தலைப்பு

வியாழன், 27 அக்டோபர், 2022

கர்மாவினால் ஆன்மாவுக்குப் பிறவி ஏற்படுகிறது எனில் சிலருக்கு குறைந்த ஆயுள் எதற்காக?

ஒரு ஜீவனின் கர்மாவில் நல்லவை கெட்டவைகளைப் பல விதத்தில் கலந்து , ஒவ்வொரு விதமும் குறிப்பிட்ட ஒரு ஜென்மத்திலோ , பல ஜென்மத்திலோ கழியும் படியாக இறைவன் பிறவிகளைக் கொடுக்கிறான்! இப்படிக் கர்மா கழிய வேண்டுமானால் ஜீவன் புதிதாக பாவ கர்மாவை சேர்க்காமலும், புதுப் பிறவியில் செய்யும் புண்ணிய கர்மாவின் பலனை இறைவனுக்கு அர்ப்பணமாக தியாகம் செய்தும் வாழ வேண்டும்! இல்லாவிடில் பழைய பாக்கி தீரும்போதே புதுக் கர்மக்கடன் சேர ஆரம்பிக்கிறது!


'பிரார்ப்தம்' எனும் முன்வினைப் பயனில் ஒவ்வொரு விதமான பகுதியைத் தீர்க்கவே உடம்புகள் ஏற்படுகின்றன என்பதை உணர வைக்கத்தான் கீதையில் ஓர் சத்தியத்தை உங்களால் விளங்கிக் கொள்ள முடியும்! ஒருவர் நைந்து / கிழிந்து போன ஆடையை கழற்றிப் போட்டுவிட்டுப் புதிய ஆடை உடுத்துவது போலவே ஜீவனும் நைந்த ஒரு உடம்பைக் கழற்றி இன்னொரு உடம்பை ஏற்கிறது என்பதே கீதாவாசகம்!

அவ்வாறாயின் நெடுநாள் பட்டாலே ஒரு துணி நைந்து போவது போல,  உடம்பு நீண்டகாலம் வாழ்ந்து அடிபட்டாலே நைந்து போகும்படிதான் ஆகும்! ஆனால் நடைமுறையில் பல குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் உடலும் நைந்து போவதைப் பார்த்திருப்பீர்களே! இதெப்படி? எனக் கேட்கிறார்கள்... நீங்கள் புதிதாக சட்டைப்போட்டுக் கொண்டாலும் அது சில நாட்களிலேயே நைந்து கிழிந்து போகிறது! புதிதாக இருந்தாலும் ஏன் கிழிகிறது? அது கடையிலிருக்கும் போதே பழைய ஸ்டாக் ஆகியிருந்தால் இப்படி நேர்கிறது! நீங்கள் கடையில் துணி வாங்கும் போதே அது மக்கும் நிலையில் இருந்திருக்கிறது! 


ஒரு ஜீவன் ஒரு உடம்பில் தனது கர்மாவின் பெரும்பகுதியை ஒரு உடம்பில் அனுபவித்தபின் ... இன்னும் சில கர்மாவை அனுபவிக்க சிறு பகுதியே மிஞ்சுகிற போது...அது வேறொரு உடல் எடுக்கையில் அற்ப ஆயுளே அந்தக் கர்மாவை கரைக்க போதுமானதாக இருப்பதால் அது உடலை விட்டுப்பிரிகிறது..

ஆன்மா என்கிற ஸ்டாக்... நிறைய கர்மாவை அனுபவித்த பிறகு ஓல்ட் ஸ்டாக்காக மாறுகிறது.. பிறகு அது புதிய உடம்பெடுத்து அதாவது புதிய சட்டையாக உருவாகிற போது.. விரைவில் கிழிவது போல் விரைவில் சென்றுவிடுகிறது! உடம்பின் நலிவு என்பதை கர்மாவின் நலிவு என்றே நாம் இணைத்து பொருள் உணர்ந்து கொண்டாலே கர்மக்கணக்கின் உண்மை புரியும்!

(ஆதாரம்: அறிவு அறுபது / பக்கம்: 87/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)



1 கருத்து: