தலைப்பு

வியாழன், 13 அக்டோபர், 2022

ஸ்ரீமதி கலி சாரதாதேவி (பெத்த பொட்டு) | புண்ணியாத்மாக்கள்

Pedda Bottu (Sharada Devi) - She lived 98 years. 8th Aug 1888 to 25th Dec 1986. She was a contemporary of Shirdi Sai and Sathya Sai both.


சாயி பக்தர்களிடையே "பெத்த பொட்டு" (தமிழிணைப் பொருள் ‘பெரிய’ பொட்டு) என்ற பெயரில் பிரபலமாக அறியப்பட்டவர் திருமதி.கலி சாரதாதேவி அவர்கள். தனது நெற்றியில் பெரிய அளவில் பொட்டு வைப்பது வழக்கம்; அதனால் சுவாமி அவரை பெத்த பொட்டு என்று அன்புடன் அழைப்பார்; அந்தப் பட்டப்பெயரே பிரபலமாக நிலைத்து விட்டது.  அந்தப் புனிதவதி, இரண்டு சாயி அவதாரங்களையும் தரிசித்ததோடு அல்லாமல் நெருங்கிவாழும் பெரும்பேற்றையும் பெற்ற புண்ணியாத்மா ஆவார்.
அவருடைய வாழ்க்கை மொத்தமும் விளக்கிக்கூறும் அற்புத சரிதநூல், "சுய சரிதம் பெத்த பொட்டு"  என்ற தலைப்பில் கிடைக்கிறது. எனினும் சத்யசாயி தெய்வத்துடன் அணுக்கமாக வாழ்ந்து சேவை புரிந்த புண்ணியாத்மாக்கள் வரிசையில் இவருடைய வாழ்க்கையையும், "ஸ்ரீ சத்யசாயி யுகம்"  வாசகர்களுக்காக சுருக்கமாய்த் தருகிறோம்... 

 







🌷தோற்றமும் வளர்ச்சியும்:

சுவாமியின் தீவிர பக்தையான கலி சாரதா தேவி, 1888ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ஹைதராபாத் மாகாணத்தின்  மந்திரிபிரகதா என்ற குடும்பப்பெயர் கொண்ட ஒரு பிரபலமான பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அது 150 பேர் கொண்ட மாபெரும் கூட்டுக் குடும்பம்; கிட்டத்தட்ட 50 சேவகர்கள். பாரம்பரியமாக நரசிம்மரை வழிபடுகிற குடும்பம் அது. ஆன்மீக மார்க்கத்திலும் சலத்தவர்களில்லை; அவர்களின் முன்னோர்களின் அனுபவங்கள் மாயாஜாலக் கதைகளையே மண்டியிடச் செய்யுமளவு அமானுஷ்யமானவை, ஆயினும் மூன்று தலைமுறைகளாக குடும்பத்தில் பெண் சந்ததி இல்லை. ஷீரடி சாயி பாபாவை வேண்டிக்கொண்டதின் பலனாக, ஒரு பெண் குழந்தை பிறந்துசாரதாதேவி எனப் பெயரிடப்பட்டார். வரமாய்க் கிடைத்த பெண்குழந்தை என்பதால் கூடுதல் அன்பையும் கவனிப்பையும் பெற்றார். அவள் 9 மாத குழந்தையாக இருந்தபோது அவளுடைய தாய் இறந்துவிட்டாள்; அதன்பின்னர் ஒரு வருடம் கழித்து அவரது தந்தை துறவறம் சென்றுவிட்டார். ஆறு பெரியப்பாக்களில் மூத்தவர் மற்றும் அவரது மனைவியை,  தனது தந்தை மற்றும் தாய் என்று கருதி வளர்ந்தாள். பின்னாளில்...தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் மராத்தி ஆகிய ஆறு மொழிகளில் தேர்ச்சியடைந்தாள். சின்னஞ்சிறு வயதிலேயே... வழிபாடு, தூய்மை, உண்மைத்தன்மை, தெய்வத்தின் அருகாமை  மற்றும் விழிப்புணர்வுடன் வளர்ந்தாள்.


🌷ஆரம்பகால போராட்ட வாழ்வு:

திருமணம் ஆனவுடன் குடும்பப்பெயர் மாற்றம் பெற்று கலி சாரதாதேவி எனப்பட்டார். 12 வயதானபோது மாமியார் வீட்டிற்கு சென்றாள். கணவர் சங்கீதத்தில் வல்லவர், பல இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். அந்த வீட்டில் எந்நேரமும் சங்கீதமும் நாடகப்பயிற்சியுமாக இருக்கும். சிக்கல் என்னவென்றால் சாரதாதேவியின் கணவருக்கு தாசிகளோடு தொடர்பிருந்தது. இவர்களுக்குள் சுமூகமான உறவு நிலைக்கவில்லை. பிறந்த குழந்தைகளும் ஆயுளின்றி சிறு வயதிலேயே இறந்தும் போயின. அதன்பிறகு கணவர், வரதட்சணையாக வந்த வீடு, நகைகளை விற்று மோசடி செய்தார்; சாரதாதேவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் திருமணமும் செய்துகொண்டார். 

சாரதாவின் தந்தை ஸ்தானத்தில் இருந்துவந்த பெரியப்பாவும் மாண்டார். பின்னர் சாரதாதேவி, பாரத நாட்டின் சுதந்திரப் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் போராட்டங்களிலும் கலந்து கொண்டார்; சிறை சென்றார். சிறையில் நற்பெயரெடுத்து... ஒரு கிருஷ்ண பண்டிகையின்போது சிறைக்குள்ளேயே பூஜைகளும் செய்தார்.


🌷சமூக சேவையும் காந்திஜியும்:

சாரதா துவக்கப் பள்ளி மையம் என்ற நிறுவனத்தைத் தொடங்கி... தனது அறிவாற்றலாலும், மாணவர்களின் மேலுள்ள அன்பாலும், சிறப்பாக நடத்தினார். ஆனால் உடன் பணியாற்றியவர்கள் இவரைப் பெரும்பாலும் பொறாமையுடனேயே அணுகினர். அதனால் ஏற்பட்ட சிக்கலால் அந்தப் பள்ளியை விட்டு வெளியேறினார். பின்னர் சென்னைக்குப் போய் அங்கெ ஒரு பள்ளியில் ஆசிரியப் பணிபுரிந்தார்.


இதனிடையே, அங்கு சி.ஐ.டி போலீசுக்கு உதவி ஒரு பிரபல திருடனையும் கைது செய்ய உதவினாள்; சிறிதுகாலம் சங்கீதபாடசாலையும் நடத்தினாள். இதற்கிடையே ஒரு முறை காந்திஜியையும் ராஜேந்திர ப்ரசாத்தையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரின் திறமைகளைக் கண்டுகொண்ட காந்திஜி, இவருக்கு சபர்மதி ஆசிரமத்திற்கு வர அழைப்பு விடுத்தார்.  எனவே இவர்  அங்கும் சென்று தங்கியிருந்து சிலகாலம்  சேவை புரிந்தார்.


🌷ஆன்மீகப் பயணத் தொடர்ச்சி:

எல்லோரா, ஜெய்ப்பூர், விஜயநகரம், மந்திராலயம் எனப் பல இடங்களுக்கும் சென்றார். பஞ்சாபி சுவாமி, தபஸ்வி மகராஜ் போன்ற மகான்களையும் சந்தித்தார். பிறந்தது முதல் இழப்பு, போராட்டம், திருமண வாழ்வில் சிக்கல், குழந்தைகள் அகாலமாக இறந்தமை, சமூக சேவையின்போது ஏற்ப்பட்ட பிரச்சனைகளெனப் பல நிகழ்வுகளால் சொல்லொணா விரக்தி அவர் மனதில் ஆழமாகக் குடியிருந்தது. எந்தக் காரியத்தை எடுத்தாலும், அது சுமூகமாகப் போவதில்லை என்று உணர்ந்தது பின்னர் ஷிரடிக்குச் சென்று சாயியிடம் முறையிட்டு மந்திரோபதேசம் பெறலாம் என்று எண்ணம் கொண்டாள்.

 

🌷ஷிரடீஷ்வரரின் அணுக்கம்:

ஷீரடிப் பயணமோ அல்லது பாபாவின் தரிசனமோ சாரதாதேவிக்குப் புதிதல்ல. அனால் இம்முறை (1918ம் ஆண்டு வாக்கில்) தீர்மானமான மனதுடன் சென்றிருந்தாள். 

"எனக்கு மந்திரோபதேசம் செய்யுங்கள்" என்று பாபாவிடம் மன்றாடத் தொடங்கினாள் .  "நீ இதை என்னிடம் பலமுறை கேட்டுவிட்டாய். . நான் முடியாதென்று சொல்லியும், நீ பிடிவாதமாக இருக்கிறாய். உனக்கு இன்னும் அவ்வளவு வயதாகவில்லை. உனக்கு வயதானதும் நான் மந்திரோபதேசம் செய்கிறேன். இன்னும் சிறிது நாள் பொறுத்திரு" என்று பாபா சொன்னார். அதிலிருந்து 15 நாட்கள் அமைதியாயிருந்தாள்; பின்னர் ஒரு நாள் பாபாவிற்கென பூரண்போளி தயாரித்து வைத்துவிட்டு, பாபாவைத் தேடி துவாரகாமாயி, சாவடி மற்றும் லெண்டி தோட்டத்தில் அலைந்து கண்டுபிடித்தாள். ஆனால் பாபாவிற்கு அவள் அங்கு வந்தது பிடிக்காதது போலக் கடுமையாக நடந்துகொண்டார். ஆனாலும் அவரைத் தொடர்ந்து துவாரகமாயிக்கு சென்று அங்கும் அதே பிரார்த்தனையை மீண்டும் வெளிப்படுத்தினாள். பாபா கோபமடைந்து "நீ இப்படித்தான் சொன்னதை எப்போதுமே கேட்டதில்லை" என்றுகூறி உதைத்தார். அங்கிருந்து நீங்கி துவராகமாயிக்கு எதிரிலிருந்த மரங்களிடையே சென்று அழுதவாறு படுத்துவிட்டாள்  சாரதாதேவி.


அன்றைய தினம் முடிந்து அனைவரும் தூங்கியபின்னர், பாபா மெல்ல அருகில்வந்து " குழந்தாய், வா நாம் லெண்டித் தோட்டத்திற்குப் போகலாம்" என்றார். அங்கு சென்றமர்ந்ததும் பாபா, "குழந்தாய், நீ எதுவும் சாப்பிடாமலேயே தூங்கி விட்டாய். என்னால் துவாரகாமாயியில் தூங்க முடியவில்லை. உனக்கு சில முக்கிய விஷயங்களை சொல்வதற்காக உன்னை இங்கு அழைத்து வந்தேன். முதலில் நீ உண்பதற்கு ஏதாவது தருகிறேன். பின்னர் உன்னிடம் பேசுகிறேன்" என்றார். அவர் தனது கையை  நீட்டி, 'அல்லா, மாலிக் ஹை' என்றார். உடனே, இரண்டு சப்பாத்திகளும், ஒரு கொய்யாப் பழமும் அவருடைய கையில் வந்தன. அவற்றை அவளிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.  தனது தந்தை நாற்பது வருடங்களாக பாபாவுக்கு சேவை செய்கிறார். ஆனால் அவருக்கு ஒரு போதும் இத்தகைய பிரசாதம் கிடைத்ததில்லை. ஆனால் தனக்கு கிட்டியதே… என்றெண்ணி மிக்க சந்தோஷம் அடைந்தாள்.


🌷நான் மீண்டும் வருவேன்:

பாபா அவளிடம், "முதலில்  உன் வயிற்றை நிரப்பிக் கொள். பின்பு நான் உன்னிடம் பேசுகிறேன்” என்றார்; அவள் சாப்பிட்டு முடித்தபின், "உன் கோபமெல்லாம் போயிற்றா?"என்று கேட்டார். 'எனது கோபம் போய்விட்டது. நான் இப்போது ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறேன். இப்போது எனக்கு ஒரு நல்ல மந்திரத்தை உபதேசியுங்கள்' என்று பதில் சொன்னாள்."மீண்டும் அதையே சொல்கிறாயே? எப்போது பார்த்தாலும் நீ மந்திரம் மந்திரம் என்று அழுகிறாய்! கொஞ்ச காலம் அதை மறந்து விடு. என் காலைப் பிடித்துக் கொண்டு, நான் இப்போது உனக்கு சொல்லப் போவதை யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு என்றார் பாபா. அவர் ஒரு நல்ல மந்திரம் தரப்போகிறார் என்ற துடிப்பில், அவருடைய கால்களைப் பிடித்துக்  கொண்டு ‘யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்' என்றாள் சாரதாதேவி.

 

ஆனால் பாபாவோ, “இதோ பார் குழந்தாய், நான் இதே பெயருடன் ஆந்திரப் பிரதேசத்திற்குத் திரும்ப வருவேன். அப்பொழுதும் நீ என்னிடம் வருவாய். நான் உன்னை என்னுடன் வைத்துக் கொண்டு, ஆனந்தத்தைத் தருவேன் என்றார். ‘இது எனது பெரும் பாக்யம் பாபா நான் தன்யளானேன்' என்றாள் சாரதா. "அப்துல்லா, நானா, தீக்ஷித் ஆகியோர் எனது இரண்டாவது அவதாரத்தைக் காண மாட்டார்கள். நீ ஒருத்தி தான் பார்ப்பாய். அதனால் தான் நான் உன்னிடம் சொல்கிறேன் என்றார் அவர். திரும்பவும் அவர் எப்போது வருவார் எனக் கேட்க நினைத்து... ஆனால், கேட்டால்…அவர் நான்கு அறைகள் அறைந்து விடுவாரோ என்ற பயத்தில் கேட்காமலிருந்து விட்டாள். 'பாபா, இதை நான் ஒருவரிடமும் சொல்லக் கூடாது என கூறுகிறீர்கள். இதை ஒரு போதுமே வெளியிடக் கூடாதா?’ என்று கேட்டாள். 'சமய் கேலியே நிரீக்ஷன் கரோ (சரியான நேரத்திற்காக காத்திரு)' என்று சொன்னார். அவர் எழுந்து நின்று, “நாம் துவாரகாமாயிக்குப் போகலாம்” என்று சொன்னார். 'பாபா, எனது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மாட்டீர்களா?' எனக் கேட்டாள். “திரும்பவும் கேட்க ஆரம்பித்து விட்டாயா? உனது ஆசை ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டு விட்டது. போகலாம்” என்றார்.

 

இன்றைய சத்யசாயி அவதாரத்தைப் போலவே அதன் முந்தைய ஷீரடிசாயி  அவதாரமும் தன்னுடைய அடுத்த வரவு குறித்து முன்னறிவிப்பு தந்துள்ளார். அப்படிப்பட்ட தெய்வீக பேரறிவிப்பை  நேரடியாகக் கேட்கும் பாக்கியம் பெற்ற "பெத்த பொட்டு " கலி சாரதாதேவி, ஸ்ரீ சத்யசாயி தெய்வத்தை சந்தித்தது பின்னர் அவருடைய நிழலேயே வாழ்ந்தது குறித்து பகுதி-2ல் காணலாம்.








பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி பாபா எவ்வாறு தனது பக்தர்களின் கடிதங்களை ஆர்வமுடன் தனது திருக்கரங்களால் பெற்றுக் கொண்டு பின்னர் தனது தனியறையில் அவைகளை வாசித்தாரோ அதேபோல… தனது முந்தைய ஷீரடி அவதாரத்தில், பக்தர்களின் காணிக்கைக் காசுகளை (லெண்டித் தோட்டத்திற்கு தனியாக சென்று சில சமயம்) ஒவ்வொன்றாக எடுத்து, கையில் பிடித்துக்கொண்டு... அதைக்கொடுத்தவரின் பெயரைச் சொல்லி திட்டுகள் மூலம் அவர்களை ஆசீர்வதித்தார். அந்த தெய்வீகக் காட்சியைக் கண்டவர்கள் சிலரே; அதன் உள்ளர்த்தம் புரிந்தவர்களோ… வெகு சிலரே! இரண்டு சாயி அவதாரங்களும்அவர்களுக்குரிய நூதன முறையில் பக்தர்களை ஆசீர்வதிக்கும் விதத்தினை கண்டுரசித்த  பாக்கியசாலி "பெத்த பொட்டு" கலி சாரதாதேவி அவர்கள்.

 

[கடிதம் கொண்டோ, காணிக்கை காசு தொட்டோ, ஒரு பக்தனின் பின்புலத்தை அறிய சாயிக்கு எந்த அவசியமும் இல்லை. சர்வாந்தர்யாமி சாயிதேவன், மானிடர்களுடனான ஸ்தூல தொடர்பிற்கும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தத்திற்கும் செய்த லீலைகள் அவை! ]

 

🌷அதே பாபா ஆனால் பள்ளிச்சிறுவனாக!

கலி சாரதாதேவி 1940ம் ஆண்டு  ஒருமுறை உறவுகொண்டாவின் ராமர் கோவிலில், கதாகாலச்சேபம் செய்வதற்காக அங்கு சென்றார். அப்போது அவளின் உறவினரான திரு .ஆஞ்சநேயலு அவர்களின் வீட்டில், பள்ளிச் சிறுவனாக சத்ய நாராயணா-வைப் பார்க்க நேர்ந்தது. அதுவே முதல் சந்திப்பு!... ஆனால் அப்போது எந்த தெய்வீக வெளிப்பாடும் பெத்த-பொட்டு அம்மாவால் உணர முடியவில்லை. அதற்கு இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் அதே சிறுவனைக் கண்டபோது முற்றிலும் வேறான அனுபவமாக இருந்தது.

இவளைக் கண்டதும் அவர் ஹிந்தியில் பேசினார். ஜப்மெயின் போலே து ஸுனா நஹின் பூல்கயா அப் ஆகயா ஹம் புட்டபர்த்தி ஜாயேகா(நான் உன்னிடம் கூறியபோதுநீ கேட்கவில்லை. நீ மறந்து விட்டுஇப்போது வந்திருக்கிறாய். நாம் புட்டபர்த்திக்குச் செல்லலாம் வா)”.  அதிர்ந்து போனவளாய்... இவரை நாம் எவ்வாறு நம்புவது? என்று நினைக்கத் தொடங்கினாள் பெத்த-பொட்டு . உடனே அவர்  “நீ 16 ரூபாய் தர வேண்டும் வந்து கொடு என்றார். மேலும், "நான் ஷீர்டிபாபா என்றுகூட தெரிந்து கொள்ளாமல் நமஸ்காரங்கூடச் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருக்கிறாய்?" என்றார். இந்த சொற்களைக் கேட்டதுமே அவள் பாபாவின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள். ‘பாபாதயவு செய்து என்னை மன்னியுங்கள்நான் தவறிழைத்து விட்டேன் என்றாள். "அழாதேபுட்டபர்த்திக்கு வாநான் அனைத்தையும் உனக்கு அங்கு கூறுகிறேன்" என்று அன்புடன் ஆசியளித்தார்.

 

🌷பிரசாந்தி நிலையம்:

தான் நடத்தி வந்த ஆதரவற்றோர் விடுதியைப் பராமரிக்கும் வண்ணம் 1940 முதல் 1958 வரை போக்கும் வரத்துமாக இருந்த பெத்த பொட்டு; 1958ல் தனது 70வது வயதில், நிரந்தரமாக புட்டபர்த்தியில் குடியேறினார். மூன்று ஆண்டுகள் புட்டபர்த்தி பழைய மந்திரத்தில் இருந்து தினமும் பிரசாந்தி நிலையத்திற்கு நடந்து செல்லும் வழக்கம் கொண்டார். பெரும்பாலும் மந்திரமருகே உள்ள மரங்களினடியில் படுத்துறங்குவதும் பெத்த பொட்டுவின் வழக்கம்.  ஓர்நாள் சுவாமி கருணையுடன் அவளை இனி புதிய மந்திரமருகே ஷெட்டிலேயே தங்கி அதனை மேற்பார்வையும் பார்க்கும்படி சேவை வழங்கினார்.

ஆசிரமப் பெண்மணிகளின் தேவைகளைக் கவனிப்பது, தக்க அறிவுரைகள் மூலம் அவர்களுக்கு போதிப்பது, பூஜை முறைகளைக் கற்றுத் தருவது, ஆசிரமத்தில் பாதுகாவல் செய்வது,  களவு மற்றும் ஏமாற்றுதல் போன்றவை நிகழாமல் கண்காணிப்பது என்று பல பணிகளைப் பிரியமுடன் செய்துவந்தார் பெத்த பொட்டு.

 

🌷ஆனந்த சம்பாஷணைகளும் லீலைகளும்:

பெத்தபொட்டு நேரடியாகக் கண்டு மகிழ்ந்த, சுவாமியின் லீலைகளும் மகிமை நிறைந்த அற்புதச் செயல்களும் கணக்கிலடங்காதவை. சுவாமி குறும்பாக பெத்தபொட்டுவிடம் சொல்லும் விஷயங்கள் அவற்றிற்கு பக்திமாறாமல் அதேசமயம் சுவாரஸ்யம் மங்காமல் அவளளிக்கும் பதில்கள்… ஆனந்த வைபவமாக இருக்கும். அவைகளைப் பட்டியலிட்டு… தலைப்புகள் மட்டும் தந்தால் கூட பக்கம் பக்கமாக எழுத வேண்டியிருக்கும்.

 

ஒருமுறை இருமிக்கொண்டிருந்த பெத்தபொட்டுவிற்கு சுவாமி கற்கண்டை வரவழைத்துக் கொடுத்தார், வாயில் போட்டால் வேப்பங்காயாய்க் கசந்தது; சுவாமியிடம் கூறினாலோ... இவள் பொய் சொல்கிறாள்நான் கற்கண்டு தானே கொடுத்தேன் என்றார் குறும்பாக! ஒருமுறை சில நாய்குட்டிகளை சுவாமி காண்பித்து இவற்றை நீ பராமரி என்றார் பெத்தபொட்டுவிடம். அதற்க்கு அவளோ;" என்னையே நீங்கள் பராமரிக்கும் போதுஇவற்றை நான் பராமரிப்பது எப்படி சுவாமி" என்றாள். ஒரு சமயம் சுவாமி இவரிடம், நான் இந்த ஆடிட்டோரியத்தை மயன் சபையாக மாற்றப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு "யானைகள்குதிரைகள்படங்கள்.... " என்று ஏதோ சொல்லத்தொடங்கி... பின்னர் பெத்தபொட்டுவைப் பார்த்து; " உன்னிடம் சொல்லியிருக்கக் கூடாது! நீ அந்திரப் பத்திரிக்கைபோல!  உன்னால் மனதிற்குள் வைத்திருக்கவே முடியாது" என்று சொல்லி சிரித்தார்.

மற்றொருமுறை ராமண்ணாவும் பெத்தபொட்டுவும் சுவாமியின் அறையை சுத்தம் செய்யும் பொருட்டு அங்கு சென்றபோது, சுவாமி ஏதோ பணி செய்துகொண்டிருந்தார். அங்கு சுத்தம் செய்யச்சென்ற இவர்கள் ‘ஆன்மீக விஷயங்கள் ஏதாவது கூறுங்கள் என்றபடி  சுவாமியை தொந்தரவு செய்தனர். சுவாமி, "இப்போது இல்லை" என்று சொல்லியும் கேட்காததனால்... சுவாமி அவர்கள் கண்முன்னிருந்து அப்படியே மறைந்து உடனே அவர்களின் பின்புறமாக தோன்றி "நான் செல்கிறேன்" என்றார். அதிசயத்தில் பிரம்மித்துப் போனாலும்கூட பெத்தபொட்டு அவரின் கால்களை உடனே எட்டிப் பிடித்துக்கொண்டு மீண்டும் அதே வேண்டுதலை வைத்தாள்.

 

ஸ்ரீமதி.ஈஷ்வரம்மாவும் சுவாமியும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கூட பெத்தபொட்டு அந்த சம்பாஷணைகளில் கலந்து கொண்டு சுவாமியிடம் "துன்ன போத்தா" என்று திட்டு வாங்கியதும் உண்டு. அதுமட்டுமல்ல சுவாமியின் சங்கல்பத்தால் (மாயத்  திரையிடப்பட்டும் பின்னர் திரைவிலகி) ஈஸ்வரம்மா அவர்கள் தன்னுடைய குமாரன் சாக்ஷாத் இறைவடிவம் தானென்று உணர்ந்து கூறியதும் பெத்தபொட்டுவிடம் தான்.

ஜபம் செய்வதற்காக ஆலமரதிற்குச் சென்ற பெத்தபொட்டு சுவாமியின் அறையிலிருந்து தேவதைகள் வெளிவந்து வான்வெளியில் மிதந்து செல்வதை கண்டாள். மேலும் இசையொலியும் கேட்டது; அங்கிருந்த காவலாளியும் அந்த இசையைக் கேட்டதாக ஆமோதித்தான். பின்னர் சுவாமியிடம் தெரிவித்தபோது "உன் தலை! இரண்டுபேரும் கனவு கண்டிருக்கிறீர்கள்" என்றார்.


🌷ஜகத்பதி சாயிநாதர்:

1967ல் பெத்தபொட்டுவின் கணவர் இறந்தது குறித்து சுவாமி அவளுக்கு அறிவித்தபோது, அவள் கலங்கவில்லை மாறாக, "எனக்கு யாருமில்லை" என்று கூறினாள். ஒருமுறை சுவாமி வெள்ளைப்புடவை ஒன்றை வழங்கினார்; அதனை சாயமிட்டு அணிந்து கொண்டார் பெத்தப்பொட்டு. பின்னர் தரிசனத்திற்கு அமர்ந்தபோது சுவாமி, "உன் கணவர் உனக்கு இதைத் தந்தாரா?" எனக்கேட்க; ‘எனது சுவாமி எனக்கு இதைத் தந்தார்’ என்று பதிலுரைத்தாள்.  மற்றொரு முறை சுவாமி திரு.பகவந்தத்திடம் இவளைக் காண்பித்து, "இதோபார்இவளது கணவர் காலமாகி விட்டார்! இவளது  பொட்டையோவளையலையோ இன்னும் நீக்கவில்லை" என்றார். அதனால் சுவாமிக்கு ஒரு கடிதத்தில் பின்வருமாறு எழுதினாள்; "என்னை சுவாமி பெத்தபொட்டு என்று அழைக்கிறீர்கள்எனது பொட்டினை அழித்தால்... வேறு என்ன பெயரிட்டு என்னை அழைப்பீர்கள்?". ஆனால் மற்றொருமுறை பொட்டில்லாமல் சுவாமியை தரிசிக்கச் சென்றபோது "ஏன் பொட்டில்லாமல் உட்கார்ந்திருக்கிறாய்... உன் கணவர் எப்போது இறந்தார்?" என்றார் வேடிக்கை புரியும் கிருஷ்ணனாக!

ப்ருந்தாவனில் ஒரு முறை, பெத்தபொட்டு ரங்கோலிக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தபோது  பகவந்தம், ஜோகாராவ், கோகாக் இன்னும் சிலர் முன் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் சுவாமி வந்து, ரங்கோலியைப் பார்த்து, “எவ்வளவு சிரத்தையுடன் கோலங்கள் அமைக்கிறாய். உனது பதி (கணவர்) வருகிறாரா?” என்று கேட்டார். ‘எனது பதி இல்லைஜகத்பதி (ப்ரபஞ்சத் தலைவர்) வருவார்' என்றாள். சுவாமி பெத்தபொட்டுவின் அருகே வந்து, "அது சரிஉனது ஜகத்பதி யார் என்று எனக்குக் காண்பிநானும் அவரை பார்க்கிறேன்" என்றார் . உடனே சுவாமியின் வயிற்றில் ஒரு தட்டுதட்டி, 'இவர் தான் என் ஜகத்பதி அவர் இந்த வழியாக நடந்து வருவார்' என்றாள்.

 

🌷சாயீஸ்வர பாதசங்கமம்:

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா ஸ்ரீமதி. பெத்தபொட்டுவிடம் அவளுடைய இறுதித் தருணங்களைப் பற்றி முன்னமே கூறி இருந்தார், அவளும் தயாராகக் காத்திருந்தாள். 1986ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி, தரிசன வரிசைகளில் ​​அவர் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சுவாமியைக் கண்ணாரக் கண்டாள். தனக்கு முன் நடந்துவந்த சுவாமியிடம், "சுவாமி! நான் உங்களிடம் விடைபெறலாமா?" என்று பணிவுடன் தனது பிரார்த்தனையை சமர்ப்பித்தாள். சுவாமியும் அவளை அன்புடன் ஆசிர்வதித்து பின் நகர்ந்தார். சில நாட்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று, தனது இறுதி மூச்சை விடுத்தார்.

 

"ஸ்ரீ சத்யசாயி விரத கல்பம்" உட்பட நிறைய புத்தகங்களும் சுமார் 1500 பாடல்களும் எழுதியவர்  பெத்தபொட்டு. அதிலும் சுவாமியின் மகிமை என்னவென்றால்…. பெத்தபோட்டு அவர்கள், புதிய புத்கங்களுக்காக கைப்பிரதிகளை / குறிப்புகளை எழுதி வைப்பது வழக்கம். அப்படி வைக்கபடும் கைப்பிரதிகளில்.. பலமுறை,  இரவில் தானாகவே  திருத்தம் செய்யப்பட்டிருக்கும். அது பெத்தபொட்டுவுக்கான பகாவானின் அன்பான லீலை என்பது மட்டுமல்ல, பகவானின் இலக்கியங்கள் பகவானின் நேரடி தெய்வீகப் பார்வைக்குட்பட்டது என்ற பேருண்மையையும் நமக்கு விளக்குகிறது. 


🌷நமது சிந்தனைக்கு: 

ஒருமுறை பெத்தபொட்டு பின்வருமாறு கூறினார்;  "பகவான் என்ன பேசினாலும், அவற்றிற்கு கணக்கற்ற கருத்துப் பொருட்கள் உண்டு, 'சத்ய சாயிபாபா யார்? அவருடைய இயல்பு என்ன? அவர் ஏன் இறங்கி வந்தார். 100 பேரில் 99 பேருக்கு இதற்கு விடை தெரியாது" [---சுவாமியின் நிஜஸ்வரூபம் மற்றும் தெய்வீகத் திட்டங்கள் குறித்த சுவாமியின் பேருரைச் செய்திகளில், தங்களுக்குச் சாதகமானவைகளை சத்யவாக்கு என்றும், சாதகமற்றவைகளை "அது தத்துவம்", "மறைபொருளுடன் கூறிய ஞான வாக்கியம்" என்றெல்லாம் பட்டம் கொடுத்து… சுலபமாகப் புரியக்கூடிய விஷயங்களைக்கூட புரியாதது போல் தங்களைத் தாங்களே ஏமாற்றிகொள்வோரும் உள்ளனர். ---]

 

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர் சாய்புஷ்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக