தலைப்பு

புதன், 12 அக்டோபர், 2022

எங்கள் துக்கங்கள் எப்போது தீரும்?

கசப்பான மேல்தோல் இல்லாமலேயே இனிமையான பழம் மட்டுமே உண்டாக வேண்டுமென்றால் முடியுமா? ஒரு ரூபாய் தாளில் முன்பக்கம் போதும்.. பின்பக்கம் வேண்டாம் என்றால் முடியுமா? ஒருவரை வீட்டுக்கு அழைக்கும்போது "தலையை மட்டும் கொண்டு வாருங்கள்.. காலைக் கொண்டு வராதீர்கள்!" என்றால் சாத்தியப்படுமா? வாழ்க்கையில் துக்கமில்லாமல் சுகமே இருக்க வேண்டும் என விரும்புவது இவற்றைப் போலத்தான்! 

இரவில்லாமல் பகல் இல்லை... இருள் இருப்பதாலேயே ஒளியின் பெருமை தெரிகிறது! 

கர்மாவின் பலனைப் பெற்றுத்தானே ஆக வேண்டும்! புண்ணிய கர்மாவுக்காக நீங்கள் அனுபவிக்கும் சுகம் போல... பாவ கர்மாவுக்காக நீங்கள் துக்கங்களையும் அனுபவித்தே ஆக வேண்டும்! புண்ணியங்களை விட பாவங்களையே அதிகம் செய்துவிட்டு துக்கமே வாழ்வில் வரக்கூடாது என்றால் எப்படி?

துக்கங்களை பொறுமையுடன் முகம் கொடுத்து ஏற்று அனுபவிப்பதில் உங்கள் பெருமையே இருக்கிறது! நம் பாவவினை தீர உதவுவது துயரமே என்று அதை ஏற்க வேண்டும்! பாவ அழுக்கை, கசப்பை, நீக்கி உங்களை பரிசுத்தப்படுத்தவே இனிமையாக்கவே துக்கம் வருகிறது என்ற அறிவு உங்களுக்கு வேண்டும்! 

ஒருமுறை பாபா ஒரு பக்தையிடம் "எப்படி இருக்க ? நல்லாயிருக்கியா?" எனக் கேட்ட போது.. அந்த பக்தையோ பளீச்சென்று "எங்க? நீ படுத்தற பாடு" என்று சொல்ல.. அந்தப் பதிலை வெகுவாக ரசித்த பாபா "ஒரு கரும்பு இருக்கு... அதை அங்கே வைத்தால் வெய்யில் படாமல் சுகமாக இருக்கும்.. கொஞ்ச நாள் போனால் என்னாகும்? காய்ந்து சக்கையாகிவிடும்! ஆனால் அதனை எடுத்து ஆலையிலே போட்டுப் பிழிந்தால் (பாபா தன் கையால் பிழிந்து காட்டுகிறார்) ஸ்வீட்டான ஜூஸ்.. புரிகிறதா? " என்கிறார்!

ஆகவே தான் பகவத்கீதையில் பாபா வெளியுலகில் இன்பமோ துன்பமோ இரண்டு நிலையிலும் பற்றில்லாமல் சமநிலையோடு சாட்சியாக இருந்து அதனை அனுபவிக்கவேண்டும் என்று பாபா விளக்கி.. தனக்கும் (கிருஷ்ணருக்கும் ) மீராவுக்கும் நடந்த ஒரு உரையாடலை விளக்குகிறார்! 


"கிருஷ்ணா.. இன்னமும் நான் தீர்க்க வேண்டிய கர்மா எவ்வளவு இருக்கிறது" என மீரா கேட்கிறார்!

"மீரா அதோ மேகத்தைப் பார்.. எத்தனைக் கருமை? நீ அதனை தொட்டுக் கொண்டு உன் மை தீட்டினால் எத்தனை நாள் ஆகுமோ ... அத்தனை நாள் ஆகும் உன் கர்மா கரைய..." என்கிறார் சுவாமி கிருஷ்ணர்! 

"கணக்கற்ற நாட்களா?" இது மீரா 

"மீரா நீ அனுபவித்த துயரம் எல்லாம் நுண்ணிய அளவுக்கே உன் கர்மாவை கரைத்திருக்கிறது.... இன்னமும் நீ தீர்க்க வேண்டிய கர்மா நிறைய இருக்கிறது!" இது சுவாமி! 

"ஹே! பிரபோ! நான் என்ன பாவம் செய்தேன்? இவ்வளவு கர்மச்சுமைக்கு எப்படி ஆளானேன்? இவ்வளவு பெரிய சுமை தீருவது எப்படி சாத்தியம்?" என மீரா கேட்கிற போது..

"ஓ மீரா.. இது உன் கர்மா மட்டுமல்ல.. நீயே பக்தர்களின் அன்னையாக இருந்து கொண்டு அவர்களையும் துயரங்களில் இருந்து விடுவிக்க சங்கல்பம் மேற்கொண்டுள்ளாய்.. ஆகையால் தான்... உனக்கு இவ்வளவு கர்மச் சுமை" என்கிறார் சுவாமி!

"சரி கிருஷ்ணா! எப்போது தீரும்?" இது தாய் மீரா!

"தீரும் தீரும்.. நீ மட்டும் உன் பொறுமையை விடாமல் , எது நேர்ந்தாலும் ஏற்பாயாகில் தீர்ந்தேவிடும்! பாவம் தீரத்தீர அந்தக் கணக்குப்படி அந்த மேகம் தேய்ந்து கொண்டே வரும்.. நீ அதனை கவனித்து கொண்டு வா! " என்கிறார் சுவாமி...

நாட்கள் நகர்கிறது!


ஒருமுறை தாய் மீராவின் தெய்வீக இசையைக் கேட்டு அனுபவிக்க தில்லி பாதுஷாவுக்கு ஆர்வம் ஏற்படுகிறது... ஆனால் ஒரு இஸ்லாமிய மன்னர் எப்படி ராஜபுத்திர ராணாவின் ராஜ்ஜியத்திற்கு வந்து மீராவின் காற்றினிலே வரும் கீதத்தைக் கேட்க இயலும்? ஆகவே மாறு வேடத்தில் சித்தூருக்கு வந்து மீரா கானத்தைக் கேட்டு பாதுஷா திரும்புகிறார்! அந்த ரகசியம் ராணா வரை சென்று அதிக கோபப்படுகிறார்! 

ஒரு முகலாய மன்னன் மாறுவேடத்தில் மீராவின் இருப்பிடத்துக்கு வந்ததை தவறாகச் சித்தரித்து,  கூறத்தகாத வார்த்தைகளை மீராவின் மீது கூறி... ராணாவோடு சேர்ந்து அவரது உறவினரும் மந்திரிமார்களும் உண்மை உணராமல் ஒத்து ஊத... தாய் மீராவை கொடுங்குற்றச்சாட்டுக்கு ஆளாக்குகிறார்கள்! 

மீராவின் தூய்மையை நிரூபிக்கக் கூடியவர் கண்ணன் ஒருவரே! ஆனால் அவரும் சாட்சியம் கூற வரவில்லை! 

கண்ணனும் கைவிட்டார் என மீரா இடிந்து விழ வேண்டிய நிலை! அந்த நிலையில் கூட மீரா "இதுவும் என் பிரபு ஆணையே! எப்பேர்ப்பட்ட தகாதக் குற்றச்சாட்டாகினும் , அதைத் என்னால் ஏற்க முடியவில்லை என்றால்.. இன்னமும் எனக்கு மானாபி மானம் போகவில்லை என்றே அர்த்தம்! அகங்காரம் , மமகாரம் (என் உடைமை) மேல் எழுகிற மானாபிமானங்கள் இருக்கிற வரை.. நான் எப்படி என் கண்ணன் மேல் பக்தி வைத்திருப்பதாக கருத முடியும்?" என்று தூயத்தாய் மீரா உணர்ந்து... பதிவிரதா தர்மம் தவறினோம் என்ற மிகப்பெரிய பழியையும் நிலை குலையாமல் ஏற்கிறார்! அப்போதே ஒரு பெரிய மனச்சுமையை இறக்கி வைத்தாற்போல் பெருநிம்மதி பெறுகிறார்! 

அந்த நேரம் வானத்தைப் பார்க்கிறார் தாய் மீரா... சுவாமி கிருஷ்ணர் சுட்டிக்காட்டிய அந்தக் கார்முகில் அறவே தேய்ந்து மறைந்துவிட்டிருந்தது!


(ஆதாரம்: அறிவு அறுபது / பக்கம் :66 -71/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக