தலைப்பு

புதன், 19 அக்டோபர், 2022

நாங்கள் செய்த நல்லதும் கெட்டதும் எவ்வாறு எங்களுக்கே திரும்புகின்றன?

விதையை ஊன்றிவிட்டு முளை வரக்கூடாதென்றால் எப்படி? நீங்கள் செய்த கர்மாவின் பலனுக்குத் தப்பிக்க இயலாது! 

கடவுள் கருணை கூர்ந்து செய்ய இயலாதது எதுவுமில்லை! கர்மாவையும் கடவுளின் கருணை அழிக்கக் கூடியதே! 

என்றாலும் கடவுள் தர்ம வடிவமாக இருப்பதால் தர்மநீதியுடன் பாவ கர்மாவுக்காக மக்களை தண்டனைக்கு ஆட்படுத்த வேண்டியிருக்கிறது! புண்ணியசாலிகளும் பாவிகளும் ஒரேவிதமான இன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்தால் யார் தான் புண்ணியங்கள் செய்வர்? எவர் தான் பாவம் செய்யாமல் இருப்பர்?

ஆயினும் பாவத்துக்காக பச்சாதாபப்பட்டு பரமாத்மாவிடம் பக்தியில் உருகி மன்னிப்புக் கோரினால்  பாவத்திற்கான தண்டனையின் உக்கிரத்திலிருந்து தண்டிக்கப்பட்டவர்க்கு தெரியாது போலவே செய்வார்! தீய கர்மாவின் வீர்யம் குறைந்து அதை நீங்கள் அனுபவிப்பீர்கள்! ஆனாலும் தண்டனை ரத்தாகாது! வலி தெரியாமல் இருக்க மார்ஃபியா செலுத்துவது போலத்தான்! அதிக பட்சமாக கர்மாவை இறைவன் குறைப்பார் உங்கள் பக்தியைப் பார்த்து... ஆனால் அடியோடு தீய கர்மாவை அப்படியே நீக்கமாட்டார்! அபூர்வமாக எங்கேனும் இறைவன் மனித கர்மாவையே ரத்து செய்யலாம்! ஆனால் கர்ம வீர்ய குறைப்பே பொதுவான நடைமுறை! 


வினை அதன் பயனைத் தந்தும் அது ஜீவர்களைப் பாதிக்காதபடி செய்வதால்தான் இறைவன் அருள் இருக்குமே தவிர வினைப் பயனையே ரத்து செய்வதாக இராது! 

அடியார்களின் கர்மாவை பாரமாத்மாவே தனக்கு மாற்றிக் கொண்டு தெய்வங்கள் , அவதாரங்கள், மகாபுருஷர்கள் மூலமாக அனுபவித்துத் தீர்ப்பதும் உண்டு, எதையும் செய்யவல்ல சர்வ சக்தியாயினும் இறைவன் தர்மநீதியால் இப்படிக் கர்மப் பயனை அடியோடு ரத்து செய்யாமலிருக்கிறான்! 


கிருஷ்ணர், பலராமர் சுதாமா , குரு ஸாந்தீபனி ஆசிரம குருகுலத்தில் பயில்கிறார்கள்... ஒருநாள் யாகத்திற்கு  சுள்ளிகள் எடுத்து வரச்சொல்லி அனுப்புகிறார்... அவர்களும் செல்கின்றனர்.. முதுகு நிரம்ப சுள்ளிகள் சேகரிக்கின்றனர்... சோர்வாகிறார்கள்... பசிக்கிறது... நீரால் சுத்தம் செய்யாமல் ஆகாரம் உண்ணக்கூடாது.. நீர் நிலையும் அருகே இல்லை... சரி! என ஸ்ரீ கிருஷ்ணர் சுதாமா மடியில் களைப்பைப் போக்கிக் கொள்கிறார்...அந்த சமயம் சுதாமா யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்திருந்த அவலை இருவருக்கும் தராமல் தானே சாப்பிடுகிறார்... திடீரென கிருஷ்ணர் கண்விழித்து "சுதாமா! வாயை மெல்லுகிறாயே...என்ன சாப்பிடுகிறாய்?" என கிருஷ்ணர் கேட்க.. அதற்கு "நான் ஒன்றும் சாப்பிடவில்லையே... மந்திரம் தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்!" என சுதாமா தெரிவிக்க... 

1. பொய் சொன்னது 

2. பிறர் அருகில் இருக்கையில் கொடுக்காமல் உண்டது! 

இரண்டு பாவத்திற்கும் ஆளாகிறார் சுதாமா.. அதற்காகவே பல காலம் வறுமையை அனுபவிக்கிறார்...

எவரின் மடியில் தன் தலையை சரித்து துயின்றாரோ அவரை தன் மார்பில் அணைத்து... நன்றாக உபசரித்து..‌ அதே மடியில் அப்போது அவர் பதுக்கிய அவலை ... இந்த முறை அவரே தர.. அதை ஸ்ரீ கிருஷ்ணர் உண்கையில் அவரின் தரித்திர பாவம் விலகுகிறது.. அந்த சுதாமாவின் இன்னொரு பெயரே குசேலர்! 


அது போல் பாண்டவர்கள் இந்திரிபிரஸ்தத்தில் (இப்போதைய டெல்லி) ஆட்சி நடத்துகிற போது சத்யபாமாவோடு ஸ்ரீ கிருஷ்ணர் செல்கிறார்.. அது பொங்கல் சமயம்... ஆங்காங்கே கரும்புகள்... அனைவருக்கும் உண்ணத் தருவதற்காக தானே சீவுகிறார்... அப்படி சீவுகிற போது கத்தியின் கூர்மைப்பட்டு சுண்டு விரலில் ரத்தம் பீய்ச்சிடுகிறது... சத்யபாமா பணிப்பெண்ணை அழைத்து மருந்து கட்டும் கருவியை எடுத்துவரச் சொல்கிறார்... ஆனால் துரௌபதியோ அதை கண்ட அடுத்த நொடியே தனது புடவைத் தலைப்பை விர்'ரென கிழித்து சுவாமியின் சுண்டு விரலுக்குக் கட்டுபோடுகிறாள்... அவள் செய்த நல்வினை அவள் துச்சாதனனால் மானபங்கம் செய்யப்படும் போது அதே சுண்டுவிரலிலிருந்து அவள் கிழித்துத்தந்த அதே புடவையின் கொஞ்சத்தை கடல் அளவுக்குத் தந்து அவள் மானத்தைக் காப்பாற்றுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்!


(ஆதாரம் : அறிவு அறுபது/ பக்கம் : 71-84/ ஆசிரியர்: அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக