தலைப்பு

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

பக்தர்களின் தீயப்பழக்கத்திலிருந்து பாபா அளித்த வியப்பான விடுதலை!

தீயப் பழக்கம் ஆட்பட்டவர்களை சுவாமி எவ்வாறு தடுத்தாட் கொள்கிறார் எனும் பரவச சிகிச்சை அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...


25 ஆண்டுகாலமாக சிகரெட் பிடித்து வரும் யூ.டி சந்தானம் 1978 செப்டம்பர் 21 அன்றையே தனது புகை ஒழிப்பு தின நாளாக குறித்து பாபாவை துதித்து கொண்டாடுகிறார்...

ஏனெனில் ஒருமுறை சந்தானம் அவர்கள் ஒரு புது சிகரெட் பூதத்தை வாங்கி அதில் ஒன்றை பற்ற வைத்துவிட்டு ஊதித் தள்ளி.. அந்தப் புகையை கிழித்தபடி தனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்கிறார்... அந்த நண்பர் அன்று காலை குருவார பூஜை செய்தபோது.. பாபா தனது புகைப்படத்திலிருந்து வெளியே வந்து "உன் நண்பன் சந்தானத்திடம் அவன் புகைப்பழக்கத்தை உடனே நிறுத்தச் சொல்! அது நல்லதல்ல...!" என்கிறார்! 


சரியாக அதே வியாழன் சந்தானமும் அவர் இல்லம் நுழைய... புகைக்கு பகையான பாபாவின் தெய்வத்திருச் சொல்லை சந்தானத்திற்கு  நண்பர் தெரிவிக்க.. "சுவாமி சித்தம் இதுவானால் இந்த நிமிடமே நான் சிகரெட்டை தொடுவதில்லை!" என்கிறார்.. அது தான் பக்தி.. பாபா தனது லீலா நாடகத்திற்கு யாரை வேண்டுமானாலும் தனது கதாப்பாத்திரமாக தேர்ந்தெடுப்பார்.. அது அவரது பூரண சங்கல்பமே! ஆக சந்தானம் தொடர் பிரார்த்தனையில் ஒருவாரம் மூழ்கி.. அந்த பகைவனான புகை'வனை வீழ்த்துகிறார்... அந்தப் பழக்கத்தையே பாபா கருணையினால் மறந்துவிடுகிறார்!


ஆங் சூயீது ஆஹ் எனும் ஒரு மலேஷிய சீனர் அபின் புகைப்பவர்... அதிலேயே துரும்பாக இளைக்கிறார்... 10 மணிநேரம் சேர்ந்தாற்போல் புகைக்கவில்லை எனில் தலை சுற்றும்... உடல் நடுங்கும்... இப்படிப்பட்ட ஒரு பரிதாபகரமான நிலையில் சுவாமி பக்தரான ராஜாராமை சந்திக்கிறார்...

மொடா குடிகாரராக இருந்த ராஜாராம் அதனால் சண்டைக்காரராகவும் இருந்திருக்கிறார்... ஒருசமயம் பாபாவை கேள்விப்பட்டு பஜனைக்கு செல்கிறார்... மது குடித்த வாய் அதைவிட மதுரமான பஜனையை பாட ஆரம்பிக்கிறது.. பாபா டாலரை கழுத்தில் அணிகிறார்.. அன்றிலிருந்து போதை தனது பாதை மாற்றி அவரை விட்டு நீங்க.. அந்த அனுபவம் பெரிதாக பாதிக்கிறது அபினை அள்ளி உபயோகிக்கும் சீனருக்கு...

அவரும் அதுபோல் பாபாவை அடைக்கலம் புகுகிறார்.. சமிதி செல்கிறார்.. பஜனை பாடுகிறார்.. டாலரை அணிகிறார்... அந்த பாபா டாலர் அவரின் அபின் மயக்கத்திலிருந்து தெளிவைத் தருகிறது! பிறகு க்ளாங் என்ற இடத்திலுள்ள சுவாமி சேவா தளத் தொண்டராகிறார்!


அதில் இன்னொருவர் பெயர் எஸ்.ஜாக்ரியாஸ்... மலேஷியாவில் வசிக்கும் கிறிஸ்துவ தமிழர்...ஹெராயின் பொடியின் மயக்கத்தால் பொடிந்தவர்.. திருமணமாகி இரு குழந்தையும் வேறு இருக்கிறது.. போதையில் அவரது குடும்பக் கப்பலே தள்ளாடிக் கொண்டிருக்கிறது! உடல் துரும்பாகிறது... போதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மாய மனம் இரும்பாகிறது... வதங்கி வத்தலாகிவிடுகிறது உடல்... வற்றிப் போகிறது எடை எனும் கடல்...  ஒரு நாள் ஜுலை 18 - 1975 ல் ஓரிருவர் ஒரு பத்திரிகையில் பாபா பற்றி "அகில உலகை காக்க வந்த ரட்சகன்" என வாசித்தது சோர்வாய் இருந்தவரின் காதுகளில் விழுகிறது... ஒரு நம்பிக்கை பிறக்கிறது... அந்தப் பத்திரிகையை கேட்டு வாங்கிப் படிக்கப் முனைகிறார்.. அரை மயக்கக் கண்ணில் பாபா படம் மட்டுமே ஓரளவுக்கு தெரிகிறது.. "நீ அகில உலக ரட்சகர் என்பது உண்மையானால்...என்னை இந்த போதை அரக்கனிடமிருத்து காப்பாற்றக் கூடாதா?" என வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்கிறார்.. கையில் பத்திரிகை.. அதில் பாபா படத்தை சுவற்றில் மாட்டி .. அந்த பிரார்த்தனையையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு வருகிறார்... அயர்ந்து உறங்குகிறார்... எழுகிறார்.. வழக்கமாக எழுகையிலேயே தொந்தரவு செய்யும் நரம்புகளின் வலி இல்லை... பாபா படத்தை காண்கிறார்.. அப்படியே அசைவற்று அமர்கிறார்.. அது தான் தியானம்... தியானம் தீர்க்காத மன/உடல் பிரச்சனைகளை மருத்துவர்கள் கூட தீர்ப்பதில்லை! அலுவலகம் செல்கிறார் திரும்புகிறார்.. இப்படி அந்த ஒரு நாள் பலநாளாகி.. போதை அரக்கனிடமிருந்து விடுதலை பெறுகிறார்!


(ஆதாரம்: லீலா நாடக சாயி - ஆசிரியர் : அமரர் ரா.கணபதி) 


பக்தியை விட ஆன்ம போதை தரக்கூடிய விஷயம் உலகத்தில் எதுவுமே இல்லை...தியானத்தை விட புத்துணர்ச்சி தரக்கூடிய தெளிவான மிதப்பு இதுவரை மனிதனுக்கு உலகப் பொருட்கள் ஒன்று கூட தந்ததில்லை! அகந்தையைப் போல தனக்குத்தானே கொள்ளி வைக்கும் பழக்கமே போதை ஏற்றிய புகைப்பழக்கம்...

ஆசைகள் பீடித்தவர்களும் , அகந்தைப் பீடித்தவர்களும் பரிதாபகரமானவர்கள் அவர்கள் இறைவனின் சாம்ராஜ்யத்தில் நுழைய முடிவதே இல்லை... தள்ளாடி நடப்பவர்க்கு சிகர ஏற்றங்கள் சரிவருவதில்லை... ஆனால் பாபா மேல் பிடிமான பக்தியும் திட நம்பிக்கையும் உறுதியான சரணாகதியும் இருக்குமானால்... அதுவே ஆன்ம ஆரோக்கியத்திற்கான அஸ்திவாரம் இட்டு... முக்தி எனும் கோபுரத்தை முழுமூச்சாய் எழுப்பிவிடுகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக