பூர்ணாவதார ஸ்ரீ சத்யசாயி பாபாவாக, கடவுள் இப்பூமியில் வந்திறங்கியபோது பல பவித்திரமான ஆத்மாக்களை தன்னோடு கொணர்ந்து தனது தெய்வீக நாடகத்தை அரங்கேற்றினார். அப்படிப்பட்ட பவித்ராத்மாக்களில் தனக்கென ஒரு விசேஷமான பாத்திரத்தைப் பெற்றவர் ஸ்ரீ ரத்னாகரம் கொண்டமராஜு அவர்கள். இறைவன் ஒரு அவதாரமாக பூமியில் இறங்கிவந்து வாழுகின்ற அதே காலகட்டத்தில், அவருக்கு சமகாலத்தவராக பிறப்பதென்பதே பல மனிதர்களுக்குக் கிடைக்காத பேரதிர்ஷ்டம். அதிலும் அவரது அவதாரப் பணியில் ஒரு கருவியாக செயல்பட்டு, இறுதியாக அவரது தெய்வீகத் தாமரைப் பாதங்களில் இணைவதை விட மனிதப் பிறவிக்கு பெரிய பாக்கியம் வேறெதுவும் இருக்க முடியாது.
சாதாரணமாகவே எந்தவொரு பாட்டனாருக்கும் தனது பேரனைக் கொஞ்சுவதென்பது மகிழ்ச்சியின் உச்ச அனுபவமாக இருக்கும். அதிலும் பரபிரம்மமே பால்மாறாக் குழந்தையாக தன் மடிமீது தவழ்வதென்பது தேவர்களுக்கும் கிட்டாத தெய்வீக அனுபவமல்லவா? அந்த வகையில் ஸ்ரீ கொண்டமராஜு எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி ஒரு மாபெரும் புண்ணியாத்மா ஆவார்.
🌷எளிமையானவர் மேன்மையானவர்:
புட்டபர்த்தியிலும், அத்தாலூகாவைச் சேர்ந்த மற்ற கிராமங்களிலும் ஸ்ரீ கொண்டமராஜு ஒரு மரியாதைக்குரிய மூத்த நபர். அவரும் அவரது சகோதரர் சுப்பராஜுவும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அந்தக் குடும்பத்துக்கென சில ஏக்கர் நிலம் இருந்தது; ஆயினும் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவு. கொண்டமராஜு மிகவும் பக்தியுள்ள மனிதர், எளிமையான நேர்மையான வாழ்க்கையை நடத்தினார்.
கிராமிய நாடகங்களில், குறிப்பாக புராண நாடகங்களில் அடிக்கடி பங்கேற்பார். இசையிலும் ஈடுபாடு கொண்டிருந்த அவர் புராணக் கதாபாத்திரங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். இசையிலும் நடிப்பிலும் இவர் வல்லுநர். லேபாக்ஷி கவிஞரின் இராமாயண தொடர்நிலைச் செய்யுட்கள் அனைத்தும் கொண்டமராஜு அவர்களுக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்தப் பகுதியில்… இராமாயண நாடகங்கள் நடந்தபொழுது இவர் இலட்சுமணனாக நடிப்பார். வெகுதூரத்திலுள்ள கிராமங்களிலிருந்தும் இவரை நடிக்க அழைப்பார்கள். ஏனெனில் இலட்சுமணனாக நடிக்கும்பொழுது அவர் காட்டிய உறுதியான பக்தியும் சரணாகதியும் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும்தொட்டன.பல புனித ஸ்தலங்களுக்கு சென்றவர், பல மகான்களுக்கு சேவை செய்தவர். துன்பத்தில் உள்ளவர்களுக்கு தாங்கும் தூணாக நடந்துகொள்பவர். விதைத்தால், உழுதல், அறுவடை செய்தல் அல்லது காளை மாடுகளை வாங்குதல் போன்ற விஷயங்களின் போது, கிராம மக்கள் அவருடைய ஆசீர்வாதத்தை நாடினர். திருமணங்கள் நிச்சயிக்கப்படும் வேளையிலும் அவரிடம் ஆசிகேட்டு இருவீட்டாரும் வருவர்; மணப்பெண் கழுத்தில் மங்களசூத்திரம் அணிவிக்கும்போது இவரிடம் அதனை எடுத்துத் தரச்சொல்லியும் ஆசிபெறுவர்.
எல்லா விரதங்களையும் உபவாசங்களையும் அனுஷ்டிப்பவர். இவர் சைவ உணவை மட்டுமே உட்கொள்பவர் என்பதால் தன் மக்களும், பேரன்மார்களும் வசித்துவந்ததற்குச் சற்றுத் தள்ளி சிறு குடிசை ஒன்றிலே வசித்துவந்தார். அது உண்மையிலே ஓர் ஆசிரமமாகத் திகழ்ந்தது; அங்கு எப்பொழுதும் இராமாயண கீதங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். தன் பேரக் குழந்தைகள் தன் கட்டிலைச் சுற்றி மொய்த்துக் கொள்வதிலே அவருக்கு மகிழ்ச்சி. அக்குழந்தைகளுக்குக் கடவுளைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் கதைகள் சொல்லுவார். குழந்தைகளும் அவரை விட்டு எப்பொழுதும் அகலுவதில்லை. ஏனென்றால், கதைகளிலே வரும் பாத்திரங்களையும் வீர வாழ்க்கை வரலாறுகளையும் தாமே பாடி நடித்து அவர்களை மகிழ்விப்பார்.
🌷வெங்காவதூதர்:
அவர் தனது மூதாதையர்களில் ஒருவரான வெங்காவதூதர் என்ற அவதூதர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். வெங்காவதூதர் தன்னையுணர்ந்தவர்; அந்தப் பகுதிகளில் உள்ள மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஆந்திர மாநில எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கர்நாடகாவின் சௌடேஸ்வரிபுரா என்ற கிராமத்தில் (தற்போது ஹுசைன்புரா) வெங்கவதூதர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்ததாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த வெங்காவதூதரே, முன்பு மஹாராஷ்டிராவில் ஷீரடி சாயி பாபாவின் குருவான வெங்குசாவாக இருந்தவர் என்றும் கூட சிலர் நம்பினர்."அவதூதா" - உபநிடதங்களின்படி... 'அ' என்பது “அக்ஷரத்தில் இணைந்தவர்" (எப்போதும் இருக்கும் நிஜம்), 'வ' என்பது "வரேண்யா" (மனிதர்களில் உன்னதமானவர்) மற்றும் 'தூத' என்றால் 'தூத சம்சார பந்தனாத்' (இந்த உலகத்துடன் தன் இணைப்பைத் தூளாக்கியவர்) என்று பொருள். வெங்காவதூதர் வாழும் காலத்தில் பல மகிமைகளைச் செய்ததாக கதைகளுண்டு. அதில் குறிப்பிடும்படியாக… ஒருமுறை கிணற்றில் விழுந்த கால்நடைகளையும் அதனை மீட்கப் போராடிய மக்களையும் பார்த்து, “நீங்கள் அனைவரும் ஏன் இவ்வளவு போராடுகிறீர்கள்?அவற்றை இழுக்க வேண்டிய அவசியமில்லை. காளைகள் தானாக வெளியே வரும்” என்றார். அவர் காளைகளை அன்புடன் அழைத்த அடுத்த வினாடி, அவைகள் மேலே வந்தனவாம். அதேபோல அவரின் ஜீவசமாதி குறித்த மற்றுமொரு கதையும் உண்டு. ஒரு சில முஸ்லிம்கள் ஹைதராபாத் நவாபிடம் அவதூதரின் உடல் கிராமத்தின் நடுவில் புதைக்கப்பட்டதாக புகார் செய்தார்கள். எனவே கல்லறையை அகற்ற நவாப் உத்தரவிட்டார்; கல்லறையைத் திறக்கும் பணி ஒரு சிப்பாய்க்கு வழங்கப்பட்டது. அவர் கல்லறையைத் திறந்தபோது அங்கே, "நேர்த்தியாக அமைக்கப்பட்ட பூஜைப் பொருட்களையும், பிரகாசமாகவும் நிலையாகவும் எரிந்துகொண்டு இருக்கும் விளக்குகளையும்” பார்த்தார். திகிலடைந்த அந்த சிப்பாய் மிகுந்த மரியாதையுடன் உடனடியாக கல்லறையை மூடிவிட்டு நகன்றார்; மேலும் அவரே ஒரு பக்தராக பின்னாளில் மாறினார். அந்தப் பகுதி மக்கள், பல சமயங்களில் அந்த புனிதத் தலத்தில் இருந்து துறவிகள் தோன்றுவதையும் மறைவதையும் கண்டதாக இன்றும் நம்புகிறார்கள்.
🌷வெங்காவதூதருடைய தெய்வீக வாக்கு:
ஒருமுறை ஒரு ஆலமரத்தடியில் கொண்டமராஜு வெங்காவதூதர் அருகே உட்கார்ந்திருந்த போது அவர், "பூதேவி அழுகிறாள். ஆகையால் நாராயணர் வருகிறார். நீ அவரைப் பார்ப்பாய். அவர் உன்னை நேசிப்பார்" என்று பலமுறை இவரின் காதில் சொன்னார். அதோடு அந்த வார்த்தைகளை கொண்டமராஜு நம்பும் வண்ணம் உறுதியும் வாங்கிக் கொண்டார். அந்தத் துறவியின் நினைவாகவே கொண்டமராஜு, தனது இரண்டு மகன்களுக்கும் பெத்த (தமிழில்: பெரிய) வெங்கம ராஜு மற்றும் சின்ன வெங்கம ராஜு என்று பெயரிட்டார்.
🌷தனிமையில் காத்திருந்த சத்யபாமா:
கொண்டமராஜு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவியான சத்தியபாமாவுக்கு ஒரு கோவில் கட்டினார். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வழக்கில் இருந்திராத சத்யபாமா கோவிலை, தங்கள் கிராமத்தில் எழுப்பினார். ஒரு விசித்திரமான கனவின் மூலம் ஏற்பட்ட உந்ததுலில் அந்தக் கோவில் எழுப்பப் பட்டதாகக் கூறினார். அந்த தெய்வீகக் கனவு அனுபவத்தை அவர் நினைவுகூரும் போதெல்லாம் அவரது கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
கொண்டமராஜு தனது கனவில், "பாரிஜாத மலர்களை சொர்க்கத்தில் இருந்து கொண்டு வருவதற்காக சென்ற கிருஷ்ணனை எதிர்பார்த்து, தனிமையில் சோகத்துடன், சத்யபாமா" காத்திருப்பதைக் கண்டார். நிமிடங்கள் மணிநேரங்களாகவும், மணிநேரங்கள் நாட்களாகவும் ஆகின. அப்போதும் கிருஷ்ணன் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை! சத்யபாமா கண்ணீர் விட்டு அழுதார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை மற்றும் சூறைக்காற்றும் வீசியது.அதிர்ஷ்டவசமாக அவள் நின்ற இடத்தின் அருகே சென்ற கொண்டமராஜு மீது அவள் பார்வை பட்டது. அவரிடம், "கொஞ்சம் தங்குமிடம் கொடுக்க வேண்டும்." என்று கேட்டாள். இதுவே அவர் கண்ட அந்த வித்யாசமான கனவாகும்; இதன் பின்னரே அவர் சத்யபாமாவுக்கென கொல்லபள்ளியில் ( புட்டபர்த்தியில்) சிறிய கோவிலொன்றை எழுப்பினார்.
🌷பேரண்டப் பெருநாயகன் தனது பேரன்:
கொண்டமராஜுவின் உறவினர் திரு.சுப்பாராவ் என்பவர் பர்த்தியிலிருந்து 100 மைல்கள் தொலைவிலிருந்த "கோலிமிகுண்ட்லா" என்ற குக்கிராமத்தில் வசித்துவந்தவர். அவர் சிவனின் மீதிருந்த பக்தி மிகுதியால், ஒரு சிவன் கோயிலைக் கட்டியவர். பர்த்திக்கு அருகில் கர்நாடகபள்ளி என்ற சிற்றூரில் குடி அமரச் செய்து தனது மூத்த மகனான பெத்த வெங்கப்ப ராஜுவுக்கு, சுப்பாராவின் மகள் நாமகிரியம்மா-வை (ஈஸ்வரம்மாவின் இயற்பெயர்) மணம் முடித்து வைத்தார் கொண்டமராஜு. அதுசமயம் தமது மருமகளுக்கு ஈஸ்வராம்மா என்ற பொருத்தமான புதுப் பெயரையும் சூட்டினார். வெங்காவதூதர் வாக்கிற்கேற்ப நாராயணனே வந்து இவர் மடியில் பேரனாகத் தவழ்ந்த அற்புதங்களைக் குறித்து பகுதி-2ல் காணலாம்.
ஒருமுறை ஸ்ரீ.கொண்டமராஜு அவர்கள், தனது (சிறிதளவே ஆன) சொத்துக்களை தன்னுடைய மற்றும் தனது தம்பியின் குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, தன் குடும்பத்தினரிடம் பின்வருமாறு கூறினார். "எனக்கு எதுவும் வேண்டாம். நான் உங்கள் வீடுகளுக்கு வரமாட்டேன். எனக்கு உங்கள் உணவு தேவையில்லை. நான் மிகவும் மதிக்கும் ஒரு சொத்தை எனக்குக் கொடுங்கள், அது 'சத்யா' (சத்ய நாராயண ராஜு) தான். அவன் மட்டும் என்னுடன் இருந்தால் போதும். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை". கொண்டமராஜு சுவாமியின் தெய்வீகத்தை உணர்ந்திருந்தார்.
🌷சுவாமியின் சமையல்:
சுவாமியும் தனது பாட்டனாருக்குத் துணை நின்று அன்புடன் சேவை புரிந்தார். சுவாமியின் சிறுவயதில் தாத்தாவுக்கு உணவு சமைப்பது தான் அவர் வேலை. அவர்களின் தெருவில் உள்ள மக்கள் சுவாமி தயாரித்த உணவை ருசிக்கும் பேறுபெற்றவர்கள், குறிப்பாக மிளகு ரசம்! புக்கப்பட்டினம் பள்ளியிலிருந்து மாலையில் சுவாமி திரும்பும் நேரத்தில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாமியின் மிளகு ரசத்திற்காக வீட்டின் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன், கொண்டமராஜு, "என் கண்ணே! இவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நீங்கள் தயாரித்த ரசத்தை அவர்கள் உண்ண விரும்புகிறார்கள். தயவு செய்து உடனே செய்து கொடுங்கள்" என்பார். சுவாமி மிளகு ரசத்தை விரைவாக தயார் செய்து, அவர்களின் டம்ளர்களில் நிரப்புவார்.🌷ஏழுலக அதிபதி ஓர் ஏழை மாணவன்:
தினமும் அதிகாலையில் எழுந்து பாத்திரங்களைக் கழுவி, உணவு சமைத்துவிட்டு, சுவாமி புக்கப்பட்டினத்தில் உள்ள தனது பள்ளிக்கு நேரத்திற்குள் செல்வதற்கு ஓடுவார். பின்னர் சரியாக மதியம் ஒரு மணிக்கு, தாத்தாவுக்கு உணவு பரிமாற புட்டபர்த்திக்கு திரும்பி வந்து, தானும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்குத் திரும்புவார். புட்டபர்த்திக்கும் புக்கப்பட்டினத்துக்கும் இடையே தினமும் அலைந்து, சத்யா உடல் உளைச்சலுக்கு ஆளாவதைக் கண்டு கொண்டமாராஜு வருத்தப்பட்டார். அதனால் அவர், "சத்யா! புக்கப்பட்டினத்திலிருந்து தினமும் மதிய உணவு நேரத்தில் எனக்கு உணவு பரிமாறவும், சாப்பிடவும் வர வேண்டியதில்லை. நானே எனக்கான வேலைகளை செய்து கொள்ள முடியும். காலையில் பள்ளிக்குச் செல்லும்போது, மதிய உணவிற்கு ராகி-களி எடுத்துக் கொள்ளுங்கள். மதியம் வெயிலில் இங்குமங்கும் அலைய வேண்டாம்" என்றார்.
டிபன் கேரியரில் விதவிதமான உணவுகளைக் கொண்டு வரும் மற்ற மாணவர்கள் முன்பாக ராகி-களியை கொண்டு செல்ல சத்யா தயங்கினார். மதிய உணவுக்கு அரிசி வாங்க முடியாத ஏழைப் பையன் என்று முத்திரை குத்தப்படலாம். தோழமையோடும் ஏழைமை பேசேல் என்ற சித்தாந்தத்தின் படி, மதிய உணவுக்கு வீட்டிற்கு வர முடிவு செய்ததாகக் கூறினார். "தாத்தா! எந்த சோதனையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். நான் கஷ்டங்களுக்கு அஞ்சமாட்டேன்".. உண்மையில் இது எனக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி" என்றார். தாத்தாவோ மிகவும் வருத்தமடைந்து, 'இது என்ன வகையான உடற்பயிற்சி? இந்த எட்டு வயதில் ஏன் இவ்வளவு கடுமையான உடற்பயிற்சி?' என்று வருந்தினார்.
🌷சத்யாவின் ஓம்காரம்:
ஒரு நாள் சத்யா (சுவாமி) இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் மூச்சில் இருந்து ஓம்கார சத்தம் வெளிப்பட்டது. பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த கொண்டமராஜு ஆச்சரியத்தில் நெகிழ்ந்து போனார் . அவர் சத்யாவின் மூக்கின் அருகில் காதை வைத்து, அந்த ஓம்கார சப்தத்தை கவனத்துடன் கேட்டார். மறுநாள் அதிகாலையில் அவர், 'சத்யா! என் அன்பே! இந்த நிகழ்வை நாம் கொண்டாட வேண்டும். நேற்றிரவு உனது மூச்சிலிருந்து ஓம்கார சத்தம் வெளிப்பட்டது.' என்றார். இதைக் குறித்துப் பின்னாளில் சுவாமி விளக்கும்போது, "நான் உறங்கும் போது கொண்டமராஜு அவ்வப்போது "சோஹம்" என்ற சப்தம் கேட்டது நிஜம். அவர் என் அருகில் வந்து, நான் மூச்சு விடுகிறேனா இல்லையா என்பதை என் மூக்கின் அருகே விரலை வைத்து சோதித்துப் பார்ப்பது வழக்கம்". இத்தகு தெய்வீக அனுபவங்கள் பலவற்றை கொண்டமராஜு அனுபவித்தார்.
🌷உறுதிகொண்ட நெஞ்சினன்:
கொண்டமராஜு 112 வயது வரை வாழ்ந்தார். தினமும் காலையில் அவர், சுவாமியின் தரிசனத்திற்காக புட்டபர்த்தி கிராமத்திலிருந்து புதிய மந்திருக்கு நடந்தே வருவார். ஒரு நாள் சுவாமி அவரிடம் கேட்டார் , “நீங்கள் ஏன் நடந்து வருகிறீர்கள்? வழியில் கால்நடைகள் இருக்கலாம், அவை உங்களை இடித்தால் நீங்கள் கீழே விழுந்து காயமடைக் கூடுமே?" . அதற்கு அவர் மிகவும் தைரியமாக, ‘சுவாமி! நீங்கள் என்னைப் பாதுகாத்து, தொடர்ந்து என் பக்கத்தில் நிற்கும்போது, எந்த விலங்கு என்னைத் தாக்கும்?’ என்றார்.
கொண்டமராஜு வெகுகாலம் ஒரு சிறிய தாம்பூலக் கடையை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் சுவாமியிடம் வந்து கொஞ்சம் பணம் கொடுத்து, 'சுவாமி! நான் யாருக்கும் அநீதி இழைத்ததில்லை, யாரையும் ஏமாற்றவில்லை. தவறுதலாக யாருக்காவது ஒரு அனாவையோ ரெண்டனாவையோ கொடுக்க நான் மறந்திருக்கலாம். நீங்கள் எங்கள் ரத்னாகர குடும்பத்தை அவதரிக்கத் தேர்ந்தெடுத்துள்ளதால், அது நிச்சயம் புனிதம் பெற்றது. ஆகையினால் நான் யாரிடமும் கடனாளியாக சாக விரும்பவில்லை. எனவே இந்த பணத்தை சில்லறைகளாக மாற்ற ஏற்பாடு செய்யுங்கள். எனது இறுதி ஊர்வலத்தின் போது இந்த நாணயங்களை வீசவும் . அப்படிச் செய்வதன் மூலம், எனக்குத் தெரியாமல் எஞ்சியிருக்கும் கடனில் இருந்து மீட்கப்படுவேன்’ என்றார்.
சுவாமி அவரிடம், "அதற்காக நீங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? அதற்கு நானே ஏற்பாடு செய்ய முடியும்!" என்றார். ஆனால் கொண்டமராஜுவோ, 'இல்லை சுவாமி! என் கடனை என் சொந்தப் பணத்தில் தீர்க்க வேண்டும்!' என்றுசொல்லி மறுத்தார். அத்தகு தியாகம் மற்றும் நேர்மை போன்ற உன்னத கொள்கைகளால் தான், ஸ்ரீ கொண்டமராஜு அவர்களுக்கு கடவுளின் அருளை அந்த அளவுக்குப் பெற முடிந்திருக்கிறது என்பது தெளிவாய் விளங்குகின்றது.
🌷கடைசி வரம்:
மற்றொரு சமயம் கொண்டமராஜு அவர்கள் சுவாமியிடம் வந்து, ‘சுவாமி! நீங்கள் எங்கள் குடும்பத்தில், எங்கள் பரம்பரையில் பிறந்தீர்கள் . எங்கள் பரம்பரையின் பெருமையையும் புகழையும் நிலைநாட்டினீர்கள். நானும் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எனது வாழ்வின் கடைசி தருணங்களில் உங்கள் தெய்வீக கரங்களால் என் வாயில் சிறிது புனித நீரை ஊற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். சுவாமி மிகுந்த அன்புடன் அவருடைய கோரிக்கையை ஏற்று, "நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று உறுதியளித்தார். அதைக் கேட்டவுடன் கொண்டமராஜு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏனென்றால், சுவாமி ஒருமுறை தம்முடைய வார்த்தையைக் கொடுத்தால், அவர் நிச்சயமாக அதை நிறைவேற்றுவார் என்பதை கொண்டமராஜு அறிந்திருந்தார்.
🌷தெய்வீக அரங்கேற்றம்:
ஒரு நாள், அதிகாலையில் மந்திருக்கு சென்று தரிசனம் செய்தார். வீடு திரும்பி, உடனே படுத்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து ஈஸ்வரம்மாவை சத்யபாமா கோயில் அருகே சென்று சுவாமி அந்தப் பக்கம் வருகிறாரா என்று பார்க்கச் சொன்னார். அவள் அங்கு சென்று திரும்பி வந்து அவரிடம் , “ஆம், சுவாமி காரில் வருகிறார்” என்றாள். உடனே கொண்டமராஜு, ‘ஈஸ்வரம்மா! ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் ஒரு துளசி இலையைப் போட்டுக் கொடு’ என்றார். ஈஸ்வராம்மாவும் அப்படியே செய்தாள். கையில் டம்ளரைப் பிடித்துக் கொண்டு சுவாமிக்காக காத்திருந்தார்.
அவருடைய முடிவு நெருங்கிவிட்டது என்றும், சுவாமி தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவே அங்கு வந்திருக்கிறார் என்றும் அவர் அறிந்திருந்தார். அதை வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. டம்ளரைப் பிடித்துக் கொண்டு, ‘சுவாமி! நான் தயார்’ என்றார். சுவாமியும் “நானும் தயார்” என்று பதிலளித்தபடி, அவரின் வாயில் தண்ணீரை ஊற்றினார். கொண்டமராஜு நிம்மதியாக சுவாமியின் அருகாமை என்னும் தெய்வீக இனிமையை அனுபவித்தவண்ணம் உடலை உதிர்த்தார் . இறப்பதற்கு முன் சுவாமியிடம் அவர் பின்வருமாறு கூறினார், ‘இந்த உலகத்தை விட்டுப் பிரிவதற்கு முன், உங்கள் தெய்வீக கரங்களிலிருந்து தண்ணீரைக் குடிப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்! பெரும் தவமும் யாகமும் செய்த மன்னன் தசரதனுக்குக் கூட அப்படியொரு பாக்கியம் இல்லை. என் உயிர் மீட்கப் பட்டுவிட்டது’. அவ்வாறு கூறிவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.
இதைக் குறித்து 2005ம் ஆண்டு மார்ச் 9 அன்று, தனது தெய்வீகப் பேருரையில் பகவான் பின் வருமாறு குறிப்பிட்டார், “கொண்டமராஜுவின் இந்த சம்பவத்தின் மூலம், எந்த சூழலிலும்… ஸ்வாமி நிச்சயமாக தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார் என்பது மீண்டும் முழு உலகிற்கும் தெரியவந்தது! சுப்பம்மா மற்றும் கொண்டமராஜுவின் ஆன்மாக்கள் மீட்கப்பட்டன. எனது வார்த்தைகளை நிறைவேற்ற பல வழிகளில் எனது தெய்வீக லீலைகளை வெளிப்படுத்துகிறேன். எனது வாக்குறுதியை நிறைவேற்ற நான் எந்த எல்லைக்கும் செல்கிறேன். ஆனால், சில பக்தர்களோ அவர்களின் வார்த்தைகளுக்கு மாறாக நடந்து கொள்கின்றனர்”.
மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்
✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக