தலைப்பு

திங்கள், 31 அக்டோபர், 2022

பாபாவே நினைவுப்படுத்தி எழுத்தாளர் அனுராதா ரமணன் தொடர்ந்த ஸ்ரீ சத்யசாயி அந்தாதி!

நாடறிந்த நல்ல எழுத்தாளர் திருமதி அனுராதா ரமணனின் பாபா அனுபவங்களும்... அவர் பாபாவுக்காக பார்த்து பார்த்து எழுதிய ஆன்மீகப் படைப்பின் பின்னணியும் சுவாரஸ்யமாய் இதோ...!


தஞ்சாவூரில் பிறந்த சொல்வயல் அம்மையார் திருமதி அனுராதா ரமணன்! அவரது பாட்டனார் நடிகர் பாலசுப்ரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானவர்!

ஓவியக்கலைஞராகவும் இருந்தவர்... 1977 முதல் 2010 வரை தனது அரிய படைப்புகளை தமிழ் உலகத்திற்கு வழங்கியவர்.. இவரின் பல நாவல்கள்  திரைப்படமாகவும் (சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு வீடு இரு வாசல், மலரின் பயணம்) உருவாகி இருக்கிறது...இதில் ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் தேசிய விருதும் பெற்றிருக்கிறது! பல மொழியில் இவர் எழுத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டும் , பல மொழியிலும் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது! 356 நெடுங்கதைகளையும், 480 சிறுகதைகளையும் 30 ஆண்டுகளாக எழுதி சாதனை படைத்தவர் திருமதி அனுராதா ரமணன்! பழுத்த பாபா பக்தர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!

ஒருமுறை அவர் பாபாவுக்காக ஒரு ஆன்மீகத்துதி எழுதுகிறார்... அப்படியே சந்தர்ப்ப சூழ்நிலையால் விட்டுவிடுகிறார்... பிறகு அவர் எவ்வாறு அதனை நிறைவு செய்தார் என்பது மிகப்பெரிய மகிமை... அதனை அவர் எழுத்திலேயே வாசிப்பது மிகப்பெரிய சுவாரஸ்யம்...


ஓம் ஶ்ரீ சாயிராம்.... ஸ்ரீ சத்ய சாயியின் பிரியத்துக்குப் பாத்திரமான அன்புள்ளங்களுக்கு நமஸ்காரம்...

"அனுராதா ரமணன்" என்கிற நாவலாசிரியை , எழுத்தாளரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்...ஆனால் அவளுள் சின்னதும் பெரிசுமாய் துளிர்க்கும் ஆன்மீகப் பூக்களைப் பற்றி... அவை இதுவரை சந்தைக்கு வராத பூக்கள்.. கடவுளின் விஸ்தாரமான தோட்டத்தில் அரும்பி , மொட்டும் , பூவுமாய் - அவரது காலடியிலேயே சமர்ப்பிக்கப்பட்டவை... ஒரு விதத்தில், சின்னக் குழந்தைகள் மண்சொப்பு வைத்து , பாவனையாய் சோறு பொங்கிப் பரிமாறுவது போல... அழகான அந்தரங்கமான - அந்தராத்மாவின் ராக சஞ்சாரங்கள்... 

1996 ஆம் வருடம் ஒருநாள்... புட்டபர்த்தியில் பூத்து, புவனமெங்கும் தன் அருளை இதமாக அளித்துக் கொண்டிருக்கும் "பகவான் ஸ்ரீ சத்ய சாயி" பற்றி ஓர் அந்தாதி எழுத ஆரம்பித்தாள் அனு...(அனு என தன்னை குறிப்பிடுகிறார் திருமதி அனுராதா ரமணன்)

விளையாட்டாகத்தான்! குழந்தைகள் சொப்பு வைத்து விளையாடுவது போலத்தான்...19 ஆவது பாடல் வரையில் படுவேகமாய் சமைத்தவள் - அடுத்து வந்த சிற்சில சோதனைகளில் இதை மறந்தே போனாள்... அப்புறம் 1998ல் ஒரு நாள் , கனவில்

வெள்ளை அங்கி அணிந்த பாபா- கண் சிமிட்டும் நேரம் வந்து போனார்... அப்போது அவர் கேட்டது:

'அது அவ்வளவு தானா?'

'எது'

கனிந்த புன்னகை... பார்வையில் பரிவு ... அடுத்த விநாடி கனவு களைந்தது... அவள் திடுக்கிட்டாள், எழுந்து அமர்ந்தாள்... மறுநாள் எதேர்ச்சையாய, அவள் கவிதை என்கிற பெயரில் கிறுக்கி வைத்திருக்கும் நோட்டுப் புத்தகத்தைப் பிரித்த போது ... முற்றுப் பெறாத வரிகளின் புன்னகை... பிடரியில் அடித்தாற் போலப் புரிந்தது... 

'எது... அவ்வளவு தானா' என்பது. 

மறுபடியும் தொடங்கினாள்... மனசுக்குள் தானாக ஊறி வந்த வார்த்தைகளை சத்ய சாயி எனும் பட்டு நூலில் கோர்த்தாள்...

இதை என்ன செய்யப் போகிறாய்...?

இது என்ன இலக்கண சுத்தமான கவிதையா? இல்லையே!

படித்த பண்டிதர்கள் முன் இதை வைக்கிற அளவுக்கு நீ தைரியசாலியாகிவிட்டாயா?

இப்படி அவளுள் எழுந்த கேள்விகளை எல்லாம் தட்டித்தட்டி உட்கார வைத்தவள் - தனக்குத் தானே சமாதானமாய் சொல்லிக் கொண்டது இதுதான்:

இது ஒரு மழலையின் மகிழ்ச்சி வெளிப்பாடு‌.. இது நாள் வரையில் தான் பட்ட துயரங்களை எல்லாம் வெறும் காற்றாய், கனவாய் மாற்றிய பகவான் பாபாவுக்கு வார்த்தைகள் தடுமாற - விழிகள் குளமாக - அர்ச்சித்த நன்றி மலர்க்குவியல்... 

இதை முடித்ததும் - வெளியிடுகிற பாக்கியம் யாருக்கென்பதையும் அந்த பகவான் பாபாவே தீர்மானிக்கட்டும் என்றிருந்தவளுக்கு... 'குடும்ப நாவல்' பற்றிப் பேச திரு அசோகன் வர... அன்றைக்கு வியாழக்கிழமை... அந்தாதியின் நூறாவது பாடலை அவளது உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்த நேரம்... பொன்மாலைப் பொழுது...

"பெறுவீர் புண்ணியங்கள் புட்டபர்த்தி நெஞ்சில் கொண்டு!"

ஆம்‌.. எங்கேயிருந்தோ எதற்காகவோ வந்த திரு.ஜி.அசோகன் அவர்கள் இந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்...

பாபாவின் பக்தர்களுக்கும் , 'குடும்ப நாவல்' வாசகர்களுக்கும் ஒரு சிறிய விண்ணப்பம்:

இதில் நாவலாசிரியையைத் தேடாதீர்கள்.

சொற் குற்றம் பொருட்குற்றம் பார்க்காதீர்கள்.

பகவான் பாபாவை மட்டுமே தரிசியுங்கள்.

நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும்!

ஓம்ஸ்ரீசாயிராம் 


அன்புடன் 

அனுராதா ரமணன்


(ஆதாரம் : ஸ்ரீ சத்திய சாயி சங்கீர்த்தனம் / ஆசிரியர்: நாவலாசிரியர் திருமதி அனுராதா ரமணன்/ ஆண்டு:2001)


மலை உச்சியில் நின்றாலும் ஆகாயத்தை தரிசிக்கும் போது அண்ணார்ந்தே பார்க்க வேண்டும்... அதுபோல் புகழ் உச்சியில் நின்று கொண்டிருந்த போதும் அம்மையார் அனுராதா ரமணன் ஒரு எழுத்துக் குழந்தையாய் இறைவன் பாபாவை அண்ணார்ந்து பார்த்து ஆச்சர்யப்பட்டு சேகரித்த நட்சத்திர வரிகளே "ஸ்ரீ சத்ய சாயி அந்தாதி" ... மிகப் பெரிய பொக்கிஷம்... புகழ் போதை ஆன்மீக ஏற்றத்தைத் தருவதில்லை... உலகத் தள்ளாட்டத்தையே தரும்.. பக்குவத்தைத் தராமல் பகட்டையே புகழ் பரிசளிக்கும்... ஆன்மீகம் எழுத அருள் இருக்க வேண்டும்... அப்படி ஒரு அருள் பெற்ற எழுத்தாளர் அம்மையார் அனுராதா ரமணனின் அந்தாதி ஒரு சாயி அற்புதம்... அதில் ஆதிப் பாடலும்... அந்தமான பாடலும் உங்களுக்காக... 


1) அழைத்தேன் அழைத்தவுடன் எழுந்தோடி வந்த திருவே,

குழைந்தேன் நின் கார்முகில் கேசம் கண்டு,

மழைக்கே குடை பிடித்த மாதவனே , இக்கலியில் 

செழிக்கும் செஞ்சுடரே சத்யசாயியெனும் 

முழு நிலவே 


101) கொண்டாடிக் கொண்டாடி சாயிநாதன் அந்தாதி

பண்பாடி தினம் தினமும் பரவசமாய் பூசித்தால் 

கண்டோர்க்கும் கேட்டார்க்கும் இல்லை மனக்கவலை

விண்டுரைத்தேன் என்றாலும் பிழைகள் பொறுத்தருள்வீர்!


இவரின் ஒவ்வொரு பாடலும் இறைவன் பாபாவின் காலடியிலேயே கோர்க்கப்பட்ட ஆன்ம சரங்கள்... ஆன்மீக விசாரங்கள்...  முதல் பாடலின் இறுதி சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வரும் - இதுவே அந்தாதி! திருமதி அனுராதா ரமணன் அவர்களின் "ஸ்ரீ சத்ய சாயி அந்தாதி" விரைவில் இயலாகவும் இசையாகவும் நமது ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் மலரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்! நமது ஸ்ரீ சத்ய சாயி யுகம் சேவை நோக்கோடு 24/7 இயங்குவதே சாயி பொக்கிஷங்களையும் பாபா புதையல்களையும் வெளியே அனைவருக்கும் சரிசமமாய்ப் பகிர்ந்து பரவசப்படுத்தவே!

எழுத்தாளர் அனுராதா அம்மையார் சொன்னது போல் அந்தப் புண்ணியத்தை ஸ்ரீ சத்ய சாயி யுகம் கட்டிக் கொண்டது இப்போது!

அம்மையார் அமரராகிவிட்டார்; ஆனால் அவரின் "ஸ்ரீ சத்ய சாயி அந்தாதி" க்கு அவரின் அந்தாதி போலவே முடிவே இல்லை!


 பக்தியுடன் 

வைரபாரதி
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக