த்தியுன்
சாந்நித்யங்கள் 
இந்த அவதரிப்பில் தான் 
உன் ஈகையை 
பிரபஞ்சம் முழுக்க 
தோகையாய் விரித்து 
நிழல் தருகிறாய்

சுவாமி நீ 
கோபப்படுவதான நடிப்பு கூட 
கோடி அழகோடு இருக்கிறது 

நீ கண்டிப்பது 
பக்தியைத்
துண்டிப்பதாகவே இல்லை 

பிட்டுக்கு மட்டுமா 
என் பிறவிக்குமான 
பிரம்படியையும் சேர்த்து 
நீ தான் படுகிறாய் 
சுவாமி 

நீ தட்டி எழுப்பினால் 
அதுவே போதும் 
என் வாழ்க்கை என்ற 
கனவைக் கலைத்து 
உன்னோடு சங்கமமாகவே
தூங்கிக் கொண்டிருக்கிறேன்

கர்மாவைக் கழிக்க 
நீ கொடுத்த பிறப்பில் 
மனிதன் 
கர்மாவை இன்னும் 
உறவுகளாய் அதிகரித்துத் 
தான் அறிவாளி எனக் காட்டிக் கொள்கிறான் 

அவனுக்கான சுமையையும் 
உன்னிடமே அளித்து 
அவன் குடும்பத்தின் 
சுமையையும் 
உனக்கே தருகிறான் 

நீ என்ன போர்ட்டரா 
சுவாமி ?

சொகுசாக வாழ வேண்டியே 
உன்னிடம் சுமைகளை ஒப்படைக்கத் துடிக்கிறான் 

உன்னோடு ஐக்கியமாகவா 
உள்ளன்போடு வேண்டுகிறான் ?

உன்னிடம் 
மன்றாடி
மின்சாரம் வாங்கி 
தனக்குள் ஒளியேற்றுவதை விட்டு
தன் வீட்டு 
டியூப் லைட்டுக்கே வெளிச்சம் தருகிறான்

டியூப் லைட் மனிதன்

சுவாமி உன்னை 
ஏமாற்றுபவனையும் 
ஏற்றிவிடுகிறாய் 
எல்லாம் தெரிந்தே ...

இது என்ன கருணை! 

கடவுள் நீ 
இது உன் சுபாவம்
கருணை உன் பிரபாவம்

சாதாரண பக்தன் நான்
குற்ற உணர்ச்சியாகிறேன்

எனக்கும் அருள்கிறாயே
என்னையும் அணைக்கிறாயே 
எனக்குள் லயிக்கிறாயே 

இதற்கு
என்ன கைமாறு
செய்வேனென...

தர்மமே !
தர்ம சங்கடப்படுகிறேன்

உரையாடுகிறாய்
உயிரூட்டுகிறாய் 
உறைந்து அமர்கிறாய்
உற்சவமாய் 
உடன் வருகிறாய்

அழ வைக்கிறாய் 
தொழ வைக்கிறாய் 
அடி 
விழ வைக்கிறாய் 

அடி விழும் போது தானே உன் 
அடி விழ முடிகிறது 

நீ வேறு நான் வேறா என்கிறாய் 
அத்வைதமே அடையினும்
அடியாராகவே 

உன் அடியில் 
கைப்பிடியில்
கண் மூடியே 
கரைந்து போக வேண்டும் சுவாமி

உனை
அடைந்த பின்னும் 
அடுத்தடுத்து இன்னும்
ஆராதிக்கிறானே 
அனுமன் அது போல்...

நேரமாகிவிட்டது வா என 
நெஞ்சார அழைக்கிறாய்
நீயும் நானும் சேர்ந்து 
நீண்ட நெடும் பயணம் போகலாம்

என் இதயத்தை 
உன் இலக்குவன் நிழலாக்கு சுவாமி !!!

37) திருப்தி அனுக்ரஹ அபய சாயி:







பரம திருப்தி உனக்கு 
பகவானே ! 

நீ
உண்பது காலளவு 
உடமைகள் நூலளவு 
ஆனால் 
உன் திருப்தியோ 
கோளளவு 

கடலுக்கு கரையளவு 
உன் 
கருணைக்கு ஏதளவு!

பூரணத்திற்கு பூரணம் தரும்
பரிபூரணமே 

காரணத்தை உதிக்கச் செய்யும்
காரணமே 

நாரணனாய் ஹரனாய் 
நான்மறையில் நடந்து போகும் 
நாதனே வெளிப் 
பாதனே 

தரணியை 
தத்தெடுத்த தத்தாத்ரேயனே 

உன் பிரபஞ்சமளவு திருப்தியில் 
பஞ்சளவேனும் 
பக்தர்க்குக் கொடு 

நீ சந்நிதானத்தில் தான் 
அமர்ந்திருக்கிறாய்
சாந்நித்யங்களைச் 
சுமந்திருக்கிறாய் 

பேராசைகளே 
பக்தர்கள் உள்நுழைகையில் 
கதவு சாற்றுகிறது 

சுயநலமே உன் 
சுயம் உணர விடாமல் 
சுரந்து வருகின்ற பக்தியைச் சுரண்டிவிடுகிறது 

ஒவ்வொரு ஜென்மத்திலும் 
பிரார்த்தனைகளோடே 
முடிந்து போகிறார்கள் 

வேண்டுதலோடே
விடை பெறுகிறார்கள் 

பரம் பொருளே 
உன்
பொருளை மட்டுமே கேட்கிறார்கள் 
பரத்தைக் கேட்பதே இல்லை 

பரத்தைப் பெற்றால் தானே 
அவர்கள் தன் 
பாரத்தை அதில் 
வைக்க முடியும்

சொந்தமாய் இல்லம் கட்ட 
சுவாசத்தையே அதில் 
அஸ்திவாரமாய் இடுபவர்கள்

சொந்தமாய் உள்ளம் கட்ட 
உன்னருகில் உட்காருவதே இல்லை

கர்மா 
கடவுள் இல்லை 
அதற்கெப்படி கருணை 
அவர்கள் மேல் வரும்? 

நீ தொட்டில் மட்டுமே 
ஆட்டுகிறாய் 
கர்மாவே கிள்ளிவிடுகிறது 

இவர்களின் 
வழி எல்லாம் 
இறைவா உன் மேல் தான் 
வீண் பழி 

கிள்ளுவதை அனுமதிக்கிறாய் 
நல்லது அப்படி 
கிள்ளுவது நடந்தால் தான் 
துள்ளுவது அடங்கும் 
தனக்கென 
அள்ளுவது அஸ்தமனமாகும் 
வெல்லுவது உன் பாதம் எனப் பிறவற்றைத் 
தள்ளுவதே உனக்குள்
செல்லுவதற்குச் 
சொல்லிக் கொடுக்கும்

 இதோ 
திருப்தியாய் இரு 
அது போதுமென்கிறாய் 

திருப்தியே தவம் 
திருப்திக்காகவே தவம் 

பெறுவதால் எப்படி அது
புறப்பட்டு வரும்?
அது 
தருவதில் காலும்
தியாகத்தில் காலும்
தியானத்தில் காலும்
தர்மத்தில் காலும் என

முழுமை பெறுகிறது
முழு திருப்தி 

திருட்டு போய்விட்டது 
திருப்பிக் கொடு எனக் 
கேட்கிறார்களே 

குதிரை முதல் 
குழந்தை வரை 
நீ மீட்டுத் தந்தது எத்தனை!

பொருள் போகட்டும் 
திருப்தி கொடு 
எனக் கேட்கிறார்களா ? 

இவர்களுக்கு தெரியாது சுவாமி 
நீ யாருக்கு 
பெரும் பொருள் தருகிறாய் 
நீ யாருக்கு 
பரம் பொருள் தருகிறாய் என

உன் கணக்கை 
உன்னால் மட்டுமே 
கண்டறிய முடிகிறது 

கௌரவர்க்கு 
உன் படை தந்தாய் 
பாண்டவர்க்கு 
உன்னையேத் தந்தாய் 

பக்தர்களெனும் 
பெயரில் 
உன் படையை மட்டுமே 
கேட்கிறார்கள் 

வேண்டுதலின் அடிவாரத்தோடு 
விடைபெறுகிறார்கள்
விரக்தியாக ...

அதன் உச்சிக்கு 
யாரும் ஏறுவதே இல்லை

சொகுசுப் பிராணிகள் 
மனிதர்கள் 

உன்னை 
வேண்டிக் கொள்வது 
வேண்டுதலின் அஸ்திவாரம் 

உன்னை மட்டுமே வேண்டுவது
வேண்டுதலின் மலை ஏற்றம் 

நீ மட்டுமே வேண்டுமென 
வேண்டுவதே 
வேண்டுதலின் உச்சி 

எப்போது இந்த 
ஜோதிடக் கிளிகளை
ஜோதிக் கிளிகளாய் 
மாற்றப் போகிறாய் ?

எப்போதிந்த பிச்சிகளை 
நீ அணிந்து கொள்ள 
உச்சிக்கு ஏற்றப்போகிறாய் ? 

கிணற்றிலேயே 
கிடக்கிறார்களே 
கடலின் ஆழத்தில் 
எப்போதிவர்களை 
அழுத்தப் போகிறாய்? 

தனக்காய் ஆரம்பித்த 
வேண்டுதல் 
மகனுக்கு பேரனுக்கு 
கொள்ளுப் பேரனுக்கென 

அலைகள் எப்போது ஓய்வது? இவர்கள்
ஆழ்கடலை எப்போது அடைவது?

அவரவர் கர்மா 
அவரவர்க்கு 

நீ அன்பு காட்டச் சொன்னாய் 
இவர்கள் 
பாசம் காட்டுகிறார்கள் 

நீ கொடுக்கச் சொன்னாய்
இவர்கள் கடனாய்த் தருகிறார்கள் 

சுவாமி உனக்கு 
இவர்கள் கடன் வைத்ததை மறந்து 
உனக்கே பக்தியைக் கடனாய்த் தான் தருகிறார்கள் 

பத்து வட்டிக்கு
அருள் வேண்டுமாம் !

குடும்ப விவகாரங்களைக்
கடந்து 
மனதின் வியாபாரங்களை
மறந்து 

எப்போதிவர்களை 
கள்ளம் கபடமற்றவர்களாய்ப் 
பிறப்பிக்கப் போகிறாய் ?

 திருப்தியே தெய்வமென
திரும்பத் திரும்ப உணர்த்து !

மலரை மலர்த்தி
சுவாமி நீ 
மணம் பெறுவது போல்

நிறைவை நிறைத்து 
சுவாமி நீ 
குணம் கொடு !

அச்சடித்த
காகிதங்களில் 
உனைத் தேடாமல்  அவரவர்க்கு நீ
அரங்கேற்றும்
கருணையிலேயே உனைக்
கண்டடைய 
கருணை காட்டு !

வாழ்க்கை ஒரு கற்பனை 
நீ மட்டுமே நிஜம் 
சுவாமி 
கனவு காண்பவர்களை 
உலுக்கிவிடு !

நீ தரும் கனவுகள் 
இந்த வாழ்க்கை 
நீ வரும் கனவுகளே
இந்த யாக்கை 

உன் நோக்கை
நோக்கவிடு !
உன் போக்கை 
ஏற்க விடு !

எதையும் ஏற்றுக் கொள்வதே 
பக்தி அப்படிப்பட்ட
பக்தர்களையே நீ 
ஏற்றுக் கொள்கிறாய் 

எதையெதையோ வேண்டினேன் 
நீ வரவே இல்லை 
நீ போதும் என்றிருந்தேன் 
வந்துவிட்டாய்!

போதும் என்பதே ஆழமான
போதம் !

தாகத்தோடு இருந்தவரை 
காலியாகவே இருந்தது 
கோப்பை 

காற்றே போதும் என 
திருப்தி கொண்டேன் 
இதோ இதோ நீ வந்து 
நிரம்பித் ததும்பி 
வழிந்து கொண்டிருக்கிறாய்
சுவாமி !


38) திருப்தி அனுக்ரஹ அபய சாயி:




என்னைச் சுட்டிக் காட்டுகிறாய்
நான் என்பதே 
உன்னிலோர் 
பாகம் தானே சுவாமி 

நெஞ்சைக் குறி வைக்கிறது 
உன் விரல் அஸ்திரம் 
அத்தனை அரக்கரும் 
அகத்துள் அவரை அழிக்க
ஓரஸ்திரம் போதும் உனக்கு 
நயனாஸ்திரம் 

விழியால் என் விழியை
நீ
ஆலிங்கனம் செய்த 
அத்தனை முறையும் 
பக்தியால் பூப்பெய்தி
பக்தியை மணந்து 
என்னுள்
பக்தியையேப்
பிரசவிக்கச் செய்திருக்கிறாய் !

சுவாமி 
நான் குற்றவாளியா?
"நான்" குற்றவாளி தான் 
நானெப்படி குற்றவாளியாக முடியும்? 

நிமிடங்களை நகர்த்துவதும் 
நாட்களை நடத்துவதும் 
நீ எனும் போது 

குற்றமும் உன் கருணையின் 
பொற்றாமரையில் 
அற்றுப் போய் 
கொற்றப் பொய்கையாய் 
நெகிழ்ந்துருகுமே 

குப்பைகள் 
கனவில் விழுந்தால் 
குப்பையாகவே இருக்கும் 
அது உன்னருட் 
கனலில் விழுந்தால் 
எப்படி குப்பையாகவே 
கிடக்கும்? 

உன்னைப் பார் என்கிறாய் 
எனக்கு நீ பார் தான் சுவாமி 

என்னிலும் நீயே 
தெரிகிறாய்
எனக்குள்ளும் நீயே 
விரிகிறாய் 

உன்னைப் பார்ப்பதென்பதும் 
உன்னைப் பார்ப்பது 

என்னைப் பார்ப்பதென்பதும்
உன்னையேப் பார்ப்பது 

உடைந்தாலும் கண்ணாடிகள் 
ஒரே பிம்பத்தையேக் காட்டுகின்றன 

சுவாமி நீ பிம்பம் 
நாங்கள் 
சில நேரம் உடைந்து போனாலும் 
உன்னையேப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் 

விலகிப் போய்விடுவோமென 
நினைக்கிறாயா ?

விளையாடித் தான் பாரேன்
வந்துன் கால் 
விரல்களிலேயே விழுவோம் 

சால சந்தோஷமென 
உன் விரலையே
குரலாய் மாற்றிவிடுவோம் 

கடலை விட்டு 
கரை மேல் 
காலால் நடந்து செல்ல இயலுமா ? 

மீன்களுக்கு
கடலே தொட்டில்
கடலே கட்டில் 
கடலே வீடு 
கடலே இடுகாடு 

மீன்கள் நாங்கள்
கடல் சுவாமி நீ!

பிறப்பதும் 
பிரார்த்திப்பதும்
பிரியம் வைப்பதும்
பிடித்துக் கொள்வதும்
பிணைவதும் 
பிராணனை விடுவதும் 

உன்னோடன்றி 
உபயோகமில்லா இந்த 
உன்மத்த உலகோடில்லை !

என் தவறுகள் 
கிறுக்கலைத் தாங்கிய 
சுவறுகள் 
நீ அதிலுன் 
புன்னகையைப் பூசிப் 
பொலிவாக்குகிறாய் 

அங்கே பார் என்கிறாய் 
சுவாமி 
இங்கேயும் 
அங்கேயுமெனக்கு நீதான் தெரிகிறாய் 
எனவே 
எங்கே உனைத் தவிர 
தனியாக எதைப் பார்ப்பது !

உடலைக் கூட நீ 
உதிர்க்கவே இல்லை 
பளிங்கின் வெண்மை கருதி 
அங்கேயும் 
பளிங்கு உள்ளம் கருதி 
இங்கேயும் 
பக்குவ ஆன்மாவி லெல்லாமும் 

நீ 
கடக்காத காலமும் இல்லை
நடக்காத கால்களும் இல்லை 

கடல் மூழ்கிய நாடெல்லாம்
கடலாவது போலுன் 
உடல் மூழ்கிய 
உள்ளமுமுன் 
உடலாகி விட்டது 

கண்ணாடி பார்த்தால் 
நீ எப்படித் தெரிவாய்
இவர்கள்
கண்மூடிப் பார்க்க வேண்டும் 

உன் 
விழி நீட்டலிலேயே
உறைந்து போய் 
கரைகிறோமே 

உன் விரல் நீட்டலில்
உன் வேலைகளை எல்லாம் 
சேவைகளாகச் செய்தே
சேவடியில் நிறைந்து விடுவோம்

உத்தரவிடுகிறாய் 
உன் 
உத்தரவென்னும் 
அத்துறவு 
அகத்துறவை அல்லவா
சுட்டிக் காட்டுகிறது!

பிரகலாதனும்
இரண்யனும்
இதயத்துக்குள்ளே தான் 
இருந்து கொண்டிருக்கிறார்கள்

சுவாமி நீ 
நரசிம்மனாகவும் தெரிகிறாய்
சாந்த ரூபத்திலும் 
சுடர்கிறாய் 

இரண்யனை 
பிரகலாதனாக்குவது 
உன்னிந்த யுகத்து
உன்னத அவதாரம் 

குகரத்தை எடுத்து 
நிகரத்தைக் கொடுத்து 
றையோடு இணைப்பது 
இறையே உன் 
இணையற்ற சாகசம் 

தினமுமுன் 
தேஜோமயங்களைத் தீட்டுவதாலிது
தமிழுக்கோர் 
சாயி திருவாசகம் 

தவறென்றால் 
திருத்துகிறாய் 
சரியென்றால் 
நேர் தூக்கி
நிறுத்துகிறாய்

ஆண்டவனே நீ 
அனைத்துமாற்றி 
அடியேனையதில்
பொருத்துகிறாய்

அடியார்க்கோர் 
அல்லலெனில் 
அவர்களே அறியாமல் 
அருமையுன் அகத்தை 
வருத்துகிறாய்

வழி தீதென்றால் 
வழிபடுபவரின்
வழியையே நிறுத்துகிறாய் 

காட்சி தவறென்றால் 
கண்களை 
உறுத்துகிறாய் 

உனை மீறுவதென்பது 
உயிரை 
உடல் மீறுவது 

உனை விலகுவதென்பது 
சுற்றும் பூமியை 
சுழற்சி விலகுவது 

உனைப் பிரிவதென்பது 
தியானத்தை 
ஆத்மா பிரிவது 

மீறுவதும் விலகுவதும் 
பிரிவதுமே பிரிந்துவிடும்

உலகம் கிடைக்க 
உனைத் துறக்க வேண்டுமெனில் 
இடது காலால்
பூமியை உதைத்து 
திரும்பியே பார்க்காமல் 
ததும்பவே உன் 
திருவடி விழுவேன்

உன் பாதுகைக்கு 
இன்னொன்று தேவையெனிலென்
உடம்பையே மரத்து  இருதுண்டாய் 
இறைவா 
உனக்களித்திடுவேன் 
உனைக் களித்திடுவேன்!


39) சுலப பிரசன்ன சீல சாயி:




உனை தரிசிக்கவே 
காத்திருக்கிறார்கள் 
சுவாமி
சற்று திரும்பு 

எத்தனைப் பிறவியோ
எந்தெந்த ஜீவராசியா 
எப்படிப்பட்ட வடிவமோ
மீண்டும் மீண்டும் 
ஜனித்தது 
ஜோதியே உனை 
தரிசித்து 
பார்வை பெறத்தான் 
சுவாமி சற்று திரும்பு

முழுகி முழுகி 
நீரை மட்டுமே 
கைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் 
கரையில் நிற்கும் முத்துநீ
வேர்த்த கரங்கள் 
கோர்த்து அணிய 
சுவாமி சற்று திரும்பு

உன் பெயரை 
உச்சரிக்கும் போதே 
பேசுகிறோம்
மற்ற பேச்சுக்கள் 
உளறல்கள்

உன் பஜனை 
பாடும் போதே பாடுகிறோம் 
மற்றவை சப்தங்கள் 

உன் மகிமை
பகிரும் போதே பகிர்கிறோம் 
மற்றவை வியாபாரங்கள்

உன் ஜபம் புரியும் போதே 
ஜபிக்கிறோம் 
மற்றவை முணுமுணுப்புகள்

உன் சேவை ஆற்றும் போதே 
சேவையாற்றுகிறோம் 
மற்றவை 
சுயநலப் பிரதாபங்கள் 

நீ வரும் கனவுகள் மட்டுமே 
நிஜம் 
மற்றவை காட்சிப் பிழைகள்

உனை தரிசிக்கும் போதே 
பார்க்கிறோம் 
மற்றவை மாயைகள் 

உன் மேல் கொண்ட 
பக்தியே பக்தி 
மற்றவை அஞ்ஞானம்

உனை 
வழிபடுவதே வழிபாடு
மற்றவை 
குழந்தை விளையாட்டு 

உனை 
ஆராதிப்பதே ஆராதனை 
மற்றவை சோதனை 

கடவுள் நீ ஒருவனே 
மற்றவை கற்பனைகள் 

குருவும் நீயே 
ஆலமரத்தடி அமர்ந்து 
அதே
 மரத்தை மீண்டும் நட்டு
வாழை மரமாய் எங்களின் 
வாழ்க்கையிலும் வளர்கிறாயே 

பிற குருக்கள் 
உன்னையே 
முக்தியாய் எய்திருக்க 

ஏன் அவர்களை அடைந்து நான் 
உன்னை 
அடைய வேண்டும்? 

நேரடியாய் நெஞ்சை 
உனக்கே 
தந்துவிட்டேன்

நீ போதும் 
மற்றவை 
தலையைச் சுற்றி 
மூக்கைத் தொடுதல் 

நீ மட்டுமே போதும்
மற்றவைக்கும் உயிர் 
அற்றவைக்கும் நீயே 
உயிரூட்டுகிறாய் 

பட்டாம்பூச்சிகளே உன் 
காற்றை நம்பித் தானே 
பறக்கின்றன 

அமுத சுரபி 
நீ இருக்கையில்
அளவுச் சாப்பாடுகள் எதற்கு ? 

காவி கட்டி எங்களுக்காய் 
இறங்கி வந்த கடவுள் நீ இருக்கையில் ...

காவி கட்டிய மனிதர்களோடு 
ஏன் நான் மன்றாட வேண்டும்? 

வேத மூலமே நீ இருக்க 
வேதம் பார்த்து 
உபதேசிப்பவர்களை 
ஏன் நான் 
செவி மடுக்க வேண்டும்? 

எல்லாப் பழங்களிலும் 
நீயே சாறாகி இருக்கையில் 
எல்லா மரங்களிலும் 
ஏன் நான் 
ஏறிக் கொண்டிருக்க வேண்டும்? 

நதிகள் எதற்கு 
கிணற்றுக்குள் 
குதிக்க வேண்டும் ? 
அதன் உறவு 
கடலே உன்னோடு மட்டுமே 

கூண்டில் அடைப்பட்டு 
வானமே உன்னை 
ஏக்கப்பட்டுப் பார்க்க 
ஜோடிப் புறாவா நான் 

ஆகாயமே உன் 
ஆலிங்கனத்திற்காக
சிறகைக் கூட 
தியாகம் செய்யத் 
தயாராகவே இருக்கிறேன் 

 நீ மட்டுமே போதுமெனும்
நெடும் நிறைவு தந்தாய் 
சுவாமி 
எல்லை வந்து சேர்ந்தபிறகு 
ஏன் இன்னமும்
 நடக்க வேண்டும் ? 

வீடு வந்து சேர்ந்தபிறகு 
வீதியையே ஏன் 
வேடிக்கைப் பார்க்க வேண்டும்? 

உன் ஜபம் உள்ளே நடக்க 
நாக்கு ஏன் 
பிறரோடு பேசி 
உலக எச்சிலைச் சுமக்க வேண்டும்? 

பிரகாரங்களே இதயங்களாய் இருக்க  
உனக்கு
பக்தியால் பூஜைகள் நடக்க

பரிகாரங்கள் ஏன் 
புரிய வேண்டும்
கோளுக்கு ? 

வாளே நீ 
கை தாங்கி இருக்க
மெழுகுவர்த்தியை வைத்தா 
போர் புரியப் போவது ?

அளிப்பது நீயானாலும்
எனை
அழிப்பது நீயே ஆனாலும்
ஆனந்தமாய் ஏற்பேன் 

என் சுவாமி
நீ தான் முக்கியமே தவிர
உன் செயல் அல்ல 

சுவாமி எனக்கு 
முக்தி கூட முக்கியமில்லை

உனையே தரிசித்து
அப்படியே உறைந்து போக வேண்டும் 
அதுவே போதும் 
சுவாமி 
சற்று திரும்பு



40) யோகாப்யாச அமோக சாயி:






எட்டாவது படியின் மேலே
ஏறி நிற்கிறாய் சுவாமி 

தரையில் நடக்கும் போதே மனிதர்கள் 
தவறித் தவறி விழுகிறார்கள் 

சரி என 
சில படிகளில் அமர்ந்து 
சிந்தனையை வைத்தே 
சிந்தனையைப் பறிக்கிறாய் 

எங்கள் யோகம் 
தேகம் கடந்தது 
உன் யோகம் 
யோகத்தையும் கடந்தது 

யம நியம தாரண 
ஜபங்களையும் 
முயற்சி இன்றியே நீ
மலர வைக்கிறாய்

எருக்கம் பூக்களையும் 
மனோ ரஞ்சிதமாய்
மணக்க வைக்கிறாய்

உன் 
அணுக்கம் வரும் 
நுணுக்கமும் உணர்த்துகிறாய்

ஒவ்வொரு படியாய் 
அழைத்துக் கொண்டு போகிறாய் 
ஒரு சுற்றுலா கைடு போல் 

உனைப் போல்
இப்படி ஒரு அவதாரம் 
இனி எப்படி வரமுடியும்?

 ஏழாவது படியேற்றிச் சிரிக்கிறாய் 
எட்டாவது படி மேல் 
யாரோ இருக்கிறார்கள் என 
உன் கூடவே நடந்து வரும் 
பக்தர்க்கு 
எட்டாவதிலும் ஏற்றிய பின் 
நீயே விஸ்வரூபமாய் விரிகிறாய்

விந்தையைப் பெற்ற தந்தையே 
உன் வழிகாட்டுதலின் 
எல்லையில் நின்றுதான் 
வானம் தன்னை 
வழிகாட்ட வேண்டுமென வேண்டுகிறது 

பிறவாமையைத் தரவே 
உன் பக்தராக்குகிறாய் 
அது 
புரியாமலே இவர்களுன்
கூடவே நடந்து வருகிறார்கள்

சில படிகள் வழுக்கி விடுகின்றன 
நீயே தாங்கிப் பிடிக்கிறாய் 

ஒவ்வொரு படியிலும் 
பக்தரை தீபமாக்குகிறாய் 

படிபூஜை என்பதே 
ஒவ்வொரு படியிலும் 
அந்நிலையை நீ 
அடையச் செய்வதே 

ஆன்மத் திளைப்பில்
ஆர்வமில்லாமல் 
சிலர் உன் பக்தராய் 
இருப்பது என்பது 

ஸ்நானம் புரியாமல் 
சமுத்திரம் வியப்பது 

உன் அலை கரங்கள்
எப்போது இழுக்குமென
காற்று கூட 
கவனிப்பாய் இருக்கிறது 

குளிப்பதற்கே 
குதூகலிக்கிறார்கள் 

நீ மூழ்கடிக்கவே 
மனிதரை 
பக்தராக்கி இருக்கிறாய் 

நீச்சல் கற்க வைத்தா 
நீ எனை இழுத்தாய்
உன் 
அதிர்வலையில் மிதப்பதும் 
ஆன்ம லயத்தில் மூழ்குவதுமே இப்போது
வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கிறது

காற்றுக்கு எத்தனைக் 
கொடுப்பினை சுவாமி 
உன் முடி கோதியே 
முக்தி பெறுகிறதே !

காற்றின் 
அருவ விரல்கள் 
உன் கேசத்தின் தேசத்தில் நுழைந்து 
உருவ விரல்களாய் 
உருமாறி இருக்கிறது 

கடலுன் காலடியில் விழாமல் இவர்கள்
கரையின் 
குதிரை சவாரிகளில் 
காலம் கழிக்கிறார்கள் 

இவர்களுக்கு தெரியுமா 
நீ அந்தக் குதிரையையும் சேர்த்தே 
உனக்குள் இழுக்கப் போகிறாய் என...

உன் பாதுகை இப்படி 
வெண்மையாக இருக்கிறதே !
சுவாமி
எந்தப் பக்தரின் 
இதயத்தை எடுத்துக் கொண்டாய்? 

சுவாமி
என் இதயம் 
உனக்கு 
 பல் குத்தவாவது 
பயன்படுமா ?? 

என் வாழ்க்கை உனக்கு 
எதற்காகவாவது
உபயோகமாய் இருக்குமா? 

சகதியிலிருந்து வந்த 
அகதி நான் 
சுவாமி
 உன் வாரி எனை 
வாரி அணைக்குமா? 

ஜென்ம தண்டனைக் கைதி நான் 
சுவாமி 
உன் இதய வெளியில் 
ஊடுறுவ
விடுதலையே கிடைக்காதா? 

கழனித் தண்ணீரிலேயே
தாகம் தீர்த்து வருகிறேன் 
சுவாமி உன் 
அமுதம் பருக 
ஆவல் தர மாட்டாயா? 

என் மன நாய் 
அலைந்தலைந்து 
மலம் தின்கிறதே
சுவாமி அதற்கு உன் 
மகிமைப் பசி எடுத்து 
அருளைத் தின்ன 
ஆணை இட மாட்டாயா? 

எட்டு படிகளில் 
ஏழாவது படியிலெனை 
ஏற்றி விட்டு ஏன் 
எங்கேயோப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

எட்டையும் எட்ட வைத்து
உன் 
வான வாகன உலா உரிமைச் சீட்டை 
ஓர் நொடிப் போதில் நீ 
தரவேண்டியே
சுவாமி தினந்தோறும்
கண் மூடிக் காத்திருக்கிறேன் !


41) பைரவ சாயி ப்ரபூத சாயி:






அதனால் தான் 
நாயாகவே நன்றியோடு 
இருக்கிறது 

நன்றியை நீ 
நாய்க்கு வழங்கி 
மயங்குதலை மட்டும் 
மனிதர்க்கு வழங்கியது
சரியா சுவாமி ? 

வாலை நாவாய்
அசைத்து 
பக்தியை அந்த 
அசைவில் அது வெளிப்படுத்த 
மௌனம் அதற்கு நன்றி என
மொழி மாற்றம் செய்கிறது

நாவிருந்தும் பூத்தப்
பூவிருந்தும் உனை 
ஆராதிப்பதில்லை

நோவுதென்றால் மட்டும்
உனை 
நொந்து கொள்கிறானே மனிதன்

மனிதனுக்கான 
அவதாரமென்பதால் மட்டுமே நீ 
மனிதனாய் அவதரித்திருக்கிறாய் 

நாய்கள் கடைசி வரை 
நாய்களாக இருந்தாலும்
அது பக்தியை வெளிப்படுத்தும் 
வாய்களாகவே இருக்கின்றன சுவாமி 

குரைக்கிற போதுமுன்
பெயரையே 
உரைக்கிறது 

கள்ளம் கபடமற்று 
உள்ளமுழுக்க உன்னிலே 
ஊறித் திளைக்கிறது 

சுற்றிச் சுற்றி உன் 
கால்களையே வளைக்கிறது

தின்னக் கொடுத்தது 
நேற்றென்றாலும் 
நன்றியில்
ஆயுள் வரை திளைக்கிறது 

இன்றைக்கு நீ தருவதை 
இறைவா 
இன்றைக்கே மறந்துவிடுகிறானே 
மனிதன்

அன்றியையே 
ஆராதிக்கிறான் 
நன்றியை 
நினைத்துப் பார்ப்பதே இல்லை 

குறை இருக்கிறதாம் 
குறை 
நீயே நிறைவாக்க வேண்டுமாம் 

நிறைக்கு மேல் 
குறையை ஆடையாய்த் தைத்து அணிந்தவனே 
அவன் தானே சுவாமி 

நீ முத்துக்களைத் தரவே
அழைக்கிறாய் சுவாமி 
அவன்
நுரைகளிலேயே 
நிறைவடைந்து விடுகிறானே  

நுரை போதாவிட்டால்
கடலே வேண்டுமென்கிறான் 

நீ ஆழ்கடலுக்கு அழைக்கிறாய்
அவன் 
ஆடை நனைந்துவிடும் என்கிறான் 

நீ தொடர்வதும் 
அவன் தவறுவதும்

அவன் தொலைவதும்
நீ கண்டெடுப்பதும் 

பிறவிகள் தோறும் 
தொடர்கிறதே சுவாமி 

அவனுக்கு ஆறறிவாம் 
இதன் ஓரறிவேனும் 
அவனோடு ஒன்றி இருக்கிறதா ?

நீ குன்று மீதிருக்கிறாய்
நாயே ஏறிவருகிறது
இவனோ சிறகு கேட்கிறான் 

சுவாமி நீ பேசாமல் பணமாகிவிடு 
அப்போதாவது 
உண்டியலாய் அவன் 
உன்னைச் சுமக்கட்டும் 

சுவாமி நீ சொல்லாமல் 
சொகுசாகி விடு 
அப்போதாவது அவன் 
உன்னை அடைவதற்கே 
உனைத் தேடி வரட்டும் 

சுவாமி நீ அவனுக்கு 
பணம் தந்து கொண்டே இரு 
அப்போது தான் 
அவன் உன்னை 
வழிபட்டுக் கொண்டே இருப்பான் 

சுவாமி அவன் 
நோய்களை எல்லாம் தீர்த்துவிடு 
அப்போது தான் 
இன்னமும் அவன் 
நாவால் நிறைய உணவுகளையும் 
நெஞ்சால் நிறைய 
ஆசைகளையும்
வேட்டையாட முடியும்

சுவாமி நீ சத்தியம் 
நீ படைக்கும் 
நாய்களும் அதையே 
அதன் மொழியில் பேசுகிறது 

சுவாமி நீ விரதன் 
நாய்களும் 
பசித்தால் தான் கூடுகிறது 

சுவாமி நீ கருணாமூர்த்தி 
நாய்கள் தன் இனத்தை 
ஏமாற்றுவதில்லை 

சுவாமி
நீ எழுதிய 
மனித வாக்கியத்தில் 
பிழை நேர்ந்ததென்றா 
திருத்த நீ 
திரும்பத் திரும்ப 
வந்து கொண்டிருக்கிறாய் ! 

இந்த 
எழுத்துப் பிழையையும்
ஓர் நொடிப் பார் 
பிழை திருத்தம் கூட அவசியமில்லை 

வெள்ளைக் காகிதமாகவே
மீண்டும் 
 மாற்றிவிடு

ஏதோ எழுதி 
பிழைகளைச் சுமப்பதற்கு அந்த 
வெண்மையில் 
உன்னை மட்டும் சுமந்து கொண்டு 
உயிர் வாழ்கிறேன் சுவாமி


42) பௌத்த சாயி போத சாயி:




இதே விரல் தானே 
சித்தார்த்தனை 
புத்தனாக்கியது 

இதே விரல் தானே 
வடவிருக்ஷத்தை 
பிரதிஷ்டை செய்தது 

இதே விரல் தானே 
தம்ம பதத்தை 
எழுதியது 

மகா நிர்வாணம் 
உன் 
விரல் இடுக்குகளில்
வெளியோடு
குலாவிக் கொண்டிருக்கிறது 

மனிதரும் 
புத்தராக உன் 
விரல்களே தேவைப்படுகின்றன 

உன் விரல்கள் 
சத்ய தர்ம சாந்தி 
ப்ரேம அகிம்சையை
பிறப்பிக்கும் கருவிகள்

உன் பக்தர் ஒவ்வொருவரும் 
தெய்வீகப் பிறவிகள் 

உன் சாந்நித்யங்கள் 
எழுந்து நடக்கும் 
அதிர்வலை அருவிகள் 

உன்
ஞானத்தை விரல்களில் ஏந்தி 
நீயே மகிழ்கிறாய் 

நிறைந்த ஞானம் 
நெஞ்சை மகிழ்விக்கிறது 

எதிர்பாரா பக்தி 
அகத்தைக் 
குளிர்விக்கிறது

கிளைகளிலும் 
நீயே உன் விரல்களை அனுப்பி 
புத்தரின் தலை கோதியது

போதி மரத்தின் 
அடி வேர் உன் 
அடிகளையே இறுக்கமாய்ப் பிடித்திருக்கிறது 

சரணம் என்பது உனதடிகளே 

புத்தரும் கச்சாமியும் 
உன் பாதத்திலேயே
விழுந்தனர் 

கவலையோடு விழுந்தவர் ஆனந்தக் 
கண்ணீரோடு எழுந்தனர்

எச்சாமியும் 
கச்சாமி என
உன்னிடமே வர வேண்டும்

வாழ்க்கையை மட்டுமா 
மனிதர்கள் 
வெளிச்சத்தையும் 
உன்னிடமே பெற வேண்டும்

இந்த சிலையின் உயரமே
ஆன்மாவின் உயரம் 

ஒவ்வொரு ஆன்மாவும் 
ஒரு புத்தரையே சுமந்திருக்கிறது 

மரத்தடியில் என
நினைக்கிறார்கள் 
உன் கரத்தடியில் தான் 
புத்தனால்
ஞானமே பெற முடிந்தது 

நீ ஞாலம் கேட்பவர் முன் 
ஜாலமாகிவிடுகிறாய் 

சுவாமி நீ 
ஞானம் கேட்பவர்முன் 
வானமாகிவிடுகிறாய் 

நீ
விண்ணைத் தருவது 
உன்னைத் தருவதே 

மண்ணைத் தருவதும்
பொன்னைத் தருவதும் 
எப்படி 
உன்னைத் தருவதாகும் ?

என்னைத் தருவதும் 
உன்னைத் தருவதே

பக்தி தான் 
பரிமாற வைக்கிறது 
முக்தி தான் 
பசியாற வைக்கிறது 

அது வேண்டும் என்பவர்க்கு
அது மட்டுமே வருகிறது 

சுவாமி 
நீ மட்டுமே வேண்டும் என்பவர்க்கு 
அதோடு சேர்த்து 
எல்லாமே வருகிறது 

அத்தன் உன் 
புத்தன் பாதம் பட 
பூமி பூத்தது 

அதன் வாசனை எல்லாம் 
சுவாமி உன்னைப் பற்றியேப்
பேசியது 

சித்தார்த்தன் கண்ட 
மூன்றே மூன்று காட்சி 
உனை நோக்கி இழுத்தது 

அவனதை முகத்தால் பார்க்கவில்லை
அகத்தால் பார்த்தான் 

அகத்தால் பார்ப்பவர்க்கே நீ 
அர்த்தமாகிறாய் 

மூச்சை கவனித்தா 
முழுமை அடைந்தான்? 
புத்தன் உன் 
பேச்சை கவனித்தே 
பிறவி கடந்தான் 

ஆழ்ந்த மௌனத்திலேயே 
நீ பேசுகிறாய் 

இவர்கள் 
வெளியே பேசுவதால் 
உன் பேச்சை 
அவர்களின் 
மௌனத்தால் மட்டுமே 
கேட்க முடிகிறது 

மௌனத்தை 
கேட்க ஆரம்பித்தால்
அது மௌனம் அல்ல 
நீ பேசுகிறாய் எனப் புரியும்

பற்று இருப்பது மோகம் 
அதை 
பற்றி இருப்பது தேகம் 
இரண்டையும் 
அற்று இருப்பது யோகம்

தியானம் என்பது 
வேறொன்றுமல்ல 

மரித்தலைத் தரித்தல் 

வெளியை உள்வாங்கல்

இடைவெளிக்குள் 
இகம் புகுந்து 
பரவெளியை அனுபவித்தல் 

செயல் பற்றி இருப்பது 
கர்மம் அந்தச் 
செயல் அற்றிருப்பது 
தியானமெனும் 
தர்மம் 

உலகுக்கு நீ உதவுவது 
ஞானத்தால் ஆரம்பிக்கிறது 

உனக்கு நீயே உதவுவது 
தியானத்தில் வந்து முடிகிறது 

சேவையின் அகந்தை
வேர்வையை 
தியானக் காற்றே துடைத்தெடுக்கிறது 

பாக்கியப்படுபவன்
ஏற்றப்படுகிறான்  
பெருமைப்படுபவன்
இறக்கப்படுகிறான் 

தன் ருசி தெரிந்து
காய் 
கனிந்து
கொண்டிருப்பது 
பிறர் பசி அறிந்தே 

சேவையும் தியானமும் 
இரு சிறகுகள் 
சுவாமி நீ வானமாயிருக்கிறாய் 

சுயம் நலமோடு 
இருந்தால் தான் 
சுயநலமின்றி 
இருக்க முடியும்

ஜகத்தின் நலத்திற்கு 
சேவையாகவும்
சுவாமி நீ 
அகத்தின் நலத்திற்கு 
தியானமாகவும் 
திகழ்கிறாய் 

உன் 
தியான பக்தனை 
உலகத்திற்கு அனுப்பினாய் 
உனைக் கண்ட பிறகு 
அவன் 
உலகத்தைப் பார்க்காமல்
உன்னையேப் பார்த்துக் கொண்டிருந்தான் 

இமைகள் திறப்பினும் 
இமைகள் மூடினும்
பார்வை என்பது 
உள் நோக்கியே இருக்கிறது சுவாமி 

உள் நோக்கி இருப்பது
உனை நோக்கி இருப்பதே

வெளியிலும்
நீயே தெரிகிறாய் சுவாமி
மனமே 
வேறொரு உருவமாய் 
எண்ண வைத்து 
ஏமாற்றுகிறது மனிதனை 

மாயை என்பது 
மனதை நம்பி 
மாதவனை சந்தேகப்படுவதே 

வாயை மூடினாலே பாதி
மாயைத் தன் 
பாயைச் சுருட்டி ஓடிவிடுகிறது 

மீதி மாயை விரட்ட 
மனதின் வாயை 
மூட வேண்டும் 

சுவாமி அதை நீ 
அணைத்தும்...
அதட்டியும் ...
அதிர்ச்சி அளித்தும் 
மூட வைக்கிறாய் 

இதுவரை வெளியே தேடிக் கொண்டிருந்தவர் 
தொலைத்தது உள்ளே எனத் 
தேட ஆரம்பிக்கையில் 

தொலைந்ததாய் நினைத்த
தொலையாததெல்லாம்

தொலைவென நினைத்த 
அருகாமை எல்லாம் 

சுவாமி நீ யாரெனும் 
சூட்சுமம் எல்லாம் 

ஆற அமர அமர்கையிலேயே 
ஆற்றுப்படுத்துகிறாய் 

ஒரு புல் தானாக மலர்கிறது 
அதில் 
"தானாக" நீயாக இருக்கிறாய் சுவாமி 

எல்லா தானாவையும்
உன் பேனாவே 
எழுதிக் கொண்டிருக்கிறது

எதேர்ச்சையைக் கூட 
நீயே திட்டமிடுகிறாய்

அநிச்சையைக் கூட 
நீயே 
அரங்கேற்றுகிறாய் 

கர்மா 
எண்ணங்களை உற்பத்தி செய்கிறது 
கடவுள் நீயே
கற்பனை 
விற்பனை ஆவதற்கு முன் 
அழித்துவிடுகிறாய் 

உள்ளே தியானமாகவும்
வெளியே ஞானமாகவும்
சுவாமி நீயே
வலம் வருகிறாய் 

வெளியே திரிந்தவனை 
உள்ளே அமர்த்திவிட்டாய் 
காத்திருக்கிறேன் 
சுவாமி 
எப்போது வெளியைத் திறந்து விடுவாய்?


43) கைலாச வைகுண்ட மாளிகா சாயி:



சுவாமி 
உன் 
அதே செங்கல் 
இதே கரத்தில்
நீ தொட்டுத் தருவதால் 
செங்கல்லே 
கோவிலாகிவிடுகிறது 

பெரியதான இடங்களா
தேவை 
இல்லையுனக்கு
பிரியமான இடங்களே தேவைப்படுகின்றன 

மாட மாளிகையா தேவை 
இல்லையுனக்கு 
இதய விஸ்தாரமே 
போதுமானதாகிறது 

கூட கோபுரமா தேவை 
இல்லையுனக்கு 
நெற்றிப் பொட்டே கூட
சுற்ற வசதியாக இருக்கிறது 

கோபப்படாதே சுவாமி 
குட்டிச் சுவர் தான் நான்
தெரிந்து தானே நீ அதில் 
சாய்ந்து கொண்டாய் 

படு மோசம் என்கிறாயே 
சுவாமி 
பாழடைந்த வீடு நான் 
பராமரிப்பற்ற தோட்டம் நான் 
கேட்பாரற்ற ஒப்பாரி நான் 

விளக்கேற்ற
யாரும் நுழையா 
வாசல் நான் 

ஜோதி நீ வருவாய் என்றே 
தனிமையாகி இருக்கிறேன் 

உன்னை நீ நிரப்புவாய் 
என்றே 
வெறுமையாகி இருக்கிறேன் 

கைவிட்டு விடாதே சுவாமி 
உடைந்தாலும்
 செங்கல்லை வைத்து 
உனக்கான சமிதி கட்டலாம்

உடைந்து போனால் நீ
என்னை வைத்து 
என்ன செய்வது ?

நான்
பாழானதால் 
பிறவி தந்தாயா ?
நீ
பிறவி தந்ததால் 
பாழானேனா? 

நீ பேசுகிறாய் 
என்று தான் 
செவிட்டிற்கு காது முளைத்திருக்கிறது 

நீ பார்த்துக் கொள்கிறாய் என்று தான் 
என்னை நான் 
பார்த்துக் கொள்வதில்லை 

இரண்டை என்
இதயத்தால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை 

ஒன்று உன் மௌனத்தை 
மற்றொன்று என் மனதின் பேச்சை 

பிறவிச் சுற்றலில் 
மனதின் கால்கள் 
கண்ணிப் போயிருக்கிறது 

பிறவிகள் ஓடி ஓடி
மூச்சே மூர்ச்சையாகிவிடும் போலிருக்கிறது

அந்தச் செங்கலுக்குள் நீ 
சாந்துக் கலவையாய் 
ஒட்டிக் கொள்கிறாயே 

இந்த மரமண்டையில் 
ஒரு புல்லாகவாவது 
எட்டிப் பார்க்க மாட்டாயா? 

நீ அமரும்
வெல்வெட்டாக 
வேண்டுமென்றா கேட்கிறேன்?

மிதியடியாகவோ 
உன்னால்
மிதிபடும் கல்லாகவோ
நீ எனை 
மாற்றினால் போதும்

ஏன் கோபப்படுகிறாய்?
சிவன் நீயென 
நினைவுப் படுத்துகிறாயா? 

சிவபூஜையிலுன் 
நந்திக்குக் கூட 
அனுமதி இல்லையா ?

ஆம்பலின் புலம்பலை 
செவிமடுக்க மாட்டாயா ?
உனக்குன்
துளிசியின் தும்மல் தான் 
பெரிதா சுவாமி? 

மன்னித்தலின் 
மகா பிரபுவாயிற்றே நீ 
சிசுபாலனையும் 
நூறு முறை மன்னித்தாயே 

இந்த
 சிசுவின்‌ சிறு தவறுக்கா
சினம் கொள்கிறாய் ? 

அப்பர் 
பாடி கதவு திறந்தாரே 
என் 
அப்பன் நீ ஏன் 
திறந்த கதவைச் சாற்றிக் கொள்கிறாய்?

நீ தந்த தமிழ் 
நிஜமென்றால்...
நீயே கவியென்றால் 
பேசு சுவாமி 

 உலகம் உதறியதே 
எனை 
உறவு மறுதலித்ததே 
உற்ற நட்பும் 
உதிரியாய் எனை 
உதிர்த்துப் போனதே 

உற்றவன் நீ 
உயிராய் தாங்கிப் பிடிக்கவில்லை எனில் 
சவமாய்த் தான் 
சிவமே நான் 
வலம் வர முடியும் 

உன் மேல்
காதலையும் தந்து 
ஏன் நீ 
கதறவிடுகிறாய் 

தண்ணீரில் மூழ்கியும்
உயிரோடிருந்த மீன் 
கண்ணீரில் மூழ்குகையில் 
தரையில் விட்டதாய் ஏன் 
துடிதுடித்துப் போகிறது? 

பிரபஞ்சம் அது 
பிரிந்தாலும் 
வராத வருத்தம் 

பகவான் நீ பிரிவாயோ‌
என நினைக்கையில் 
பதறாதா சுவாமி ?

அத்தனை பூஜ்ஜியங்களையும்
அழகாய் அடுக்கி விட்டு 
ஒன்றே நீ மட்டும் 
ஒன்றாமல் போவது 
உனக்கே நியாயமா சுவாமி ?

இந்தச் சட்டியின் மண்ணே என் மூளை 
நீ தொடும் 
செங்கல் அதில்
சேர்ந்து கொள்ளாதா ? 

அடிக்கல் நாட்டுகிறாய் 
ஆன்மீகத்திற்கு நீ
அடிக்கக் கல் மட்டும்
எனக்கா? 

மழை பொறுக்கும் 
மகா தபஸ்வி போல் 
என் 
பிழை பொறுக்க மாட்டாயா?

உலை பொறுக்கும் 
அரிசியாய்
என் 
நிலை பொறுக்க மாட்டாயா? 

என்
சிரத்தில் உன் கரமோ
சிரத்தில் உன் வாளோ 
எதுவாகினும்
தலை குனிந்தே இருக்கிறேன் 

எதையாவது ஒன்றை 
நீ தான் வைத்தாக வேண்டும் 

ஏற்றுக் கொள் சுவாமி 

பெற்றவர் கைவிட்டால்
அனாதையாகா
குழந்தை 
பகவானே நீ கைவிட்டால் தான் 
அனாதையாகும் 

பிரிவும் என்மேல் 
பரிவு காட்டுகிறதே
பிரியமே உனக்கு 
பிரியம் இல்லையா ? 

சோதிக்கிறாயா ?
சோதனை சோதிக்கலாம் 
சாதனையே நீ 
சோதிக்கலாமா ?

ஜோதியே அப்படி 
ஜோடிக்கலாமா? 

பரகதி கேட்கிறேன் 
பரிதவிப்பை ஏன் தருகிறாய் ? 

முக்தியைக் கேட்கிறேன் 
விரக்தியை ஏன் 
வீசுகிறாய்? 

பிறவி போதும் என்கிறேன் 
உடலைச் சுமக்க ஏன் 
உத்தரவு போடுகிறாய்? 

தியானத்தில் 
மூச்சே கனமாய் இருக்கிறது 
மௌனத்தில் என் 
மனமே கேலியாய்ச் 
சிரிக்கிறது 

பக்தி மாளிகைக்
 கட்டித் தந்த
மேஸ்திரி நீ அதில்
முக்தி பூஜையறை 
கட்ட மட்டும் ஏன் யோசிக்கிறாய்? 

உன் 
வீட்டுக்கு வருவதே 
வெளிக்கு வருவது தானே 

என் 
மனதை இடித்து விடு
அப்படி
இடித்து விட்டால் 
இருக்கின்ற வெளியே 
இதயம் ஆராதிக்கும் 
சுவாமி உனக்கான 
சந்நதியாய்...


44) தனுசு கீத வித்தக சாயி:



சுவாமி நீ 
வில்லுப்பாட்டிசைக்க வருகிறாய் 

உன் பாடல் வரிகளாய்
எனைப் பரிணமித்து மாற்று 

வில்லேந்திய உன் 
விளையாடல்கள் 
யுகம் கடந்து ஊடுறுவ 
வில்லுப் பாடலேந்தும் 
உன் விரல்கள் 
சத்திய யுகத்தையும் 
சாட்சியாக்கப் போகின்றன...

வில் சுமந்து 
வலித்த உன் தோள்கள் 
வில்லுப் பாடல் சுமந்து 
ஆறாய்ப் பெருகி 
ஆறப் போகின்றன 

வில்லால் நீ சம்ஹரித்த 
வீரன் இராவணனுன் 
மகிமை உணர்ந்து 
உன்
வில்லுப் பாடலுக்கு 
வீணை வாசிக்கப் போகிறான் 

வில்லுடைத்து நீ புரிந்த திருமணமாய்
வில்லெடுத்து நீ புரியப் போகும் 
மறை மணம் 
நறுமணமாய் வீசப் போகின்றது 

அழித்த படலம் 
துவாபரத்தோடு முடிய 
அணைக்கும் படலம் 
கலியுகத்தோடு படிய 
நீ
அளிக்கும் படலம் இனி
சத்ய யுகத்தில் விடியப் போகிறது 

உன்
வில்லுப்பாடலுக்கு 
ஆமாம் போடவே 
ஆதாரமே உன் 
அவதாரத்தில் இணைந்திருக்கிறோம் 

தந்தனத்தோம் என்று 
சொல்லியே 
வில்லில் நீ பாட 
வந்துதித்தாய் 
பரம் பொருளே 

தானத்தந்தோம் 
என்று சொல்லி 
தன்னைத் தந்தாய் 
என்னைப் பெற்றாய் 

உன் 
பிரகாசங்கள் அதில் 
போய்விடுகிறது 
என் பிறவிகள் 
எனைப் பார்த்துச் செய்த 
பரிகாசங்கள் 

கடத்துக்கு நந்தி 
பின்பாட்டுக்கு நான்
உடன் பாட்டுக்கு வாணி 
உன் 
உடன்பாட்டுக்கு பக்தர் என 
உற்சவம் நடை பெறப் போகிறது 

நாசி நுழைக்கும்
நாரதன் தன்
தம்புராவோடு 
வெண்புறாவாய்
சபைக்கு வந்துவிட்டான் 

கச்சேரி கலை கட்டும் 
காண்பவர் தலை ஆட்டும்

நீ ஆட்டுவிக்க 
அவதரித்தவன் சுவாமி 
ஒன்றாய் 
கூட்டுவிக்க பஜனையைத் 
பாட்டுவித்தவன் 

வினையை 
ஒட்டிவைத்து இருளுக்கு
வேட்டுவைத்து வாழ்வை
காட்டி வைத்த கடவுள்
உன் 
கருணையை நீ 
எழுத எழுத 

எழுத்துக்கும்
கருணை வந்துவிடுகிறது

பஜனை வழி
சொல்லிசையின் 
சூட்சுமம் சொல்பவன் 
நீ 
ரசனை வழி 
வில்லிசையில்
விசித்திரம் செய்பவன்

இந்த 
இரண்டு கம்பெடுத்து 
கோலாட்டமாடவும் 
கோதையர் வருகின்றனர் அதில் 
கோகுலப் பெண்களும் 
கை கோர்க்கின்றனர் 

உனைச் சுற்றிவரும் 
கோளாட்டமாய் 
கோலாட்டம் உன் 
கம்புகளை வைத்து 
நீ தரும் 
தெம்புகளை வைத்து 

நாங்கள்
மகிழ்ச்சியாய் இருப்பதற்கே நீ
மகிழ்ச்சியாய் இருக்கிறாய் 

சிரிப்பே சிறப்பென 
சீர் உதடு விரிக்கிறாய்

புன்னகையை 
பூக்களாலும் 
விவரிக்கிறாய் 

தியானத்தைத் தரிக்கிறாய்
உண்மை உணர்ந்தவரின் 
உள்ளர்த்தத்தில்
உயிர்க்கிறாய் 

உலகம் எங்களை
கைவிடும் போதே 
உயிருக்குள் உறைக்கிறாய்

பாச பந்தம் 
பறிக்கிறாய்
பறித்துப்
பக்குவத்தை நிறைக்கிறாய்

உன் மேல் 
பாசம் வைத்து எப்படி 
உறவுகள் மேலும் 
பாச வைக்க முடியும்?

கடவுளே குடும்பமான பிறகு 
குடும்பம் எப்படி கடவுளாகும்? 

இவர்களுக்கு 
சமுத்திரமும் வேண்டும் 
கிணறும் வேண்டும் 

வெறுக்கச் சொல்லவில்லை நீ
பாசத்தை 
அறுக்கச் சொல்கிறாய் 

மனதை 
உலகத்திலிருந்துப் 
பிரிக்கச் சொல்கிறாய்

முறுங்கைக் காய்களையே 
சமைக்கத் தெரிந்தவர்க்கு 
முக்தியைச் சமைக்கும் 
முதிர்ச்சி கொடு 

மீசையை ஒதுக்கும் 
ஆடவருக்கு
ஆசையை ஒதுக்கும் 
ஆயுதம் கொடு

பக்தியாயுதம்

ரோமத்திலும் 
பிரேமம் வீசும் இருக்கும் 
பிராணமே உன் 
பிரேமம் தவிர 
வேறென்ன பிரேமம் 
வீடுபேறு தரும்? 

உன்னை 
சுவாசித்தால் தான் மட்டுமே
சுவாசச் சுழற்சி 
ஒரே ஜென்மத்தில் அறும் 

காற்றென்ன காற்று 
அதை சுவாசிப்பதிலென்ன 
அத்தனைப் புண்ணியம்

வில்லிசை ராமனே 
உன்
வான் அறத்தை 
வாசிக்கப் போகும் 
வானரம் நான் 

அனுமன் 
உன் பெயர் சொல்லி 
கடலைத் தாண்டினான்

சுவாமி 
உன்னெதிர் அமர்ந்து 
உடலைத் தாண்டுகிறேன்
ஒவ்வொரு அமர்விலும் 

வளைந்த ஆணவத்தில்
கருணைக் கயிறு பூட்டி
நீ வாசி 
அதுவே அத்துமீறி வரும்
ஆசைகளை 
அகோரியிடம் ஒப்படைக்கும்
வாரணாசி


45) பாத சேவ பாதஹர சாயி:




சுவாமி உன் பாதமே 
நாங்கள் 
குடியிருக்கும் வீடு 

வாடகை வீட்டை நீ தந்து 
வசிக்கச் சொன்னாய் 
உன் பேச்சை மறுக்க முடியுமா ?
உடம்போடு உலாவுகிறேன் 

எங்கள் 
சொந்த வீடோ உன் 
சுவைமிகு பாதம் 

சாதம் சாப்பிட்டே என் 
வாடகை வீடும் உன் 
பாதம் சாப்பிட்டே என் 
நிரந்தர வீடும் 
நித்சலமாய் வாழ்கிறது 

உன் பாதத்தைத் தொடுவது என்பது 
பிரபஞ்சத்தைத் தொடுவது 

உன் பாதத்தைப் பற்றிக் கொள்வதென்பது 
பற்றை விட்டு விடுவது 

எப்படி ஒரே கையால் 
உன் 
பாதத்தையும்
பற்றையும் 
பிடித்துக் கொள்ள முடியும்? 

எப்படி 
ஒரே கைகளால் 
கோமேதகங்களையும் 
குப்பைகளையும் 
கையேந்த முடியும் ?

மனிதனுக்கு 
நீயும் வேண்டும் 
நிலமும் வேண்டும் 

பறவை 
பூமியில் 
நடமாடிக் கொண்டிருக்கும் வரை
அது
வானத்திற்கு எப்படி 
வளைகாப்பு நடத்த முடியும்? 

வரிசையாக அமர்ந்திருக்கிறார்களே 
உன் கோபிகையர் 
கண்ணா உன் 
பாதம் காட்டு 
வேதம் என்பது கூட 
எங்களுக்கு அப்புறம் தான்!

நீ அருகில் நடந்தால் போதும் 
நான்கு வேதமும் 
நன்றாக விளங்கிவிடுகிறது 

நீ நெஞ்சில் நின்றால் போதும் 
கோவில் கோபுரங்கள் கூட 
உனை 
அண்ணார்ந்து பார்த்து 
ஆச்சர்யப்படுகிறது !

உன் சேவாதளமே 
கர்ம நாசனத்துக்கான
அடித்தளம் 

அனுமனைப் போல் 
உனக்கு 
விரல் சொடுக்குவதும் 
விருதாகவே நினைக்கிறேன் 

ஆனால் நீ தான் 
கொட்டாவியே விடுவதில்லை 

எங்களின்
கெட்டாவியை விரட்டிக் கொண்டிருப்பதில்
உனக்குக் 
கொட்டாவி விடுவதற்கும் நேரமில்லை 

அணுக்களிலும் 
ஆக்கிரமித்திருப்பவன்
கரும்பின் 
கணுக்களிலும் 
மனிதரின் 
மனுக்களிலும் 
நீ 
பார்வையிட்டு 
பராமரிக்காத
பூமியே இல்லை சுவாமி

உன் பாதங்களைத் 
தொடும் போதெல்லாம் 
எங்களின் 
பாதகங்களை இறக்கி வைக்கிறோம் 

பாரமோ எங்கள்
பாவமோ 
பாவம் நீயே சுமக்கிறாய் 

மன்னிக்க வேண்டும்
சுவாமி 
நீ எனை 
புனிதனாக்குவது இருக்கட்டும் 
மனிதனாக்கு சுவாமி 
முதலில் 

பக்தியில் அழ 
பக்தியில் தொழ 
பக்தியில் உன் 
பாதம் விழ 

பூரண பக்தி தா 
காரண முக்தி 
கடைசியில் வரட்டும் 

கால்களைத் தழுவிக் 
கொண்டிருக்கும் உன் 
காவி வஸ்திரம் போல் 
என் பக்தியும் உன் 
பாதங்களை மட்டுமே 
பிடித்திருக்கட்டும் 

நீ 
இழுத்துக் கொண்டிருப்பதால் தான் 
உருப்படியாய் இருந்து கொண்டிருக்கிறேன்
நீ 
விட்டுவிட்டால் 
வீணாகிவிடுவேனே சுவாமி !

இறைவா உன் 
இடுப்பில் ஏறி அமர்ந்த 
குழந்தை நான் 
இறக்கி வைக்க வேண்டும் என 
நினைக்கக் கூடச் செய்யாதே 

அந்த நினைப்பே எனை 
அனாதையாக்கிவிடும் சுவாமி 

கலியின் கிலுகிலுப்பையால் நீ
வேடிக்கைக் காட்டுகிறாய்

கிலுகிலுப்பையின் 
சப்தங்களைக் காட்டிலும் 
உன் 
அரவணைப்பின்
கதகதப்பே அவசியப்படுகிறது சுவாமி 

நீ எங்கள் 
நடமாடும் சந்நிதானம் 
உன் பாதமே 
எங்களுக்கான பிரசாதம் 

கங்கை ஏன் 
குடத்தின் நீருக்காய்
குழாயடிச் சண்டையிடப் போகிறது !

நிரம்பியே வழிகிறேன் சுவாமி 
நிறைவேறா ஆசை என
நெஞ்சிலேதுமில்லை 

என் ஆசைகளைத் 
தூக்கிலிட்டே 
என் ஜென்ம தண்டனையை 
விடுவித்தாய் சுவாமி

பூரணமே நீ 
என்னுள் இருப்பதால்
பூரணமாய் இருக்கிறேன்  

காரணமே நீ 
என்னுள் ஆணையிடுவதால் 
காரியமாய் உன் கைகளில் கட்டுப்படுகிறேன்

கருவறையிலும் இல்லா நிம்மதி
உன் கருணைவரையில் தான் 
கிடைக்கின்றது 

படிப்பதில் வரா
ஞானம்
உன் பாதம் 
பிடிப்பதில் தான் 
பூரிக்கிறது 

ஆசைப்படுவதில் கிடைக்காத 
ஆனந்தம் உனை 
ஆராதிப்பதில் தான் 
ஆரம்பமாகிறது 

போகத்தில் கிடைக்காத 
தெளிவு உன்
போதத்திலே தான்
புறப்பட்டு வருகிறது 

உன்
இரண்டே பாதம் 
எண்ணில்லா ஜீவன்கள் 
எப்படிப் பற்றும்
ஆனால் அதுவே 
அனைத்துக்கும் போதுமானதாகிறது 

சுவாமி 
இப்போது பசிக்கிறது 
உன் போதத்தை ஊட்டு 
ஊட்டியதும் நான்
உறங்க வேண்டும் 
உன் 
பாதத்தைக் காட்டு


46) வயலின் கான விலோலா சாயி:


வயலின் காற்றாய் நீ 
வயிலின் காற்று முன் நின்று 
வயலின் காற்றைப் 
பாட வைக்கிறாய் 
சுவாமி

கம்பி நான் 
குதிரை வால் பூட்டிய 
பிடில் நீ 

நீ என்னோடு 
இணையும் வரை 
சுதி மட்டுமே மீட்டமுடிகிறது 
அதில் 
சங்கீதம் இல்லை

என்னோடு நீ 
ஊடுறுவினால் தான் 
ராகம் 
தேகத்திலிருந்து புறப்படும் 

என் காதுகளைத் திருகித் தான் 
சுதி மீட்டுகிறாய் 
சுதி உன் பாதமே
கதி என விழுந்தால் மட்டுமே அதன்
விதி மாறும் சுவாமி 

நதியாய் நீ 
புறப்படவைக்கிறாய் 
ஸ்வரங்களை 
கடைசியிலது உன் 
மௌனக் கடலோடே 
சங்கமிக்கிறது 
சுவாமி 

பக்கவாத்தியம் முன் நீ அருகே வர 
அப்போது அதுவுன் 
பக்க வாத்தியத்திலிருந்து
பாக்கிய வாத்தியமாய்
பரிமளிக்கிறது 

கொசுக்கள் பரவிடும் 
எச்சேரி அச்சேரி
கடவுளே உன் 
புகழ் பாடா கச்சேரி 

பாதகத்தை பறித்துவிடுகிறாய்
பகவானே 
பாதகம் போனபிறகு 
சாதகம் உன் 
சபையேறுகிறது 

மோதகம் வைத்திருப்பவன் மேல் 
ஆரம்பிக்கப்படும் ஆராதனை உன் 
மோதிரம் பெற்றவுடன் தான் 
முழுமை அடைகிறது 

அதுவரை
பிடிலை மீட்டிய விரல் 
அப்போதிலிருந்து 
மோதிரத்தால் மீட்டப்படும்
விரலாகிவிடுகிறது 

ஆம் சுவாமி 
விரலையே 
வயலினாக்குவது 
உன்னால் மட்டுமே முடிகிறது 

உன் பஜனையை 
ராகங்கள் சுமந்துவரும் போதே
சிறகு வருகிறது அதற்கு 
அது வரை அது 
எதைச் சுமந்தாலும் 
கீதங்களின் 
முதுகுத் தண்டு 
வளையல் துண்டாய்
வளைந்துபோகிறது

எல்லா வாத்தியங்களின் 
எல்லா இசையும் நீ தான் 
சுவாமி 

இசையை 
நாங்கள் கேட்பதற்கே 
நடக்கவிடுகிறாய் 

இசைக்குக் கேட்க 
உன் மௌனமே 
தேவைப்படுகின்றது 

உன் மௌனங்களிலிருந்தே 
அது 
ஸ்வரங்களை எடுத்துக் கொள்கிறது

சுவாமி நீ 
நிற்கும் போது 
ஆரோஹணம் 
நாற்காலியில் 
அமரும் போது 
அவரோஹணம் 

நடக்கும் போது 
கச்சேரி 
பேசினால் 
கொன்னக்கோல் 
பாடினால் 
ஆலாபனை 
சிரித்தால் 
ஜுகல் பந்தி 
ஒரு கை ஆசீர்வாதம்
இந்துஸ்தானி ராகம் 
இருகை ஆசீர்வாதம் 
சம்பூர்ண ராகம் 

தான் சேய் எனவுன்
தாமரைப் பாதம் விழுவான் அந்த
தான்சேன் 

கந்தர்வன் நீ 
கானம் இசைக்கச் சொல்வாயா எனக் 
கால்கடுக்கக் காத்திருப்பான் 

நா நாராயணா இன்றி 
சாய்ராம் சாய்ராம் எனச்
சொல்லியபடி 
சிரசு குனிவார்
தம்புரா நாரதர்  

தினந்தோறும் நீயென்
தியானத்தில் 
ராக மாலிகா இசைக்கிறாய் 

நீ தலை சுமக்கும் 
சுருள் சுதிப் பெட்டி 
ஓங்காரத்தையே 
ரீங்கரிக்கச் செய்கிறது

சங்கு சுமந்தவுன் விரல் 
சங்கீதம் சுமக்க 
சுவாமி நீ 
இங்கித இதத்தையே 
அங்கியில் சுமக்கிறாய் 

ஏழ் ஸ்வரமாய் 
ஏழ் வாசல் 
சுவாமி நீ 
ஏழாவதில் 
ஏறிக் கொண்டு 
எனை அழைக்கிறாய்

சுவாமி நீயே 
ஏற்றிவிடு
பரிபூரணமே உன் 
பஜனையாலும்...உளப் 

பார்வையாலும்...

47) தத்த சாயி திவ்ய சாயி:


முத்தொழிலையும் 
முகமாக்கி வந்த 
முக்தி சுவாமி 
உன் ஒரு 
முகத்தின் சக்திக்கே 
மூர்ச்சையாகிறது மாயை 

நீ மூச்சு வாங்குகிறாய்
என நினைக்கிறார்கள் 
என் மாயை உள்வாங்கி 
உன் அருளாய் வெளி அனுப்புகிறாய்

அனுசுயா 
ஈஸ்வரன்னையானதும் 
அத்ரி 
வெங்கப்பரானதும் 

தத்தா உனை 
முத்தாய் அள்ளி எடுத்தனர் 
ஆண்டாண்டு கால 
தவ வாரியில்
தந்தை முழுகி 
தாய் முழுகாமல் 

பதஞ்சலிக்கு 
யோக சூத்திரமும் 
பரசு ராமனுக்கு 
திரிபுரா ரகசியத்தையும்
திறளாய்த் தந்த 
திரிபுரதாரி நீ சுவாமி  

ஐந்தொழிலில் 
முத்தொழிலைத் தலையாக்கி... 
தத்தராக அன்றும்
மீதமிரண்டு தொழிலை 
மலர்க் கரமாக்கி...
அத்தராக என்றும் 
அவதரித்த சுவாமி 

இதோ
ஐந்தொழிலை 
ஐம்பூதமாக்கி உடம்பென
ஆர்த்தெழுந்த 
அவதாரி நீ 

நீயே தத்தன் 
நானுன் பித்தன் 

சித்தர்க்கு அஷ்டமா 
ஸித்தி அருளும் 
நீ தான் சுவாமி 
சித்தாதி சித்தன் 

முக்தி நிலையே 
மண்ணில் வந்திருக்கிறது அதன்
சக்தி நிலையை வைத்தே 
சமுத்திரத்தையும் பூமி தாங்குகிறது 
காற்றும் மூச்சு வாங்குகிறது 

நுரை தானிந்த வாழ்க்கை என 
கடலும் உன் 
கீதையையேப் பேசுகிறது 
சுவாமி  

சதுர் வேதத்தை 
குக்கலாய் உன் 
பக்கத்தில் அமர்த்துகிறாய்

காமதேனுவாய் அதன் 
கருத்தை உன் 
காலடியில் 
கட்டிப் போட்டிருக்கிறாய்

திரிசூலமாய் 
அதிர்வலை ஆற்றலதை
ஆண்டிருக்கிறாய் 

எத்தனை யுக சுழற்சி 
எல்லாவற்றையும்
தாண்டியிருக்கிறாய்

கையில் கமண்டலம் 
அது தான் 
ஏழ்கடலுக்கான 
கடலோத்ரி 

சப்த சமுத்திர
உற்பத்தி ஸ்தானமே உன்
கமண்டலம் தான் 

அதை எங்கள் 
இதயத்தில் தெளித்துத் தான் 
நீ
மாயையை
விரட்டுகிறாய்
 சுவாமி 

இது நீ 
சிருஷ்டித்த படம் 
இதை நீயே 
சிருஷ்டித்த எங்களுக்குக்
காட்டுகிறாய் 

நீயே வீணை தயாரித்து 
நீயே வீணையைப் பூட்டி 
சங்கீதமே நீயே மீட்டி
சுவாமி நீயே வெளிப்படுகிறாய் 

சுவாமி உன் 
புற அழகைக் கூட 
எங்களின் 
அக அழகால் மட்டுமே 
ஆழ்ந்துணர முடியும் 

சுவாமி கடவுள் நீ 
சூரியனெனில் 
பிற மகான்கள் 
உன்னால் வெளிப்படும் 
கிரணங்கள் அவ்வளவே

அனுமனாய் 
அடியேன் உன்னையேப்
பற்றுகிறேன் 

ஆசையை உன்மேல் 
அதிகரிக்கச் செய் 
யோகமே உன் மேல் 
மோகத்தை வளர்த்தெடு 

கண்மூடிக் கொண்டு 
அமர்கிறேன் 
தியானத்தில் கூடிக் கல 

அதிர்வலை முத்தங்களை
ஆன்மாவுக்கு இடு 

இந்தப் பேரின்பத்திற்கு 
பிரபஞ்சமே கொடுத்தாலும் 
பெறுமா ஈடு? 

நீ தந்த பேருணர்வை 
உணர்வாலெனை நீ
ஊடுறுவிய புணர்வை 

உன் பஜனையெனும் 
உணவை 
சேவையேனும் தயவை

உட்கொள்ள அனுமதி 

சுவாமி 
மனம் முழுக்கவுன் 
மணம் கொண்டேன் 
நானே உன் திருமதி 

உன் மேலுள்ள பக்தியே 
பிறவிக்கான வெகுமதி

எம்மதியுமுன் 
வெம்மதியைக்
 காண்பதாலே 
கண்டடையும் நிம்மதி 

சுவாமி நீ 
கை உபகரணங்களைக்
கைக்குட்டையாக்கியே
கைப் பிடித்தாய்

ஆதாரமே அந்தக் 
கைக்குட்டை உன் தாரமெனில் 
என்னையுன்
அந்தர் புறமெனும் 
அந்தப்புறத்திற்கு 
அழைத்துச் செல் 

ஆதாரமே உன் 
பாதாரம் விழுகிறேன்
என் 
பக்தியை விழுங்கு 
முக்தியை வழங்கு 

பாமா இருக்கையிலே 
ராதா இல்லையா !

சாதா என்னையும் 
ராதாவாக்கு
பக்தரை ஏற்பதே உன் 
கீதா வாக்கு 

சுவாமி 
தத்தெடுப்பதால் நீ 
தத்தன் 
எனைப் 
பெத்தெடுத்தால் 
எந்தையான நீயே 
உயிர்களை உய்விக்கும் ஒரே
பரிசுத்தன் !


49) அர்த்தநாரி சாயி அந்தர்யாமி சாயி:



சுவாமி நீ 
இணைந்திருக்கிறாய்
என்பதால் என்னை 
இணைத்திருக்கிறாய்

இரவாய் பகலாய்
இணைந்து நீ என்னை 
உழைக்கவும் 
உறங்கவும் வைக்கிறாய் 

பெற்ற தாய் 
பெற்றதும் பிரிய 
உலகில்
மற்ற தாய் தான்
பெற்றதையே 
பெரிதாய் நினைய..

நீயே என் 
உற்ற தாய்
உயிர் 
உற்றதாய் நீ 
மற்றதை 
அற்றதாய்ச் செய்துவிடுகிறாய்

 தாயும் தந்தையும் 
நீயாகி இருப்பதால் 
கனிவும் கண்டிப்பும்
அன்பும் அறிவுரையும் 
ஒளி ஊட்டுதலும் 
வழி காட்டதலும்
சேர்ந்தே சுடர்கிறது 

உலகில் காற்றெல்லாம் 
உனது கரங்கள் 
உலகின் மேன்மைகள் 
உனது வரங்கள் 
உள்ளத்துக் கருணைகள் 
உனது தரங்கள்
வானத்தில் வந்து போகிறவை 
உனது சிரங்கள் 

சாயி மா 
நீ குங்குமம் 
சாற்றி இருக்கிறாய்
அத்தனோடு 
அகம் சேர்ந்த பின்னர் 
நெற்றிக் கண்ணையும் 
ஏற்றிருக்கிறாய்

நெற்றிக் கண் 
அழிக்கிறது
குங்குமக் கண் 
அளிக்கிறது
எனது 
நெற்றியில் கண்ணாய் 
சுழன்று நீ 
சொல்பவை எல்லாம்
பலிக்கிறது

உலகியல்
தாய் தந்தைக்கு 
அனாதைகளாகவே 
பிறக்கிறோம் நாங்கள் 
சுவாமி நீ 
அரவணைத்த பிறகே 
குழந்தைகளாகிறோம்!

உயிரை 
உயிரோடு வைத்திருப்பது 
உடலுக்காக...
சுவாமி நீ
உள்ளத்தை 
உயிரோடு வைத்திருப்பது 
உனக்காக ...

உணர்வை எழுப்பி 
உன்னோடு 
கலக்க வைக்கிறாய்

வார்த்தைகளை எழுப்பி 
உன் புகழை 
அளக்க வைக்கிறாய் 

எப்படி அளக்க முடியும்? 
பிரபஞ்சமே உனை
அளப்பதற்கே நொடியும்
விரிகிற போது 

மொழிகள் பாவம் தன்
விழிகளை விரித்து வைத்து 
உன்னை வியந்து பார்க்கிறது! 

காமதேனுவுன் 
கன்றாய் அருகிலிருக்கிறது 
நன்றாய் 

மனிதனெனை 
அருகமர்த்தி 
ஆழ்ந்து போக வை 
சுவாமி உன் 
அதிர்வலைகளில் அமிழ்த்தி 
அடியேனை உன் 
அடியிலேயே 
வாழ்ந்து வாழ வை 

சிங்கமும் பசுவும் 
வீரக் கருணையின் 
குறியீடுகள் 

திரிசூலத் தாமரையும்
உன் 
காவலருளுக்கான 
கைக் கருவிகள் 

நெற்றியிலிருந்து
நீ 
முருகரையும்
உன் 
இதயத்திலிருந்து 
நீ 
பக்தரையும் 
படைப்பவன் 

ஒரு விரலால் 
அகந்தை உடைப்பவன் 
மற்றொரு விரலால்
கண்ணீரைத் துடைப்பவன் 

தியானத்தால் 
தூது விடுப்பவன்
மோனத்தால் 
சேதி கொடுப்பவன் 

எட்டு வயதில் நீ 
எடுத்தாண்டதைப் போல் 
எட்டும் மனதை நீ 
தடுத்தாள
எட்டாதவற்றுக்குள்
எட்ட வைப்பவன் 

சொல் நதிக்கு 
அர்த்தம் வாரி 

என் 
சேவையும் 
சாதனையும் இணைத்த
சுவாமி நீயே 
சூட்சும அர்த்தநாரி

சுவாமி நீ 
சிவசக்தி கலவை 
மொழியால் முடியுமா
மொழிய முடியுமா  
உன் சாந்நித்ய அளவை


51) சர்வக்ஞ சாயுஜ்ய சாயி:

 
அனைத்தையும் அறிந்தவன் 
சுவாமி நீ
அனைத்திலும் 
உறைந்தவன் 
அனைத்துமாய் 
நிறைந்தவன் 

அணைத்தாய் நீ என்பதால் 
அது 
"அனைத்தாய்" இருக்கிறது சுவாமி 

ஏதும் தெரியாதது போல் 
இப்படி வைத்திருக்கிறாயே
உன் 
தெய்வ முகத்தை  
அதை எங்கிருந்து பெற்றாய்? 
இதை எங்கிருந்து கற்றாய்? 

இந்த உன் 
அருள் வதனமே 
அகங்களுக்குள் எல்லாம்
அகலேற்றுகிறது 

அகலேற்றி 
அணையா ஜோதியை 
அகலாமல் ஆக்குகிறது 
இருளை 
இடைவெளி இன்றி 
தாக்குகிறது 

நீ விழி நோக்கிப் பார்த்தால் அந்த 
விஸ்வரூப அதிர்வலைகள் 
விரட்டிப் பிடித்து
வினைகளைப் 
புடம் போடும் 
அதில் உன் திருவடி
படம் போடும் 
போட்ட பின்னே 
பகவானுன் தேரிழுக்க 
உன்னருளே வெவ்வினையை 
வடம் போடும்

எதிர்காலமெல்லாம் 
ஏராளமாயுன்
ஏகாந்த அன்பின் 
ஊர்கோலம் 

நீ 
எதிர்வந்தால்
அம்புகளெல்லாம் 
அன்பாகும்
வம்புகள்
பண்பாகும்

வரம்புகள் இல்லா உன்
வாத்ஸல்யம் 
நரம்புகள் இல்லா 
நாவினுள் 
அன்பாய் ஒழுகும் 
அது சென்று அகத்துள் 
அமுதப் பூச்சொரியும்

கீழே தான் பூமிஎன 
கீழ் குனிந்திருக்கிறாய் 
மேலே உன் வானம் 
கீழே கார்முகிலா என
கீழ்நோக்கும் நோக்கி
நீலமெல்லாம் 
நிலத்தில் விழும் விழுந்து
நெஞ்செல்லாம் கண்ணனாய் மாறும் 
மாறி அதுவே 
சுவாமி உன் 
பிரேம மாரி 

சற்று நீ மேல் நோக்க
இளைத்தபடி 
எட்டிப்பார்க்கும் வானவர் 
பூரிப்பால் பெருப்பர்
விழிகளையே 
பூக்களாய்த் 
தூவிக் கொண்டே 
இருப்பர் 

உன் கன்னத்து மச்சத்தை 
களவாடத் துடிக்கிறது
காற்று
எங்கள் கர்ம வினைக்கு 
அது தான் முற்றுப்புள்ளி என
மச்சமாய் வந்த மாற்று 

மனமே மனமே 
மட மனமே 
மகாதேவ மாதவனைப் போற்று 

இனமே இனமே 
மனித இனமே இனிமே
இறைவனை 
இதயத்தில் வைத்து ஏற்று 
உன் 
இல்லற இன்னல்களைத் தேற்று 

கண்களில்
 கடவுளை வைத்துப்
பூட்டு 
பூட்டி 
கண்ணீரால் நிதம் 
கற்பூரம் காட்டு 
காட்டி 
கவலைகளை சாய்
காயத்ரி சொல்லி ஓட்டு 

பாத்திரங்கள் பளபளக்க 
பக்குவப் பொடி தந்து 
மெருகூட்டும்
சுவாமி நீயே 
சூத்திரதாரி 

இரு கையிலோர் 
மொட்டு வைத்திருக்கிறாய் 
எங்களின் இதயமே அது
சுவாமி 
உன் விரல்கள் படப்பட
இதழ் விரிய வேண்டும் 
முகத்திலும் எங்களின் 
அகத்திலும்...

52) அநேக சாயி ஆத்மார்த்த சாயி:

 
சுவாமி நீ ஒன்றா பலவா

பக்தரின் இதயமே அளவா
அதை
பக்தரின் இதயமோ அளவா 

பக்தி வைத்தால் 
பிடித்துக் கொள்கிறாய் 
இதயம் திறந்தால் 
படித்துக் கொள்கிறாய் 

நீ படிப்பதில் நிஜமிருந்தால் 
புகுந்து கொள்கிறாய் 
பிரபஞ்சத்தை ஒப்படைக்க உன் 
பிரியங்களைப் பகிர்ந்து கொள்கிறாய்

உன்னிதத் தோற்றமும்
பலவிதத் தோற்றமும் 
பக்திக்கானப் பாசனம் 
பக்தியொன்றே 
முக்தி நல்குமெனும் 
உன்
முடிவில்லா சாசனம் 

காவியும் மஞ்சளும்
வெண்மையும் வெல்வெட்டும் 
🌈 வானவில்லாய் நீ 
சுவாமி 

ஒரு வானமே 
வானவில்லாவதை 
பூமியே தனக்கான 
குடையாக்கி 
வினை வெய்யிலைத் தடுக்கிறது 

அதைக்
கொடையாக்கி
அருளை அள்ளிக்
கொடுக்கிறது 

விரிந்திருக்கும் சுவாமி நீ 
பக்தர்க்காக 
வரைந்திருக்கிறாய் 
வர்ணங்களை ..
வளைந்திருக்கிறாய் 
வர்ணங்களாய்...
அதனால் 
களைந்திருக்கிறாய்
எண்ணங்களை ...

வர்ணங்கள் 
வெளிச்சமாவதே உன் 
ஜோதி உடல் தொடுவதால் மட்டுமே

விளக்கு 
வெள்ளியாகிருக்கிறது 
விளக்கேற்றும் போது
வெள்ளி மறைந்து 
ஜோதியே கண்களில் நிறைகிறது 

உன் உடை நிறம் 
தெய்வத் தத்துவக் குறியீடு 

உனை தரிசிப்பதெல்லாம்
பிறவிகளுக்கான 
ஆன்மீக முதலீடு 

கர்மா எரிந்து கொண்டிருக்கிறது 
இவர்களோ 
சுவாமி உன் 
அருளே இல்லை என்கிறார்கள்

கர்மா எரிவதே 
உன்னருளால் தானே! 

குப்பைகள் எரிந்தபின்னர் தான் 
வெளியோடு தோட்டம் 
வளர்க்கலாம் 

இவர்களின் 
அவசரங்களே உன்னால் வரப்போகும் 
பரவசங்களுக்கான தடையே ! 

விழிகளை உன் 
உடையும் 
இதயத்தை உன் 
நடையும் 
மனதை உன் 
அசைவும் 
ஆன்மாவை உன் 
அதிர்வலையும் 
ஆட்கொள்கின்றன...

ஜால வித்தை உன் உடை 
ஞால மெத்தை உன் 
கேசம் 
கால முத்தை உன் 
கோல தரிசனமே 
கடலில் மூழ்கும் 
கஷ்டமின்றிக் கொடுத்துவிடுகிறது

கடவுளர் உருவமும் 
உனது உடையும் 
வேறு வேறு 
சுவாமி நீ ஒரே ஒருவனே 

வித்தியாசங்கள் உன் 
உடையில் அன்றிவுன்
உள்ளத்தில் இல்லை 

எத்தனை வண்ணமோ
அத்தனை வண்ணங்களிலும் 
நீ காட்சி தருகிறாய் 

உன் 
எல்லா தரிசனங்களிலும்
நீ கையில் வைத்திருக்கும் 
ஒரே கைக்குட்டையாய்
நிறம் மாறாமல் 
என் இதயம் என்றும் 
உன் கூடவே வருகிறது 
சுவாமி

53) அனந்த சாயி ஆனந்த சாயி:


சாய்ந்திருக்கும் சாய் 
நீ 
ஆய்ந்திருப்பதால் அவலம் 
ஓய்ந்திருக்கிறது 

அண்டம் 
வாழ்ந்திருக்கிறது 

நீ இப்படி 
ஆனந்தமாய் 
அருள்வதாலேயே 
பிண்டம் உயிரை இன்னும் 
பிடித்துக் கொண்டிருக்கிறது 

உன் படுக்கையில் 
பாலே பஞ்சுகள் 
எங்கள் படுக்கையில் 
பஞ்சுகளில் பால்கள்

நீ சயனத்திருக்கிறாய் 
உன் சங்கல்பத்தில் 
அனைத்தும் நிகழ்கிறது 

நீ பயணித்திருக்கிறாய் 
பார்ப்பதற்கு
இங்கேயே இருப்பதாய் 
இதயம் நினைக்கிறது 

உன் சயனத்தில் 
சாமரம் வீசுவதும் 
உன் பயணத்தின் 
பின்னால் நடப்பதும்
பிடித்தமானதாய் 
இருக்கிறது 

இங்கேயும் 
கைக்குட்டை தான் 
கஜ லக்ஷ்மியாய் 
கைக் கூப்பி நிற்கிறது 

தலைமாட்டில் 
உன் படமே 
தரிசனம் தருகிறது 

திறந்த ஒரு ஜன்னலின் வழி 
உன் 
கரிசனம் வருகிறது

உனக்கெதற்கு சுவாமி ? 
அலாரம்...
நீயே எங்களை
கர்மக் கனவிலிருந்து 
எழுப்பி விட 
எழுந்திருக்கும் சுப்ரபாதம் 

நாங்கள் விழிப்பதற்காகவே 
சுப்ரபாதம் பாடுகிறோம் 
நீ 
விழித்து கொண்டே தான் இருக்கிறாய் 

விழித்த பின்னால் அல்ல 
விழிப்பதற்கே சுப்ரபாதம் 

அதுவும் 
நீ விழிக்க அல்ல
சுவாமி 
எங்கள் 
ஆன்மா விழிக்க 

வெற்றிலைப் பெட்டி 
கைக்குட்டையின்
நண்பனும் 
எதிரியும்

அருகருகே அமர்ந்து 
 அதிக நேரமுனக்கு 
சேவை சாற்றுவதற்கானப்
போட்டியாளர்கள் 

உன் 
வெளி உதட்டைப் பற்றியும் 
உள் உதட்டைப் பற்றியும் 
பாகவதம் பேசும் 
பேட்டியாளர்கள் 

இந்தப் படம் 
பக்தரின் படுக்கை அறை 
அலங்கரிக்க 
சுவாமியே 
உறக்கத்தை நெறிப்படுத்துவார்
சீரணத்தைச் 
சரிப் படுத்துவார்
கனவில் 
காட்சியை 
ஒளிப்படுத்துவார் 
நிம்மதியான தூக்க 
வெளிப்படுத்துவார் 

முழங்கை வரை நீ 
மடித்துக் கொண்டிருப்பதில் 
சிக்கிக் கொண்டு 
சுயம் இழந்து போகிறது
சுவாமி என் 
ரசனை மனசு 

சுவாமி 
வலிக்காவிட்டாலும் சொல் 
கால் பிடித்துவிடுகிறேன் 

பாத நமஸ்காரம் என்பதும் 
சில மணித்துளிகள் தான் 

இது அப்படி இல்லையே 

உன்
பாதம் பிடிப்பதன் மூலம்
நீ பிடித்து வைத்திருப்பதை அது
பிரதிபலிக்குமே சுவாமி

உன் 
வலது காலிலும்
இடது காலிலும்

பத்து பத்து விரல்கள் என் 
கைவிரல்களோடு சேர்த்து 

வலிப்பதற்காக அல்ல
என் பிடிப்பு வேண்டுதல் 
உன் 
ஒளி ஆலிங்கனத்தில் 
வெளியாய்த் திளைக்கலாமே 
அதற்கு 

உனக்கு வலிக்குமா?
ஒளிக்கு ஏது வலி?

54) கல்கி அவதார கலியுக சாயி:

சுவாமி நீ 
புரவியில் ஏறி வருகிறாய் ப்ரேம
பிறவியாய் நேரில் 
வருகிறாய் 

உன் 
வெண் குதிரை 
இதயத்தின் பிரதிபலிப்பு 

நீ வெளிச்சமாய் 
விரைந்து கொண்டிருக்க
இருளுக்கெல்லாம் 
ஒரே சலசலப்பு 

எதை எதையோ 
பார்த்துக் கொண்டிருக்கிறோம் 
சுவாமி நீ 
விழி காட்ட வருகிறாய் 

எங்கெங்கோ 
போய்க் கொண்டிருக்கிறோம்
சுவாமி நீ 
வழி காட்ட வருகிறாய் 

எதிலெதிலோ 
மோதிக் கொண்டிருக்கிறோம்
சுவாமி நீ 
ஒளியூட்ட வருகிறாய் 

நீ கொடுக்கப் போகும் 
விழியால் தான் 
உன்னை தரிசிக்க முடியும் 

எங்கள் விழி 
உலகத்தையே காட்டுகிறது
உன்னைக் காட்டுவதில்லையே 

நீ கொடுக்கப் போகும் மொழியால் தான் 
உன்னுடன் பேச முடியும்

எங்கள் மொழி 
பொய் மூட்டைகளுக்குள் 
மூச்சுத் திணறுகிறதே 

நீ கொடுக்கப் போகும் 
வழியால் தான் 
உன்னோடு 
பயணிக்க முடியும்

எங்கள் வழி 
எண்ணப் போக்குவரத்திலும் 
சந்தேகச் சோதனைச் சாவடியிலும் 
நின்று கொண்டிருக்கிறதே 

பக்தி ஒரு கால் 
பிரேமை ஒரு கால் 
சுவாமி நீ 
நம்பிக்கையாய்
நடமாடிக் கொண்டிருக்கிறாய் 

இவர்கள் 
இறக்கை விரித்துப்
பறந்து வா என்கிறார்கள் 

சுவாமி
நீ மனிதனுக்காக 
மனிதனாக வருகிறவன்
மனிதர்களோ 
பறவைகளாகவதற்கே 
முயற்சிக்கிறார்கள் 

சம்சாரக் கடல் கிழித்து 
சுவாமி நீ வருகிறாய் 
அய்யய்யோ 
எத்தனை சிப்பிகள் 
இந்தத் தரையில் என்பதே
இவர்களின் கவலை 

உன் தரிசனம் காணாது
ஓடிப் போய் 
சிப்பிகள்
சேகரிப்பதற்கே 
எத்தனிக்கிறார்கள் 

மூழ்கி எடுக்க வேண்டியதில்லையென 
இந்த உன் காட்சியில் 
குனிந்தெடுக்கவேக்
காத்திருக்கிறார்கள் 

பல்கிப் பெருத்த 
பாவங்களைப் பிரேமையால் 
போக்க வருகின்ற 
கல்கி நீ 

அழித்து மாற்றப்போகிறாய் என
நினைக்கிறார்கள் 
சுவாமி நீ 
அரவணைத்து மாற்றப்போகிறவன்

காட்டு விலங்கை நாட்டிலும் 
நாட்டு மனிதரை காட்டிலும் 
மாற்றிப் பிறப்பித்த 
கலியை உன் 
ஒளிக் காலால் நசுக்கி
ஒற்றுமை ஒத்தடம் 
தரப்  போகிறவன் 

சுவாமி நீ 
மெய் ஞானமாய் வருகிறாய் 
விஞ்ஞானமும் வசிப்பவரின்
அஞ்ஞானமும் உன்னோடிணைந்து 
உன் 
கை ஞானத்தின் 
காருண்யத்தில்
பொய்யறிவெல்லாம் 
பொய்த்து 
மெய்யறிவே 
மலரப் போகிறது

தாங்கள் 
நினைப்பதே நடக்கும் எனும் 
இறுக்கம் தளர்த்தி 
உன் சங்கல்பமே 
நிறைவேறும் எனும் 
நிரந்தர சத்தியத்தை 
பக்தர் நெஞ்சம் 
உணரப் போகிறது 

கடல் வழிவிடுகிறதா 
இல்லை 
நீ பூமி நோக்கி 
வழி காட்டிய கடல்
நீ பூமியில் 
துளித்துளியாய் விட்ட கடல்
இரண்டு வரிசையாய் நன்றியுணர்வில் நின்று
எழுந்துன்னை 
வரவேற்கிறது சுவாமி 

பிரேமக் குதிரை 
செல்லும் இடங்களில் எல்லாம் 
புழுதியையும் உன் 
பிரேமையாய் 
 மாற்றப் போகிறது 

அதன் குளம்படிச் சப்தமும் 
உன் பஜனைக்குத் தாளமாகும் 

வாத்ஸல்யமே 
வருங்காலமாகும் 

அன்பொழுக சிரிப்பதே
வாய் வாசலுக்கு 
எதிர் வருபவரை வரவேற்கும் 
மாக் கோலமாகும்

நீ வந்து கொண்டே இருக்கிறாய் 
குதிரை கனைப்பது 
உன் பெயராய் 
எதிரொலிக்கப் போகிறது 

கடவுள் ஒன்றென 
ஒரு விரல் 
மேல் நோக்கினாய்
அன்பே கடவுள் என 
ஐவிரல் 
விரிவாக்கினாய்
சுட்டு விரல் 
முன் நோக்கி 
நீயே கடவுளென உணர்த்த
நீயே கடவுளென 
வரப் போகிறாய்

பூட்டும்படியான கவலையில்லை...
தட்டும்படியாக ஏதுமில்லை
என் 
இதயத்திற்கு 
ஏது 
கதவுகள் சுவாமி !

நீ வருகின்ற சமயத்தில்
உன் முன் 
பாதையாகவேப் படுத்துவிடுவேன் 

பிறர் அதைக்
குப்புறப் படுத்திருப்பதாய்க் 
கருதுவர் 

இல்லை சுவாமி 
அதுதான் 
நீ வருகின்ற வழிக்கான 
என் சாஷ்டாங்க நமஸ்காரம் 🙏🏻

55) ஜூலா சாயி ஜால சாயி:

நீ
ஊஞ்சலாடும் போது 
இதயம் 
ஊஞ்சலாகிறது சுவாமி 

நீ 
ஒய்யாரமாகும் போது‌
ஆன்மா 
ஓங்காரமாகிறது சுவாமி 

நாற்புற சங்கிலிகள் 
சத்ய தர்ம 
சாந்தி அகிம்சை 
நீ
பிரேமையாய் அமர்ந்திருக்கிறாய்

பக்தரைச் சுமந்திருக்கிறாய் 

இளைப்பாறலில்லா
இறைவா உன் 
இளைப்பாறுதலும் 
இமை மூடாமலேயே 
இதம் காண்கிறது 

உயிரெனும் ஊஞ்சல் 
உறைந்திருக்கிறது 
நீயே 
பக்தியாலதை அசைக்கிறாய் சுவாமி 

மனம் எனும் 
ரங்க ராட்டிணம் 
ரணகளமாகிறது 
நீயே 
அமர்ந்ததை அமைதிப்படுத்துகிறாய்

ஊஞ்சல் 
பின் நகர்வதாய்
கடந்த காலமும் 
முன் நகர்வதாய்
எதிர் காலமும் 
அசையாதிருப்பதாய் 
நிகழ் நொடியும் 

எக்காலமது உன்
ஏகாந்தத்தில் அசைய
முக்காலமும் உணர்ந்த 
முழுமை சுவாமி உன்னால் 
தற்காலமும் 
நற்காலமாய் 
கனிந்து கொண்டிருக்கிறது

பின்னாலிருந்து
நீயே என்
இதய ஊஞ்சலை ஆட்டுகிறாய் 
முன்னால் நடப்பதைத்
தன்னால் காட்டுகிறாய்

நீ 
கற்களில் அமர்ந்தாலும் 
அது 
ஆனந்த ஊஞ்சலாய் அசைந்து கொண்டிருக்கிறது 

கவிதைச்
சொற்களில் அமர்ந்தாலும் 
காவிய விற்களாய்
கலியைக் கனியாக்குகிறது 

சுவாமி 
 உன் ஊஞ்சலை 
நீயே ஆட்டுவதாய் 
நீயே நேரடியாய்த் 
தொடர்பில் வருகிறாய் 

இன்னொருவர் குரலில் 
நீ எப்படிப் பேச முடியும்? 
இன்னொருவர் எண்ணுவதை 
உனதெண்ணமாய் 
எப்படி 
உயிர் தேக்க முடியும் ?

தொடர வேண்டுமெனில் 
எப்படியும்
தொடர்வாய்
எல்லா காற்றும் 
உனது கால்கள் 

தொடர்பு கொள்ள வேண்டுமெனில் 
எப்படியும் 
நேரடியாய்த்
தொடர்பில் வருவாய் 

எல்லா ஊடகமும் 
உனது வழிகள் 

எல்லா ஊஞ்சலிலும் 
நீயேன் அமர வேண்டும்? 

குழந்தையா நீ !

எல்லா கேள்விகளுக்கும் 
நீயேன் பதிலுரைக்க வேண்டும்?

நீ 
ஆன்மீகத்தை 
அசைவிக்கவே வந்தவன்
உலகாயத உன்மத்தங்களுக்கு 
நீயேன் 
உறமிடப் போகிறாய் 

இவர்களின் கர்மாவின்
இடைவெளியில் நீயேன்
இடைமறிக்க வேண்டும்

பக்கத்திலிருந்து நீ 
பாகவதம் நடத்தினால் 
பக்தன் முக்தனாகி விடுகிறான் 

உன் குரலை 
எதற்கு நீ 
வாடகைக்கு விடவேண்டும்

உள்ளத்தினுள்ளேயே நீ
ஊற்றெடுக்க 
கண்டவர் கிணற்றை  
 ஏன் நான்
எட்டிப் பார்க்க வேண்டும் ?

ஆன்மீகத்திற்கே நீ 
விடையளிக்கிறாய்
அவரவர் 
ஆசைகளுக்கல்ல 

எனது இதயத்தில் 
நீ
ஊஞ்சலாடுகையில் 
அடுத்தவர்
கிளைகளில் 
அவர்கள் ஆடுவதை 
ஏன் நான் 
நீயாடுவதாக 
  நினைக்க வேண்டும்

நீ தந்த
பரவசத்தைத் தான் 
பகிர வேண்டும் 
பக்தரிடம் 
நானேனுன் 
தபால்களைப் பெற வேண்டும்

எனக்கானதை மட்டும்
என்னிடம் சொல்கிறாய் 
அவர்களுக்கானதை 
அவர்களிடம் தான் நீ 
சொல்கிறாய் சுவாமி 
அவர்களுக்குத் தான் 
புரியவில்லை

ஏற்றுக் கொள்தலைப் பெறாதவர்கள் 
எப்படி நீ தருவதை 
ஏற்றுக் கொள்வார்கள் ?

இவர்களின் 
ஊஞ்சலில் நீ இடும் 
கயிறுகளைப் 
பாம்புகளாய் நினைக்கிறார்கள் 
பிறகெப்படி 
ஊஞ்சலாட முடியும்
உன்னால்?

நீ அமர்ந்த 
எனக்கான ஊஞ்சலில் 
நான் ஏன் 
பிறரை ஆட்டச் சொல்ல வேண்டும் ? 

ஆஞ்சநேயன் 
சுக்ரீவன் இதயம் கிழித்து
அவன் கொண்ட அண்ணலின் உருவத்தை ஏன் 
காட்டச் சொல்ல வேண்டும்? 

தரணிக்கு தாராளமானவன் நீ எனினும் 
தனிப்பட்டவன் 

நம்
தேன்நிலவு 
ஆன்ம உறவை
ஏன் நான் பிறருக்கு
சாளரம் திறந்து சொல்ல வேண்டும்? 

உன்னத சுவாமி 
ஊஞ்சலாடிய படி இருப்போம்
நமக்கான 
பாலும் பழத்தில் 
இவர்களுக்கு நானேன் 
பங்கு தர வேண்டும்?

ஊஞ்சல் நீ 
அசைவு நீ 
அமர்தலும் நீ 

என் ஊஞ்சலில் 
பிறர் அமரும்படி
 அமரவைத்து
நீ ஆட்டுவதில்லை ...
என் கனவுகளில் 
பிறர் தெரியும்படி
அசரவைத்து
நீ காட்டுவதில்லை

56) விநய சாயி விநாயக சாயி:


சுவாமி உன் 
பஜனைத் திருவிழாவில்
விநாயகனுக்கே 
முதல் இருக்கை

விநாயகனே
முதல் வழிபாட்டுப் பொருள்
என்பது 
சனாதன இயற்கை 

சுவாமி 
சிவனையேப் படைத்தவன் நீ 
உன் அம்சங்களே 
எல்லா வடிவங்களும் 

உனக்கு உதவிடவே 
இத்தனை 
இறை வடிவங்களும் 

பிரபஞ்சக் காரியங்களை 
பிரித்து நீதான் 
இறை உருவங்களாய்
இவர்களிடம் 
பகிர்ந்தளித்திருக்கிறாய் 
சுவாமி

உன்னதனே 
உயிரில் 
உறைந்திருக்கும் 
உன்னோடே என் 
வழிபாடெல்லாம் 

உன்னோடு ஆத்மா 
ஒன்றிவிட்ட பின்னர் 
உன் உதவியாளர் எதற்கு? 

உன் வழிபாடு மட்டுமே 
உயிருக்கான உறைவிடம்
உயிரின் இதம் 
உயிரேக்க ஒன்றுதல் 

உன் பெயர் தாங்கிய 
மந்திரம் மட்டுமே 
என் இதயத்துக்கான வழி
என் இதயம் ஊடுறுவும் ஒளி 
என்னிதயம் எனும் பூமிக்கு
வீடுபேறு தரும் வெளி 

பிரபஞ்சமே உன்னோடு கலந்திடவே என் வேண்டுதல் 
வழிபாடுகள்

உனக்கென்று பூமிகள் 
எத்தனை இருந்தால் 
எனக்கென்ன கவலை !

பிரேமப்
பிரபஞ்சமே 
விநாயகனும் உனக்கான 
ஓர் பூமி 

அவன் 
கொம்புடைத்து உன்னையே எழுதினான் 

பூரணமாய் 
உன்னையே கையேந்தி 
உன்னையே அனுபவித்தான் 

கைலாயம் தாங்கும் 
வெளி நீ 
பக்தரை நெருங்க
வெளியே 
கிளியாகவும் அவர்களின்
திருத்தோளில் நீ
 அமர்ந்து கொள்கிறாய் 

இறை வடிவங்கள்
உன் குழந்தைகள் 
சுவாமி
அவர்களை நீதான் 
அருளாய்த் தாலாட்டுகிறாய் 

ஒரு நாள் வரும்
உலகம் உணரும் 
கடவுள் நீ 
உன்னையே 
இவர்கள் வழிபடும் 
தெய்வங்களும்  வழிபடுகின்றன என்பதை

சுவாமி 
உன் விதவித 
ஆடைகளைத் தான் 
கடவுளர் எனக் 
கும்பிடுகிறார்கள் 
பக்தர்கள்

சுவாமி 
நீயே 
அந்த ஆடைகளை 
அணியும் தேகம் 

தெய்வங்களை உணர்வதிலிருந்து
தன்னை 
உணரவைக்கும் யோகம் 

ஆசைகளை எரித்து
ஏற்றுக் கொள்தலை
அகத்தில் ஊற்றும் யாகம் 

பிறப்பறுப்பதற்கே உன் 
பக்தி எனும் 
கத்தியைப் பயன்படுத்த 
சக்தி எனும் 
புத்தியை உபயோகிக்க 
நீயே 
சங்கல்பிக்க வேண்டும் 
பிறகு நீ எங்கள் பிறவியைப் 
பிக்க வேண்டும்

58) யக்ஞ சாயி யக்ஞோபவீத சாயி:

சுவாமி நீ 
சிறப்பாய் இருக்கிறாய் 
என்பதற்கான காரணமே 
நீ நெருப்பாய் இருக்கிறாய் என்பதே 

சுவாமி நீ 
நெருப்பாய் இருக்கிறாய் 
என்பதற்கான காரணமே 
நீ உயிர்ப்பாய் இருக்கிறாய் என்பதே 

நெருப்பை நெய்தணிந்த
பொருப்பு நீ 

உன்னைச் சுற்றுவது
ஹரி வலம் அதுவே
கிரி வலம் 

வெறுப்பை 
நெருப்பிலிடச் சொல்கிறாய் 

அப்போதே பேரன்பு 
கொழுந்து விட்டு எரிகிறது 
மரிக் கொழுந்தாய் மணக்கிறது 

அரி கொழுந்தல்லவா 
அது 

தியாக குண்டத்தில் 
சேவா யாகம் 
செய்து விட்டு 
செய்தோமென்ற எண்ணத்தையும் 
குண்டத்திலேயே 
இடச் சொல்கிறாய் 

தின சாட்சியாய் நீயே
மன சாட்சியாய் 
வலம் வருகிறாய் 

மந்திர வடிவம் உன் 
தரிசன அதிர்வலைகள் 
யந்திர வடிவமுன் தேகம் 
சுந்தர வெளிச்சம் உன்
சுயம் 

எந்த மந்திரமோதினும்
உன்னிடமே வருகிறது
உண்மை எனினும்
உன் பெயரை மட்டுமோதவே
பிடித்திருக்கிறது 

அதை மட்டுமோதினால் தான் 
அது மட்டின்றி மோதுகிறது
ஆயுட் கால வினைகளை...

உடலின் உஷ்ணமாய் 
உயிரின் கதகதப்பாய் 
இதய அரவணைப்பாய்
அடுப்பின் அக்னியாய்
பசியின் கனலாய் 
சுவாமி நீயே 
சுடர் விடுகிறாய் 

உன் நெருப்புப் பசை 
ஒட்டியே 
உடம்போடிருக்கிறது 
உயிர் 

இதயமதை 
ஈரத்தோடும் 
மனமதைக் 
காயப் போடவும் வைக்கிறது 

காவி நெருப்பே உன் 
கருணை நிழல் 
பாவிகளையும் 
புனிதமாக்குகிறது 
பரோபகாரத்தை 
ஜனிதமாக்குகிறது 

விளக்கேற்றும் போதெல்லாம்
விளக்கு உனக்கு 
நாற்காலியாகி விடுகிறது 
சுவாமி 

தகன மேடையில்
என் உடம்பின் 
உள்ளே இருந்த நீ 
வெளியே வந்து 
உனக்குள்ளேயே 
எடுத்துக் கொள்கிறாய்

தவ மேடையில் 
என் உடம்பின் 
ஆன்மாவில் எழுந்த நீ 
அதிர்வலையாய் 
வெளியே வந்து 
வீதி உலாப் புறப்படுகிறாய் 

ஜோதியே உன் ஒரே
ஜாதி தான் உலகெங்கிலும் 

காயத்ரியாய் 
உன்னையே உச்சரிக்கிறோம் 

நீயே பேரறிவு 
உன்னை ஆறறிவுகள் 
எப்படி 
ஆராய முடியும்? 

அருள் வளையத்தை 
நூலாய்த் திரித்து 
நீயே சுற்றிக் கொள்கிறாய் 

தோளைத் 
தொற்றிக் கொள்கிறாய்

ஜபத்தால் தான் 
நூலே பூநூலாகிறது 

காயத்ரி எனும் 
பாரிஜாதப் பூவைச் 
சுற்றாத நூல் வெறும்
நாராய் நின்றுவிடுகிறது

ஒழுங்காய் ஓதினாலே
ஒழுக்கம் வருகிறது
ஆழமாய் ஓதினாலே
அடக்கம் வருகிறது 

அதிகமாய் ஓதினாலே
அதிர்வலைகளாகிறது
அகமும் புறமும் 

நூல் ஆயினும் எந்
நூல் ஆயினும் 
ஞானமே உன்னை எப்படி
அளக்க முடியும்?

வர்ண பேதம் காட்டுவதாலேயே
வளைகிறது வானவில்

நெருப்பே உன்னை 
எப்படி வளைப்பது?

கனலே உன்னைக் 
கனவால் எப்படி 
கலைக்க முடியும்?

பிரபஞ்ச அதிர்வலைகள் 
மந்திரமாயின...
வேதமாய் வகுத்தனர் 
மிக 
வேகமாய்த் தொகுத்தனர் 

வேதத்தின் 
விளக்கவுரையாய்
சுவாமி நீ நடந்து வருகிறாய் 

உபநிடதங்களை 
உச்சரிக்கிறாய் 

அதிருத்ர யாகமாய் 
அழகாய்ச் சிரிக்கிறாய்

நெருப்பெட்டியிலும் 
நீயே 
நிறைந்திருக்கிறாய்

தீக்குச்சிகள் நாங்கள் 

நீ வெளிப்பட 
உன்னையே 
உரசுகிறோம் 

எங்களின் 
தலைக்கனம் எரிகிறது 

நீ தான் 
தீக்குச்சிகளின் 
கிரீடத்தைப் பற்ற வைக்கிறாய் 

அப்போதே 
உன் ஜோதி
உள் ஜோதி உள்
உலகம் ஆள்கிறது 

பிரம்மத்தை உணரும் 
பாதையில் நடப்பவரே 
பிராமணர் 
சுவாமி நீ மட்டுமே 
பிரம்மம் 

சுவாமி நீயே 
வேதம் விளக்கிய 
அறம் 
சுவாமி நான் அந்தணனாகவே அகத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறேன்

59) சந்நதி சாயி சகஜ சமாதி சாயி:

வெற்றி இலை என்று 
வந்தவருக்கு 
வெற்றிலையால் 
வெற்றியை வரவேற்க 
நீ வைத்திருந்த 
வெற்றிலைப் பெட்டி போல் 
இருக்கிறது சுவாமி 
இது 

எத்தனை
 தேவாதி தேவர்கள்
எத்தனை 
மகா தபஸ்விகள் இதில்
பளிங்குகளாய் மாறப் 
போட்டிக்கு வந்தார்களோ!

அகத்தை அழகுபடுத்தும் 
அத்தனை அழகுசாதனமும் 
இதற்குள்ளே தான் 
இறைவா இருக்கிறது 

சமாதி என்று 
நினைத்து விட்டனர்

பூட்டிய இதயம் 
இப்படித் தான் 
இருக்குமென 
சுவாமி நீ 
சொல்கிறாய் 

சந்நதி வாசலை
நீ திறந்தும் 
நுழைய நேரமில்லாதவர்கள்
நீ 
பூட்டிய உடன் ஏன் 
புலம்ப வேண்டும் ?

இப்படித்தானுன் 
இதயத்தில் இருக்கிறேனென நீ
எடுத்துக் காட்டிய 
ஏகாந்தமிது

வீட்டைப் பூட்டிவிட்டு நீ 
வெளியே நடமாடுகிறாய்
இவர்கள் இன்னமும் 
பூட்டையே ஆட்டி 
புலம்பி அழுகிறார்கள் 

நீ அதன் மேலேயே 
அருவமாய் அமர்ந்து
சிரித்துக் கொண்டிருக்கிறாய் 

உயிரைக் கடைய 
சத்தோடு நீ வந்திருக்கையில் 
தயிரைக் கடைய 
மத்தையே 
மன்றாடிக் கேட்டவர்கள்
உன் 
மகிமையே இவர்களின்
மளிகை சாமானுக்கும்
மருத்துவ மனைக்குமே
கால் கடுக்க நடந்திருக்கிறது

கொஞ்சம் ஓய்வும் எடுத்துக் கொள்
சுவாமி 

மோதிரத்திற்கே 
மோதிக் கொண்டு 
முன் வரிசையில் அமர்வார்கள் 

உன் 
பூரணத்தை அருளின் 
காரணத்தை யார் 
கடைசிவரைப் 
புரிந்து கொண்டது?

நன்றியே இல்லாதவர்களுக்கும் 
நலம் செய்யும் 
நாராயணன் நீ 

நீ நானாகவும் 
நான் நீயாகவும் இருந்திருந்தால் 

போலி பக்தர்களை 
காலி செய்திருப்பேன் 
பேராசைப் பிறவிகளுக்குப்
பேயோட்டி இருப்பேன்
நாடக பக்தியை 
நசுக்கி இருப்பேன் 

சுவாமி நீ
எங்கிருந்து பெற்றாய்
இத்தனைக் கருணையையும் ?
இத்தனைப் பொறுமையையும் ?

என்னையும் மன்னிக்கிறாயே

இதைவிட நீ 
இறைவன் என்பதற்கு 
வேறேன்ன சான்று ?

என்னையும் 
அரவணைக்கிறாயே 

இதை விட நீ 
தாயென்பதற்கு 
வேறென்ன எடுத்துக்காட்டு ?

மனிதா முடிந்தால்
என் சுவாமி அன்பு போல்
வேறெவர்க்கும் உண்டா என 
எடுத்துக் காட்டு ! 

ஆன்மாவைச் சமைத்து 
அறுசுவை விருந்தாக்கும்
அஞ்சறைப் பெட்டி இது

ஓம்காரத்தையே 
ரீம்காரமாய் ஒலிக்கும் 
ரம்ய சுதிப் பெட்டி இது

எங்களையேச் சுமக்கும்
திண்ணை இது
இதில் 
இதயமமர்ந்து தான் 
இறைவா உன் 
காயத்ரியை உச்சரிக்கிறது
கலியை எச்சரிக்கிறது

இதில்
சிட்டுக்குருவிகள் 
சுந்தரமாய் அமர்ந்து
சுற்றிப் பறக்கின்றன
புறாக்களுக்குப் போட்டியாக ...

இதில் 
எந்தக் குருவியின் 
சிறகசைப்போ 
எங்களுக்கான வீடுபேறு ?

போ சுவாமி
பிறவிகள் தந்தெங்களை 
ஏன் படுத்துகிறாய்? 

புறாக்களைப் பறக்கவிட்டு
சமாதானம் உணர்த்துகிறாய் 

உன் சமாதானம் பெற்றே
புறா பறக்கிறது
மாத சம்பளம் பெறுவதற்கே
மனிதன் பறக்கிறான்

தியானக் கற்களுக்கு 
நீ தந்த 
சமாதி நிலை 
என் இதய கற்கள்
புரிவது 
எப்போது சுவாமி?

பால்வெளியின் நிலைக்கண்ணாடி 
காவியால் போர்த்திருக்கிறது 

அதை 
பக்தியோடு பார்க்கின்ற
சூரியனுக்கும் வேர்த்திருக்கிறது

முத்தப் பூக்களையே இதில் 
பதிக்க விரும்புகிறேன்

இதுதான் சுவாமி
உனக்கும் எனக்கும் 
திருமணம் நடந்த மணமேடை ...
உலகாசையை இதற்குள்ளே தான் 
சமாதியிட்டிருக்கிறேன்

அக்னியே 
உன்னை மணந்ததற்கு
வேறொரு அக்னி சாட்சி
வேண்டுமா? 

நீ ஒருவன் போதும் 
உப்பில்லா உப்புமா குடும்பம் 
உயிருக்கு
உய்வு தருமா?

மோகம் உன்மேலென்றால் மட்டுமே
மோகம் என்பது 
மோட்சமாகும் 

நலுங்குப் பாடலைத்தான்
பஜனையாய் உன்முன் பாடுகிறேன்

தியானமெல்லாம் 
நமக்கான 
தேனிலவு 

பௌர்ணமி
 சதுரமாகி இருக்கிறது

இமயமலையின் 
மாதிரி வடிவமாய் 
சுவாமி நீ இதை 
சிருஷ்டித்திருக்கிறாய்
அதனால் தானிது
காவி உடை போர்த்திருக்கிறது 

என் ஆன்மாவை 
பத்திரப்படுத்தும்
கோகுலக் குளிர் சாதனைப் பெட்டி இது

இது திறக்குமா என
இவர்கள் அதன் முன்
இதயம் திறக்குமா என 
இறைவா நீ 
இவர்கள் முன்

மாலைகளின்
கட்டிலா இது
கடவுளே நீ 
மழையைத் தந்தே
வெய்யில் கொள்கிறாய்
மனதைப் பார்த்தே 
மையல் கொள்கிறாய் 

பெரிய தீப்பெட்டி இது
உரசக் கூட 
இல்லை இதன்
உஷ்ணத்திலேயே 
ஜோதியாகிறேன்

எங்கள் 
உள்ளங்களைச் சேகரிக்கும் 
உண்டியலிது 

வைகுண்டத்திற்கான 
பாதாளச் சுரங்கக் கற்கதவு இது

இந்தப் பூக்களுக்குப் 
புரிந்திருக்குமா அவை
மண்ணோடிருந்த வரை 
மலராக இருந்தது
உன்னோடிருக்கும் 
ஒவ்வொரு நொடியும் 
பூத்திருக்கிறது சுவாமி என

60) பிரசாத சாயி பிரஸித்த சாயி:

லட்டுவாய் இணைக்கிறாய் 
பூந்தியாய் உதிர்கிறார்கள் 

பூந்தியாய் தவிக்கிறார்கள் 
மீண்டும் 
லட்டுவாய் இணைத்துவிடுகிறாய்

ஒட்டியிருக்கும்
எல்லா பூந்தியின் மீதும்
முந்திரி ஒட்டியிருப்பதில்லை

முந்திரியை எடுப்பதற்கான 
முயற்சியில் 
பூந்தியும் சேர்ந்தே வருகிறது 

பூமி லட்டுகளை நீயே 
உருட்டி விடுகிறாய் 
எறும்புகளுக்கு 
லட்டுவின் மீதே விருப்பம்
உன் விரல்கள் மீதல்ல

உன் லட்டுவே 
அவ்வளவு இனிப்பென்றால்
உன் விரல்கள் 
எவ்வளவு இனிப்பெனும் 
எதார்த்தம் புரிவதில்லை

நெய்க்கு பதிலாக 
பொய்யை உருட்டியே
பூமி லட்டுவை 
உருட்டியிருக்கிறாய் 

இவர்கள்
பொய் மணமே 
நெய் மணமாய்
நினைக்கிறார்கள் 

பொய் அதை 
பொய் என்று நான் சொல்ல 
இவர்கள்
 பழி என்கிறார்கள் 
நீ 
பேசாமலிரு என்கிறாய்

மௌனமாகவே இருந்துவிடுகிறேன்
என் பசிக்கு 
நீ தான் வேண்டும்
உன் லட்டு எப்படிப் போதுமானதாக இருக்கும்? 

மனிதர்களோடு 
எனக்கெந்த 
மல்லுக்கட்டுதலும் இல்லை 

நீதான் சுவாமி 
பக்தர்கள் யார் 
மனிதர்கள் யார் எனப் 
புரிய வைக்கிறாய் 

கடலே உன்னோடு தான்
என் ஐக்கியமெல்லாம்
கடலை மாவுக்கு 
லட்டு தான் 
காத்திருக்க வேண்டும் 

பிறருக்கு 
லட்டு தந்து ‌
எனக்கு 
திட்டு தருகிறாய் 

உன் திட்டில் இல்லாத 
சிகிச்சை 
லட்டுவால் 
எப்படி தரமுடியும் ? 

பிறர் கையில்
லட்டை வீசி
என் தலையில் 
குட்டை வீசுகிறாய்

இரண்டுமுன் 
ஒரே விரலே செய்கிறது 

உன் 
லட்டில் மோதிரம் இருக்கலாம் 
ஆனால்
நீ தரும் குட்டில்
மோட்சமே இருக்கிறது

எனக்கு உன் 
மோட்சமே வேண்டும் 
உன் மோதிரங்களால் 
என் விரல் வரை மட்டுமே
நுழைய முடிகிறது சுவாமி 

எனக்குன்
ஆலிங்கனங்களை விட 
ஆன்ம ஊடுறுவலே 
முக்கியம் 

எனக்குன்
இனிப்புகளை விட 
கண்டிப்புகளே முக்கியம்

உன் 
கண்டிப்பே 
மனதை உடம்பிலிருந்து 
துண்டிப்பு செய்கிறது 

உன் 
மௌனங்களோடே 
என் மொழிகள் எல்லாம் 
உன் 
மொழிகளோடே என் 
மௌனங்கள் மோகிக்கிறது

உன் விரல்களையே
நேசிக்கிறேன்
அதில் 
என்ன வருகிறதென்பது 
எனக்கு 
முக்கியமே இல்லை

உன் 
பாதங்களையேப் 
பற்றுகிறேன்
உன் பாதுகை
தங்கமா வெள்ளியா எனும் 
ஆராய்ச்சி எனக்கில்லை

நீ 
எத்தனை 
லட்டுக்களைத் தந்தாலும்
விரல்களை விரித்தே 
வைத்திருப்பேன் 
எப்போதுன் விரல்களைத் 
தருவாய் என 

என் விரல்களுக்கு
உன் விரல்களே 
லட்டுக்கள்
ஆம் 
என் விரல்கள் என்பது
தட்டுக்கள்

ஆயிரம் பேர் 
எரித்தாலும் சுவாமி 
அந்த நொடியிலும் 
உனக்கே நான் ஆரத்தியாகிறேன்

உடம்பில்
ரத்தமே கசிந்தாலும்
உனக்கே அது 
அபிஷேகமாகிறது

என் வலிகள் எல்லாம்
உனக்கான ஆராதனை
என் தனிமை எல்லாம்
உன்னோடான நேர்காணல்

குடும்பத்தை அல்ல
நீ அழைத்துப் போகும்
கைகளையேப் 
பற்றி இருக்கிறேன்

இறைவா உன்
இடுப்பில் தான்
தொற்றி இருக்கிறேன்

இவர்கள் 
பிசைந்து உருவாக்க
களிமண் அல்ல
உன் உளியில்
உருவாகிக் கொண்டிருக்கும்
கல் நான்

உன் 
லட்டுக்கள் 
என்னை
 ஏமாற்றிவிட முடியாது

இப்போது 
நீ உன்னையே 
தந்து கொண்டிருக்கிறாய்
என் பசி 
தீர்ந்து கொண்டிருக்கிறது 

பிரசாதமாய்
நீ எதைத் தந்தாலும் 
மகிமையாய்
நீ எதில் வந்தாலும் 
சுவாமி
உன்னோடென் ஐக்கியத்தில் மட்டுமே
ஆன்மா 
அடங்கிப் போகிறது

அமர் சனங்களின்
விமர்சனங்கள் 
என்ன செய்யும் 
என்னை 
தினசரி உன் 
தரிசனங்களே 
திருப்தி தருகையில்

விமர்சனங்கள் அல்ல
உன்
தரிசனங்களே 
பேரன்பைப் பொழிகிறது 

லட்டுவாய் மனிதன்
சேர்ந்தே 
பிரிந்திருக்கிறான்
பிரிந்தே 
சேர்ந்திருக்கிறான்

உன் முந்திரி நான்
பூந்திகளின் கூட்டத்தில்
ஒட்ட முடியாமல்
ஒட்டிக் கொண்டிருக்கிறேன்

பூந்திகளில் எதற்கு 
முந்திரி பருப்பு ?
அதில் 
இனிப்பு இல்லை
அது
இனிப்பே இல்லை

என் கசப்பை நீ 
ஏற்று 
உன் இனிப்பை
எனக்கு 
அளிக்கிறாய்

துளசியில்
தேனில்லை என்று நீ 
ஏற்காமல் இருப்பதில்லை

வண்டுகள் அதை
சுற்றினால் என்ன 
சுற்றாவிட்டால் என்ன

நானென்ன 
லட்டுவா 
கூட்டத்தைத் திரட்ட 
கூட்டத்தில் விநியோகிக்க

உன் 
குவளைத் தண்ணீராகவே 
நிறமற்று இருந்துவிடுகிறேன்

முழுமையான 
பிரசாதம் என்பது நீ
லட்டுக்களைத் தருவதல்ல
உன்னையே நீ தருவது

நாக்கு ருசிக்கு
உன் லட்டு தேவை 
என்
ஆன்ம ருசிக்கு
இதயப் பசிக்கு
நீ மட்டுமே தேவை

61) ரத சாயி ரத்னாகர சாயி:


அச்சாணியே 
நீ தான் 
தேர் மீதேறி 
பவனி வருகிறாய்

துவாபர யுகத் 
தேரோட்டியே 
ஒரு மாறுதலுக்கு 
அர்ஜுனர்கள் உனக்கு 
சாரதியாய் மாறி 
சனாதன சாரதியே 
உனைச் சுமந்து 
உலகம் சுற்றி வருகிறார்கள்

பூமிக்குள் தவமிருந்த அங்கம்
பகவான் உன்னையே
தங்கமாய்த் 
தாங்கி இருக்கிறது

நீ அணிந்த நிறத்தை 
அதுவும் வாங்கி இருக்கிறது 

நிலா
சூரியனிலிருந்தும் 
சூரியன் 
உன்னிலிருந்தும் 
வெளிச்சத்தை 
வாடகைக்கு வாங்குகிறது 

பிரகாசமே 
விண்ணிலிருந்து வரும்போது 
சுடுகிறது 
உன்னிலிருந்து வரும் போதே
ஆன்மாவுக்குள்
அதிர்வலைகளை நடுகிறது

சொக்கத் தங்கம் உன்னைச் சுற்றி இருக்க
சொக்கும் தங்கமாய் 
சுடர்கிறது 

லோகத்தில் 
உனைத் தீண்டும் 
உலோகம் தங்கமாகிறது
தீண்டாத தங்கம் 
திருவேறாமல்
துருவேறித் தீர்ந்து போகிறது 

சிபிச் சக்கரவர்த்தியின் 
தேரும் 
சித்தார்த்தன் பயணித்தத் தேரும் 
உன் தேரின் சேய்கள் 

தரையில் 
உன்பேர்த் தடங்களைப்
பேசிடும்
சக்கர வாய்கள்

அவை 
தர்மத்தில் ஓடியது
இதுவோ
தர்மத்தையே 
தாங்கிச் செல்கிறது 

உன் பேரின் 
வீதி உலாவும்
உன் தேரின்
வீதி உலாவும்
இதயத்திற்கே வந்து சேர்கிறது

உனக்கு கார் ஓட்டவும்
உனக்கு தேர் ஓட்டவும் 
உன் பேர் பாடி எங்கள்
கர்மம் ஓட்டவுமே 
பயணங்கள்
சரணங்களாய் நிகழ்கிறது 

தியானம்
பஜனை
சேவை
போதம் 
சக்கரங்கள் நான்கு 
வீடு பேறே நீ 
வீதிக்கு வந்து எங்கள் 
கூடு பெயரக்
கூட்டிச் செல்கிறாய்

 நான்கு வேதங்களிலும்
நீதானே ஏறி 
அமர்ந்து கொண்டிருக்கிறாய் சுவாமி

கோவிலுக்குள் கடவுள்
என்பது மாறி
கோவிலும் கடவுளும் 
நீயாகி ஒன்றி இருக்க
எந்தக் கோவிலின் 
உண்டியலில்
என்னைத் தொலைக்கச் சொல்கிறாய்? 

சாயி காயத்ரியில்
ஆக்ஞா எழ ...
அஷ்டோத்ரத்தில்
இதயம் எழ...
சஹஸ்ரநாமத்தில்
ஆன்மா எழ ...

வேறெந்த 
மந்திர அம்புகளை 
மாதவா உன்மேல்
வீசச் சொல்கிறாய்? 

கிரகங்களுன் 
காலடியில் கிடக்க...
கர்மங்களால் 
வாழ்க்கை நடக்க ...
கருணை உன் கருணை
காப்பாற்றத் துடிக்க

நல்லெண்ண தீபம் ஏற்றாமல் 
யாருக்கு நான் 
நல்லெண்ணெய் தீபம்
ஏற்றுவது?

குல தெய்வமும் நீதான்
சகல
பல தெய்வமும் இருக்கும்
பல தெய்வமும் அருளும் 
நல தெய்வமும் நீதான் 

வேறெதை வணங்க?
வேறெதில் இணங்க? 

பிறவிகளின் பாதையில்
களைத்து ...
கர்மங்களின் பாதையில்
உலுத்து ...
வாழ்க்கைப் பாதையில் 
சலித்து ...
தத்துவப் பாதையில்
அலுத்து...

இதோ உன் 
தேர் வரும் பாதையில் 
தவழ்ந்து வருகிறேன் 

சுவாமி 
நீ என்னை 
தேரில் ஏற்றினாலும் 
என் மீது நீ 
தேரையே ஏற்றினாலும்

பிரசாதமாய் ஏற்கிறேன்
பிரசாந்தமாய்ப் பார்க்கிறேன் 

சுவாமி 
எனக்கென நீ மட்டும் தானே !

இதய காலிகளை
இனிதே சுமக்கும்
மனிதர்கள் போலிகள்

இவர்களின் 
உறவு எனக்கு வெறும்
ரயில் ஸ்நேகமே

சுவாமி 
உன் உறவு தான் 
தானாய்த் தேடி வந்த
தேர் ஸ்நேகம்!

62) சங்கராந்தி சாயி சங்கடஹர சாயி:

நீ கையில் ஏந்தி இருப்பதால்
கரும்பும் 
பட்டினத்தாராகிறது 

எந்த பக்தரின்
இதயத்துண்டு இது 
இதயத்து உண்டு என 
உன் 
அருளே அதில் 
இனித்துக் கொண்டிருக்கிறது

நுனிக் கரும்பா
அடிக் கரும்பா உன்
அடி 
கரும்பென 
சதா விரல் எறும்புகள் 
ஊறவே 
உன்னிடம் வருகின்றன

கைக்குட்டையோ மடியில் 
நான் மட்டுமுன் 
கையிலா என
இந்தக் கரும்பு
இளைத்துப் போகவும்
வாய்ப்பிருக்கிறது 

நீ தொடாத பாகம் 
சீக்கிரம் கசந்துவிடப் போகிறது
சுவாமி 
உன் விரலால் 
வருடு அதை 

 வெண்ணெயாய் 
நீ 
இதைத் திருடி 
இதற்கே இனிப்பளிக்கிறாய்

முதன் முதலாக 
தன் சுவையை 
தான் சுவைத்து 
திருப்தியாகட்டும்
திறள் கரும்பு 

கருத்த மின்னல்கள் 
கரும்புகள் சற்று 
பெருத்த கன்னல்கள்
உன் 
பொருத்த விரல்களில் 
தன் 
வருத்தங்களிடம் இருந்து
விடை பெற்றிருக்கிறது 

தலைக் கனத்தை அது
இழந்திருப்பதால் நீ 
கையிலேந்தி இருக்கிறாய் 

தன் கூந்தலை இழந்து
திருப்பதியாகி இருக்கிறது
பெருமாளே நீ அதை 
பிரியமாய்ப் பிடித்திருக்கிறாய்

சாயி ராஜேஸ்வரி உன் 
கைக் கரும்பு 
தைக் கரும்பாய் எங்களின்
மெய்க் கரும்பையும்
நீயே 
தாங்கி இருக்கிறாய் 

இனிப்போ 
கசப்போ ஒன்றாய் நீயே
வாங்கி இருக்கிறாய்

பொங்குவது பொங்கினால்
பொங்கலாகிறது வெளியே 

பொங்குவது அடங்கினால்
பொங்கல் நிகழ்கிறது 
உள்ளே

சூரியன் உனக்கு 
ஆரத்தி எடுக்கிறது 
வானத்தில் நீ வைத்த 
பொங்கல் பானையே 
முதலில் பொங்குகிறது 
பிறகே 
எங்கள் பானைகள் 
பொங்கல் வாழ்த்தை 
வாய் வழி வழியவழியச்
சொல்கிறது 

ஞானம் பொங்குவதில்
தியானம் தங்கி இருக்கிறது
தேகப் பாத்திரத்தில்

அன்பே நீதான் 
அதில் இனிக்கிறாய்
சுவாமி 

ஒவ்வொரு விவசாயிக்கும் 
சாயி நீயே உள்ளிருந்து
விதைக்க வைக்கிறாய்
விளைய வைக்கிறாய்
அறுக்க வைக்கிறாய்
அறுசுவை வைக்கிறாய்

போகியில் எரித்த
அகில ஆணவத்தை 
சாம்பலாக்கி 
சிவனே நீயே 
பூசிக் கொள்கிறாய் 

பக்தர்கள் உனக்கு
பூச்செண்டுகள் நீட்டுவர்
விவசாயிகள் உனக்கு
கரும்புத் தண்டையே
நீட்டுவர் 

தையில் மட்டுமா 
கவிதையிலும் நீயே 
காலடி வைக்கிறாய் 

உன் நாலடியும்
நான்கு வேதத்தை 
அளக்கிறது
ரகசியங்களை 
அளிக்கிறது 
மாயைகளைப் 
பிளக்கிறது
மகிமைகளே
களிக்கிறது

பானையில்
திங்கள் வழிவதால்
பொங்கல் என 
சூரியன் சொல்கிறது 

காமதேனுவும் சாயி
ராமதேனுவாய் 
உன் மனதையே 
கறந்து தருகிறது 
கருணையே
சுரந்து வருகிறது 

மாட்டை அடக்குவதும்
பல 
நாட்டை அடக்குவதும்
உன்னருட்
சாட்டையே 
பிரபஞ்சம் ஆள்கிறது 
சுவாமி உன் 
பாதம் நம்பியே 
பாரதம் வாழ்கிறது 

என்னைக் கட்டி 
நீ 
என்னுள் என்னை 
மேய விடுகிறாய் 
அது 
உன்னையேச் 
சுற்றிச் சுற்றி வருகிறது 

சங்கரன் உன்னால் 
ஒவ்வொரு 
சங்கராந்தியும்
பேரருளைச் 
சங்கமமாக்கும் 
பிரசாந்தியே!

63) சுந்தர சாயி சுபீக்ஷ சாயி:

கடவுளின் கோவில் 
இங்கே
கட்டப்பட்டிருக்கும் 
கற்கள் பஜனை
சொற்கள் போதிமரத்துப்
புற்கள் 

இது
விபூதி மரம் காய்க்கும்
வேர்
சந்நதியிலேயே நிறுத்தப்பட்ட
தேர்

இங்கே
அடி எடுத்து வைப்பது 
என்பது 
கடவுளே நம் 
கரம் பிடித்து நடப்பது

இங்கே 
வழிபட வருவது என்பது
கடலிடம் நதியாய்
வழிந்தோட வருவது 

இதைப் பார்ப்பதென்பதில்
முகப் பார்வை 
அகப் பார்வையாய் 
முற்றிவிடுகிறது 

கிரகப் பார்வையும்
சுகப் பார்வையாய்
பற்றி விடுகிறது 

தூய்மை 
தொற்றி விடுகிறது 
யோகம்
தேற்றி விடுகிறது 

ரோகம்
தேறிவிடுகிறது
மோகம்
மாறிவிடுகிறது 

சுயத்தின் தரம் 
சுடர வருக
சுந்தரம் 

இங்கே 
சேவிக்க வந்தாலும்
சேவையாற்ற வந்தாலும் 

கர்மங்கள் கழிகிறது
தர்மங்கள் பொழிகிறது 

சேறு படிந்த இதயம் 
சுத்தமாகி வீடு
பேறு வருகிறது கடவுளின்
வீட்டிற்கு வருகிறது

உங்களின் 
அநித்ய வீடுகள்‌
மரணத்தின் அடமானத்தில் போகும் 

நீங்கள் கட்டும் மாளிகை
செங்கல்லால் இல்லாமல்
சீட்டால் ஆனது 

கடவுளின் வீடு 
கற்களால் அன்றி 
கருணையால் நிரம்பியது

இதை
கடவுளே விரும்பியது

யுத்தங்களுக்காக சேர்க்கப்படும் 
உங்களின் 
போர்ப் பாசறைக்கு எதிராக

ரத்தங்களுக்காக 
இதயங்கள் சேர்க்கும் 
பவித்ர பாசறை இது 

வியாழன் ஞாயிறு 
மட்டுமா 
நாயகன் நடந்து போகிறான்?

நிமிடங்களை அசைவித்து இங்கே
ஒவ்வொரு
நிமிடங்களும் அசைகிறான் 

மாடியின் தியான அறை
ஆம்
மாடியில் தான் 
தியானம் காத்திருக்கிறது
உங்களின் 
பக்தியே படிக்கட்டுகள்

இங்கே 
ஒவ்வொரு அறையும்
சுவாமி அறை 
ஒவ்வொன்றிலும் 
சுவாமியே ஊடுறுவுகிறார்
சுவாசம் வரை 

இதில் 
பூவாகப் பிறந்திருக்கின்றனர்
ரிஷிகள் !
மண்ணாய்த் தன்
மாதவத்தை இன்னமும்
தொடர்கின்றனர் 
ஞானிகள்

இதில் சேவையாற்றும் 
இதயங்களெல்லாரும்
வெள்ளாடை யோகிகள்

பணிவர் அனைவரும் 
முனிவர் 

பணிவே பகவானை 
பக்கத்தில் அழைத்துவரும்
புத்தகத்திலும்
புத்தகத்திலும்

தலைவன் 
தாலி கட்டிய 
ஸ்கார்ஃப் பே  
சரணாகதிக்கும்
பாதத்திற்கும்
உரிமை கொண்டாடுகிறது 

படமாகியும்
நடமாடியும்
சுவாமியே இங்கே
நித்யமாகிறார்
சாந்நித்யமாகிறார்

கடவுள்
கையில் ஏந்தி இருப்பது
ரோஜா வா?
இல்லை 
ஒவ்வொரு பக்தரின் 
இதயமும் அந்த
ஒற்றை மலரிலே
அடங்கி விடுகிறது

முள்ளோடு தான் 
ஏற்றிருக்கிறார்
என் சுவாமி
தூய கருணை
தொடங்கி விடுகிறது 

அருவமான ஒரு 
பாற்கடல் இங்கே
அமைதியாக 
ஓடிக்கொண்டிருக்கிறது

அமைதியாய் அமர்ந்தால் இது
நம்மேலும் சில 
பால் துளிகளைத் தெறிக்கிறது
அதுவே
பால் வெளிகளைத்
திறக்கிறது 

இமயம் வரை 
செல்ல நினைப்பவர்கள்
இதயம் வரை செல்ல
இங்கே வர வேண்டும்

வைகுண்டமும் 
கைலாயமும் இணைந்த
கைவல்யம் சுந்தரம்

நஞ்சுண்டவனும்
நவநீதம் உண்டவனும்
நெடு நாயகனாய்
நின்றிருக்கும் மனதை
வென்றிருக்கும்
விஸ்வரூபத் திருக்கோலம்

இக்கோலம் விட 
எக்கோலம் 
உயர் கோலம் ?

திருமணக் கோலமும்
துறவுக் கோலமும் 
தெய்வக் கோலத்தோடே
தோய்ந்து போகிறது 

தீவினைகள் 
தீஞ்சொற்கள்
தீக்கர்மங்கள் 
தீக்கிரையாகிறது 

பொருளுக்காக வந்தால்
அருளும் சேர்ந்து வருகிறது
அருளுக்காக வந்தால் 
பொருளும் சேர்ந்து
வருகிறது 

பொருள் என்பது
வாழ்வின் விளக்கம் 
வெறும் பணமென்று நினைப்பவரின் 
மனத்தை இதுவே
பக்குவப்படுத்துகிறது

இலையும் 
இளைப்பாற
இங்கே தான் 
செடியில் வந்து அமர்கிறது 

நிலையும் இங்கே
நிலையாகிறது உயர்
கலையும் இங்கே தான்
பொலிவாகிறது 

ஒன்பது ஜன்னல் கொண்ட
உங்கள் வீடும்
கடவுளின் வீட்டிற்கு வந்து தான் 
கட்டமைக்கப்படுகிறது

செம்மைகள்
செப்பனிடப்படுகிறது

எல்லா 
கோவில் சந்நதியும்
இந்த சந்நதியிலேயே
இனிதாய் சங்கமமாகிறது

கோவிலுக்கான அலைச்சலை
கடவுளின் வீடே 
தணிக்கிறது

காரணமின்றியே
கண்கள் பனிக்கிறது

பிடிக்கிறதோ இல்லையோ
பிறவிகளுக்கு இதுவே
தவத்தைத் திணிக்கிறது 

பூர்வ அவதாரத்திற்கும்
இந்த
அபூர்வ அவதாரத்திற்கும் 
இதுவே 
கலக்க வைத்து 
கட்டியம் கூறுகிறது 

கடவுளின் பாதம் படா 
கால் நிலம் கூட 
இதிலில்லை
கடவுளின் காலாய்
காலின் நிலமாய்
சுற்றும் பூமியை இதே
சுற்ற வைக்கிறது 

பேராசைப் பெருநீரை
போக உடம்பில்
வற்ற வைக்கிறது 

கடவுளின் 
வீட்டிற்கு வராதோர்
கட்டிய வீட்டிற்குள்
வசித்தென்ன பயன்?

பூவே
பட்டாம்பூச்சிகளுக்காக 
தேடி வந்த 
அமுதக் கலசம் சுந்தரம்

இங்கே சுற்றும்
வளிகள்
முணுமுணுப்பதைத் தான்
வாய்கள் 
சப்தமிடுகின்றன
சாய்ராம் சாய்ராம் என...

உலாவும் நிலாவும்
உயரத்தில் நிற்கும்
ராமச் சந்திரனையே கண்டு
பூமியிலும் ஒரு நிலாவா 
இல்லை
பூமியில் வைக்கப்பட்ட
நிலைக் கண்ணாடியா 
என
நின்று வியந்து போகிறது

தேவைக்கு வந்தாலும்
சேவைக்கு வந்தாலும்
வெறுங்கையோடு எவரும்
வீட்டை விட்டு தன்
வீட்டிற்கு நகர்வதில்லை

திரிசங்கு சொர்க்கம் 
தாங்கியது போதுமென 
வெளிக்கு கைவலிக்க
வந்து சேர்ந்ததே
வானகக் கோவில் சுந்தரம் 

சிறு துரும்புமிங்கே 
சொல்லிக் கொண்டிருக்கிறது
இதில்
சுவாமி மந்திரம்

பிரபஞ்சம் 
படைத்தவன் 
வாழ்ந்தது பிரசாந்தியில்...
வீற்றது சுந்தரத்தில்...

பிரசாந்தமே உயிர்களின்
சுந்தரம்

சுந்தரமே
ஜீவன்களின்
பிரசாந்தி நிலையம் 

தன் வீட்டின் முகவரி தொலைத்தவர்கள் 
வீதியில் நடந்தால்
சுந்தரமே அவர்களை
இந்த
சொந்த வீட்டிற்கு அழைத்து வருகிறது

சுவாமி !
சேவைக்கு இங்கேயே
என்னை விட்டு விட்டு
நீ உன்
லோக பரிபாலனத்தை
நடத்தப் போ!!

வேறெங்கும் நீ விட்டெனை
கூட்டிப் போக பின்வந்தால்
அழுது கொண்டிருப்பேன்

சுந்தரத்தில் விட்டு
சுந்தரனே நீ 
அழைத்துப் போக வந்தால் 
ஆன்மாவில் 
ஆழ்ந்து
கொண்டிருப்பேன்

64) உபதேச சாயி உபநிஷத் சாயி:


சுவாமி 
நாலடியார் நீ
நாலாயிரம் திவ்யப் பிரபந்தங்களை
நாவால் உன்னாவெனும்
பூவால் கவிதைப்
பாவால் நீ
பேசும் பொழுது 

பக்தரின் 
மனசாட்சி பேசுவதாக இருக்கிறது 

அவ்வப்போது எங்களின் 
இயலாமைப் பார்த்து 
மனசாட்சியே சிரிக்கிறது 

சலிக்காமல் நீ 
சொல்லிக் கொண்டிருக்கிறாய்

அது வந்து எங்கள்
இதயக் கதவுகளை 
தட்டுகிறது

நீ கைத் தட்டிப் பாடுகிறாய்
எங்களின் 
ஆன்மக் கதவுகள் பலமாய்த் தட்டப்படுகின்றன ...

உன் குரல்
திருக்குறளை விடவும் 
ஆழமாய் இருக்கிறது 

வள்ளுவன் எழுதா 
வல்லமை எல்லாம் 
நீயே 
குரல் விரலால் எழுதுகிறாய்

ஆழ்வார்கள் அறியா 
அனுபூதியும் 
நாயன்மார் உணரா 
முழு முதலும் 
நீயே 
அவர்களின் 
பக்திக் கேள்விகளுக்கு
முக்தி பதில்களை
முன் மொழிகிறாய்

அகந்தைக் காதுகள் 
செவிடாகவே இருக்கிறது
நீ பேசுவதை
அதுக் கேட்பதே இல்லை

மாயை ஒரு குருடு 
நீ 
கை அசைப்பதை
எப்படி அதனால் 
கண்டுணர முடியும்?

சுவாமி உன் 
தியான அதிர்வலைகள் 
எருமைத் தோலும் உணர்கிறது 

மனிதனின் 
சொகுசுத் தோல்களுக்குத் தான் 
தெரிவதில்லை 

உணவு வேட்டையில்
உணர்வு வேட்கை
உந்தப்படுவதில்லை 

மலை முழுங்கிகளுக்கு
மலை சுமந்த உன் 
சுண்டு விரல்
மகத்துவமும் 
மனதைக் குறிவைக்கும்
உன் 
சுட்டு விரல் அதிர்வலையும் 
சுண்டி இழுப்பதில்லை

பூனைப் பள்ளத்திலேயே
யானைகள் விழுகின்றன 
நீயே வலை வீசி மீட்கிறாய் 
வலை தான் 
உன் குரல்வளை 

துவாபர யுகத்து
கீதையை நீ 
கலியுகம் வரை 
சொல்லிக் கொண்டிருக்கிறாய் 

சாதகனுக்கு அவைகள் 
சர்க்கரைப் பொங்கல் 
பக்தனுக்கு அவை 
பஞ்சாமிருதம் 
மனிதனுக்கு அவை 
பழைய சோறுகள்

நீ பேசாததை 
தர்மம் கூட 
இத்தனை அழகிய குரலில் 
தன்னைப் பற்றிப் பேசியதில்லை

நீ பாடாததை 
சங்கீதம் கூட 
இத்தனை காருண்யத்தோடு 
சபை ஏற்றியதில்லை 

நீ உபதேசிக்காததை 
சதுர் வேதங்களும் 
இத்தனை எளிதாக 
இதயத்திற்கு அனுப்பியதில்லை

காதுகள் வாசல் மட்டுமே 
இதயமே வீடு 
வாசற் கதவுகள் திறந்தே இருக்கின்றன 
வீட்டின் கதவுகள் தான் 
பூட்டப்பட்டிருக்கிறது 

சாதுவாக ஏன் சுவாமி 
தட்டிக் கொண்டிருக்கிறாய் 

கதவைப் பெயர்த்து எடு 
அப்போது தான் 
படுக்கை அறையிலிருந்து 
துயில் எழுவார்கள் 

உன் ஒவ்வொரு உரையும் 
அழைப்பு மணி 

அழைக்காதே 
நுழைந்து விடு 
இதயம் உன் வீடு 
இவங்களுக்கு என்ன உரிமை
அதைப் பூட்டி வைக்க ? 

எங்களிடம்
அனுமதி எல்லாம் 
கேட்டுக் கொண்டிருக்காதே

சுவாமி ஆணை இடு !

துரு பிடித்திருக்கிறது
எங்களின் 
புத்தி வாளை 
சாணை இடு ! 

அகந்தை அழுக்குகள் 
அப்படியே அள்ளி எடுத்து
வெள்ளாவியில் 
வேக வை !

அலறுவோம் தான்
அலட்சியமாக இரு !
அப்போதே எங்களின் 
அழுக்குகள் போகும் சுவாமி 

ஏன் இவ்வளவு மிருதுவாக நடத்துகிறாய் 

நீயே இவர்களை
எழுப்ப முதுகைத் தட்டிக் கொண்டிருந்தால்
நீ தாலாட்டுகிறாய் என
நினைக்கிறார்கள் 

முகத்தில்
நிலையாமை வெந்நீர் தெளி !

சுயநலத்தை நீ 
அடிக்கிற அடியில் 
வேற்று கிரகத்திற்கு அது
வீடு பெயரட்டும் !

மனதிடம் 
கருணை காட்டாதே 
கண்டிப்போடிரு சுவாமி! 

உரக்க பேசு !
உத்தரவிடு !

உன் குரலில் 
எங்களைப் பற்றி எரியவிடு !

எத்தனை நாளைக்கு நாங்கள்
இருட்டு புத்திரராய் 
கைகளைத் துளாவி நடப்பது? 

உன் உபதேசமே
நாங்கள் 
வாழ்கின்ற சுபதேசம் !

ஆஞ்சநேயனோ
அணிலோ 
எப்படியாவது உனக்குப் பயன்பட 
எனக்கு பாக்கியம் கொடு !

சுவாமி நீ கடவுள் 
தயவு செய்து
கொஞ்சம் அதை உணர்ந்து கொள் !

நீதான் பேச வேண்டும்
நாங்கள் கேட்க வேண்டும்

நாங்கள் பேசி 
நீ கேட்டுக் கொண்டிருக்காதே !

எங்களைப் பேச விடாதே!
புலம்பித் தள்ளிவிடுவோம் !

நீ பேசு 
நாங்கள் செயலாற்றுகிறோம் !

நாங்கள் பேசி
நீ செயலாற்ற வேண்டியது ஒன்றுமில்லை

சுவாமி உன் 
திருவாய் 
எனக்கான சாசனம் !
வாடியப் பயிருக்கான அது
வள்ளலார் பாசனம் !

சுவாமி நீ பூமிப் பந்தை 
வீசி எறிந்து
எடுத்து வா என்றால்
கவ்வி வருவேன் 

உன் காலடி
நாய் நான் !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக