விஞ்ஞானிகள் பலர் பலவித கோணங்களில் பாபாவை அணுகி இருக்கிறார்கள்... பேராச்சர்யப்பட்டிருக்கிறார்கள்... அனுபவித்ததை சரியான வார்த்தை அளவீடுகளால் கூட அவர்களால் பதிவு செய்ய இயலவில்லை... பாபா மனித அறிவுக்கு அப்பாற்பட்டவரென ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்... அதில் ஒருவர் உணர்ந்து புத்தகமே எழுதி இருக்கிறார்... அவரின் அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...
அது 1971 ஆம் ஆண்டு... அமெரிக்கா சாண்டியாகோவிலில் பிரபல சைக்கியாட்ரிஸ்டான டாக்டர் சாமுவேல் சாண்ட்விஸ் அங்கிருந்து 50 மைல் தொலைவில் உள்ள மெக்ஸிக்கோ எல்லையின் யோக மாதா இந்திராதேவியாரின் யோக மையத்திற்கு வருகிறார்...
அங்கே சாமுவேலும் அவரின் மனைவி ஷரானும் மையத்தில் மையமாக வீற்றிருந்த பாபா படத்தை பார்க்கின்றனர்...யார் இது ? என புதிர் அடைகின்றனர்... "ஆறு வருடங்களுக்கு முன் சுவாமி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டார்!" என இந்திராதேவியார் மனம் திறந்து தனது பாபா அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.. அதை நாம் யுகத்தில் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறோம்...
அவர் பெற்ற அனுபவங்கள் ஒன்று இரண்டல்ல... சிருஷ்டி அனுபவங்களைக் கடந்து அவர் பெற்ற அக மாற்றம் ஒருநாளில் சொல்லி முடிக்க முடிவதல்ல... இதனை கேட்கிற சாமுவேல் வெளியே சென்றும் பாபாவை பற்றி விசாரிக்கிறார்... மனித விசாரணையில் அல்ல ஆன்ம விசாரத்திலேயே பாபாவை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ளலாம் என அவர் அப்போது உணரவில்லை!
சிலர் சிருஷ்டியை டிரிக் என்றனர்... 12,000 மைல் கடந்து... கடல்கடந்து பாபா புகைப்படங்களில் விபூதி பொழிகிறது எனச் சொன்ன இந்திராதேவி அம்மையாரின் யோகத்தால் விளைந்த மனப்பக்குவத்தை எந்த கருவியால் அளக்க முடியும்?! கடைசியில் ஏசுநாதர் செய்தது போல் டிரிக் என ஒருசிலர் ஏதோ ஏசுநாதரையே நேரில் பார்த்துவிட்டு சொல்வது போல் அளந்து விட.. பாவம் அதையும் நம்புகிறார் சாமுவேல்... அவர்களுக்கு ஏசுநாதரை பற்றியும் தெரியாது... பாபா பற்றியும் தெரியாது...
சரி இதனை எல்லாம் அங்கேயே சென்று ஆராயலாம் என இந்தியா வந்து சேர்கிறார் சாமுவேல்... "விநோதர்களின் வாழ்வினை ஆராய்ந்து அற்புதங்கள் உண்மையானவை அல்ல என்பதை நிரூபிக்கப் போகிறேன்!" என எழுதி வைத்துவிட்டு வருகிறார்...அப்படி எழுதிய அவரது கைவிரல்கள் பாபாவை பற்றியே ஒரு புத்தகம் எழுதும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை...!
1972 ல் சாமுவேல் பம்பாய் வந்திறங்கி அங்கிருந்து பெங்களூர் பிருந்தாவனத்திற்கு வந்திருந்த போது பாபா தனது மாணவர்களுக்கு கோடை வகுப்பு நிகழ்த்துகிறார்... சாமுவேல் முதலில் சந்தித்தது விஞ்ஞானி பகவந்தத்தை... சடார் என எதையும் நம்பாத விஞ்ஞானி பகவந்தம் பாபா தனக்கு நிகழ்த்திய அனுபவத்தைப் பகிர்கிறார்... சித்ராவதி மணலிலிருந்து பாபா சிருஷ்டித்த தெலுங்கு மொழி பகவத்கீதை புத்தக மகிமை.. (யுகத்தில் ஏற்கனவே விவரிக்கப்பட்டிருக்கிறது) அதை அறிந்து ஆச்சர்யப்படுகிறார் சாமுவேல்... புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்பதை பாபா உணர வைத்த விதத்தையும் பகவந்தம் பகிர்கிறார்! பகவத்கீதை புத்தக அனுபவம் கேட்டறிந்த போது கூட தான் ஒரு பாபா புத்தகம் எழுதுவோம் என சாமுவேல் உணரவே இல்லை... அந்த புத்தக அனுபவமே அவர் எழுதப்போகும் புத்தகத்திற்கான பிள்ளையார் சுழி இட்டிருக்கிறது...ஆனால் அவர் அதனை உணர்வதற்கான நேரம் கனியவில்லை!
கணிதப் பேராசிரியரான ஜெர்ரியின் உறவுக்காரருக்கு ஏற்பட்ட நோயிலிருந்து தேறி வந்த அவர் பாபாவை தரிசிக்க வேண்டும் என ஜெர்ரிக்கு தொலைபேசியில் அழைக்கிறார்! அதே போல் லிலா என்ற பெண்மணியும் பர்த்தி வர நினைக்கிறார்.. கையில் காசில்லை... பாபா என உருகுகிறார்... அதுவரை விற்காத அவரது கணவரின் விஞ்ஞான ஆராய்ச்சிப் பொருட்கள் மள மள என விற்க அந்தக் காசில் பர்த்தி வருகிறார்.. ஆம் அவரது கணவர் பெயர் விஞ்ஞானி ஹோமர்!
ஜெர்ரியை தனது தரிசன வரிசையில் கண்ட பாபா "நான் உன் கனவில் இரண்டுமுறை தோன்றி இருக்கிறேன்!" என்று சொன்னதும்... ஜெர்ரி செர்ரி பழம் காற்றில் தலை அசைப்பது போல் ஆம் என தலை அசைத்து விழி சிவக்க கண் கலங்குகிறார்! இவை எல்லாம் சாமுவேலுக்கு ஆச்சர்யத்தை கிளப்புகிறது... அது எப்படி பாபா கனவில் செல்கிறார்.. அதையும் சரியாகச் சொல்கிறார் என... பாபா இறைவன்... அவர் கனவில் தோன்றுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை... ஒரு புல்லாங்குழலின் சிறிய துவாரத்துள் ஆஹா ! காற்று எப்படி நுழைகிறது?! என யாராவது ஆச்சர்யப்படுகிறார்களா?! அப்படியே தான் பாபாவின் கனவு தரிசனமும்/ தியான தரிசனமும்... அவை அற்புத தரிசனம்! அதற்குக் காரணம் பாபாவின் கரிசனம்!
சாமுவேல் பிருந்தாவனத்தில் தங்கி இருந்த பக்கத்து அறையிலேயே திருமதி எல்ஸி கோவனும் தங்கி இருந்தார்... அப்போது அவரது கணவர் வால்டர் கோவன் உயிரோடு இல்லை! திடீரென காலை சாமுவேல் தங்கி இருந்த அறைக்கதவு தட்டப்படுகிறது... தட் தட் தட் தட்... என்ன இந்த நேரத்தில் என் கொட்டாவி விட்டபடி திறந்து பார்க்கிறார்... கதவின் எதிரே திருமதி எல்ஸி கோவன் பெருமூச்சுடன் காணப்படுகிறார்... "என்னாச்சு அம்மா?" எனக் கேட்கிறார் சாமுவேல்... "சாம்... இன்று அதிகாலை 6 மணிக்கு என் கணவர் அறைக்கு வந்தார்... என் உடலில் ஒருவித சக்தி நிலை பெருகியது... என்னால் அவரை உணர முடிந்தது சாம்!" என ஆச்சர்யத்தோடுப் பேசுகிறார்... புதிராகிறார் சாமுவேல்... பிறகு தரிசன வரிசையில் திருமதி எல்ஸி கோவனை நெருங்கியபடி பாபா "உன் கணவரும் சுவாமியும் இன்று காலை உன் அறைக்கு வந்திருந்தோமே! " என்கிறார்..
அதற்கு எல்ஸி கோவன் "ஆமாம் ஆமாம் இன்று அதிகாலை 6 மணிக்கு சுவாமி.. என் மனம் நிரம்பி வழிந்தது சுவாமி!" என்கிறார்! "6 மணி இல்லை... 6 மணி அடிப்பதற்கு 5 நிமிடம் முன்னதாக வந்தோம்!" என்கிறார்...
இதை கண்முன் கண்டும் கேட்டும் பிரம்மித்தே போகிறார் சாமுவேல்... அண்டசராசரத்தையே தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு இவ்வளவு அன்போடும் கருணையோடும் தனது பக்தர்களோடு பாபா வலம் வருகிறாரே என நினைத்து உள்ளம் உருகுகிறார்... " சைக்காட்ரி இல்லை உலகை சாய்'க்காட்ரியே ஆள்கிறது!" என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்து... தான் நேரடியாகப் பெற்ற பல அனுபவங்களை வைத்து ஒரு அற்புதமான நூலை எழுதுகிறார்... அது அனைத்து பக்தர்களுக்கும் பரிச்சயமான புத்தகம் தான்..
அதன் பெயர் "SaiBaba "The Holy Man and the Psychiatrist" (சாயிபாபா : தெய்வீகரும்... உளவியலாளரும்...)
(ஆதாரம் : அற்புத அவதாரம் ஸ்ரீ சத்ய சாயி பாபா/ பக்கம் : 183 / ஆசிரியர் : க.நாகராஜன்)
ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவர் பாபா! "சந்தேகம் முதல் சரணாகதி வரை" என்று கூட பலர் அகமாற்ற வாழ்வை ஒரே ஒரு வரியில் அடக்கிவிடலாம்...! மனித மூளைக்கென எல்லைகள் இருக்கின்றன... மூளையை வைத்து பாபாவை அளவிடுவது என்பது காற்றை கைகளால் முழம் போடுவது போல்...! பாபா நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டவர்! *எப்படி ஓடுகிற நீரில் எழுதுவது பதியாதோ அப்படியே நிலையற்ற மனம் பாபாவை உணர்வது கடினம்... பாறையில் எழுதும் போதே அது கல்வெட்டு... அப்படி உறுதியான இதயமே பாபா தரும் அனுபவங்களை ஆன்மா வரை அனுபவத்து வாழ்வில் பதிவு செய்ய முடிகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக