ஒரு பக்தரின் கனவில் அடிக்கடி தோன்றி... ஒருமுறை ஏன்? தான் அவருக்கு சாயி கனவுகளை வழங்குகிறேன் என்பதன் காரணத்தை விளக்குகிறார் இறைவன் பாபா... அந்த சுவாரஸ்ய அனுபவம் இதோ...
அது 1981 ஆம் ஆண்டு! இறைவன் பாபா ஹரிஹரகிருஷ்ணன் அவர்களின் கனவில் வருகிறார்! வந்து ஒரு கேள்வி கேட்கிறார்!
"நான் ஏன் உன் கனவில் வருகிறேன் என்று உனக்கு தெரியுமா? அதற்கான காரணங்களை நீ எனக்கு சொல்!" என்கிறார்!
அப்படி பாபா கேட்பது அவருக்கு ஏற்பட்ட முதல் கனவல்ல... பல ஆச்சர்ய கனவுகள் அவருக்கு நேர்ந்திருக்கின்றன... கனவுக்குள் கனவு நேர்ந்திருக்கிறது!
எது கனவு? எது நினைவு? என உணர முடியா வண்ணம் பக்தர் ஹரி (ஹரிஹரகிருஷ்ணன்) பல சந்தர்ப்பங்களில் திகைப்பின் விளிம்பில் நின்று கண்ணீரை குதிக்க வைத்திருக்கிறார்!
"அது சரி.. ஆனால் முக்கியமான காரணம் என்ன?"
வெளி நாட்டில் இருந்தும் மது அருந்துவதில்லை..அதனால் இருக்கலாம் என ஹரி தெரிவிக்க... இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார் பாபா!
தினமும் ராமநாமம் ஜபிப்பதால் என ஹரி தனது பதிலை நீட்டுகிறார் ஆனாலும் பாபாவோ அதை விட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது என பீடிகை மேல் பீடிகை போடுகிறார்!
உடனே வா என கனவிலேயே பக்தர் ஹரியை அழைத்துப் போகிறார்! கனவுக்குள் ஏற்படுகிற கனவு அது... அது செங்கோட்டை ஹரியின் வீடு! பாபா தியானத்தில் அமர்ந்திருக்கிறார்.. ஹரி நின்று கொண்டிருக்கிறார்... எழுந்து உள்ளே நடக்கிறார் பாபா.. அமைதியாக இருக்கும்படி செய்கை காட்டுகிறார் ஹரியை... உள்ளே ஹரியின் தந்தையோ தீவிர பிரார்த்தனையில் இருக்கிறார்! பாபா பூஜையறையின் உள்ளே நுழைகிறார்... நுழைந்து படைக்கப்பட்ட பிரசாத வடையை பிட்டு உண்கிறார்..பாபாவை கண்டவுடன் ஹரியின் தந்தை எழுந்து விடுகிறார்.. எழுந்தபடி "சாயிராம் சாயிராம்" என்று கூறி பாதநமஸ்காரம் எடுத்துக் கொள்கிறார்! அப்போது பாபா ஒன்றை சொல்கிறார்.. அதுவே ஹரிக்கான பதிலும்... நமக்கான பரவசமும்...
ஹரியின் தந்தையை நோக்கி பாபா "உன் முன்னோர்கள் உன் மேல் மிகுந்த ஆனந்தம் கொண்டுள்ளனர்... அவர்கள் அனைவரும் என்னுடன் உள்ளனர்! அவர்கள் எல்லோரும் கடவுள் வந்து தங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்... அவர்கள் தலைமுறை தலைமுறையாக செய்த பிரார்த்தனைக்காகவே நான் இங்கே வந்துள்ளேன்!" என்கிறார்... "இப்போது உனக்கு புரிந்திருக்கும் நான் ஏன் உன் கனவில் வருகிறேன் என்று!" என இறைவன் பாபா ஹரியை பார்த்து பேசியதும்... பக்தர் ஹரியால் என்ன செய்திருக்க முடியும் ஆனந்தமாய் கண்ணீர் சிந்துவதைத் தவிர...!?
(ஆதாரம் : சாயியுடன் ஒரு பயணம் | பக்கம் : 36,37 | ஆசிரியர் : எஸ்.ஆர் ஹரிஹர கிருஷ்ணன்)
பக்தர் ஹரிக்கு ஏற்பட்ட சாயி கனவுகள் எல்லாம் அசாத்தியமான கனவுகள்! மெய்சிலிர்க்கும் கனவுப் பொழுதுகள்! இறைவன் பாபாவால் எதுவும் சாத்தியமே என உணர்த்தப்படுகிற உன்னத நிகழ்வுகள்! நமது இந்த மனித வாழ்க்கையே நமக்கு பாபா தந்திருக்கிற மிகப் பெரிய கனவு தானே!
மகாராஜா ஜனகர் : முனிபுங்கவா! பதில் சொல்லுங்கள்! நான் நேற்று கண்ட கனவு நிஜமா ? இல்லை! உங்களோடு இப்போது பேசுகிறேனே அது நிஜமா?
ஸ்ரீ அஷ்டவக்கிர மகாமுனிவர் : மாமன்னரே! தாங்கள் இப்போது கூறுகிற இரண்டுமே கனவுகள் தான்! ஆக...இரண்டும் நிஜமில்லை!
"ஆன்ம விழிப்பு அடையாத வரை மனிதனுக்கு நிகழ்வதெல்லாம் வெறும் கனவுகள் மட்டும் தான்!"
--- ஸ்ரீ அஷ்டவக்ர கீதை!
பக்தியுடன்
வைரபாரதி
சில உண்மைகளும் கூட.. கனவில் வந்ததுபோலாகிறது!
பதிலளிநீக்கு