தலைப்பு

வியாழன், 13 அக்டோபர், 2022

பிரபலங்களின் சாயி அனுபவங்களைப் பதிவு செய்து பாபாவிற்கு விளம்பரம் செய்வது அவசியம் தானா?


பிரபலங்களின் சாயி அனுபவங்கள் அதற்காகப் பதிவு செய்யப்படுவதில்லை! இறைவன் பாபாவுக்கும் பூக்கடைக்கும் விளம்பரமே அவசியமில்லை! விண்மீன்கள் ஒளிர்வதை தண்டோரா அடித்துச் சொல்ல வேண்டியதில்லை! பிரபலங்களின் அனுபவங்கள் மட்டுமில்லை ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் பதிவு செய்யப்படுகிற சாயி தமிழ்ப்பதிவுகள் யாவும் பன்முகத்தன்மை வாய்ந்தவை! இறைவன் பாபாவே பன்முகத்தன்மை வாய்ந்தவரே! நாம் ஒருமுகப்பட்டால் தான் பாபாவின் பன்முகத்தன்மையை ஓரளவுக்கேனும் உணர முடியும்! அதற்கான ஒரு பெரிய வாய்ப்பே ஸ்ரீசத்யசாயி யுகம்! 

பிரபலங்களில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல விஞ்ஞானிகள், இசைக்கலைஞர்கள், கலைத்துறையினர், மருத்துவர்கள், விளையாட்டுத்துறை வீரர்கள் இப்படி பலத்தரப்பட்ட முகங்கள் ; அவர்களுக்கு பாபா ஏற்படுத்திய பரவசப்பொழுதுகள், பேசிய ஞானங்கள், பகர்ந்த பரிவுகள், பகிர்ந்த சிருஷ்டிகள்... இப்படி ஏராளம்!

அவர்களின் தொழில் சாதனையைச் சேர்த்து எழுதுகிற போது பாபாவின் அருளோடு வாசிப்பவர்க்கும் அந்தந்த துறையில் தானும் வளர வேண்டும், மிளிர வேண்டும், கோலோச்ச வேண்டும் என்ற ஒரு உத்வேகம் எழும்பும்! அதற்காகவே அவர்களின் சாதனைகளை விவரித்தபின் அவர்களின் பாபா அனுபவங்களுக்குள்ளே நுழைகிறோம்! எந்தப் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் நாம் பதிவு செய்வதில்லை... அது நமது வேலையும் அல்ல...! 


துறவிகள் எல்லோரும் விவேகானந்தரும் அல்ல... மகான்கள் அனைவரும் வள்ளலாரும் அல்ல... அரசியல் தலைவர்கள் அனைவரும் மகாத்மா காந்தியும் அல்ல... விஞ்ஞானிகள் அனைவரும் தூய அப்துல்கலாமும் அல்ல.. விமர்சிப்பது நமது நோக்கமுமல்ல..‌ விமர்சனங்களை அல்ல... அவர்களின் பாபா தரிசனங்களையே நாம் பதிவு செய்கிறோம்! ஸ்ரீ சத்ய சாயி யுகம் தராசு மேடையல்ல... தரிசன மேடை!

கிரீடங்களால் வைரத்திற்கு அல்ல... வைரத்தால் தான் கிரீடங்களுக்கே மகிமை! இறைவன் பாபா ஒருவரே பிரபஞ்சப் பெரும்பிரகாச வைரம்! அவர் மகிமை அனைத்தும் வைடூர்யம்.. அவர் காட்டி வருகிற கருணையும், செய்துவருகிற தெய்வீகப் பிரபஞ்ச சேவையும் நவரத்தினம்! 

எந்த மனிதர் ஆயினும் இறைவனுக்கு முன்னே ஒப்புமைப்படுத்த முடியாத சாதாரண கண்ணாடிக் கற்களே!


கண்ணாடிக் கற்களாகிய பிரபலங்கள் தங்களின் தொழில் மேன்மையை பிரதிபலிக்கிறார்கள் அவ்வளவே! அவர்கள் எப்போது பாபா எனும் வைரத்தின் முக/அக தரிசனம் பெறுகிறார்களோ அப்போதே பிரகாசிக்கிறார்கள்!

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. ஒருவரின் திறன் மட்டுமல்ல அருள் இல்லாமல் ஒருதொழிலில் அவர் பிரபலம் அடைவதில்லை... பாபா தனது அருளை அவர்களின் பூர்வ கர்மா வழியே செயல்படுத்துகிறார்! புண்ணியங்களுக்கான பரிசு அது! இன்னொரு முக்கிய ரகசியம்: அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு பிரபலமும் ஆன்மீக வழியில் வருவதில்லை!

பசியே உணவை நோக்கி இழுப்பது போல் வலிகளே ஆன்மீகத்தை நோக்கி ஒரு ஆன்மாவை இழுக்கிறது! 

அதிர்ச்சியே பக்குவப்படுத்துகிறது... 

பணப்பற்றாக்குறையே சிக்கனத்தைச் சொல்லித் தருகிறது...

பொருளாதாரத்தில் எந்த குறையும் இல்லாதவர்கள் அருளாதாரத்திற்காக ஆன்மீகத்தை நோக்கி இழுக்கப்படுவது கடினம்! அப்படிப்பட்ட அவர்களையும் தனது பேரன்பினால் கட்டிப்போட்டு, பேதமின்றி கருணை காட்டி, அவர்களின் தனத்தை நல்லவழியில் அவர்களை வைத்தே அவர்களின் அகந்தை அகற்றி , அகத்தை மாற்றி செயல்படுத்துகிறார் பாருங்கள்... பாபா இறைவன் என்பதற்கான மிகப்பெரிய உதாரணம் இதுதான்!


அதே போல் எல்லா பிரபலங்களையும் தன்னிடம் பாபா இழுத்துக் கொண்டதே இல்லை.. தமிழகத்தையே ஆக்கிரமித்த இரண்டு பெரிய நடிகர்களில் ஒருவரை மட்டுமே அழைத்து தரிசனம் தந்திருக்கிறார்... இன்னொருவருக்கு அந்த தெய்வீக வாய்ப்பு கிடைக்கவில்லை... சீனியர் ஜுனியர் என இரண்டு பெரும்பாடகர்கள், அந்த இரண்டு பேருமே பாபாவுக்கு பாடி இருக்கிறார்கள்.. ஆனால் ஒருவரின் வீட்டிற்கு மட்டுமே பாபா விஜயம் செய்திருக்கிறார்! அரசியலிலும் இப்படியே... ஒரே காலக்கட்டத்து இன்னொரு தலைவருக்கு பாபா நேர்காணல் கூட தரவில்லை... மற்றொருவரை நேரில் சந்தித்தார்! அவரவர் பூர்வ ஜென்ம வினைக்கு ஏற்ப இறைவன் பாபா செயல்படுகிறார்! இன்றுவரை காரணம் இல்லாமல் பாபா எதையும் செய்வதில்லை!


ஆக... பாபாவுக்கு எந்த பேதமும் எதன்மீதும் இல்லை! காழ்ப்புணர்ச்சி இல்லை...தன்னை விட்டுப் பிரிந்து புறம்பேசுபவர்கள் மீது கூட வெறுப்பு இல்லை... அதே போல் தன்னிடம் அட்டை போல் ஒட்டிக் கொண்டவர்கள் மீது கூட பற்று இல்லை!

அப்படியே ஸ்ரீ சத்ய சாயி யுகமும்...

அவர்கள் அங்கே இருக்கிறார்கள் , இவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்ற பேதமே யுகம் பார்ப்பதில்லை... அவர்கள் அனைவரும் பாபா பக்தர்களாக இருக்கிறார்களா? அதுவே முக்கியம்! 

பாபா எவ்வழியோ அதுவே ஸ்ரீ சத்ய சாயி யுகத்தின் வழியும்...! காரணம் ஆன்மீக ஞானம் வந்துவிட்டால் அது மனபேதங்களை ஒருபோதும் தருவதில்லை!

ஆக...எல்லோரும் ஒரே குடையின் கீழ் அடைக்கலமாகி இருக்கிறோம் ! அதுவே பாபா தனது வலது கரத்தால் பிடித்துக் கொண்டிருக்கிற காவல் என்கிற கோவர்த்தன அருட் குடை!


மற்றபடி பாபா பக்தர்கள் அனைவரும் பக்தியின் பார்வையில் ஆன்மீகப் பிரபலங்களே! ஆன்மீகப் பிரபலங்கள் பாபாவிடம் அடைக்கலமாவது சுலபம்! உலகப் பிரபலங்கள் அடைக்கலமாகிற போது இறைவன் பாபாவின் அருமையை 

கூடுதலாக உணர்கிறோம்! காரணம்; துளசிச் செடியை சுற்றுபவர் பிருந்தாவனத்தைச் சுற்ற ஒன்றும் அதிக நேரம் எடுப்பதில்லை... ஆனால் பணத்தையே எண்ணிக் கொண்டிருப்பவர் இறைவனை எண்ணுவதற்கு அதிக காலம் எடுக்கிறது... அப்படி அவர்கள் ஆன்மீகப் புண்ணிய வழியில் திரும்புகிற போது அது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது! 

உண்மையில் இறைவன் பாபாவை தவிர எதுவுமே உலகில் ஆச்சர்யம் இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

1 கருத்து: