தலைப்பு

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதருக்கு பாபா அளித்த கண் பார்வை!


தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என கொடிகட்டிப் பறந்தவர் தியாகராஜ பாகவதர். எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவர். தங்க நிற உடல் கந்தர்வ குரல் ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர் அவர்களின் மெய் சிலிர்க்கும் பாபா அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ‌...

நாடக உலகில் இருந்து திரையுலகம் வந்த பாகவதர் தன் குரலால் ஒட்டுமொத்த மக்களைக் கட்டிப்போட்டவர். அவரது ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளியை கடந்து ஓடியதே அவரது புகழுக்கு சாட்சி. திரையுலகில் புகழின் உச்சியை தொட்ட பாகவதர் லஷ்மி காந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு செல்கிறார்.

1947ல் சிறையிலிருந்து விடுதலையான பாகவதர், ‘நரேந்திரா பிக்சர்ஸ்’ என்ற சொந்தப் படக் கம்பெனியை ஆரம்பித்து ‘ராஜ முக்தி’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிடுகிறார்.  முன்னணிக் கலைஞர்கள் நடித்திருந்தும் தோல்விப் படமானது. தொடர்ந்து வெளியான சியாமளாவும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் நம்பிக்கையிழக்காமல் 'புது வாழ்வு' படத்தைத் தயாரித்து தானே நடித்து இயக்கவும் செய்தார் பாகவதர். பாகவதர் வாழ்க்கையின் மீளாத சரிவிற்கு அப்படமே வழி வகுத்தது. அப்படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கிறது.
தொடர்ந்து தமிழிசைக் கச்சேரிகள் செய்ய விழைகிறார். ஆனால் அதற்கும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சர்க்கரை நோயின் தாக்கத்தால் திடீரென பார்வை இழப்பும் ஏற்படுகிறது. 


தங்கத் தட்டில் சாப்பிட்ட பெருமைக்குரியவர் தாங்குவதற்கு யாருமில்லாமல் தவிக்கிறார்! வாழ்வாங்கு வாழ்ந்த கந்தர்வ கான இசைமாமணி இறுதிக் காலத்தில் உடல்நலிவுற்று, ஆதரிப்பார் யாருமில்லாமல் வறுமையில் வாடுகிறார். மனம் வெறுத்துப் போய் தம் குல தெய்வமான தஞ்சை முத்துமாரியம்மன் கோவிலைச் சரணடைகிறார். அங்கேயே அமர்ந்து தம் வாழ்நாளைக் கழிக்கிறார். அவ்வப்போது அவரது மானசீக சீடரான டி.எம்.எஸ் அவர்களும் அவரை நலம் விசாரித்து வருகிறார்! பாகவதர் குரலில் பாடியே திரைஇசைஉலகில் அறிமுகமானவர் டி.எம்.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது!

ஒருமுறை மன ஆறுதலுக்காக இருவரின் (பாகவதர் மற்றும் டி.எம்.எஸ்) சக நண்பரான  நாகரத்தினத்துடனும், தனது மானசீக சீடரான டி.எம்.சௌந்தரராஜனுடனும் தீர்த்த யாத்திரை மேற் கொண்டார் பாகவதர். 1959 ஏப்ரல் மாதம் புட்டபர்த்தி சென்று ஸ்ரீ சாயி பாபாவைத் தரிசிக்கச் செல்கிறார்! ஏற்கனவே பாடகர் திலகம் டி.எம்.எஸ் பாபாவின் பக்தர் என்பது பாகவதர் அறிந்ததே! தரிசன வரிசையில் பக்கத்தில் இருந்த டி.எம்.எஸ் பாகவதரை கைத்தாங்கலாகப் பிடித்து பாபா வந்து கொண்டிருக்கிறார் என தெரிவிக்க.. பாபா அருகே வந்து மிகுந்த பேரன்புடன் பாகவதரின் கைகளைப் பிடிக்க...
பாபா தரிசனத்தின் போது தனது மன வேதனைகளை, தான் படும் துன்பங்களை பாபாவிடம் குமுறிச் சொல்கிறார்! 
அதற்கு முக்காலமும் உணர்ந்த இறைவன் பாபா பாகவதரிடம், “இன்னும் ஆறுமாதங்களில் எல்லாம் முடிந்து விடும்” என்கிறார். 
 தங்களை தரிசிக்க முடியாத பாவி ஆகிவிட்டேனே சுவாமி என சுருதி மாறாத குரலில் கண்ணீர் கொப்பளித்துச் சொல்கிறார் பாகவதர்..

 தான் ஒரே ஒரு முறை பாபாவை தரிசிக்க வேண்டும் என்பதாகவும்  பாகவதர் பாபாவிடம் கோரிக்கை விடுக்க.. அந்தக் கோரிக்கையை ஏற்று பாபா பாகவதரின் கண்களைத் தொடுகிறார் ... கண்திறந்த பாகவதர் பரவசப்படுகிறார்... ஆஹா சுவாமி எவ்வளவு சௌந்தர்யமாக தேஜோ மயமாக இருக்கிறார் என வியந்து நயந்து பக்தியில் கரைந்து உருகி மீண்டும் கண்களை மூடிக் கொள்கிறார் பாகவதர்... பிறகு கண் திறக்கையில் தொலைத்து கிடைத்த பொருள் மீண்டும் களவு போனது போல் திரும்பிய பார்வை மீண்டும்
இருட்டானது!  மீட்டுக் கொடுத்து இப்படி பாபாவே பார்வையை பறித்து விட்டதாக பாபாவிடமே பாகவதர் அங்கலாய்க்க...‌ அப்போது பாபா... பாகவதர் தன்னிடம் பார்வையை கேட்கவில்லை...  தன் தரிசனம் மட்டுமே ஒரே ஒருமுறை கேட்டதனால் ஒருமுறை மட்டும் தரிசன அனுமதி அளித்ததாக தெளிவுப்படுத்துகிறார்! பார்வை வேண்டும் என தன்னிடம் பாகவதர் கேட்காததற்கான காரணம் அவரது கர்மாவே என தெளிவுப் படுத்துகிறார் பாபா! பார்வை வேண்டும் என கேட்காமல் விட்டுவிட்டோமே என பாகவதரும் தன் கர்மாவை எண்ணி கசப்புணர்வு கொள்கிறார்! தொலைந்த பார்வை மீண்டும் வந்து பாகவதர் பரவசப்பட்டதை எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்த டி.எம்.எஸ் அவர்களுகும் பரவச எல்லைக்கே செல்கிறார்!

பிறகு பாபா பாகவதரிடம் சொல்லியபடியே அதே வருடம் ஆறு மாதம் கடந்து நவம்பர் 1 ஆம் தேதி இறைவன் பாபாவுடனேயே பாகவதர் இரண்டற கலந்து போகிறார்! அந்த ஈடிணை அற்ற தேவகந்தர்வக் குயில் பாபாவின் பாதக் கிளையில் இளைப்பாறி.. தனது பொன் உடலை பூமியிலேயே கலந்துவிடுகிறது!

ஆதாரம்:

🔴'தென்றல்' மாத இதழ், அக்டோபர் 2010 இதழ்!

🔴கவிஞர் வைரபாரதியிடம் பாடகர் திலகம் டி.எம்.எஸ் நேரடியாக தெரிவித்த தனிப்பட்ட அனுபவம்)

🔴விந்தன் எழுதிய 'எம்.கே.டி. பாகவதர் கதை (தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு புத்தகம்) கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக