தலைப்பு

செவ்வாய், 25 அக்டோபர், 2022

இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லலாமா?


நம் இளைஞரின் போக்கு மிகவும் விபரீதமாக இருக்கிறது. இறைவன், குரு, பெற்றோர், பெரியோர் ஆகியவர்களுக்கு
பணிந்து வாழ்ந்தால் அவமானம் எனக் கருதுகிறார்கள்! ஆனால் இவர்களே பிச்சைக்காரர்கள் ஆவதில் பெருமைப்படுகிறார்கள்! எப்படி என்று கேட்கிறீர்களா? 
பிச்சை எடுப்பவர்களை நாம் என்ன சொல்கிறோம்? ஆண்டிப் பரதேசிகள் என்கிறோம்! 
பரதேசி என்றால் என்ன?
வெளி நாட்டைச் சேர்ந்தவன் என்றே அர்த்தம்! தன் நாட்டிலேயே பிழைக்க கையால் ஆகாமல் வெளிநாட்டுக்கு சென்று யாசகம் வாங்கிப் பிழைப்பவனைப் பரதேசி என்றும் பிச்சைக்காரன் என்றும் அழைத்தார்கள்! அவன் படிக்காதவன், பணமில்லாதவன், ஏதோ பிடி அரிசி, ரொட்டித் துண்டு, பத்து ரூபாய் கேட்பவன்... அவ்வளவு தான்! 

ஆனால் மற்ற எல்லாவற்றிலும் மானம், ரோஷம் என்று திமிராக விறைத்துக் கொண்டிருக்கும் உங்களுடைய படித்த இளைஞர்கள் - பிச்சை எடுப்பவர்களை விட பணவசதி அதிகமுள்ள அதே இளைஞர்கள்- படிப்பு முடிந்த அடுத்த நொடியே வெளிநாடுகளுக்குப் போய்ப் பரதேசியாக அங்கே பிச்சை வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்! பிடி அரிசி , ரொட்டித்துண்டு, பத்து ரூபாய் என்றில்லாமல் லட்சம் லட்சமாய் பிச்சை எடுக்க ஆசைப்படுகிறார்கள்! அதில் அவர்களை விடவும் பெற்றோர்களுக்கு அவ்வளவு பெருமை...! தங்கள் பிள்ளைகளே பரதேசத்தில் (வெளி தேசத்தில்) பிச்சைக்காரர்களாகப் போவதில்...

"இந்திய தேசத்தில் உண்மையான திறமைக்கு மதிப்பில்லை... இங்கே எல்லாம் பல சலுகைகள், தேர்தல் வெற்றி இவற்றை கணக்கில் வைத்தே செயல்படுவதால் அறிவுத்தகுதிக்கு உரிய பலன் கிடைப்பதில்லை" என்கிறார்கள்! அது உண்மைதான் என்றாலும் கூட உங்களுடைய திறமை உங்கள் தேசத்திற்கே பயனாக வேண்டும் என்ற திடமான உறுதி கொண்டு, இறைவனின் மேல் நம்பிக்கை வைத்து முயற்சி செய்தால்... 'யோக ஷேமம் வஹாம்யஹம்' என்று சத்தியம் செய்து கொடுத்துள்ள சுவாமி அவரவர்களை காப்பாற்றாமல் விடமாட்டேன்!

ஸ்ரீ ராமர் இராவணனை வதம் செய்த உடன் இலங்கை ராஜ்ஜியத்தையே ஆளுமாறு விபீஷணன் சொன்ன போதும்... அதை உடனடியாக மறுத்து தன்னை அரசராக அயோத்தி மக்கள் ஏற்காவிட்டாலும் ஒரு சராசரி குடிமகனாக அங்கேயே வசிப்பேனே தவிர எந்த தேசத்தையும் ஆட்சி செய்யும் விருப்பம் தனக்கு அறவே இல்லை என்கிறார்!

ஈரான், ஈராக் என்று பாரத இளைஞர்கள் காசுக்காக ஓடினார்கள்... பிறகு அங்கே யுத்தம் ஏற்பட்ட போது உயிர் பிழைத்தாலே போதும் என திரும்பி இங்கேயே ஓடி வர நேர்ந்தது! சில நாடுகள் இந்தியர்கள் குடியேறுவதை விரும்புவதில்லை... ஆகையால் குடிவுரிமையை வழங்க மறுக்கிறார்கள்! "அவர்களுக்கு உலகம் தழுவிடும் மனிதாபிமானம் வேண்டும்" என்று சொல்ல இந்தியர்களுக்கு எந்த உரிமையும் இல்லை... இந்தியர்களுக்கே இந்திய தேசம் மீது தேசப்பற்று இல்லாமல் வெறும் காசுக்காக, சொகுசு வாழ்க்கைக்காக அங்கே ஓடிப்போகிற போது அறிவுரை வழங்கும் தகுதியை இந்தியர்கள் இழந்து விடுகிறார்கள்! வெளிநாட்டினர் செய்வது தவறாகவே இருந்தாலும், அயலான் ஒருவன் வம்படியாக தான் அங்கு வரவே செய்வேன் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?
உங்கள் ரோஷமுள்ள புரட்சிக்கார இளைஞர்கள் , வெட்கம் மானமின்றி எப்படியாவது ஏதாவது தந்திரமாவது செய்து விசா வாங்கிக் கொண்டு அங்கே சென்று, மீண்டும் ஏதேனும் ஒரு தந்திரம் செய்து அங்கேயே தங்கிவிடுகிறார்கள், இதனால் வெளிநாட்டினர்க்கும் இந்தியா மீதான தவறான அபிப்ராயம் உருவாகிறது! 

பணத்தால் வெளிநாட்டில் இந்திய இளைஞர்கள் பொய்யான மேம்பாட்டையே ஒரு பக்கம் பெருமையாக நினைக்கிறார்கள், வெளிநாட்டினரோ அவர்கள் துய்த்த உலக போகங்களில் உண்மை இல்லை எனும் உணர்வில் விரக்தி ஏற்பட்டு இந்திய ஆன்மீகம் தேடி வருகிறார்கள்.. ஆனால் இந்திய இளைஞர்களோ அவர்கள் உமிழ்ந்த பொய்யான உலக போகம் எனும் எச்சிலை இனிமை என கற்பனை செய்து சாப்பிட்டு மயங்குகிறார்கள்...! இந்த பரிதாபத்தை என்னவென்று சொல்வது? 

அறிவை விரிவாக்கிக் கொள்ள வெளிநாட்டிலும் சென்று கல்வி கற்கலாமே தவிர... அங்கேயே ஜீவனம் (பிழைப்பு) தேடுவது என்பது ஆன்ம ஜீவனத்திற்கே பாதிப்பை தருகிறது! இந்திய தேசத்துக்கும் இதனால் மகத்தான இழிவு! 
சுவாமியின் மாணவர்கள் ஒருகாலும் வெளிநாட்டில் பிழைப்பு தேடிக் கொள்ளக் கூடாது... அவர்களுக்கு திறமைகள் இந்திய நாட்டுக்கே பயன்தர வேண்டும் என்பதில் சுவாமி நான் கண்டிப்பாக இருக்கிறேன்! 

ஆண்மை என்பது எதற்கும் அடங்காமையில் இல்லை... அதர்மத்திற்கு ஒருபோதும் தலை பணியாமல் தீரமுடன் எதிர்த்து நிற்கும் தர்ம உறுதிதான் ஆண்மை! தன்னுயிரை தியாகம் செய்தேனும் அபலைகளை (காவலற்றவர்களை) காப்பது தான் ஆண்மை! இந்திரியப் (ஐம்புலன்கள்) படையை ஆன்ம சக்தியினால் எதிர்ப்பது தான் ஆண்மை! நவயுக சபலங்களில் மயங்கி விடாமல் சுதேசத்தின் உயிர்ப்பண்புகளை உறுதியாய் நின்று காத்து வருவது தான் ஆண்மை! இந்த லட்சணத்தில் இந்திய இளைஞர்களுக்கு ஆண்மை இருக்கிறதா? என்பதில் சந்தேகப்படவே நேர்கிறது! ஈவ் டீசிங், தேர்வில் காப்பி அடிப்பது போன்ற தீய விஷயங்களில் இளைஞர்களுக்கு என்னவிதமான ஆண்மை என்பதைப் பார்க்கமுடிகிறது! கோமாளித்தனமாய் வித வித மீசை, கிர்தா, தாடி, பண்பாட்டுக்கு ஒவ்வாத கலாச்சார சீரழிவு இவை எல்லாம் பரவலாகி விட்டன...முகத்தைப் பார்த்தவுடனேயே அன்பின் குளிர்ச்சி வெளிப்பட வேண்டும்... ஆனால் இளைஞர்களின் மன இயல்புகளே கோணல் மாணலாக அவர்களின் முகத்தில் வந்து குடிகொள்கிறது!

இந்திய இளைஞர்கள் கெட்டு போவதற்கு மிக முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்களே...!
 கண்டதே காட்சி - கொண்டதே கோலம் என ஆன்மீக லட்சியமும் பக்தியும் இல்லாமல் பெற்றோர்கள் இருக்கும் வரை தங்களது பிள்ளைகளை எப்படி ஒழுங்காக வளர்ப்பார்கள்? தங்கள் பிள்ளைகள் எந்த வெளிநாட்டில் வேண்டுமானாலும் சென்று சம்பாதிக்கட்டும்.. அதைப் பற்றி அவர்களுக்கு முக்கியமே இல்லை.. அவர்களுக்குத் தேவை பணமும்... பிறரிடம் பெருமை அடித்துக் கொள்வது மட்டுமே... நல்ல ஒழுக்கம், சுயக்கட்டுபாடு, இறை நம்பிக்கை என ஒன்றையாவது தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற சிறு அக்கறை கூட இந்தியப் பெற்றோர்களுக்கு இல்லை...! ஆக முதல் குற்றவாளி அவர்களே! அவர்களே அப்படி இருக்கும் போது...அவர்கள் வழி வந்த இளைஞர்களை நாம் எப்படி குறை சொல்ல முடியும்?
அதனால் தான் சுவாமியின் கல்லூரியில் ஆன்மீகக் கல்வியும் இணைந்து போதிக்கப்படுகிறது! உலகாயத கல்வியை தவிர்க்க முடியாது.. காரணம் அது அவர்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய... ஆனால் ஆன்மீகக் கல்வியே ஆன்மாவுக்கான கல்வி.. பிறவியை கரைசேர்க்கும் கல்வி! ஒழுக்கத்தை வளர்த்தெடுத்து ஒருவரை உன்னதமாக்கும் கல்வி.. அதை முக்கியமாக போதிப்பதிலேயே சுவாமி கண்ணும் கருத்துமாக இருக்கிறேன்!
வெறும் இயந்திரமாக வேலைக்குச் சென்று பிழைத்து வயிற்றைக் கழுவ வேண்டும் என்பதற்காகவா சுவாமி கல்லூரி நடத்துகிறேன்? இல்லை- ; சம்பாதிப்பதும் இதில் உண்டு... ஆயினும் நல்ல மனிதராய் ஒருவர் உயர்ந்து, பேரன்பில் வார்த்தெடுக்கப்பட்டு, சமூக சேவை செய்து இறையருளை சம்பாதிப்பதற்கே சுவாமி அளித்து வரும் ஆன்மீகக் கல்வி!

(ஆதாரம் : அறிவு அறுபது/ பக்கம் : 145-155/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக