தலைப்பு

திங்கள், 20 பிப்ரவரி, 2023

மனதை அடக்க நம் சுவாமி கூறும் நல் உபதேசம்! Divine Discourse Jan.08, 1983

மனதின் ஓட்டமே மனிதனின் ஆட்டம். மனம் மயங்கி மதி கெட்டவர்களை, மக்களே போல்வர் கயவர் என்கிறார் திருவள்ளுவர். மனதை அடக்க மலை, காடுகளை நாடினர் பலர். ஆயின் மனமும் அவருடன்தானே சென்றது. நம்முடன் எப்போதும் ஒட்டி உறவாடும் மனதை  எளிதில் அடக்க இயலாது. ஆயின் பகவான் பாபா காட்டும் இந்த எளிய வழியை பின்பற்றினால் மனம் அடங்கி, மனிதன் யோகி ஆகலாம்.


🌹மனம் அடக்க இயலுமா:

பாபா கூறுகிறார். மனம், சொல்லில் அடங்கா ஓர் அற்புதம். அதன் ஆட்டங்கள்  மிக மிக ஆச்சர்யமான வை. மனதிற்கு ஓர் அறிதியிட்ட நெறி முறையோ  வடிவமோ கிடையாது.அது எந்த நினைவில் திளைக்கிறதோ, அந்த வடிவம் எடுக்கிறது. கிளை தாவும் குரங்குபோல அது ஒரு ஆசையிலிருந்து மற்றொன்றுக்கு தாவுகிறது.அது இழப்பிற்கும், துன்பத்திற்கும், உற்சாகத்திற்கும் சோர்வுக்கும் காரணமாகிறது. அதன் விளைவாக நன்மையும், தீமையும் மாறி மாறி உருவாகிறது.


மனதின் குணாதிசயங்களை அறிந்து, அதை தன் வசப்படுத்தும் வழி முறைகளை கற்பது  மனிதனின் முயற்சியாக இருக்கவேண்டும். மனம்  தனது நினைவுப் பெட்டகத்தில் தான் பெற்ற அனுபவங்களை சேகரித்து வைக்கிறது. அதனிடம் தனது நினைவுகளை அழிக்கும் செயலி ஏதும் கிடையாது. அதனால் எந்த ஒரு அனுபவத்தையும்  துறக்க இயலாது. இதனால்தான் துயரம், கவலை போன்ற உணர்வுகளை அது சுமந்து கொண்டே இருக்கும். இதை எப்படி மாற்றுவது. தான், தனது என்ற சுழல்களிலிருந்து விடுபட, தியாகம் செய்வதை பழக்கமாக கைக்கொள்வாய். தியாகியாக நீ மாற ஆரம்பித்ததும் , அது உன்னை யோகியாக மாற்றிவிடும். பிறகு நீ ஆன்மீகத்தில் திளைத்து அமைதியான மன நிலையைப் பெறுவாய்.


🌻 சாயிராம்... எனதென்றும் , என்னுடையது என்றும் நம் மனதைப் பழக்கிவிட்டால் அது நாளடைவில் நம்மை தன் வசப் படுத்தி பலவித தளைகளில் சிக்க வைக்கும். ஆகவே பகவான் அதற்கு உரிய தீர்வாக தியாகத்தை அனைவரும் அனுஷ்டிக்க அறிவுறுத்துகிறார். நான், எனது என்ற வட்டத்தில் சிக்காமல் பிறருக்கு உதவும் தியாக மனப் பாங்கை கைக்கொண்டால், மனம் ஒடுங்கி மனிதன் மாதவனாவது திண்ணமன்றோ.


ஆதாரம்:  Divine Discourse Jan.08, 1983

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக