தலைப்பு

சனி, 8 அக்டோபர், 2022

நாங்கள் செய்த கடந்த ஜென்ம கர்மாவை நினைத்தாலே கவலை வருகிறதே.. இதிலிருந்து மீள என்ன வழி?

பழையவினை, முந்தைய பிறவிகளின் கர்ம பாக்கி, இனி வரவிருக்கும் பிறவிகள் என்பதை எல்லாம் எண்ணி எண்ணி சிந்தை வயப்பட்டு கலங்காதீர்கள்! நீங்கள் எப்போதும் உள்ள நிகழ் பொழுதிலேயே மனத்தை முழுமையாகச் செலுத்தி அதை ஜீவசக்தியுடன் பயன்பட வாழுங்கள்!


'நேற்று' என்கிற விருந்தாளி உங்களை ஏமாளியாக்கிவிட்டு எங்கோ தலைமறைவாகி விட்டார்! 'நாளை' என்கிற விருந்தாளி வருவாரா? மாட்டாரா? என்பது நிச்சயமில்லை! 'இன்று' என்கிற விருந்தாளி இதோ நல்ல நண்பராக உங்களிடம் பிடியுண்டிருக்கிறார்! அவரை கெட்டியாகப் பற்றிக் கொண்டு பயனடையுங்கள்!

சென்ற காலங்களையோ அல்லது வருகிற காலங்களைப் பற்றிய சிந்தனைச் சுமையில் வாடாமல் நிகழ்காலத்தைப் புத்தம் புது மலராக வாழ்வீர்களாயின் சிந்தனையே தூய்மையான பளிங்கைப் போலத் தெளிந்துவிடும்! இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் எண்ணிக் குழம்பியவர்கள், அந்தக் குழப்பத்தினாலேயே சென்று போனதில் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாமலும் ,வரப்போகும் எதையும் காணும் தீர்க்க திருஷ்டி இல்லாமலும் இருப்பார்கள்! ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாதவரோ இதனால் பெற்ற தெளிந்த புத்தியை கொண்டு நினைத்த மாத்திரத்தில் சகலத்தையும் நினைவு கோர முடியும்! எதிர்காலத்தையும் துளைத்துக் காண முடியும்! 


அர்ஜுனன் சுவாமியிடம் (ஸ்ரீ கிருஷ்ணரிடம்) "என்ன கிருஷ்ணா! நீ இப்படி சொல்கிறாய்? நீ பிறந்திருப்பதோ இப்போது! நீ எப்படி உனக்கு முன்பே பிறந்த மனுவுக்கு உபதேசம் செய்திருக்க முடியும்?" எனக்கேட்டு சுவாமி தானே சூரியனுக்கு முதன்முதலாக கீதை உபதேசித்ததாக சொன்ன செய்தியையும் கேள்விக்குள்ளாக்குகிறார் அர்ஜுனன்! 

அதற்கு சுவாமி...

"நேற்று நீ சரியாக இதே பொழுதில் என்ன செய்து கொண்டிருந்தாய்!" எனக் கேட்க..

"நினைவில் இல்லை...  கிருஷ்ணா" இது அர்ஜுனன்!

"சரி! சகுனி நடத்திய சூதாட்ட அனுபவம்?"

"அதை எப்படி மறக்க முடியும்?"

"சரி! துரௌபதி சுயம்வரத்தில் மீன் இலக்கை குறி வைத்து நீ அம்பெய்தினாயே! அது?"

"ஆஹா! அந்த சம்பவம் இன்னும் என் கண்ணில் நடமாடுகிறது!" 

"நல்லது, அரக்கு மாளிகை பற்றி எரிந்தது?" 

"அந்தக் கொடூரம் தானே! மறக்கக் கூடிய சம்பவமா?" 

இப்படி சுவாமிக்கும் அர்ஜுனனுக்கும் உரையாடல் நிகழ... 

"சரி அர்ஜுனா! நேற்று நிகழ்ந்தது நினைவில் இல்லை.. ஆனால் 13 ஆண்டுகளுக்கு நிகழ்ந்தது எல்லாம் உனக்கு நினைவில் இருக்கிறதே! இது எதனால் தெரியுமா?

 மனிதர்கள் நீங்கள் எவற்றில் தீவிரமாக கவனம் செலுத்துகிறீர்களோ.. எது உங்களுக்கு முக்கியமாக தோன்றுகிறதோ... அவை எல்லாம் உங்கள் நினைவை விட்டு நீங்குவதில்லை! அதுவே கனமாக உங்கள் மனதில் நிறைந்திருப்பதில் மற்ற நிகழ்ச்சிகள் மழுங்கடிக்கப்படுகின்றன...!

ஆனால் என்னைப் பார்! எனக்கு சிறிய விஷயம்- பெரிய விஷயம் என்ற பேதமில்லை! சாகச நிகழ்வோ சிறு நிகழ்வோ இரண்டுமே எனக்கு ஒன்றுதான்! மனிதர்கள் தனது கடந்த காலம் எதிர்காலம் பற்றிய நினைப்பாலும் அதில் ஏற்படும் பாதிப்பையும் கருதித் தான் சில விஷயங்களை பெரிதாக நினைத்து அவற்றில் மனதைப் பறிகொடுப்பதும்... மற்றவற்றை அற்பமாக நினைத்து மனதிலிருந்து நழுவவிடுவதும்...‌எனக்கோ இந்த பேதச்சுமையே இல்லை! எனக்கு யாவுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் தான் ஓர் எறும்பின் அசைவு உட்பட யாவற்றையும் கவனித்து நினைவில் வைத்திருக்கிறேன்!" என்கிறார் சுவாமி!

ஒரு ஓட்டப்பந்தய வீரர் குஷியாக ஓடிவருகிற போது காலில் கண்ணாடிச்சில்லு இறங்கி அந்த குஷி அடுத்த நொடியே மறைந்து விடுகிறது! மற்றொருவர் நோய் குணமாவதை உறுதி செய்வதற்கு ரத்தப்பரிசோதனைக்கு வருகிறார்.. அதற்கான ஊசியை சோதிப்பாளர் அருகில் கொண்டுவரும் போதே அவரின் விரல் நடுங்கி பின்னால் செல்கிறது! எதனால்? ஊசி தன்னை குத்தப்போகிறது என்ற முன்கூட்டியே ஏற்படும் நினைவால்...

ஆக துன்பத்தை முன்கூட்டியே நினைத்து வேதனையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை! எல்லாவற்றையுமே முன்கூட்டிய நீங்கள் கற்பனை செய்து அனுமானிக்கிற போது வரவிருப்பது இன்பமாக இருந்தாலும் கூட அதில் ஏற்படும் Thrill'லை (மகிழ்வுக்கிளர்ச்சி) அது அழிக்கவே செய்துவிடுகிறது! அதேபோல் நீங்கள் எதிர்ப்பார்த்த நிகழ்வு எதிர்ப்பார்த்ததை விட குறைவாக நிகழும் போது அதனால் பெறக்கூடிய மகிழ்ச்சியைக் கூட பெறமுடியாமல் போய்விடுகிறது!


(ஆதாரம்: அறிவு அறுபது/ பக்கம் : 89-93/ ஆசிரியர்: அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக