தலைப்பு

வெள்ளி, 7 அக்டோபர், 2022

சேவைக்கு உதாரண புருஷராக திகழ்பவர் யார்?

தொண்டர்களுக்கு இருக்க வேண்டிய எல்லாத் தகுதிகளையும் பூர்ணமாகப் பெற்றிருந்தவர் ஆஞ்சநேயர்! செருக்கு, பேராசை, பொறாமை, பகை உணர்ச்சி , போட்டி மனப்பான்மை, ஆகியவற்றால் மாசு (குற்றம்) பெறாத நிர்மல இதயம், பகவந்தனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை, இறைவனே தனது ஆற்றலுக்கு ஊற்று என்கிற விநயம், சோர்வறியா சுறுசுறுப்பு ஆகியனவே சோவாதளர்களுக்கு (தொண்டர்களுக்கு) இருக்க வேண்டிய யோக்கியதாம்சங்கள்!(தகுதிகள்!). இவை யாவும் முழுமையாகப் பெற்று அதோடு அபரிமிதமான அறிவாற்றலும் அதை சமயோஜிதம் அறிந்து உபயோகிக்கும் சாதுர்யமும் மிக்கவராக இரவு பகல் எப்போதும் சேவா கர்மமே புரிபவராக இருந்தவர் ஆஞ்சநேயர்! தொண்டர்களுக்கெல்லாம் ஆதர்ஷ (எடுத்துக்காட்டு) நிலையின் விளக்கமாக உள்ள அவர், கர்மத்துக்கு சற்று குறைவில்லாத பக்தியும், ஞானமும் நிறைந்தவர்! 

தேகபலம், புத்தி பலம் இரண்டிலும் நிகரற்ற அவர் அசோக வனத்தை அழித்தபின் அரக்கர்களிடம் பிடிபட்டார்! ராவணனிடம் சென்று புத்திமதி புகட்டி, ஸ்ரீ ராமன் பெருமையை அவனுக்குக் கூற வேண்டும் என்பதற்காக அவரே தான் அரக்கர் தம்மைப் பிடிக்க அனுமதித்தார்! உடனே, அவர் விரும்பியது போலவே, அரக்கர்கள் அவரை ராவண சபையில் கொண்டு நிறுத்தினர்! 


"நீ யார்?" என்று ராவணன் சினத்துடன் சீறினான்... அதற்கு எவரும் எண்ணமுடியாத சாகச சாகரத்தை கடந்து, அசோக வனத்தை சின்னாபின்னமாக்கி, ராவண மகன்களில் ஒருவரான அக்ஷய குமாரன் முதலாய் பல்லாயிரம் அரக்கர்களை அழித்தும்... "நீ யார்?" எனக் கேட்டதற்கு.. "நான் எவ்வளவு பெரிய வீரதீர சூரன் தெரியுமா?" என்று ஆணவத்தில் கொக்கரிக்காமல் தன்னை ராமனின் அடிமை எனச் சொல்லிக் கொள்கிறார்.. "தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய" என்கிறார்!

"தில் மே ராம், கர் மே காம்" - இதயத்திலே இறைவன் ; கைகளிலே உலகப்பணி" என்ற வாசகத்துக்கு உருவமாக இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்...

"தாஸோஹம்" என்று கர்மயோகியாகத் தம்மை கூறிக்கொண்டே அவர் தமது பணிவினால் அடியோடு 'தான்' அற்றுப் போனதாலேயே , 'ஸோஹம்' என்ற பிரம்மானுபவம் கண்ட ஞானியுமாயிருக்கிறார்! அவருடைய ராம பக்தியைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்... ஒன்பது விதமான பக்திகளில் "தாஸ்யம்" (அடிமை பிரபாவத்தில் இறைவனை வழிபடுவது) என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கூறுவது அவரைத்தான்!


(ஆதாரம்: அறிவு அறுபது/ பக்கம் : 26/ ஆசிரியர்: அமரர் ரா.கணபதி) 


பட்டாபிஷேகம் முடித்து ஸ்ரீராமர் ஆஞ்சநேய சேவைக்கு ஓய்வு கொடுக்க நினைக்க... இதர பட்டியல் சேவைகளை அவரவர்க்கு வழங்க ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு எந்த சேவையும் இல்லை என்கிற போது... ஸ்ரீ ஆஞ்சநேயர் அந்தப் பட்டியலை முழுதாய்ப் படித்து ஒரு சேவை விடுபட்டுப் போய்விட்டது என தெரிவிக்க... அனைவரும் ஆச்சர்யப்பட... கொட்டாவி விடுவது சாஸ்திரப்படி ஒருவருக்கு தோஷம்..ஆகவே அதற்கு பரிகாரமாக சொடுக்குப் போட வேண்டும்... சக்கரவர்த்தியாகிய தாங்களே சொடுக்குப் போடுவது உகந்ததல்ல...ஆகவே அந்த சொடுக்கு சேவையை அடியேன் செய்கிறேன்! என ஆஞ்சநேயர் அதை ஏற்கிறார்‌..எப்போது கொட்டாவி வரும் என எவருக்கு தெரியும்? ஆக மறுபடியும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமர் அருகிலேயே இருக்கிறார்! அனைவரும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் கூர்மதியோடு கூடிய சமயோஜித புத்தியையும், தன்னலமிலா தூய ராம பக்தியையும் எண்ணி திகைக்கிறார்கள் என்பதையும் பாபா தனது திரேதாயுக நாட்களை ஆழமாய் விளக்குகிறார்... அதில் ஸ்ரீ ஆஞ்சநேய ஜோதி மேலும் பிரகாசிக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக