அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதிசங்கரர் இளம் வயதிலேயே உடலை துறந்தவர் என்பது உண்மையே!
பிரஸ்தானத்ரயத்திற்கு பாஷ்யம் (விரிவுரை) எழுதி... ஞான மார்க்கத்தை போதித்து... பக்தி மார்க்கத்தை நிலை நாட்டி... அநேக இறை துதிகளை உலகிற்கு அளித்து... இமயம் முதல் குமரி வரை பிரயாணம் செய்து... பீடங்களை ஏற்படுத்தி , சநாதன தர்மத்தின் இலட்சிய மூர்த்தியாக நிலை பெற்றவர் ஸ்ரீ ஆதிசங்கரர்!
ஒருநாள் அவர் காசியில் விஸ்வநாதரை தரிசிக்கச் சென்ற ஆதிசங்கரர் , தனது மூன்று தவறுகளுக்காக இறைவனிடம் மன்னிப்பை வேண்டுகிறார்!
1.இறைவன் வாக்கால் விவரிக்க இயலாதவன் என அறிந்த போதும்
"யதோ பாசோ நிவர்த்தத் தந்தே, அப்ராப்ய மனஸாசஹ"
எனத் உணர்ந்திருந்த போதும் கூட... அவரின் தெய்வீகத்தை விவரிக்க முற்பட்டதே முதல் தவறாகும்!
2. "ஈஸ்வர சர்வபூதாநாம்" எல்லா ஜீவ ராசிகளிலும் உறைபவன் இறைவன் எனத் தெரிந்திருந்தாலும் தன்னை குருவாகவும் , சிலரை சீடராகவும் கருதியது இரண்டாவது தவறாகும்!
3. "சர்வம் விஷ்ணு மயம் ஜகத்" என அறிந்திருந்த போதிலும்... இறைவனை தரிசிப்பதற்காக தனியாக காசி சேத்திரத்திற்கு வந்தது மூன்றாவது தவறாகும்!
இந்த மூன்று தவறுகளுக்காகவும் தன்னை மன்னித்தருள வேண்டுமெனப் பிரார்த்தனை செய்தார்!
ஆதிசங்கரரின் வாழ்வில் ஒரு சம்பவம்: பிரம்மச்சர்யத்திலேயே சன்யாச தீட்சை வாங்குவதற்கு தனது தாயாரின் அனுமதி கோரினார்.. தாயாரோ சம்மதிக்கவில்லை.. இதன் தொடர்ச்சியாக அவர் நதியில் குளிக்க்கையில் ஓவென அலற.. அதைக் கண்ட தாயார் பதற..."முதலை என்னைப் பற்றி இழுக்கிறது! நீ எனக்கு சன்யாச தீட்சைக்கு அனுமதி அளித்தால்... அது விட்டு விடும்!" என்கிறார்! தாயாரும் உடனே சம்மதிக்க முதலை அவரை தனது கோர பிடியிலிருந்து விடுவிக்கிறது!
இந்த சம்பவத்தில் ஓர் உள் அர்த்தம் உள்ளது!
நதியே மனித வாழ்க்கை... உலக ஆசைகளே முதலைகள்! ஜீவனை அவைப்பிடித்து இழுக்கின்றன... இதற்கு வைராக்கியமே சரியான பரிகாரம்!
ஸ்ரீ ஆதிசங்கரர் தனது தெய்வக் கடமைகளை முடித்துவிட்டு உடலை துறந்தார்! காரணம் என்னவெனில்: தனது போதனைகளை, தனது அத்வைத சித்தாந்தத்தை தனது சீடர்கள் தவறாமல் பரப்புவார்கள் என்ற நம்பிக்கை பிறந்ததாலேயே தனது சிறிய வயதிலேயே தனது உடலை துறந்தார்! ஆதிசங்கரரின் சீடர்களும் கூட மிகவும் தேர்ந்தவர்களே!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 237)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக