தலைப்பு

சனி, 15 அக்டோபர், 2022

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் சாயி அனுபவங்கள்!

A.P.J. Abdul Kalam, (born Oct. 15, 1931, Rameswaram, India—died July 27, 2015, Shillong), Indian president (2002–07). After graduating from the Madras Institute of Technology, Kalam played a leading role in the development of India’s missile and nuclear weapons programs. 

சகிப்புத்தன்மையில் அவர் ஏசுபிரான் வழியைப் பின்பற்றினார், எளிமையில் புத்தர் வழியையும், அணுகுமுறையில் நபியையும், புத்தி கூர்மையில் ஆதிசங்கரரையும் பின்பற்றிய பாரத தேசத்தின் உயரிய அடையாளம் டாக்டர் APJ. அப்துல் கலாம் அவர்களின் பாபா அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ... 

அண்ணல் அப்துல் கலாம் ஆன்மீக நாட்டம் நிறைந்தவர்... மகான்களிடம் மிகுந்த மரியாதையும்... பரம்பொருள் வழியில் பரந்த நோக்குடையவர்... கடவுளை அடைவது ஒற்றையடி பாதையால் அல்ல.. இலக்கு ஒன்றே ஆயினும் அதற்கு பல வழிகள் உள்ளன என்பதை உணர்ந்த ஒரு விஞ்ஞான ஞானி அப்துல் கலாம்! தனது  குழப்பமான சூழ்நிலைகளில் பிரசாந்தி நிலையம் வந்து தங்கி தியானம் செய்து இறைவன் பாபாவுடன் பேசி மனம் தெளிவுறுவது அவரது வழக்கம். ஆன்மீகப் பழக்கம்!


முதன்முதலாக அவர் பிரசாந்தி நிலையத்தில் தனது வலது காலை வைத்த உடனேயே பூரித்துப் போகிறார்... அதில் வியாபித்திருக்கும் பேரமைதியை அணு அணுவாக உணர்கிறார்... தன்னலமற்ற சேவாதளர்களை கண்டு வியக்கிறார்... கல்வி சேவை - மருத்துவ சேவை - குடிநீர் சேவை என சேவா மயமாக காட்சி அளிக்க.. இப்படி ஒரு வசந்தபுரியா? என்பது போல் வியக்கும் அண்ணல் கலாம்... பிரசாந்தி நிலையத்தை தனது சொந்த வீடாக உணர்கிறார்! "எனக்கு இங்கே தான் பேரமைதியே கிடைக்கிறது!" என அழுத்தம் திருத்தமாக பலமுறை தனது உரைவழியும் பாபாவுக்கு அனுப்பிய கடித வழியும் பதிவு செய்திருக்கிறார்! 

 பணி ஓய்வுக்குப் பின் சுவாமியைச் சந்தித்தபோது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் அழைக்கிறார்கள் போகலாம் என நினைக்கிறேன், தங்களின் சங்கல்பம் யாது? என பாபாவிடம் கேட்கிறார். அதற்கு பாபா "சிறிது காலம் பொறுங்கள் இங்கேயே நாட்டின் உயரிய பதவி உங்களுக்காக காத்திருக்கிறது!" என்று மட்டும் நேர்காணல் அறையில் சொல்லி அவருக்கு பிடித்த நீலநிற உடையை அன்பளிப்பாக தனது மாணவர் திரு சாய்நாத்  மூலமாக அவர் தங்கியிருந்த சாந்தி பவன் கெஸ்ட் ஹவுஸுக்குக் கொடுத்து அனுப்புகிறார் பாபா... அதை அவர் பெற்றுக் கொள்கையில் குழந்தையைப் போல் "எனக்கா.. பகவான் கொடுத்தனுப்பினாரா? எனக்கா? எனக்கு நீல நிறம் தான் பிடிக்கும் என்பது பகவானுக்கு தெரிந்திருக்கிறதே!" என அவரது இதய ராக்கெட் ஆச்சர்ய வெளியில் சுற்றி வருகிறது... "நாட்டின் உயரிய பதவி!" என்று பகவான் சொன்னார்.. அதன் அர்த்தம் புரியவில்லை.. தங்களுக்கு ஏதேனும் புரிகிறதா? என மாணவர் சாய்நாத் அவர்களிடம் கேட்க.. இறைவனின் சங்கேத மொழியை இதுவரை புரிந்து கொண்ட மனிதர்கள் உண்டா? அவருக்கும் புரியவில்லை... ! 

சுவாமி கல்லூரியின் முன்னாள் மாணவர் திரு சாய்நாத் தன் தெய்வத்துடன்... 

மீண்டும் பாபா அறைக்கு வருகிற சாய்நாத்... நடந்ததைச் சொல்ல... "உனக்கு சுவாமி நான் சொன்னதில் நம்பிக்கை இல்லை தானே?" என பாபா கேட்க... உதடு மௌனத் தாழ்பாள் போட்டுக் கொள்கிறது சாய்நாத்'திற்கு... "நிச்சயம் அவர் நாட்டின் உயரிய பதிவை அடைவார்.. என் வார்த்தை சத்திய வார்த்தை... ஆம் என சாய்நாத் அருகே சென்று... "ஜனாதிபதி" என்று தீர்க்கமாகச் சொல்லி அமானுஷ்ய புன்னகை புரிகிறார் பாபா! சாய்நாத் உறைந்து போகிறார்.. அந்த சூழ்நிலையில் யாராலும் அதனை யூகிக்கக் கூட முடியாத நிலை! "இன்னும் நான் சொன்னதை நீ நம்பவில்லை தானே!" என பாபா கேட்க... என்ன சொல்வார் சாய்நாத்!? கலாம் ஜனாதிபதியான பிறகு அதே சாய்நாத்'திடம் தான் முன்பு சொன்னதையும் நினைவுப்படுத்தி "பார்த்தாயா சுவாமி அன்றே சொன்னேனே!" என்கிறார் பாபா! சொல்லியது மட்டுமா? இறைவன் பாபா சங்கல்பம் இன்றி எது உலகில் நிகழ்கிறது?!

ஒரு மாதம் கடந்து... குடியரசுத் தலைவருக்காக திரு அப்துல் கலாம் பெயர் பரிந்துரைக்கப்பட்டு...பிறகு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.. அண்ணல் அப்துல் கலாம் ஜனாதிபதி அப்துல் கலாமாகிறார்... ஆயினும் அதே பண்பு, அதே எளிமை! பதவி நாற்காலிக்கு வருகிற சிலர் அந்த நாற்காலியை தன் தலைமேல் வைத்துக் கொள்வர்... ஆனால் அண்ணல் கலாமோ அந்த நாற்காலியை தரையிலேயே வைத்து அமர்கிறார்! இப்படி ஒரு ஹேர் ஸ்டைல் வேண்டாம் என பலர் பரிந்துரைத்த போதும்... அவர் கேட்கவே இல்லை... அவர் தனது தனித்த அடையாளத்தை யாருக்காகவும் விட்டுத்தரவே இல்லை... அந்தப் பிடிமானத்தில் அண்ணல் கலாம் அண்ணல் காந்தியடிகளே! வறுமையில் வளர்ந்தார் ஆயினும் தாழ்வு மனப்பான்மை அவரிடம் இல்லவே இல்லை... எளிமையாய்ப் படித்தார்... அரசுப் பள்ளிதான்! பள்ளியில் இல்லை கல்வி அறிவு என்பது கவனித்துப் படிப்பதில் இருக்கிறது என்பதற்கு அடையாளம் அண்ணல் கலாம்! நல்லவேளை அவரை செல்லம் கொடுத்து அண்ணன் வளர்க்கவில்லை... அப்படி வளர்த்திருந்தால் இந்தப் பணிவும், பவ்யமும், தேசப்பற்றும், தெய்வத்துவமும் வர வாய்ப்பே இல்லை! ஆம் அண்ணன் வளர்த்த அண்ணல் அவர்!
பாபாவை பிரசாந்தி நிலையத்தில் தரிசிக்கிற போதெல்லாம் தரையிலேயே அமர்ந்து பேரின்பம் துய்ப்பார் கலாம்! பாபாவே அவரின் கைப்பிடித்து நாற்காலியில் அமர வைப்பார்! 
சிம்மாசனத்தை சிங்கங்கள் தேடுவதே இல்லை! நரிகளே நாற்காலியில் கோந்து தடவி அமர்கின்றன... ஞானச் சிங்கம் அண்ணல் கலாம்!

குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு அண்ணல் டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்கள், தனது முதல் இரண்டு மாத சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு உடனே புட்டபர்த்திக்கு தனது சம்பளப் பணத்தை கடிதத்தோடு அனுப்புகிறார். அவர் எழுதிய கடிதமாவது.. 

 "சுவாமி! என்னுடைய தாய் தந்தையர் உயிருடன் இல்லை, அவர்களுக்கு பதிலாக நீங்கள்தான் எனக்கு எல்லாமாக இருக்கிறீர்கள், நானோ பிரம்மச்சாரி... எனக்கு பணம் தேவையில்லை... அதனால் நீங்கள் மறுக்காமல் இதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்!" என்று அந்தக் கடிதத்தில் தனது இதயத்தை எழுத்தாக்கி இருக்கிறார்! அதற்கு  சுவாமியோ புன்னகையுடன் அதனை ஆசீர்வாதம் செய்து ... மாணவர்கள் முன்னிலையிலும் வாசித்துக் காட்டி... அதை அப்படியே பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தகுதி வாய்ந்த மாணவர்க்கு தங்கப்பதக்கம் வழங்குவதற்கான ஏற்பாட்டுத் தொகையோடு இதனையும் சேர்த்துவிடும்படி Central trustக்கு பாபா கொடுத்துவிடுகிறார்! ஆம்...தனக்கென்று ஒரு துரும்பையும் வைத்துக் கொள்ளாத இறைவன் பாபாவின் வழியையே அண்ணல் கலாமும் பின்தொடர்ந்தார்! ல் கலாமும் பின்தொடர்ந்தார்! 
ஆண்டுதோறும் நவம்பர் 22 ஆம் தேதி புட்டபர்த்தியில் நிகழும் ஸ்ரீ சத்ய சாயி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சாதனையாளர்கள் பெயரில்  தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகிறது. அதில் அண்ணல் கலாமின் பெயரால்.. அவர் உருவம் பதித்த தங்கப் பதக்கமும்... மாணவர்க்கு வழங்கப்படுகிறது! 

பாபா அவருக்கு அளித்த மேன்மை அது! மேன்மையான பிறவிகளை வாழ்ந்து கடந்து வந்த புனிதாத்மாக்களுக்கு பாபா கொடுக்கும் கருணைப்பரிசு அது!

ஒருமுறை பாபா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அண்ணல் கலாமை பார்த்து பாபா "தொப்பி எங்கே?" எனக் கேட்கிறார்..
ஒரு பட்டமளிப்பு விழா சம்பிரதாயமாக மெரூன் கவுன் ஒன்று வழங்கப்படும்.. அதை அணிந்திருந்தார் ஆயினும் தொப்பி இல்லை... மாணவர் சத்யஜித்தை விசாரிக்கச் சொல்கிறார் பாபா... சிறப்பு விருந்தினருக்கு எடுத்து வைக்கவில்லையே என தயக்கக் குரல் எழ‌..அதைக் கேட்டு "சுவாமி.. தொப்பி அணிந்தால் ஹேர் ஸ்டைல் கலைந்துவிடும்... நல்லவேளை என் தலைமுடி தப்பித்தது" எனக் குழந்தையாய் சிரிக்கிறார் கலாம்! சிறுசிறு விஷயத்தையும் கவனித்து அக்கறை காட்டுபவர் பாபா! பெரிய சங்கடமே நேரினும் அதை பொருட்படுத்தாமல் கடந்துவிடும் பக்குவ ஜீவி அண்ணல் கலாம் என்பதற்கான உதாரண சம்பவம் இது!


இந்தச் சம்பவத்திற்கு பிறகு புட்டபர்த்திக்கு பல முறை திரு. அப்துல் கலாம் அவர்கள் வந்திருக்கிறார். குறிப்பாக சுவாமியின் 81ஆவது பிறந்தநாளுக்கு அவர் பாபாவுக்காக ஒரு கவிதையை எழுதி, அனைவர் முன்னிலையிலும் வாசிக்கச் சொன்ன சம்பவம் பக்தர்களாகிய நம் அனைவருக்கும் மறக்க முடியாத  தருணம். வீணையை மீட்டுவதில் அண்ணல் கலாம் ஒரு பாரதி! அதே போல் கவிதை எழுதுவதிலும் அண்ணல் கலாம் ஒரு பாரதியே!

அந்தக் கவிதையின் தமிழாக்கம் இதோ...!

"எங்கள் பால்வெளி ஒளிர்கிறது - அது
எண்ணற்ற விண்மீன்களால் குளிர்கிறது
எங்களின் பேரன்புச் சூரியனோடு 
எட்டு கிரகங்களும் எட்டி நடக்கின்றன!
பால்வெளியைச் சுற்றிவர 
250 மில்லியன் வருடம் கடக்கின்றன!

பிரபஞ்சத்திலோர் பேராச்சர்யக் குரல் 
"அதோ பூமி மகிமையால் ஒளிர்கிறதே
எந்த வெளிச்சம் அதில் ஒளிர்கிறதோ!?"
கேள்வியால் ஒரு ரீங்காரம் 

அதற்கு மென்மை பதிலின் ஓங்காரம்
"அது வெறும் வெளிச்சக் கீற்றல்ல
அது ஞானத்தின் ஒளி அருவி
சேவையின் தீபத்திருவிழா
பேரமைதியின் பிரகாச மழை"

அருட் பிரசாந்தி நிலையத்திலிருந்தே
அப்பேரொளி எழுகிறது 
பூமி 80 ஆவது சுற்றில் நிறைகிறது 
அது பிரபஞ்சப் பரமாத்மாவை 
தனக்குள்ளே தண்ணொளி வரைகிறது!"

என்கிற அமரத்துவக் கவிதையை அண்ணல் கலாம் தனது குழந்தைப் பேச்சால் காவியம் வரைய‌.. இதிகாச இறைவனான பாபா அதில் நிறைய...
தாகூரின் கீதாஞ்சலியாய் பாரதியின் கவிதாஞ்சலியாய் இதயத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது! 

ஆதாரம்:
Students with Sai: Conversations (2001-2004)

Sai Pearls of Wisdom - Prof. Anil Kumar

சுவாமியின் முன்னாள் மாணவரான திரு. சாய்நாத் அவர்களின் ரேடியோ சாய் நேர்காணலில் இருந்தும்... 


கனவு காணுங்கள் என்றார் அண்ணல் கலாம்! அவர் குறிப்பிட்ட கனவு என்பது திடமான நம்பிக்கை- உறுதியான எண்ணம்- விடாப்பிடியான கொள்கை- நேர்மறையான சிந்தனை!
ஆகவே தான் ஆன்மீக விஞ்ஞானி அண்ணல் கலாமின் பிறந்தநாள் உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்படுதிறது!
அண்ணல் கலாமின் எண்ணம் மட்டுமல்ல இறைவன் பாபாவின் சங்கல்பமே தனது பிரேம சாம்ராஜ்யத்தை முதுமை மனம் கொண்ட இளம் ரத்தத்தால் வண்ணம் பூசி எழுப்புவதே! அதற்கான குடமுழுக்கை விரைவில் வருகிற பிரேம காலங்கள் கட்டியங்கூறும்!

  பக்தியுடன் 
வைரபாரதி






தவறாமல் கீழ்க்காணும்  வீடியோவை இறுதிவரை பாருங்கள்.  நாட்டின் ஜனாதிபதியாக இருந்துகொண்டு எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்பதைப் பாருங்கள். 
⬇ ⬇ ⬇ 



 அப்துல் கலாம் அவர்கள் பாபாவைப் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி வாசிக்க

சுவாமியைப்பற்றி..  தினமலர் நாளிதழில் வெளிவந்த பதிவை வாசிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக