🌹வேத புருஷரின் கணிப்பு:
பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா தனது பத்ரிநாத் பயணத்திலிருந்து திரும்பிய சில மாதங்களுக்குப் பிறகு, "எனது அவதாரப் பணியின் ஒரு பகுதியாக, பசுவையும் பிராமணரையும் முறையாகப் பராமரிப்பதற்கும், வேதங்களைப் பேணுவதற்கும், அவற்றின் மூலம் வேத தர்மத்தையே புத்துயிர் பெறுவதற்கும் அடித்தளம் இடுகிறேன்" என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, பிரசாந்தி நிலையத்தில் யாகம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். சுவாமியின் அறிவுறுத்தலின் பேரில், வட இந்தியாவிலிருந்தும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோனசீமா பகுதியிலிருந்தும் பல வேத-விற்பன்னர்கள் புட்டபர்த்தியில் கூடினர். மேலும் சுவாமி அந்த யாகத்திற்கு "வேத புருஷ சப்தாஹ ஞான யக்ஞம்" என்று பெயரிட்டார்; தசரா விழாக்களுடன் ஒத்திசைந்து ஏழு நாட்கள் நிகழ்வதாகத் திட்டமிடப் பட்டது.
1962 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு முஹூர்த்தம் என்று சுவாமி நிர்ணயித்தார். அறிஞர்கள் தங்கள் சொந்த கணக்கீடுகளை கிரக நிலைகள் மற்றும் வானியல் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, காலை 7.30 மணி மிகவும் பொருத்தமானது என்று வேறுவிதமாக கணித்துக் கூறினர். பாபாவோ, "காலை 9.30 மணி என்பது மிகவும் மங்களகரமான தருணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்" என்றார். பணி ஒப்படைக்கப்பட்ட அறிஞர்களில் ஸ்ரீ வாரணாசி சுப்ரமணிய சாஸ்திரிகள், ஸ்ரீ செருகுமில்லி காமாவதானி மற்றும் ஸ்ரீ குப்ப பைராகி சாஸ்திரிகள் ஆகியோர் மட்டுமே சத்ய சாயிபாபாவின் மகிமையைப் பற்றி அறிந்தவர்கள். எனவே , 7.30 மணிதான் சரியான நேரம் என்று அங்கு கூடியிருந்த மற்ற வேதநிபுணர்கள் சுவாமிக்கு மீண்டும் தெரிவித்தனர். சுவாமியும் கண்களில் குறும்புடனும் உதடுகளில் புன்னகையுடனும் ஒப்புக்கொண்டார்.
குறிப்பிட்ட நாளில், ரித்விக்குகள் மற்றும் வேதபண்டிதர்கள் சித்ராவதி நதியில் தங்கள் சடங்குகளான சந்தியா வந்தனம் முதலியவற்றை முடித்தனர். பட்டு வஸ்திரங்களை உடுத்தி, புனித நீர் நிரப்பப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களை ஏந்தியபடி, யாகசாலையை காலை 7.30 மணிக்கு அடையும் வகையில், காலை 7 மணிக்கு நடக்கத் தொடங்கினர். திடீரென்று, வானம் திறந்தது. இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. காலை 9 மணி வரை விடிய விடிய மழை பெய்தது. சித்ராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அர்ச்சகர் குழாம் அங்கேயே சிக்கிக் கொண்டது. தாங்கள் அமைத்த முஹூர்த்தம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும், சுவாமியின் ஞானத்தை அங்கீகரிப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். காலை 9 மணிக்கு வானம் தெளிவாகி எல்லாம் இயல்பு நிலைக்கு வந்தது. சுவாமி முதலில் நிர்ணயித்த மங்கள முஹூர்த்தமான காலை 9.30 மணிக்கு, யாகத்தின் நடவடிக்கைகள் தொடங்கின.
🌷இறைவனின் இனிய அழைப்பு:
அந்த நிகழ்வில் பங்கேற்க சுவாமியின் அழைப்பின் பேரில், ஆந்திராவின் கோனசீமா பகுதியில் இருந்து வந்துசேர்ந்த ஸ்ரீ காமாவதானி, அப்போதிலிருந்து தனது இறுதி மூச்சு வரை, தனது வாழ்நாள் முழுவதையும் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் தெய்வீக சந்நிதியிலலேயே மகிழ்வுடன் கழித்தார்.
தோளில் சிவப்பு நிற காஷ்மீரி சால்வை, கைகளில் (சுவாமியால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவருக்கு வழங்கப்பட்ட) தங்கக் கங்கணங்கள், காதணி மற்றும் நெற்றியில் விபூதி ஜொலிக்கும் பிரகாசமான முகத்துடன் ஒரு வேத பண்டிதர் என்று எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும்படி தோற்றமுடையவர் ஸ்ரீ காமாவதானி. பகவான் அவரை ஸ்ரீ சத்யசாயி வேத சாஸ்த்ர பாடசாலையின் முதல்வராக நியமித்தார். தினமும் அதிகாலையில் சுவாமியின் தனிப்பட்ட தரிசனம் பெரும் அதிர்ஷ்டசாலி பக்தர்களில் ஸ்ரீகாமவதனியும் ஒருவர். பிரசாந்தி நிலையத்தில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஸ்ரீ காமவதனியின் வேத பாராயணத்துடன் துவங்கும். ஆகையினால் அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் அவர் மேடையில் தோன்றுவது வழக்கம். அது மட்டும் அல்ல; பிரசாந்தி நிலையத்திற்கு வெளியே நடத்தப்படும் வித்வான் மகா சபைகளுக்கும் பகவான் அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்.
🌷சுவாமியின் வார்த்தைகளே வேதம்:
‘வேதங்களில் உள்ள பல்வேறு விஷயங்களை சுவாமி உபதேசிக்கிறார். அந்த விஷயங்கள் உண்மையில் வேத நூல்களில் உள்ளதா?’ என்று ஒருமுறை ஸ்ரீ காமாவதானியிடம் ஒருவர் கேட்க, அதற்கு அவர், ‘சுவாமியின் வார்த்தைகளே வேதம்!" என்று தீர்மானமாக பதிலளித்தார். அவரைப் பொறுத்தவரை, ஸ்வாமியின் வார்த்தைகளே வேதங்களை வரையறுக்கிறது! சுவாமி சத்தியத்தை சொல்கிறார் என்று குறிப்பதை விட சுவாமி சொல்வதே சத்தியம் என்று விளங்கிக் கொள்ளவேண்டும். அவரது பெயரே சத்தியம்! பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் ஒவ்வொரு சொல்லையும் பின்பற்றி பிரபஞ்சம் தன்னை மறுசீரமைப்பு செய்திகொள்கிறது!
🌷வேத சாஸ்த்ர பரிஷத்:
போதிய அறிவு இல்லாததால் வேதங்களின் உண்மையான சாரத்தையும், முக்கியத்துவத்தையும் தற்கால இந்தியர்களால் உணர முடியவில்லை. உண்மையில், மனிதனின் சாராம்சம் மொத்தமும் வேதங்களில் அடங்கியுள்ளது. வேதம் கற்க முன்வருபவர்கள் ஓரளவேனும் ஊக்குவிக்கப்பட வேண்டும். அத்தகையோருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பெயரில் ‘ஸ்ரீ செருக்குமில்லி காமாவதானி வேத சாஸ்த்ர பரிஷத் டிரஸ்ட்' என்ற நிறுவனம் அவரது பெயரில் அன்னாரது சீடர்கள், பந்துமித்திரர்களால் நிறுவப்பட்டது.
🌷கிழக்கு கோதாவரி மாவட்ட சுற்றுப்பயணம்:
ஒரு சமயம் சுவாமி ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றார். அப்போது அவர் ஸ்ரீ காமாவதானியைத் தம்முடன் அழைத்துச் சென்றார். சுவாமி செல்லுமிடங்களில் முடிந்தவரை காரை நிறுத்தி தரிசனம் தந்து, சில நிமிடங்கள் அவர்களுடன் அன்பு ததும்பப் பேசுவார். பல்வேறு இடங்களில்... கிராமமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு, சுவாமி தங்குவதற்கு ஏற்பாடும் செய்வர். புனிதமான முறையில் சுவாமியுடன் நேரம் செலவழிக்கும் எண்ணத்துடன் கூடிய அவர்களின் வேண்டுகோளுக்கு சுவாமியும் இணங்குவார்.
அப்போதைய ஆந்திர அரசின் சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீ ருத்ரராஜு ராமலிங்க ராஜு, பகவான் பாபாவை அவரது சொந்த கிராமமான சக்கினெட்டிபள்ளி-க்கு அழைத்திருந்தார். அங்கு புதிதாய்க் கட்டப்பட்டிருந்த கீதா மந்திரைத் திறந்து வைக்கும்படி சுவாமியை வேண்டினார். சுவாமியும் அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இருப்பினும், ஒரு சில பக்தர்கள் மற்றும் சேவாதளர்களுடன் எளிமையான முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்படி சுவாமி கட்டளையிட்டிருந்தார்.
🌷சுவாமியே பிரதானம்:
அன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, பகவான் சக்கினெட்டிபள்ளி-யை நோக்கிப் புறப்பட்டார். சுவாமியின் குழுவில் இருந்த ஸ்ரீ காமவதனியின் சொந்த கிராமமான 'கதலி' சக்கினெட்டிபள்ளி செல்லும் வழியில்தான் அமைந்துள்ளது. அவர்கள் கதலி கிராமத்தை அடைந்ததும்... காரை நிறுத்தச் சொல்லி, சுவாமி காமவதனியிடம், "உங்கள் கிராமத்தை அடைந்துவிட்டோம், உங்கள் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுங்கள். அதன்பின், இந்த இடத்திற்கு வந்து எங்களுக்காக காத்திருங்கள். சக்கினெடிபள்ளி-யிலிருந்து திரும்பி, நாம் அனைவரும் ராஜமுந்திரி செல்வோம்" என்றார். மேலும் சில பக்தர்களையும் ஒரு காரையும் அவருக்கென விட்டுச் சென்றார்.
ஸ்ரீ காமாவதானி அவருடைய கிராமத்திற்குச் செல்வதில் எந்த அக்கறையும் காண்பிக்கவில்லை. மாறாக அந்தக் காரிலேயே அமர்ந்து சுவாமியைக் குறித்தான தியானத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் காரில் அமர்ந்திருந்த இவரை உள்ளூர்வாசி ஒரூவர் அடையாளம் கண்டுகொண்டு ஊருக்குள் சென்று தகவல் சொன்னார். ஊரெங்கும் பரவிய விஷயம் காமாவதானியின் உறவினர்களையும் சென்றடைந்தது. சில பெரியவர்களுடன் சேர்ந்து வந்து அவரின் உறவினர்கள், காமாவதானியை ஊருக்குள் பிரவேசம் செய்யுமாறு வேண்டினர். அனால் காமாவதானியோ தன்னுடைய இடத்திலிருந்து நகரவே இல்லை.
🌷பந்தங்களற்ற துறவு நிலை:
இதனிடையே தனது நிகழ்ச்சியை முடித்துவைத்து சுவாமியும் சக்கினெடிபள்ளி-யிலிருந்து திரும்ப வந்து விட்டார். அந்தக் கூட்டத்தினருக்கு தரிசனமளித்த பகவான் அங்கு நடப்பது குறித்து விசாரித்தார். கூட்டத்தில் இருந்த காமாவதானியின் மகனைக் கூப்பிட்டு "உனது தந்தையாரை நீ உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வில்லையா?" என்றார். அதற்க்கு அவரோ, 'சுவாமி நாங்கள் அழைக்கின்றோம் ஆனால் அவர்தான் எங்களுடன் முகம் கொடுத்தான் பேசாமறுக்கிறார்!' என்றார். "ஓ அப்படியா? நீங்கள் வருந்தாதீர்கள்! முன்னே சென்று நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள்... நான் அழைத்து வருகிறேன்" என்றார் சுவாமி.
சுவாமி காமாவதானியிடம் நெருங்கி, "நீ ஏன் உன் வீட்டிற்கு செல்ல மறுக்கிறாய்?" என்று வினவினார். அதற்கு ஸ்ரீ காமாவதானியோ, ‘சுவாமி, நான் எல்லா உறவுகளையும் துறந்து... நீங்களே ஒரே உறவென்று உங்களையே தஞ்சமடைந்து 10 வருடங்களுக்கும் மேலாகிறது! பிரஷாந்தி நிலையம் தான் எனது வீடு!’ என்று உறுதியுடன் பதிலளித்தார். கருணை விரிந்த சுவாமியே,"அப்படியானால் சரி, வா எனது வீட்டிற்குப் போகலாம்! உணவருந்திவிட்டுத் திரும்பலாம்!" என்று காமவதினியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார் சுவாமி.
அதற்கு சற்று நேரத்திற்கு முன்பு... ஒரு மந்திரியின் வீட்டில் சொற்ப 30 நிமிடங்களை செலவழித்த சுவாமி, கதலி கிராமத்தில் வெகுநேரம் தங்கினார். திறந்த வெராந்தாவில் அமர்ந்து, காமாவதானியின் குடும்ப உறவுகள் மற்றும் கிராமத்தினருடன் மகிழ்வுடன் பேசி ஆசியளித்தார். மேலும் அவர்களுடன் இரவு உணவையும் உண்டு மகிழ்வித்தார்.
🌷அமைதியான இறுதிப் பயணம்:
தனது வாழ்நாள் முழுவதையும் வேதபாராயணம் மற்றும் பிரச்சாரத்தில் செலவழித்த அவருக்கு, அவரது மரணம் பகவான் பாபாவின் தெய்வீக சந்நிதியில், பொருத்தமான அமைதியான முறையில் நேர்ந்தது. அந்த இறுதித் தருணங்களைப் பற்றி பகவானே தனது சொற்பொழிவு ஒன்றில் இவ்வாறு கூறினார்:
"ஒருவர் தெய்வீகக் கட்டளைகிணங்க நடந்து கொண்டால் எல்லாமும் நல்லபடியாகவே நடக்கும். முற்காலத்தில் பக்தர்கள் அவ்வாறே நடந்து கொண்டார்கள். அதனால்தான் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். ஒரு நாள் காலை தனது வழக்கமான வேத பாராயணங்கள் முடிந்து காமாவதானி என்னை தரிசனம் செய்ய வந்தார். தனது நமஸ்காரங்களைக் கூறி, "சுவாமி! நான் வீட்டுக்குப் போய், சாப்பிட்டுவிட்டு வருகிறேன்!" என்றார். நான் அவரிடம், 'தேவையில்லை; நீங்கள் ஓய்வெடுங்கள்' என்றேன் . அதன்படி தூக்கத்திலேயே நிம்மதியாக உயிர் பிரிந்தார். அவருக்கு எந்த வித வலியும் இல்லை. அவர் ஒரு சிறந்த பக்தர்!"
🌷பூரணாவதாரத்தின் புகழாரம்:
மேலும் பகவான் பாபா, 1991ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பூர்ணச்சந்திரா மண்டபத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில், வேதங்கள் மற்றும் வேத தர்மத்தைப் பரப்புவதற்காக ஸ்ரீ காமவதனி ஆற்றிய சேவைகளைப் புகழ்ந்து பேசினார். "செருக்குமில்லி காமவதானி ஒரு சிறந்த பக்தர்; வேதங்களின் திருவுருவம். முதல் வேத புருஷ சப்தாஹ ஞான யாகம் நடந்தபோது அவர் பிரசாந்தி நிலையத்திற்கு வந்து குடியேறினார். அன்றிலிருந்து, அவர் ஸ்வாமியுடனேயே தங்கி தொடர்ந்து தெய்வீக நாமத்தை தியானிப்பதிலேயே தனது வாழ்வைக் கழித்தார் . முப்பது ஆண்டுகளில் ஒருபோதும் அவர் தனது சொந்த ஊருக்குச் செல்லவில்லை!
பிடித்த பிடியென்னவோ பிடிக்கவே செய்துவிட்டாய்…
முடிவுதெரியும் வரை அப்படியே இரு!
விரும்பிய தென்னவோ விரும்பவே விரும்பிவிட்டாய்…
விரும்பியது நிறைவேறும் வரை வேண்டியபடியிரு!
கேட்பது என்னவோ கேட்கவே கேட்டுவிட்டாய்…
கேட்டது கிட்டும்வரை விட்டுவிடாதே!
நினைத்தது என்னவோ நினைக்கவே நினைத்துவிட்டாய்…
நினைத்தது நடக்கும்வரை தளராதிரு!
தொந்தரவு தாங்காமல் கடவுளாவது தர வேண்டும்…
உடலுணர்வு போகும்வரை நீயாவது கேட்க வேண்டும்!
அதைவிடுத்து,பாதியிலே நிறுத்திவிட்டு திரும்பிப் போவது…
பக்தரின் லக்ஷணம் அல்ல !
~ ஸ்ரீ காமாவதானி தனது முழு நேரத்தையும் அத்தகைய உறுதியுடன் சுவாமியின் சேவையில் கழித்தார். இன்று அவர் நூறு ஆண்டுகளை நிறைவு செய்கிறார். ஸ்ரீ செருக்குமில்லி காமாவதானி ஒரு பழுத்த பழம், நூறுவயதை ஏற்றியவர். அவரது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் வேதங்களைப் படிப்பதும் பரப்புவதுமே ஆகும். இப்போதும் வேதம் ஓதுகிறார். வேதம் கற்க முன்வருபவர்கள் ஓரளவேனும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பெயரில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு அவரது சொந்த கிராமத்திற்கு அருகில் 'வேத சாஸ்த்ர பரிஷத்' என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. அவர் நூறு வயது எட்டியதை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளை சார்பில் இன்று அவரது பெயரில் நிறுவப்பட்ட வேத சாஸ்த்ர பரிஷத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறோம்!”
மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்
✍🏻 கவிஞர்.சாய்புஷ்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக