தலைப்பு

திங்கள், 27 பிப்ரவரி, 2023

பாபாவின் முடி நிஜமா? என சோதிக்க சென்றவர் அடியும் நிஜமே என சரண் அடைகிறார்!

எவ்வாறு ஒரு நாத்திகவாதியை ஆன்மீகவாதியாக இறைவன் பாபா உருமாற்றி இமயமலை அழைத்துச் செல்கிறார் எனும் பரவச சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


அவர் பெயர் கோபால கிருஷ்ணன்! சிறு வயதில் தந்தையை இழக்கிறார்!  தந்தை எனும் ஊன்றுகோல் தவற.. உறவுகள் உதற.. ஒற்றைக் காலில் நின்று முன்னேற வேண்டிய தனிமைச்சூழல்! துன்பம் மேல் துன்பம்... என்பதால் அவரை நாத்திகம் வரவேற்றது.. கம்யூனிசக் கொள்கை காபி கொடுத்தது!


முதன்முதலில் இறைவன் பாபாவின் புகைப்படத்தை அவர் தனது நண்பர் பாஸ்கர் ராவ் விசாகப்பட்டின இல்லத்தில் பார்க்கிறார்! அது பார்வை தான் தரிசனம் இல்லை! உடனே பாபாவை கபட சாமியார் என்றும் , போலியான முடி வைத்திருப்பவர் என்றும் கிண்டல் அடிக்கிறார்! 

பிறகு அதே ராவ் வீட்டில் அகண்ட தீப சாயி வழிபாடு! இரண்டாவது முறை செல்கிறார்... லேசான ஒரு அபிப்ராய மாற்றம்! சிறிதான பாபா பற்றி அவரே அறியாமல் ஆழ்மனதில் ஓர் விதை ஊன்றல் நிகழ்கிறது! 


10 ஆம் வகுப்பு படிக்கிற சமயத்தில் பல தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்... பசிக்கிறவர்களுக்கு உணவளித்து நிம்மதி அடைகிறார்! பட்டப்படிப்பு முடிகிறது.. தொழில் தொடங்குகிறார் அது நஷ்டத்தில் மூழ்குகிறது! 

வேறு சில தொழில் முயற்சி மேற்கொள்கிற சமயத்தில் நண்பர் சீனிவாசனின் ஊரான கடப்பாவிற்கு வருகிறார்.. அங்கே பேருந்துநிலையத்தில் புட்டபர்த்தி எனும் பெயர் வாசிக்கிறார்... எவ்வளவு மணி நேரம் ஆகும்? என விசாரிக்க.. 6 மணிநேரம் எனும் பதில் வர... பாபாவை பார்க்க கிளம்புகிறார்... அதுவும் பார்வையிட தான்.. தரிசிக்க இல்லை! உடல் வேறு உபாதை.. வேண்டாம் என நண்பர் தடுத்தும்... "பாபா உண்மையில் கடவுள் தானா?" என சோதிக்கவே செல்கிறேன் என்று வேடிக்கையாக பேசுகிறார்!


பேருந்து புகைவிட்டு கிளம்புகிறது... ஆயினும் அவரது உடல் உபாதை அவரை விட்டு கிளம்பவில்லை.. 

"1 மணிநேரத்தில் பேருந்து மருந்துக் கடையில் தானாக  நிற்கிறது... அங்கே இருந்து ஒரு பையன் பேருந்தை நோக்கி வந்து "உங்களுக்கு ஏதேனும் மருந்து வேண்டுமா?" எனக் கேட்கிறான்... திக் என்று இருந்தும் கூட அப்போதும் பாபாவின் மேல் அவருக்கு நம்பிக்கை வரவில்லை! அது ஓர் அற்புதம் என்று அப்போது அவர் உணரவே இல்லை! 

மதியம் 2 மணிக்கு புட்டபர்த்தி அடைகிறார்! முதல் அமர்வு தரிசனத்தில் பாபா அவரைப் பார்த்து புன்னகைக்கிறார்! 

அடுத்த நாள் தரிசனத்தில் அவரது தலை மீது கைவைக்கிறார்!

படிப்படியாக அவருக்குள் அவரே அறியா வண்ணம் அகமாற்றம் நிகழ்கிறது! 

அந்த அடுத்த நாள் மாலை தரிசனத்தில் "நீ விசாகப்பட்டினத்தில் இருந்து வந்திருக்கிறாயா?" என பாபா கேட்கிறார்! அப்போதும் அவருக்கு பாபாவின் மீது முழு நம்பிக்கை வரவில்லை! 


அடுத்த நாள் காலை 65 வயதான ஒரு பெண்மணி பாபாவுக்கு கடிதம் எழுத... கோரிக்கைகளை பக்தர்கள் இப்படி பாபாவிடம் எழுதி தருவார்கள் என அறிந்து கொண்டு... பொருளாதார சிக்கலில் இருந்த அவர் விற்க முடியாமல் இருந்த தனது இரண்டு கார்களை குறித்து எழுதி.. பாபா என்ன தான் செய்கிறார் பார்க்கலாம் என்ற ரீதியில் கடிதம் தயார் செய்ய‌...தரிசனத்தில் பாபாவிடம் நீட்டுகிறார்.. பாபா வாங்கிக் கொள்கிறார்! 

பிறகு விசாகப்பட்டினத்தில் தனது வளர்ப்புத் தாய்க்கு தொலைபேசி செய்கையில்... ஒரு டாக்டர் அன்றே இரண்டு கார்களையும் வாங்கிக் கொள்வதற்கு முன்பணம் கொடுத்திருக்கிறார் எனும் செய்தி அறிந்து அவர் அதிர்ந்து போகிறார்!


மெல்ல மெல்ல சந்தேக மேகம் விலக.. பக்தி சூரியன் ஒளிர ஆரம்பிக்கிறான்! அடுத்த நாள் காலை தரிசனம்...சிருஷ்டி விபூதி அளித்து அவர் வாயில் போடுகிறார் பாபா... அன்று மதியம் 2.30 க்கே ஊருக்கு திரும்ப பேருந்தில் புக் செய்திருந்தும்...மாலை வரை பேருந்து வராமல் இருக்குமா பார்ப்போம்‌.. அப்படி நடந்தால் இன்னொரு முறை சாயி தரிசனமும் பெறலாம் என நினைத்து.. மதியம் பேருந்து நிலையம் செல்லாமல் தவிர்க்கிறார்...

மாலை தரிசனம் முடித்து செல்கிற போது மதியம் 2.30 க்கு வரவேண்டிய பேருந்து அன்று மாலை 5.30 க்கு தாமதமாகவே வருகிறது! 

இந்த லீலா சம்பவத்திலிருந்து மிகப்பெரிய அகமாற்றம்... ஆன்மீகம் ஆரம்பிக்கிறது... பாபா இறைவனே எனும் சத்தியத்தை உணர்கிறார்!

விசாகப்பட்டினத்தில் சமிதி எங்கே என தேடுகிறார்... அங்கே செல்கிறார்... பாபா புகைப்படத்தை வீட்டில் வைக்கிறார்... பெரிய அதிசய செயலாக அனைவருக்கும் தோன்றுகிறது...

இறைவனையே நம்பாதவர் இறைவன் பாபாவே எனும் சத்திய வழியில் நடக்க ஆரம்பிக்கிறார்!


அடுத்த முறை புட்டபர்த்தி விஜயத்தில் பாபா ஒரு சிருஷ்டி ஆப்பிளை தந்து அப்போதே உண்ணச் செய்கிறார்! ஆப்பிள் இறங்கியது போல் அவருக்கு ஆன்மீக உணர்வும் அடி ஆழத்தில் இறங்குகிறது!

பாபாவை சரண் அடைந்த நாள் முதல் கனவில் தோன்றுகிறார் பாபா! பல அன்மீக விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்...இப்படி 25 நாட்கள் தொடர் கனவு... பிறகு இடைவெளி விட்டு கனவில் ஞான போதனை தருகிறார் பாபா... பிறகு கனவு நின்றுவிடுகிறது! 

இறைவன் பாபா அவரிடம் கனவில் இறுதியாக சொன்ன தெய்வீக செய்தி

"இந்த ஜென்மம் நீ எடுத்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது! உன் ஆன்மீக சாதனையை தொடர்ந்து செய்து வா! நான் உன் அருகிலிருந்து வழிகாட்டுகிறேன்!" என்பதே!


பிறகு அவருக்கு யோக மார்க்க குருவை பாபா அறிமுகப்படுத்த... அவரின் ஆன்மீக உள்பயணமும் வெளி பயணமும் விரிவடைகிறது... மகாவதார் பாபாஜியின் யோக மார்க்கத்தின் ஒரு குருவான யோகி ராமையா அவரது யோக குரு.. இமயம் நோக்கி அவரது ஆன்மீகப் பயணம் வளர்ந்து.. பல இமய யோகிகளை தரிசித்து ஆசி பெறும் பேறு இறைவன் பாபாவால் மட்டுமே நிகழ்ந்தது என்று வெளிப்படையாக அவர் மொழிகிறார்! 


சுவாமி ஓம்குரு ஜி 

கோபால கிருஷ்ணனாகிய அவர் யோகி கோபால கிருஷ்ணாஜி ஆகிறார்! ஓம்குரு என்று தனது அடியவர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்!


(ஆதாரம் : இமாலய ரகசியங்கள் | பக்கம் : 43 - 47 | ஆசிரியர் : கோகுல சந்தான கிருஷ்ணன்) 


ரோகியை தியாகி ஆக்குவதும்... போகியை யோகியாக்குவதும்... மனித வாழ்வில் நிகழும் அனைத்து சம்பவங்களின் இயக்கமும் இறைவன் பாபாவின் கரங்களிலேயே கட்டுப்பட்டுக் கிடக்கிறது... மனித மனம் அடங்கி நாம் ஆன்மாவே என்று உணர ஆரம்பிக்கையில் இந்த சத்தியம் நெற்றிப் பொட்டில் சுடரேற்றியபடி ஜொலிக்கிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக