தலைப்பு

வியாழன், 6 அக்டோபர், 2022

கொலம்பியாவில் தோன்றி பக்தரின் குடும்பக் கவலை தீர்த்த பாபா!!


துவாபர யுகத்தில் குசேலர் தமது வறுமை நீங்க,  ஸ்ரீகிருஷ்ணரை நாடிச் சென்றார். அவர் கொணர்ந்த அவலை ஸ்ரீகிருஷ்ணர் உண்ட அக்கணமே  குசேலரின் வறுமை நீங்கியது. .  நம் சாயிகிருஷ்ணரோ,  கலியுகத்தில், தாமே பக்தரை நாடி கொலம்பியா நாட்டில்  தோன்றி, அவரது குடும்ப வறுமையை ஒரு நூதன முறையில் தீர்த்தார். வாருங்கள் அந்த திவ்ய சரிதம் காண்போம்... 

பாபாவின் அவதாரப் பிரகடனத்திற்குப் பிறகு.. அவரது புகழ் மொட்டவிழ்ந்த மலர் போல மணம் வீசத் தொடங்கியது. இந்த மணம் மெல்லியதாக வெளிநாடுகளிலும் பரவ ஆரம்பித்து. 1965/75 ம்ஆண்டு வாக்கில்,  பெருமளவில் மேலை நாட்டவர்கள் பர்த்தி வந்து பாபாவின் தரிசனம் பெற்றனர். நாம் இப்போது பகிரப்போகும் பதிவு விக்டோரியா க்யூஹோ என்கிற அமெரிக்க பெண்மணி கூறும் அற்புத அனுபவமாகும். வாருங்கள் பதிவுக்குள் செல்லலாம்.

அது அந்தக் காலம். பாபாவுடன் எங்கள் தொடர்பு ஆரம்ப கட்டத்தில் இருந்து வந்தது. அச்சமயம் கொலம்பியாவில் வசித்து வந்த எனது சகோதரியின் வாழ்வில் பாபா நிகழ்த்திய  மனம் நெகிழும் அற்புதத்தை கூறுகிறேன்...


அப்போது கொலம்பிய நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து , வேலை இல்லாத் திண்டாட்டமும்.  தலை விரித்து ஆடியது.இதில் பொருளாதார சங்கடங்களை சந்தித்த பல குடும்பங்களில் என் சகோதரியின் குடும்பமும் ஒன்று. அப்போது ஒரு இரவுப் பொழுது. விசித்திர தோற்றம் கோண்ட ஒருமனிதர் என் சகோதரியை அணுகி, தான் ஊருக்கு செல்ல வேண்டும், கட்டணச் செலவிற்கு கையில் பணமில்லாததால் 50 பெசோ ( கொலம்பிய நாணயம்) தர இயலுமா எனக் கேட்டார். இதைக் கேட்ட என் சகோதரியின் மனம் இளகினாலும், அச்சமயம் அவளிடம் குடும்பச் செலவிற்கென்று இருந்தது அந்த 50 பெசாதான். அந்த சிறு தொகைதான்  அவள் குடும்பம் நடத்த கையில்  வைத்திருந்த  கடைசி பணம். அருகிலிருந்த அவளது மகளின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாமல்

அவள் அந்த மனிதரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே வந்துவிட்டாள். ஆனால் உடியாக ஏதோ ஒரு உள்ளுணர்வு.. "வந்தது பாபாதான்" எனக் கூறியது. அவசர அவசரமாக கதவைத் திறந்து பார்க்க அங்கு அந்த மனிதரைக் காணவில்லை. அவர் காற்றில் கலந்து மறைந்துவிட்டது போல தோன்றியது. இதன் பிறகு நடந்த சம்பவங்கள், அன்று வந்தது பாபாதான் என உறுதிப்படுத்தின.சில நாட்கள் கழித்து அவள் குடும்பத்தின் பல வார தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதான  பணம் எதிர்பாராத இடத்திலிருந்து கிடைத்தது. பிறகு அவளது கணவரும் இழந்த வேலையை திரும்பப் பெற்றார், இதனால் குடும்பமே வறுமை நீங்கி வளம் பெற்றது. இந் நிகழ்வுகள் தக்க சமயத்தில் பாபா செய்த  அனுக்கிரகத்தால் தான் நிகழ்ந்தது என சொல்லவும் வேண்டுமோ...


🌻சாயிராம்... நினைத்த இடத்தில் தோன்றி பாபா நிகழ்த்திய அற்புதங்கள் பல உண்டு. காலமும் தேசமும் அவர் கட்டுப் பாட்டில்--அவர் ஆதீனத்தில். ஆனால் அவர் பக்தர்களுக்கு பராதீனர். பக்தியுடன் பகவானைப் பணிவோம். ஓம் ஸ்ரீ சாயி பக்த பராதீனாய நமஹ:


Source: Om Sai Mandir Newsletter July 2004; Volume1, Issue 1 / Victoria and Hugo Vasquez, New York

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக