தலைப்பு

வியாழன், 2 பிப்ரவரி, 2023

24 ரூபாய் தேவைப்படும் தையல்காரரனின் பயணச் செலவுக்கு 14 ரூபாய் மட்டுமே கொடுத்தார் பாபா! ஏன்?

பிரபலம் முதல் பராரி வரை முராரி பாபா அனைவரையும் சமமாக அரவணைப்பவர்... இதை உணர்த்தும் உன்னத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...

ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த பிரபல திரைக்கதை ஆசிரியர் அர்னால்ட் ஷுல்மன் பாபாவை வொயிட் ஃபீல்டில் தரிசிக்கிறார்... பிறகு அமெரிக்கா திரும்பிய அவருக்கு பாபாவை பற்றிய ஒரு புத்தகம் எழுத வேண்டும் என உந்துதல் உணர்வு ஏற்படுகிறது... அதையே சதா நினைத்துக் கொண்டிருக்கிறார்... காலம் செல்ல... ஒருநாள் பாபா அவரை அழைப்பதில் புட்டபர்த்தி வரும் அவரிடம் பாபா ஒன்றைச் சொல்கிறார்... அவை அனைவர் இதயத்திலும் பதியப்பட வேண்டிய கல்வெட்டு வாசகம்...!


"உரிய காலம் வரும்போது தேவைப்படுபவர்களை சுவாமியே அழைக்கிறேன்! ஆக சுவாமி தான் உங்களைப் புத்தகம் எழுதத் தூண்டினேன்!...ஏனெனில் நீங்கள் என்னிடம் வரவேண்டும் என்று சுவாமி சங்கல்பித்தேன்! புரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் தான் எனக்கு வேண்டும்! புத்தகம் அல்ல...!" என்கிறார்... அது தான் இறைவன் பாபா... அதனால் தான் பாபா இறைவன்... யாரை எப்போது எப்படி இழுத்து தனது சேவையை தர வேண்டும் என நாம் அல்ல பாபாவே சங்கல்பிக்கிறார்...அவர் சங்கல்பப்படியே அனைத்தும் நிகழ்கின்றன...!


ஷுல்மன் எனும் ஒரு வெளிநாட்டு பக்தர் 

புட்டபர்த்தியில் தங்கி இருந்த போது ஒரு செய்தியை கேள்விப்படுகிறார்...அது சற்று விசித்திரமான செய்தி...! ஒரு தையல்காரருக்கு பாபா அவரது பயணச்செலவை தாமே ஏற்பதாக கூறியிருக்கும் செய்தி அது! "ஓ ஆச்சர்யமாக இருக்கிறதே!" என்றவாறு அந்த தையல்காரரை அழைத்து "அப்படி பாபா நீங்கள் ஊர் செல்வதற்கு பணம் கொடுத்தால் எவ்வளவு கொடுத்தார் என எனக்கு கடிதம் எழுதுங்கள்... இதோ கடிதச் செலவுக்கு பத்து ரூபாய்"! எனத் தருகிறார்... நாட்கள் கடக்க... திடீரென அந்தத் தையல்காரர் ஷுல்மனை தரிசன முடிவில் பார்த்ததும் ஓடி வருகிறார்... "என்னாச்சு பாபா கொடுத்தாரா?" எனக் கேட்கிறார்!

"ஆம் கொடுத்தார்!" என்கிறார்... "என்ன கொடுத்தாரா?" எனப் பரவசம் அடைகிறார்... "எவ்வளவு கொடுத்தார்?" என ஆர்வ மிகுதியில் கேட்கிறார்... "14 ரூபாய்!" என்கிறார் தையல்காரர்! "உங்கள் பயணச் செலவுக்கு எவ்வளவு தேவைப்படும்?" என மேலும் ஆர்வ மிகுதியில் கேட்கிறார் ஷுல்மன்...

"24 ரூபாய் தேவைப்படுகிறது!" என்கிறார் தையல் பக்தர்... "பிறகு ஏன் பாபா வெறும் 14 ரூபாய் கொடுத்திருக்கிறார்? புரியவில்லையே?" என்கிறார்...

அதற்கு தையல்கார பக்தர் அளித்த பதில் எந்த அளவுக்கு அவர் பாபாவை உணர்ந்திருக்கிறார் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட முடிகிறது !


"14 ரூபாய் கொடுத்தார் சுவாமி... அது தான் நீங்கள் எனக்கு ஏற்கனவே கடிதம் அனுப்ப 10 ரூபாய் கொடுத்திருக்கிறீர்களே? ஞாபகம் இருக்கிறதா? மொத்தம் சேர்ந்து 24 ரூபாய் சரியாகத் தானே இருக்கிறது... சுவாமிக்கு நீங்கள் எனக்கு பணம் கொடுத்தது தெரியாதா? அதை நான் கடிதம் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்தாமல் நேரில் சென்று தான் தெரிவிப்பேன் என சுவாமிக்கு முன்கூட்டியே தெரியும் அல்லவா... எல்லாமே தெரிந்து எல்லாவற்றையும் நடத்துவதால் தானே அவர் சுவாமி... ஆக மிகச் சரியாகத்தான் சுவாமி 14 ரூபாய் கொடுத்திருக்கிறார்!" என்று சொன்னதும் ஷுல்மனுக்கு புல்லரிக்கிறது... தையல்காரரின் கைகளைப் பிடித்து கண்கலங்கிய படி "பாபா உண்மையில் கடவுள் தான்!" என பரவசப்படுகிறார்!


இதனைத் தொடர்ந்து ஷுல்மன் ஒருமுறை பாபாவிடம் "நீங்கள் யார்? உங்கள் உண்மைத்தன்மை யாது?" எனக் கேட்கிறார்! அதற்கு பாபா அளித்த பதில் கோடிச் செம்பொன் பெறும் பொக்கிஷ வாசகம்...

"மீன் வானத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?" என்பதே அது! 

எப்படி தண்ணீரில் இருக்கிற மீன் ஆகாயத்தை உணர முடியாதோ அதைப் போல் மாயையில் மூழ்கி கற்பனையை எல்லாம் நிஜம் என நம்பிக் கொண்டிருக்கும் மனம் பாபாவை உணர்வதற்கு வாய்ப்பே இல்லை...!

பாபா சொன்ன அந்த வாசகத்தில் கூடுதலாக ஒன்றைச் சேர்க்க வேண்டும் "சுவாமி... மீன் மட்டும் அல்ல விண்மீனால் கூட வானத்தை புரிந்து கொள்ள முடியாது என்பது போல் இந்திராதி தேவர்களால் கூட சுவாமி உங்களைப் புரிந்து கொள்ள முடியாது!" என்பதாகவே பகிர்ந்து பாபாவின் கழலடியில் கலந்து நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது!


(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா / பக்கம் : 197 / ஆசிரியர் : க.நாகராஜன்) 


ஒருவரை தன் பக்தராக எப்போது மாற்ற வேண்டும்? என்பதும்...தன் சேவாதளராக எப்போது ஏற்ற வேண்டும்? என்பதும்.. யாராருக்கு எதை? எப்போது? எப்படி? தர வேண்டும் என பாபாவுக்கே நன்கு தெரியும்... பிறகு வாழ்வில் ஏக்கப்படவும்... கவலைப்படவும் என்ன இருக்கிறது? எல்லாவற்றையுமே ஒரு காரணத்தோடு பாபா இயக்குகிறார்! இந்த பரம சத்தியத்தை ஒருவர் ஏற்று உணர்ந்துவிட்டாலே  நிம்மதியும், நிறைவும் , அமைதியும் இதயத்தில் மிக ஆழமாய் ஏற்பட்டுவிடுகிறது! பிறகு ஆன்ம சாதனை மேலும் ஆழம் போவதற்கான அக வாசலை இன்னமும் அகலமாக திறந்துவிடுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக