தலைப்பு

திங்கள், 17 அக்டோபர், 2022

ஸ்ரீ சிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் | ஸ்ரீ சத்யசாயி அவதாரம் பற்றி மகான்கள்

கலியுக பூர்ணாவதாரமான பாபாவை பற்றி ஞானிகளும் மகான்களும் சொன்னவை அநேகம்... அந்த வகையில் தஞ்சாவூர் சுவாமிகள் என அழைக்கப்பட்ட ஸ்ரீசிவபிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் பாபாவை பற்றி பகிர்ந்த சத்திய ஞான மொழிகள் பரவசமாய் இதோ...


ஸ்ரீ சிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள் கும்பகோண ஷேத்திரத்தில் வசித்தவர்... தஞ்சாவூர் சுவாமிகள் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்...

ராமய்யா ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்... ஒருமுறை பாபாவை பற்றி ஒரு பக்தர் அவரோட பேச... மிகவும் தெளிவாய் நிதானமாய் தெளிவாய் அதற்கு சுவாமிகள் பதில் சொல்கிறார்...

"மகனே... தர்மத்தை பற்றி கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டே இருப்பதால் எந்த பயனும் இல்லை... மனித இனத்திற்கு கடவுள் மீது பக்தி வேண்டும்‌... அவர்கள் எப்பாடுபட்டாவது ஞானத்தை அடைய வேண்டும்! கடவுள் இருக்கிறார் எனும் நம்பிக்கை மனித ஜீவராசிகள் மத்தியில் திடமாதல் வேண்டும்... ஏனோ தானோ என வாழ்தல் கூடாது! ஒரு அன்றாடங்காய்ச்சிக்கு முக்தி மீதான ருசியையும்... பரமாத்மா மீதான ஞானத்தையும் எப்படி சொல்லித்தர முடியும்? முதலில் கடவுளின் மீதான நம்பிக்கையை கற்பித்து அவர்களின் அகத்தில் விதைக்க வேண்டும்!" என்கிறார்...


கடவுள் மனித இனத்தை மிகவும் நேசிக்கிறார்... மனிதருக்கு ஏதேனும் தீங்கு எனில் உதவ வருகிறார் எனும் சத்தியத்தை மனித இனம் உணர நாம் உதவ வேண்டும் என்கிறார்...! அதே சமயம் கடவுளுக்கு தெய்வீக ஆற்றல் இருக்கிறது என்பதை மனித இனம் உணர்வார்கள்... மலினமான காலகட்டம் இது ஆன்மீக உணர்வு குறைந்து போய்விட்ட சூழ்நிலை இது... ஞானிகளும் மகான்களும் தான் கடவுளிடம்  நல்ல இதயத்தை மனித சமூகத்தில் நடுவதற்கு வேண்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது!


அப்படித்தான் அவர்கள் வேண்டிக் கொள்ள கடவுள் "சாயியாக" அவதரித்தார்... இந்த தெய்வீக நிலையில்... தாங்களோ அவரின் சிருஷ்டி லீலையை மதிப்பற்றதாக பேசுகிறீர்கள் என தன்னிடம் கேள்வி கேட்டவரோடு சுவாமிகள் தீர்க்கமாய் பதில் மொழிகிறார்... சன்யாசிகளோ ஞானிகளோ யாரையும் பார்த்து பயப்படுவதே இல்லை.. எது தர்மமோ அதில் நிற்பார்கள்... எது தர்மமில்லையோ அதனிடமிருந்து விலகிவிடுவார்கள்... கண்டும்காணாதது போல் இருப்பது ஞானிகளின் சுபாவமல்ல... அப்படியே ஸ்ரீ சிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகளும்...

அப்படி அவர் தீர்க்கமாய் உரைத்துக் கொண்டே...


"பாபாவின் தெய்வீகப் பேராற்றல் பக்தர்களிடையே பக்தியை , மரியாதையை, அன்பை பாபாவின் மேல் விதைக்கிறது...பாபாவின் பேராற்றலை நாம் தாழ்வாக கற்பனை செய்து பேசுவது கூடாது.. அது பாவம்! பாபாவின் லீலைகளுக்கு மரணமே இல்லை ! அதில் சந்தேகமே வேண்டாம்!" என்கிறார் மிகத் தெள்ளத் தெளிவாக... மேலும் ஒரு உதாரணம் கூறி சுவாமிகள் தொடர்கிறார்... கேள்வி கேட்டவர் தெளிவடையும் வரையில் சுவாமிகள் விடுவதாக இல்லை... அத்தனை பக்தி சுவாமிகளுக்கு பாபா மேல்...


ஒருவர் உணவு விடுதிக்கு சென்று லட்டு சாப்பிடுகிறார்.. ருசியாக இருக்கிறது.. அதோடு அது முடிந்துவிடுகிறது... ஆனால் பாபா தனது இறைப் பேராற்றலால் ஒரு மருந்து தருகிறார் அதனால் நோயாளிகளுக்கு உடல் நோய் மட்டும் குணமாகவில்லை... சந்தேகம், வெறுப்பு , அகந்தை எனும் மன நோயும் குணமாகிறது.. பாபாவிடம் இன்னமும் ஆழமாக பக்தியும் நம்பிக்கையும்... மனித சமூகத்தின் மேல் ஒருவருக்கு பணிவும் பவ்யமும்... தனிவாழ்க்கையின் மேல் ஒருவருக்கு அடக்கமும், பக்குவமும் ஏற்படுகிறது... இதனால் தான் தெய்வ காரியம்- மனித காரியம் என இருவகை காரியமாக காரியங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது! பாபாவின் லீலை தெய்வ காரியம்... பாபா கோடி பேர்களை ஞானோதயம் அடையும்படி செய்து கொண்டிருப்பவர்... உலக மக்களை பக்தியிலும் அமைதியாய் வாழவும் வைத்துக் கொண்டிருப்பவர்... இதற்கு பெயர் தான் தர்ம சம்ஸ்தாபனா (Re-establishment of Righteousness )... பாபாவின் திருச்செயல்கள் மனிதனால் சாத்தியமே இல்லை... ஏனெனில் பாபா உண்மையில் கடவுள்... "ஞாபகம் வைத்துக் கொள் மகனே!" என கேள்வி கேட்டவரை பரவசப்பட வைக்கிறார் சுவாமிகள்!


(Source : Sri SathyaSai and Yogis / Page no: 10 / Author : Jantyala Suman babu / Translation : pidatala Gopi Krishna/ Reference: Sri Sathya Sai Divya Leelamrutham Part I - Pg. 61) 


ஒரு பற்றற்ற துறவி ஒன்றைப் பேசுகிறார் எனில் அது சத்தியமானதே... தூய்மையானதே! காரணம் அவர்களுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் எவரிடமும் இல்லை... ஈசனோடாயினும் ஆசை அறுமீன்! என்பதே துறவிகளின் மேன்மையான நிலை...ஆகையால் அவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.. ஏனெனில் அதனால் அவர்களுக்கு எந்தவிதமான ஆதாயமும் இல்லை... ஆகவே தான் ஒரு குடும்பஸ்தரின் மொழிகளை விட மகான்களின் மொழிகள் மேன்மையாக உண்மையாக இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களுக்கு சுயநலம் என்பதே இல்லை! மகான்கள் பாபாவை பற்றி மொழிந்த வாய்மொழியே துல்லியமானதும்... நமக்கு திடமாய் வழிகாட்டுபவையும்...! பாபா ஆகாயம்... மகான்களே ஞான மழை தூவும் ஆகாய கார்மேகங்கள்!


   பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக