தலைப்பு

புதன், 12 அக்டோபர், 2022

தரமான அரிசி தானா? கேட்ட பாபா - திகைத்த பெண்மணி

கோயிலின் சந்நிதியில் ஒரு குழல் விளக்கை அமைத்து, அதில் தனது பெயரை விளம்பரப் படுத்தும் காலமிது. வேண்டாததையும், தரம் குறைந்த பொருட்களையும் தானமென்ற பெயரில் கொடுத்து, புண்ணியம் தேட நினைக்கும் சமயமிது. ஆனால் பகவான் பாபா தானம் செய்வது  பற்றி கூறும் அருள் வழிகாட்டிகள் யாவை?. அன்னதானம் என்னும் நாராயணசேவை பற்றி பாபா கூறுவதென்ன.?


🌷அன்னதானமல்ல அது நாராயணசேவை:

சாயி அவதாரப் பொன்விழா 1975ம் ஆண்டு ஜெகம் போற்றும் பெரு விழாவாகக்  கொண்டாடப்பட்டது. பல்வேறு கோலாகல நிகழ்ச்சிகளின் இடையில் பகவான் அனுதினமும் தமது அருட் சொற்பொழிவை அமுதமெனப் பொழிந்தார். இதன் சிகரமாக 21-11-1975 அன்று பகவான் ஆற்றிய இதயம்தொடும் பேருரை அமைந்தது. அது வறியவர்கள் பசியாற்றும் 'அன்னதானம்' என்று நாம் அதுவரை அழைத்துவந்த விஷயம் பற்றிய  விளக்கமாகும். பகவான் கூறுகிறார்.

வறியவர் பசியாற்றும் புனிதச்  செயலை 'அன்னதானம்' என்று அழைக்காதீர்கள். அது வறியவர்களுக்கு நீங்கள் அளிக்கும் தானமல்ல. சொல்லப்போனால், அந்த புனிதச் செயலை நீங்கள் செய்ய கைக்கொள்ளும் முறையும் அதன் தரமும் தான் வறியது. ( It is not POOR FEEDING, but  the way in which it is done is -POOR ) இது வறியவர் சேவையல்ல. அரியதோர் சேவை- நாராயண சேவை. ( பகவான் இப்படித்தான் அன்னதானத்தை நாராயணசேவை எனப் பெயரிட்டார்). தொடர்ந்து பேசிய பகவான் கூறிய ஒரு சொற்றொடரை , திரு. பகவந்தம் மொழி பெயர்க்கத் தயங்கியபோது, பகவான் அவர் அதை அப்படியே மொழி பெயர்த்து அனைவரும் அறியக் கூறுமாறு பணித்தார். அப்படி என்னதான் பகவான் கூறினார் "பகவானே உங்களிடம் கையேந்தி ஐயம் ( பிட்சை) கேட்பதாக எண்ணி, நாராயண சேவையில் ஈடுபடுங்கள்." நெஞ்சை உருக்கும் இந்த சொற்களைவிட, வேறு வலிமையான ஏற்கத்தக்க வகையில் நாராயண சேவை எப்படி செய்யப்பட வேண்டும் என்று  வேறு யாரால் கூற  இயலும்.


🌷சுவாமியே யாசித்தார்:

சுவாமியின் இந்த சொற்கள் வெறும் பேச்சுக்காகக் கூறப்பட்டவை அல்ல. இது சம்பந்தமான ஒரு நிஜ நிகழ்வை சாய்ராம் கீதா மோகன்ராம் அவர்கள் கூறுகிறார்... 


அது 1970ம் ஆண்டு நிகழ்ச்சி. ஸ்வாமி தமது நேர்காணல் அறையில் அமர்ந்து சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்மணி ஸ்வாமியிடம் கூறினார் "ஸ்வாமி. நாங்கள் எங்கள் சமிதியில்அற்புதமாக சேவை புரிகிறோம். நீங்கள் அவசியம் ஒருமுறை எங்கள் ஊருக்கு வந்து அதைப் பார்க்கவேண்டும்" ஸ்வாமி அவளது இந்தப் பேச்சை மும்முறை புறக்கணித்தார். அந்த பெண்மணி அப்போதும் விடாது தனது கோரிக்கையை வலியுறுத்தவே ஸ்வாமி நான் ஏற்கெனவே அங்கு வந்து பார்த்திருக்கிறேன் என்றார். நீங்கள் இதுவரை எங்கள் ஊருக்கு வந்ததில்லை ஸ்வாமி என்றாள் அவள்.  "அது இருக்கட்டும், அப்படி என்ன சேவை செய்கிறீர்கள் அங்கே?" என்றார் ஸ்வாமி. அதற்கு பெருமிதத்துடன் அந்த அம்மணி கூறியதாவது. "பத்து நபர்களுடன் ஆரம்பித்த நாராயணசேவை, இப்போது நாறு நபர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதற்காக 25 கிலோ அரிசி வரை  சேகரிக்கப்படுகிறது" கூறிய பெண்மணியைக் கூர்ந்து பார்த்த பகவான்" அப்படியா, தரமான அரிசி சேகரிக்கப்படுகிறதா " ஆம் என்றார் அந்தப் பெண்மணி. "நான்


மற்றவர்களைப் பற்றிக் கேட்கவில்லை, நீ தரமான அரிசிதான் தருகிறாயா" 
ஆம் ஸ்வாமி என்றார் அவர். இதைக்கேட்ட பகவான் இகழ்ச்சியாக "5 ருபாய் அரிசி வீட்டில் சமைக்க, 2 ரூபாய் அரிசி நாராயண சேவைக்கு. இதுதான் தரமான அரிசியா?" அந்த பெண்மணி விடாப்பிடியாக அதை மறுக்கவே, பகவான் என்னை நம்ப மறுக்கிறாயா என்றுகூறி எழுந்து உள்ளே சென்று ஒரு சிவப்புப் பையை எடுத்துவந்து அவள் மடியில் வீசினார். நான் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தேன். பிட்சை கேட்டேன். நீ கொடுத்த பையும் அதில் இருந்த அரிசியும் இதுதானே என கோபமாகக் கேட்டார். வாயடைத்துப் போன அந்த பெண்மணி வெட்கித் தலை குனிந்தாள்.

நாராயண சேவை பற்றி நமக்கு போதிக்க பகவான் ஒரு வறியவர்போல் வந்து பிட்சை எடுத்த சம்பவம், நம் அனைவரின் மனதையும் பிசைந்து கண்ணீர் மல்க வைக்கிறது அல்லவா. நாராயண சேவாவின் மற்றுமொரு பரிமாணத்தை பகவான் நமக்கு போதிக்கும் விதமாக நடந்த வேறொரு நிகழ்வு.1998 ஆண்டு, பகவான் பிறந்த நாள் திருவிழா. ஹில் வியூமை தானத்தில் ஒரு பிரம்மாண்ட நாராயணசேவா நடைபெறுகிறது. அக்கம்பக்கத்து கிராம மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டுவந்துள்ளனர். நாராயணசேவையில் பரிமாற புளிசாதமும், சர்க்கரைப் பொங்கலும் மைதானத்தின் ஒரு மூலையில் பாய்கள் விரிக்கப்பட்டு, குன்றுகள் போல் குவிக்கப் பட்டுள்ளன.அதன் மேற்புறமும் தூசுதும்பு படியா வண்ணம் பாய்கள் போர்த்தப் பட்டுள்ளன. பகவான் வருகிறார். பாய்களை சற்றே விலக்கி, சிறிதளவு நாராயண சேவையினை தமது வாயில் இட்டு சுவைத்து, ஆமோதிக்கிறார். நாராயணனே ருசித்து, நாராயணர்களுக்கு நாராயணனே பரிமாறிய நாராயணசேவை. என்ன பரிவு, எத்தனை கனிவு, எவ்வளவு நேர்த்தி! பகவான் தமது செயல்கள் முலம் நமக்கு அளிக்கும் சீரிய படிப்பினை இதுவல்லவா?


ஆதாரம்: THE WONDERFUL SWAMI I HAVE Seen - By Mrs. Geeta Mohanram from Washington, DC, USA

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


🌻சாயிராம். நாராயணசேவையில் ஈடுபடும் நாம், பகவானின்  இந்த வழி முறைகளைப் பின்பற்றவேண்டும். நாராயணசேவை அன்னதானமல்ல. அதன் பின்னணயில் தியாகமும், நேர்மையுடன் கூடிய அன்பான சேவை மனப் பான்மையும் இருக்கவேண்டும், அப்போதுதான் நாம் பகவான் சத்யசாயி நாராயணனின் அருளைப் பெற முடியும்! 🌻



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக