தலைப்பு

செவ்வாய், 18 அக்டோபர், 2022

பக்தரின் கண்பார்வையை மீட்க பாபா செய்த விநோத சிகிச்சை!!


உலகில் பிணி தீர்க்க பல சிகிச்சை முறைகள் உண்டு. அலோபதி, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி, வர்மா, சித்தா, இன்னும் பலப்பல. ஆனால் நம் வைத்தியநாத பாபாவின் வழிமுறைகள் விசித்ரமானவை. அவரது அருட் பார்வைபட்டே ' கேன்சர்" கேன்சல் ஆனதையும், கரமசைவில் தோற்றுவிக்கும் விபூதி சர்வரோக நிவாரணியானதையும் அறியாதார் யார்?! இதைத் தவிர, சில சமயங்களில் அவர் வேறு பல விநோத வழி முறைகளை மேற்கொண்டு பலரது பிணிகளைத் தீர்த்ததும் உண்டு. அவற்றில் ஒன்றை நாம் இங்கு காண்போம்.


🌷அழையாமலே வந்த அருளாளன்:

எர்ணாகுளம் வாசியான திரு. நடராஜன் சொந்தமாக ஒரு டாக்ஸி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். ஒரு சமயம் அவர் திரு ஹோவர்ட் மர்பெட்டிடம் பேசிக் கொண்டிருந்தது, தான் இடது கண் பார்வையை முற்றிலும் இழந்துவிட்டதாகவும், இது சம்பந்தமாகப் பல கண் சிகிச்சை வல்லுநர்களை அணுகியும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் , சிறிது காலத்தில் அவரது வலது கண்ணும் பார்வை இழந்து, அவர் முழுக் குருடராக நேரிடும் என்று டாக்டர்கள் கை விரித்துவிட்டதாகவும் கூறினார்.


மனம் வாடிய நடராஜன் அவர்களுக்கு, தமது அருட் கரத்தை நீட்ட சங்கல்பித்தார் பாபா. திரு மர்ஃபெட்டிடம் மனம் வருந்திய அன்றைய தினமே நடராஜன் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அன்று அவர் தனது சொந்தக்காரர் இல்லத்திற்கு சென்று இருந்தார். அவர் ஒரு பாபா பக்தர். அவர் நடராஜனின் நிலைகண்டு வருந்தி கூறியதாவது. "தற்போது சென்னையில் சத்யசாயி பாபா இருக்கிறார். அவரை தரிசித்து முறையிடு உனது கண்பார்வை திரும்பக் கிட்டும்!" இதையே தனக்கு கிடைத்த நற்செய்தியாக பாவித்து திரு. நடராஜன் உடனடியாக சென்னை சென்று திரு. ஹனுமந்தராவ் வீட்டில் தங்கி இருந்த பாபாவை தரிசித்தார்.


🌷மல்லிகையே மருந்தாச்சு... மாயமாய் கண் குணமாச்சு:

பாபாவின் அருட்பார்வை இவர் மீது பட, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர் வைத்திருந்த கடிதத்தை வாங்காமலே பாபா கூறினார்.
 
"கவலைப்படாதே. உன் நிலைமை எனக்குத் தெரியும். நீ புட்டபர்த்தி வந்து 15 நாட்கள் தங்க வேண்டும். அங்கு உன்னைக் குணமாக்குகிறேன்!"
 என்கிறார் பாபா!
 நடராஜன் அவர்களும் பாபாபாவின் ஆணையை ஏற்று, சில நாட்களில் புட்டபர்த்தி சென்றார். அங்கு தமது விநோத சிகிச்சையை பாபா ஆரம்பித்தார். தொடுத்த மல்லிகைச் சரம் ஒன்றை பாபா தமது கரத்தால் ஆசிர்வதித்து, தினசரி அம் மலர்ச் சரத்தை நடராஜனின் கண்கள் மீது இறுக்கமாக கட்டிவிடுவார். இந்தக் கட்டை மறுநாள் காலையில் பிரித்து, வேறொரு புது மல்லிகைச் சரத்தை கட்டுவார்... இந்த மலர் சிகிச்சை 10 நாட்களுக்கு நடை பெற்றது. இதன்பிறகு, ஒருநாள் மாலை நேரத்தில் நடராஜனை அழைத்த பாபா, தமது கை அசைவில் ஒரு சிறிய பாட்டிலை வரவழைத்து, அதிலிருந்த மருந்தில் சில சொட்டுக் களை அவரது கண்களில் விட்டார். "கண்களில் எரிச்சல் இருக்கும். கவலைப்பட வேண்டாம். விரைவில் குணமாவாய்" என பாபா அவரிடம் கூறினார். அடுத்த நாள், ருத்ராட்சம் ஒன்றை வரவழைத்த பாபா அதை எப்படி அணியவேண்டும் என்று கூறி, அதை நடராஜனிடம் கொடுத்து ஆசிர்வதித்தார். சிகிச்சை இவ்வாறு முடிவுற்ற நிலையில் நடராஜன் அவர்கள் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார். அவரது நலிவடைந்த கண் பார்வை படிப்படியாக ஒளிபெற ஆரம்பித்தது. மூன்று மாத காலத்தில் அவர் கண்கள் முழுமையாகக் குணமடைந்து, பூரண பார்வை பெற்றார்!

ஆதாரம். திரு . ஹோவர்ட் மர்பெட் அவர்களின் "SAI BABA - Man of Miracles"
தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


🌻சாய்ராம்.... கண்ணப்ப நாயனார் தமது கண்களை எடுத்து ஈசனுக்கு சமர்பித்தார். அது பக்தரின் ஆத்மார்த்த பக்தி. நம் பர்த்தீச பாபாவோ பக்தரின் கண்களுக்கு மல்லிகை மலர்களை அப்பி, கண்ணப்பர் ஆனார். இது பக்தர்கள் மீதான பகவானின் அளவற்ற ப்ரேமையால் நிகழ்ந்தது! துயருற்றோர் கண்டவுடன், உளம் உருகி அருள் சுரந்து ரட்சிக்கும் பர்த்தீசன் பதம் பணிவோம். பாருலகில் நலம் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக