தலைப்பு

திங்கள், 10 அக்டோபர், 2022

காஞ்சன்காட் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிஜி & ஸ்ரீ நீலகண்ட பர்வத யோகி | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

எவ்வாறு ஒரு துறவியும் யோகியும் பாபாவை உணர்ந்து அதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. உண்மையில் பாபா சமாதி அடைந்துவிட்டாரா? எனும் அடிப்படை கேள்விக்கான ஆழமான விளக்கம் சுவாரஸ்யமாக இதோ...


🌷காஞ்சன்காட் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிஜி:

இவரின் இயற்பெயர் ஆனந்தசிவன்... அது 1947 ஆம் ஆண்டு..‌ தனது 28 ஆவது வயதில் பப்பா ஸ்ரீ ராம்தாஸ் சுவாமிகளை முதன்முறையாக தரிசிக்கிறார்... பாரதம் புறசுதந்திரம் அடைகிற போது ஆனந்த சிவத்திற்கோ அகசுதந்திரம் அரும்ப ஆரம்பித்துவிடுகிறது! 5 வயதிலேயே தாயை இழந்து வாடுகிறார்... தாயின் இழப்பே தயாபர இறைவன் மேலான சாய்தலை அதிகப்படுத்துகிறது என்பதால் தான் பல மகான்கள் தங்களது வாழ்க்கையில் இப்படி ஒரு பேரிழப்பை சந்திக்கிறார்கள்... பகவான் ரமணர் பகவான் சிறுவயதிலேயே தந்தையை இழந்து உலகத்தந்தையை தரிசிக்க அருணகிரி வருகிறார்... பகவான் பரமஹம்ச ஸ்ரீ யோகானந்தர் சிறுவயதிலேயே தாயை இழந்து வருந்தி தனக்குள் தெய்வீகம் முகிழ குருவை சரணடைகிறார்! அது போலவே ஆனந்த சிவனும்... தாயிழந்த தனிமையும் சோகமும் வாழ்வில் எது நிரந்தரம்? என்பதை தேடிப் பார்க்கத் தூண்டுகிறது

... பிறகு பட்டாளத்தில் (பாதுகாப்புப் படை) சேர்கிறார்! அப்போதும் அகத்தேடுதல் விடவில்லை... அவர் வந்து சேர்ந்த இடம் ராமதாசரின் காலடி... 

முதல் குரு தரிசனமே அவரை ஆன்மீக மலர்ச்சி அடைய வைக்கிறது.. ஆனந்தாஸ்ரமமே தனது தாய் மடியாக உணர்கிறார்... குருவின் தேவைகளை கவனித்துக் கொள்கிறார்... 1949 ல் நிரந்தரமாக ஆசிரவாசி ஆகிறார்.. குருஸ்ரீ ராமதாசரின் சிஷ்யை மாதாஸ்ரீ கிருஷ்ண பாயின் குரு சேவையிலும் ஆசிரம நிர்வாகத்திலும் உதவுகிறார்... குருநாதரின் காரியதரிசியாக விளங்குகிறார்! இமயமலைக்கு சென்று அங்கேயே தியானத்தில் மூழ்கிவிடப் போகிறேன் என தெரிவித்த போது மாதாஜி அவரை தடுத்து ரிஷிகேஷத்தில் தியானிக்கச் சொல்கிறார்.. தனித்தியானம் மேற்கொள்கிறார்...8 மாதங்கள் கடுந்தியானம்.. பிறகு குரு அழைப்பை ஏற்று அவரோடு உலக ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறார்! 

பிறகு அவருக்கு குருநாதரால் சன்யாச தீட்சை அளிக்கப்பட்டு சுவாமி சச்சிதானந்தாவாகிறார்! 

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் ஆரம்ப காலத்தில்.. ஆனந்தாஸ்ரமத்தில் அவர் தங்கி இருந்தபோது.. குருவின் அருள் தனக்கு வேண்டும் எனக்கேட்கையில்.. குருநாதரிடம் மந்திர தீட்சை கேளுங்கள் என்று பாதையைக் காட்டி தூண்டிவிட்டவரே சுவாமி சச்சிதானந்தா அவர்கள் தான்!ராம்சுரத்குன்வர் பகவான் யோகி ராம்சுரத்குமாராக (திருவண்ணாமலை விசிறி சாமியார்) மலர்ந்ததற்கு சுவாமி சச்சிதானந்தாவும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது!


ஒருமுறை சுவாமி சச்சிதானந்தாவிடம் பாபாவை பற்றி பல விமர்சனம் முன்வைக்கப்பட்டது... அதற்கு அவர் அளித்த ஒரே பதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது...!

"பாபா கடவுள்! அவ்வளவு தான்! நீ மற்றவற்றை எல்லாம் மறந்துவிடுங்கள்! இதை மட்டும் நினைவில் நிறுத்துங்கள்!" என்கிறார்! 

அவரின் பாபா உணர்தல் அத்தகையது... அவருடைய ஆசிரமத்தில் முழுக்க முழுக்க ராமஜபமே... 24 மணிநேரமும் ராமஜப வேள்வியே நிகழ்ந்து கொண்டிருக்கும்... ராமர் வேறு பாபா வேறு இல்லை என உளமாற உணர்ந்த தூய துறவியின் பதில் அது... இல்லை எனில் அந்த விமர்சனம் பற்றி தனக்கு தெரியாது என்றே நேர்மையாக பதில் சொல்லி இருக்கலாம்... ஆனால் பாபா யார்? என்றும் விமர்சனங்கள் பெரிய விஷயமாக அவர் பொருட்படுத்தவே இல்லை என்பதையும் அவர் பதிலே சுட்டிக்காட்டுகிறது..

"அவதார புருஷர்களான ராமர் கிருஷ்ணருக்கே விமர்சனம் எழுந்திருக்கும் பொழுது.. நான் எம்மாத்திரம்? சாதாரண பிச்சைக்காரன்!" என்பார் மகான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார்! அந்த வாசகம் தான் அவதார புருஷரின் மேல் விழும் விமர்சனத்திற்கான உலகம் அறிய வேண்டிய திருச்செய்தியும்! 


சில ஊடகவாசிகள் புட்டபர்த்தி கிராமவாசிகள் மற்றும் சுற்றி உள்ள மக்களிடம் பாபாவை பற்றி பல விமர்சனம் வைத்த போதும்... "ஒட்டுமொத்த உலகமே பாபாவை மறுத்தாலும்.. எங்களுக்கு அவரே கடவுள்..!" என்கிறார்கள்... இவர்களின் பதிலும் தூயத்துறவியான சுவாமி சச்சிதானந்தா அவர்களின் பதிலும் எப்படி பொருந்திப் போகிறது! அதுதான் பாபாவின் மகிமை! கசடர் முதல் மகான்கள் வரை.. அசடர் முதல் விஞ்ஞானிகள் வரை பாபா அனைவருக்குமான கடவுள்.. இதை அனைவரும் நெருங்கி வருகிற பிரேம காலங்களில் சர்வ நிச்சயமாக உணர்வர்!


🌷ஸ்ரீ நீலகண்ட பர்வத யோகி:

அது 2011 மே மாதம் 11 ஆம் தேதி...பாபாவின் உயர்கல்வி (ஆராய்ச்சி பிரிவு) நிலையத்திலிருந்து இருவர் தங்களது பெற்றோரோடு பத்ரி யாத்திரை செல்கிறார்கள்! ஒருவர் அமர்தேஷ் பாண்டே (எம்.பி.ஏ), மற்றொருவர் சாயி கிரிதர் (எம்.எஸ்.சி)... அவர்கள் இமாலய பத்ரி ஷேத்திரத்தை அடைகிறார்கள்... அப்போது நீலகண்ட மலையில் திகழும் ஆசிரமத்தில் ஒரு யோகியை தரிசிக்கிறார்கள்! புட்டபர்த்தியிலிருந்து அவர்கள் வந்திருப்பதை அறிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியோடு "பாபா தனது உடலை துறந்துவிட்டார் என எந்த கவலையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்! பௌதீக உடல் அற்ற நிலையில் இருக்கிறார்! மற்றபடி அவர் இருக்கிறார்... ஒருமுறை அவரை தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்திருக்கிறது!" என வெளிப்படையாகப் பேசுகிறார்! அவர் சொன்ன ஆண்டு 2011... 11 ஆண்டு கடந்துகொண்டிருக்கிறது... ! அந்த இமய யோகி சொன்னது சர்வ சத்தியமானது! பாபா இப்போதும் இருக்கிறார் என்பதை பாபாவின் ஏராளமான உண்மை பக்தர்கள் அனுபவம் பெற்று வருகிறார்கள்! 

இன்னொரு மகான் பெயர் மௌனி பாபா! டெல்லி அவரது பூர்வீகம்! மகவதார் பாபாஜி அழைத்ததன் பெயரில் இமாலயம் வருகிறார்... பாண்டவர்கள் பயணித்த சுவர்காரோஹனா மலையில் 16 வருடம் தன்னை மறந்த தியானத்தில் லயித்தபடி மூழ்கிப் போகிறார்! 30 வயதான முகத்தோற்றம்... கேச நீளத்தை கவனிக்கையில் வயது அதிகமிருக்கலாம் எனும் அனுமானம் கொள்ள முடிகிறது! யோகிகள் தங்கள் வயதையோ பூர்வீகத்தையோ பெயரையோ அறிவித்துக் கொள்வதில்லை... அனைத்தும் கடந்தவர்கள் அவர்கள்! வெங்கடராமன் என்ற பெயரை கூட பகவான் ரமணமகிரிஷி யாரிடமும் அறிவிக்க வில்லை... ரமணர் என்பது காவ்ய கண்ட கணபதி முனிவர் வைத்த பெயர்.. அது போல் மௌனி பாபா என்பதும் அவர் இயற்பெயர் அல்ல! 


அந்த மௌனி பாபா ஒருமுறை பிரசாந்தி நிலையம் வந்திருந்த போது பாபா அவருக்கு தனிப்பட்ட நேர்காணலும் வழங்குகிறார்! மௌனி பாபா ஒரு சித்தபுருஷர்..Mystic (மிஸ்டிக்) என்பார்கள் ஆங்கிலத்தில்... நாகா எனும் பிரிவைச் சேர்ந்தவர்... அப்போது அவர் பாபாவின் மாணவர்களிடம் "பாபா மிகுந்த சக்தி வாய்ந்தவர்... காலம் கனிய கனிய பாபா தனது சக்தியை அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்! பாபாவின் பிரகாசமான சக்திக்கு எல்லைகளே இல்லை... வருங்காலத்தில் புட்டபர்த்தி ஒரு சித்த ஷேத்திரமாகவே திகழப் போகிறது!" என அகம் திறந்து பேசுகிறார்... மாணவர்கள் பரவசப்படுகிறார்.. யோகிகள் பேசுவதே அபூர்வம்... அதிலும் இமய‌யோகிகள்?! எப்பேர்ப்பட்ட கொடுப்பினை இதனை நாம் அறிந்து கொள்வதற்கு! 


(Proof : Sri SathyaSai and Yogis / Page no: 186,187) / Author : Jantyala Suman babu / Eng.Translation : pidatala Gopi Krishna | Source : R.D Awle "Sai the Divine Avatar A Beautiful Study and Thesis | Interview with Swami students , Ameydesh Pandey and Sai giridhar) 


பாபா தனது பொது தரிசனத்தை நிறுத்தினாரே அன்றி உண்மையில் பாபா சமாதி ஆகவே இல்லை! இப்போதும் தனது தூய பக்தர்களுக்கு பல ரூபங்களில் பல விதங்களில் பல பரிமாணங்களில் வழிகாட்டிக் கொண்டே தான் இருக்கிறார்! ஒரு மலர் உதிர்வது மீண்டும் இன்னொரு மலருக்கான உரமாகவே செடிக்கு மாறுவது போல் சாயியின் மூன்று அவதாரமும்... சத்தியம் பிரேமைக்கான பீடமாக அமைந்திருக்கிறது! சத்தியத்திலிருந்து தான் பிரேமையால் உதிக்க முடியும்...ஸ்ரீ பிரேம சாயி எனும் பிரேமையோ உலகம் முழுதும் பொங்கிப்பரவும் கங்கை... அதன் கங்கோத்ரியே ஸ்ரீ சத்ய சாயி எனும் சத்யம் !


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக