தலைப்பு

சனி, 4 பிப்ரவரி, 2023

பாபாவை பின்தொடர்ந்த 5 வெளிநாட்டு பெண்மணிகளின் ஆச்சர்ய அனுபவங்கள்!!

ஐந்து வெளிநாட்டு பெண்மணிகளின் பாபா உடனான பயணமும் சாயி அனுபவங்களும் சுவாரஸ்யமாக இதோ...


கயில் மலோ, இண்டியா சுப்பேரா, மார்சியா சுப்பேரா, மைக்கேல் கேப்லோவிஸ்ட், ஹைடி கிங் என்ற ஐந்து வெளிநாட்டு பெண்மணிகள் தங்களுடைய சாயி அனுபவங்களை பகிர்கிறார்கள்! இது 1970 களின் ஆரம்பகாலத்தில் நிகழ்ந்தவை! 

பெரும்பக்தர்கள் ஹிஸ்லாப், மர்ஃபட் ஆகியோரின் குழுவில் இருந்தவர்கள்... இரண்டு பெரும்பக்தர்கள்... இரண்டு குழு! 


இறைவன் பாபாவை சந்தேகமற்று காரணமே இன்றி நேசிக்கிறார்கள்... அவர்கள் தங்களுடைய நேர்காணல் காணொளியில் பகிர்கிற ஒவ்வொரு நொடியும் அகத்திலும் முகத்திலும் ஆனந்தம் சுண்டாமல் பேசுகிறார்கள்... அந்த நினைவலைகளே அத்தனை ஆனந்தம் எனில்... நேரில் அதனை அனுபவித்த போது நிகழ்ந்த பேரானந்தம் எத்தகையது என்பதை உணர முடிகிறது!


வெளிநாட்டவர் என்றால் வசதியானவர் என்ற ஒரு பரவலான எண்ணம்! ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு பெரிய வசதியே இல்லை! இரு குழுவில் இணைந்து கொண்டு பாபா தரிசனம் பெற வந்து... பாபாவின் பயண அணுக்கத்தை , செயல் ஆச்சர்யங்களை, லீலா விநோதங்களை நொடிப்போதும் கண்டு அனுபவிக்கிறார்கள்... அதனை அதே குதூகலம் குறையாமல் இதயப் பகிர்வாக சுகமாக இறக்கி வைக்கிறார்கள்!


வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் பெங்களூர், டெல்லி , மதராஸ் (சென்னை) என பாபாவின் பயணத்தில் இணைந்தவர்கள்...

நிழலாய் பின்தொடர்ந்தவர்கள்...

பேச்சுக்கு ஒருமுறை பாபாவை ஸ்ரீகிருஷ்ணர் என அழைக்கிறார்கள்... அந்த காலக்கட்டத்து குதூகலம் இந்த நொடி வரை அவர்களுக்கு குறையவே இல்லை! 


ஒரு சந்தர்ப்பத்தில் 18 நாட்கள்... பாபாவுடன் இதய அணுக்கத்தில் இருக்கிறார்கள்...

இதயத் தொடர்பே ஆன்மீகத்தில் அடிப்படை... பௌதீகத் தொடர்பல்ல...!

ஒருமுறை திடீரென பாபா இன்று சிவராத்திரி வைபவம் இல்லை என காட்டுக்குள் நுழைகிறார்...

ஒரு புல்லாங்குழலே வனத்திற்குள் நடந்து போவதாய் பூரித்தபடி அதைப் பார்க்கிறார்கள்... 

ஏதோ வேடிக்கை பார்க்க வந்திருக்கிறோம் என்று இல்லாமல்... பாபாவை இறைவன் என உணர்ந்தும்... தங்களை கோபிகைகள் என உணர்ந்தும் இனம் புரியா பேரன்பை பாபாவின் மேல் வளர்க்கிறார்கள்!


வெளிநாட்டவர்கள் பாரதம் வந்து ஆன்மீகத்தை ஆழமாய் உழுவது எங்கிருந்தோ பறந்து வந்த வண்டு தடாகத்தாமரைத் தேனை ருசிப்பது போல் ஆச்சர்யமானதே!

தாங்கள் பெரிய வசதி இல்லை.. வாடகை கார் பெற கூட பணம் இல்லை என மனம் திறந்து பகிர்கிறார்கள்... மலிவான கார் தேடி அலைந்து... அதை வைத்து பாபா பயணத்தைத் தொடர்கிறார்கள்...


ஒருமுறை பாபாவின் காரை பின் தொடர்ந்து... ஒரு சந்தர்ப்பத்தில் அந்தக் காரின் வழித்தடத்தை தவறவிடுகிறார்கள்... அவர்களோ வேறு தேசம்! எப்படி தேடிக் கண்டுபிடிப்பார்கள்...?! கண்ணைத் திறந்து காட்டில் விட்டால் கூட யாருக்கு அதன் பாதை தெரியும்? 

சிறிது தூரம் தேடிச் சென்ற போது... பாபாவின் கார் நின்று கொண்டிருக்கிறது... அருகே செல்கையில் புரிகிறது... கார் பழுதானதால் நிற்கவில்லை... அந்த பாபா கார் முழுக்க முழுக்க அந்த 5 சகோதரிகளுக்காக காத்திருக்கிறது! அவர்களின் எதிர்பாரா பக்திக்கு பாபா கொடுத்த பரிசு அது! 

விருந்தினர் ஒருவர் வீட்டில் பாபா உணவருந்த... சேர்ந்து உணவருந்தும் பாக்கியம் பெறுகிறார்கள்...


ஒருமுறை பயணத்தில் குறுக்கே மாட்டு வண்டி வர பாபா கார் நிற்கிறது... நிழல் போல் காரில் தொடர்ந்த அந்த 5 சகோதரிகளை பார்த்து ... "நான் 2 மணிநேரத்தில் வந்துவிடுவேன்... நீங்கள் பெங்களூருக்கே செல்லுங்கள்!" என்கிறார் பாபா!

ஆனால் அவர்களின் பேரார்வம் திரும்ப மறுக்கிறது! 

பாபாவை பின்தொடர்கிறார்கள்... தொடர்கிற போது... "சுவாமி ! நாங்கள் உன் பேச்சைக் கேளாமல் பின் தொடர்கிறோம்! இந்த செயலுக்கான எந்தவித எதிர்விளைவு எங்களுக்கு நேர்ந்தாலும் அனுபவிக்கிறோம்! ஆனால் நீ செல்லும் அந்த இடத்தின் உள்ளே வந்து உன்னை தொந்தரவே செய்ய மாட்டோம்!" என வேண்டுகிறார்கள்! வேண்டிய படியே பயணம்!

வெளியேவே காத்திருக்கிறார்கள்... காத்திருப்பே... காத்திருப்பதிலேயே இதய பூத்திருப்பே பக்தி! தங்களை பாபா உள்ளே அழைக்க வேண்டும் என்ற  எந்த எதிர்பார்ப்பும் இல்லை! 

பாபா அந்த விருந்தினர் வீட்டு பால்கனி முன் தோன்றுகிறார்!

பிரேமக்கனி அந்த பால்கனி முன் நின்று கையை வா என்பது போல் அசைக்கிறது...

மூன்றாவது அசைப்பிலேயே தங்களைத் தான் அழைக்கிறார் என்பது புரிய உள்ளே வருகிறார்கள்! இது தான் எதிர்பாரா காத்திருப்புக்கு பாபா அளித்த பரிசு!


உள்ளே செல்கிறார்கள்... அந்தத் தருணத்தில் தான் பாபா வில்லை ஏந்தி அனைவர் முன்னும் காட்டுகிறார்... அப்போது பாபாவின் திருமுகத்தில் அப்படி ஒரு ஒளி பிரகாசிப்பதை அதற்கு முன் அவர்கள் தரிசித்ததே இல்லை என்பதை பகிர்கிறார்கள்... பாபா ஏந்தியது வில்லை என்றாலும் அவர் குறிபார்த்தது அத்தனை பக்தி இதயங்களையும்...வலி தரும் அம்பெய்தல் அல்ல‌.. ஆனந்த எய்தல் அது! 

Sri Sathya Sai addressing a sea humanity at Kurukshetra - April 197

டெல்லியில் பாபா குருஷேத்திர நிலத்தில் உரையாற்றிய பிரம்மாண்ட வைபவத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்கள்..‌ கூட்டம் ஜே ஜே என்றிருக்கிறது‌.. பாபாவுக்கான வெற்றி கோஷமும் ஜே ஜே என விண்ணை பிளக்கிறது! ஆறடி சுவரில் ஒருவர் ஏறி நின்று கேட்க..இறுதியில் அது இடிந்தே விழுகிறது... பிற்பாடு அந்த சுவர் மேல் ஏறியவருக்கு பாபா நேர்காணலே அளிக்கிறார்!

பாபாவின் மதராஸ்(சென்னை) பயணத்திலும் பங்கேற்கிறார்கள்... பாபாவின் திருநிகழ்ச்சி நிரலே தெரியாமல் பாபா தரிசன சுவாரஸ்யங்கள் பல அடைந்திருக்கிறார்கள்...

"இங்கேயே இருங்கள்.. நான் மருத்துவமனை செல்கிறேன்!" என பாபா சொல்லிவிட்டு இறந்து போன கோவனை உயிர் பிழைக்க வைத்துவிட்டு...மீண்டும் வந்து இந்த 5 சகோதரிகளிடம் நடந்ததை விவரிக்கிறார் பாபா..


Elsie and Walter Cowan with Swami

"அவன் என் பக்தன் ... அவனை எப்படி சாக விடுவேன்? உயிரை அவனுக்கு மீண்டும் தந்தேன்! இப்போது படுக்கையில் நடனம் ஆடுகிறான்!" என்று பாபா கூறியதை ஆச்சர்யமாய் குதூகல முகரேகையுடன் கூறிக் கூறி புளகாங்கிதம் அடைகிறார்கள்! 

பாபா அந்த 5 பெண்மணிகளையும் ஒரு பெயர் சொல்லி அழைப்பார்... அவர்கள் அதன் அர்த்தத்தைப் பிற்பாடு அறிகிறார்கள்...

பாபா அந்த ஐவருக்கும் சூட்டிய அருட்பெயர் "பஞ்ச பாண்டவிகள்!"


    பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக