தலைப்பு

செவ்வாய், 4 அக்டோபர், 2022

பிரம்மஸ்ரீ கண்டிகோட்ட சுப்ரமண்ய சாஸ்திரி | புண்ணியாத்மாக்கள்


1986ம் ஆண்டு விஜயதசமி அன்று சுவாமி தன்னுடைய தெய்வீகப் பேருரையில் கூறியதாவது, "மக்களுக்கு இன்று எந்திரங்கள் மீது நம்பிக்கை இருக்கிறதே ஒழிய மந்திரங்களில் இல்லை! வேத மறுமலர்ச்சி நடந்தே ஆகவேண்டும் ... நடந்தே தீரும் ! அதன் தொடர்பாகவே 'ஸ்ரீ சத்ய சாயி கண்டிகோட்ட சுப்ரமண்யா வேத சாஸ்திர பரிஷ்யத்இன்று  முதல் துவங்குகிறது என நான் அறிவிக்கிறேன்". இப்படியொரு மாபெரும் அறிவிப்பில் சுவாமியுடன் தனது பெயரும்  இணையும்படியான புண்ணியம் வாய்த்த  ஸ்ரீ கண்டிகோட்ட சுப்ரமண்ய சாஸ்திரி அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை  புண்ணியாத்மாக்கள் வரிசையில் காணவிருக்கிறோம்... 

 🌷வேத உத்தாரணம்:

வேத தர்மம் மற்றும் அதிகாரம் படிப்படியாக குறைந்து வருவதைக் குறித்து ஆழ்ந்த கவலை கொண்ட பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா, ஸ்ரீ கண்டிகோட்ட சுப்ரமணிய சாஸ்திரி வேத சாஸ்திர பரிஷத்தின் தொடக்க விழாவில் விஜய தசமி (14-10-1986) அன்று தனது சொற்பொழிவில் தனது வேதனையை வெளிப்படுத்தினார். "பாரதத்தின் கலாச்சாரம் பல தலைமுறைகளாக உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படுகிறது, இருப்பினும் காலத்தின் ஏற்ற இறக்கங்களாலும், மனிதனின் மாறிவரும் மனோபாவங்களாலும் வேதத்தின் அதிகாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இன்று உபநிடதங்கள், வேதங்களின் உள் அர்த்தங்களை  எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நல்ல மனிதர்களும் அரிதாகிவிட்டனர்..வேதங்களுக்கு புத்துயிர் அளிக்கும் பணியை இப்போதே செய்யாவிட்டால் பாரத தேசத்திற்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வேத அதிகாரம் குறைந்தால் (பாரதீயர்களின் இருப்பு வேதங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதால்) பாரதத்தின் பெருமையே குறையும். அதனால்தான் வேதங்களின் மறுமலர்ச்சியை சத்திய சாயி அமைப்புகள் மேற்கொண்டுள்ளன”.

வேதங்களின் மறுமலர்ச்சிக்கான, பகவான் பாபாவிவினுடைய   அவதாரப் பணியில் முக்கியப் பங்காற்றிய ஸ்ரீ கண்டிகோட்ட சுப்ரமணிய சாஸ்திரிகள் அவருக்குரிய புகழையடைந்து, தனது வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொண்டவர். அவர் இந்தியாவின் இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயநகரம் சமஸ்தானத்தில் கவிஞராக அங்கீகரிக்கப் பட்டவர். அவர் வேதங்கள், வேதாங்கங்கள் (வேத அறிவியல் ) மற்றும் சாஸ்திரங்களிலும்  அறிஞராக விளங்கினார். சமஸ்கிருத மொழியில் புகழ்பெற்ற கவிஞாராகத் திகழ்ந்த அவர்  'அபிநவ வித்யாரண்யா' போன்ற உயரிய பட்டங்களைப் பெற்றிருந்தவர். அவர் ஒரு எழுத்தாளர்; ராமாயணம் போன்ற இதிகாசங்களுக்கு பாஷ்யம் (விரிவுரை) இயற்றியவர்.  இவை அனைத்தையும் விட, அவர் பகவான் ஸ்ரீ சத்யசாயி  பாபாவின் தெய்வீக சங்கல்பத்தில் விளைந்த பிரசாந்தி வித்வான் மகா சபையின் (வேத அறிஞர்களின் சபை) நிறுவனர் உறுப்பினராக இருந்தார்.


🌹சாஸ்திரிகளின் சர்வதேவதாஸ்வரூபன்:

ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகளுக்கு 1962ம் ஆண்டு முதல் முறையாக பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்யும் நல்லதிர்ஷ்டம் அமைந்தது. அவர் பகவான் பாபாவை 'சர்வ தேவதாஸ்வரூப' (தெய்வீகத்தின் அனைத்து வடிவங்களின் உருவகம்) என்று வணங்கினார். அடுத்த பத்தாண்டுகளில், அவர் 'ஸ்ரீ சத்யசாயி அவதார வைபவம்' மற்றும் 'ஸ்ரீ சத்யசாயி வேதவாணி' ஆகிய இரண்டு புத்தகங்களை தெலுங்கில் எழுதினார், இது பகவானின் மகிமையையும் வேத மறுமலர்ச்சிக்கான அவருடைய நிகழ்ச்சிகளையும் சித்தரிக்கிறது. மேலும்  'சனாதன சாரதி' மற்றும் 'ஸ்ரீ சத்யசாயி விஜயம்' மாத இதழ்களுக்கும் பல கட்டுரைகளை அளித்துள்ளார்.


பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா, ஒரு சந்தர்ப்பத்தில், தனது தெய்வீகக் கரங்களால் ஒரு சிவலிங்கத்தை வரவழைத்து, ஸ்ரீ சாஸ்திரியிடம் கொடுத்தார். அது ஸ்ரீ சத்ய சாயீஸ்வரரின் உண்மையான இயல்பைக் குறிக்கும் ஆத்மலிங்கம். ஸ்ரீ சாஸ்திரிகளுக்கு அந்த சிவலிங்கத்தைக் காட்டி, பகவான் "ச' என்றால் சிவன் (அப்பன்/தலைவன்) 'ஆயி' என்றால் அம்பா (தெய்வீக தாய்) என்று விளக்கினார். '' மற்றும் 'ஆயி' எனும் இரண்டும் ஒன்று சேர்ந்தால் அது சாயி ஆகிறது; லலிதா சஹஸ்ரநாமம் இந்த விளக்கத்தை அங்கீகரிக்கிறது. எனவே 'சாயிபாபா' என்ற சொல் 'சாம்பசிவா', சிவபெருமான் மற்றும் அவரது துணைவியைக் குறிக்கிறது.


பிரசாந்தி நிலையத்தில் நடந்த சங்கர ஜெயந்தி விழாவின் போது, ​​ஸ்ரீ கண்டிகோட்ட சுப்ரமணிய சாஸ்திரிகள், "சத்யசாயி” என்ற பதத்தின் முக்கியத்துவம் மற்றும் அர்த்தத்தை, பிரம்மா, விஷ்ணு, காயத்திரி ஆகிய மூன்று கோணங்களில் விளக்கினார். மேலும் பகவான் எடுத்துரைத்த லலிதா சஹஸ்ரநாம விளக்கங்களையும் மேற்கோள் காட்டினார். விழாவிற்கு வந்திருந்த பண்டிதர்கள்... சாஸ்திரி அவர்களின் விளக்கங்களின் மூலம், பகவானின் எங்கும்நிறைத் தன்மையை க் குறித்து புரிதலேற்பட்டு வாயடைத்துப் போயினர்; பகவானை 'விஜ்ஞான நிதி' (அனைத்து அறிவின் களஞ்சியம்) என்று கண்டுகொண்டனர். 


🌹மந்த்ர த்ருஷ்டா:

மந்திரங்கள் என்பது ஒரு பாடலை/கவிதையைப்  போல இயற்றப்படுவது அல்ல. உண்மையில் மந்திரங்களை யாராலும் இயற்ற முடியாது, அவைகள் இந்தப் பிரபஞ்சத்தின் மூல அறிவில் எப்போதும் உறைந்துள்ளவை. ஒரு ஜீவாத்மா தன்னை ஒரு ரிஷியின் நிலைக்கு உயர்த்திக் கொள்ளும்போது, அவரின் விழிப்புநிலை மந்திரங்களைக்  காண்கிறது. அப்படி மந்திரங்களைத் தனக்குள் கண்டுகொள்பவர்களே "மந்த்ர த்ருஷ்டா" எனப்படுபவர்கள். ஒரு மந்திரத்தை தன் சுயத்துள் தரிசனம் செய்து மற்றவர்களின் உபயோகத்திற்கும் ப்ரசாதிப்பவரே அந்த மந்திரத்திற்கு உரிய  ரிஷி எனப்படுகிறார். இது புதிய விளக்கமல்ல; பல நூற்றாண்டுகளாக நம் சம்பிரதாயத்தில் உணர்ந்து உரைக்கப்படுகின்ற  சத்தியமே!. வேதங்களைக் குறித்து அதன் மரபுக்களாகக் கூறும்போது ஸ்ருதி மற்றும் ஸ்மிருதி  என்று பண்டிதர்கள் கூறுவதை அறிவோமல்லவா? ஸ்ருதி என்பது கேட்டது (அல்லது) வெளிப்படுத்தப்பட்டதான வேதம். ஸ்மிருதி என்பது நினைவு (அல்லது) நினைவில் நிறுத்திவரப்பட்டதான உபநிஷதங்கள்.

பிரபஞ்சத்தில் அதன் இயல்பிலேயே உறைந்துள்ள மந்திரங்களின் அதிர்வலைகளைத் தன்னுள் உணர்ந்து, தரிசித்து பின்னர் வெளிப்படுத்துகின்ற மகாபாக்யம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அதிலும் குறிப்பாக காயத்ரி மந்திரங்களை வெளிப்படுத்துதல் மாபெரும் பாக்கியம். விசுவாமித்திரர் என்ற சொல்லுக்கு "பிரபஞ்ச நண்பன்" என்று பொருள்; மூல காயத்ரி மந்திரத்தை இவர் வெளிப்படுத்தியதால் கிடைத்த மாபெரும் பட்டம் அது. மற்றபடி அவருடைய இயற் பெயர் கௌசிகன் ( கன்யாகுப்ஜா (அல்லது) கன்னோஜ் பிரதேசத்தை ஆண்ட மன்னர் அவர்)


விஷ்ணுபுராணத்தின்படி... சத்ய, த்ரேதா, துவாபர, கலி என்ற நான்கு யுகங்கள் கொண்ட கால அளவைச்  சதுர்யுகம் என்கிறோம். இப்படி 71 சதுர்யுகங்கள் சேர்ந்தால் ஒரு மன்வந்திரம் எனப்படும். ஒவ்வொரு சதுர் யுகத்திலும் அந்தந்த த்ரேதா யுகத்தில் ஸ்ரீ ராமரை ஒத்த அவதாரம் நிகழ்கிறது; துவாபர யுகத்தில் க்ரிஷ்ணாவதாரத்தை ஒத்த அவதாரம் நிகழ்கின்றது;  ஆனால் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்தச் சதுர்யுகத்தில் தான் பூர்ணாவதாரம் ஸ்ரீ சத்யசாயி எனும் அவதாரம் நிகழ்ந்துள்ளது. அப்படிப்பட்ட இணையில்லா ஆதிமூல ஸ்ரீ சாயி தேவனுக்கு காயத்ரி மந்திரம் இயற்றிச் சொல்லும் தெய்வீகப் பெரும் பாக்கியம் பெறுவதற்கு ஒருவர் என்ன தவம் புரிந்திருக்க வேண்டும்?

அந்தப் பவித்திரமான பாத்திரத்தைப் பெற்ற புண்ணியாத்மா தான் பிரம்மஸ்ரீ கண்டிகோட்ட சுப்ரமண்ய சாஸ்திரி அவர்கள். அவர் சுவாமியின் திருமுன்னர் "சாயி காயத்ரி" மந்திரத்தை வெளியிட்ட சம்பவத்தை பகுதி-2ல் காணலாம். 
 
பகுதி-1ல் நாம் கண்டது போல ஒவ்வொரு மந்திரத்திற்கும் (அதைத் தனக்குள் தரிசித்த) ஒரு ரிஷி உண்டு. ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதற்குரிய சந்தஸ் (Vedic meter) உண்டு. வேத சந்தஸ்கள்… மந்திரங்களில் எத்தனை அடிகள், பதங்கள், எழுத்துக்கள் (அட்சரங்கள்) இருக்க வேண்டும் என நிர்ணயிக்கிறது. ஏழு வகையான சந்தஸ்களில், காயத்ரி மதிரத்தின் சந்தஸ் என்பது  மூன்று அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்களுடன் மொத்தம் 24 எழுத்துக்களுடன் கூடியதாகும். ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதற்குரிய தேவதை உண்டு. தேவதை என்பது வெறுமனே ஒரு தெய்வ வடிவம் அல்ல; மாறாக அந்த மந்திரத்தின் உருப்பெற்ற (Manifested) வடிவாகும். அதே போல, மந்திரம் என்பது அந்த தேவதையின் அரூபமான (Un-manifested) சக்தியின் அதிர்வலையாகும். ஆக சத்யசாயி பரப்ரம்மத்தின் காயத்ரி மந்திரம் என்பது ஒப்பிட்டு சொல்ல முடியாத மகாமந்திரம் என்பதில் ஐயமில்லை.


🌹 சாயி காயத்ரி மந்திரம்:


ஓம்சாயீஸ்வராய வித்மஹே
சத்ய தேவாய தீமஹி
தந்ந: ஸர்வ ப்ரசோதயாத்

மந்திரத்தின் பொருள் பின்வருமாறு:

1. சாயீஸ்வராய வித்மஹே - - - “குருக்கள், ஸ்ருதி, ஸ்மிருதி மற்றும் சாஸ்திரங்கள்  மூலமாகவும், அதைவிட முக்கியமாக ஸ்ரீ சத்யசாயிஈஸ்வரன் (கடவுள்என்பதை நேரடி அனுபவத்தின் மூலமாகவும் நான் அறிந்திருக்கிறேன்!”

2. சத்ய தேவாய தீமஹி - - - “சத்தியத்தின் திருவுருவமான ஸ்ரீ சாயி, பரபிரம்மம் (பரமப்பெருமான்), பரம ஜோதி (உயர்ந்த தெய்வீகப் பிரகாசம்) மற்றும் பரமேஸ்வரரை  (சர்வவல்லமையுள்ள இறைவன்) நான் எப்பொழுதும் நல்ல சிந்தனைகளிலும், செயலிலும் ஈடுபடும்படியாக என் புத்தியை பிரகாசிக்கச் செய்ய பிரார்த்திக்கிறேன்

3. தந்ந: ஸர்வ ப்ரசோதயாத் - - -ஸ்ரீ சத்ய சாயியின் தெய்வீக வடிவமான சத்ய ஸ்வரூபம் (உண்மையின் உருவகம்), சர்வதேவதா ஸ்வரூபம் (அனைத்து தெய்வீகத்தின் உருவகம்) மற்றும் சர்வ ஜகத் வியாபகம் (முழு பிரபஞ்சமும் வியாபித்துள்ளது) என்று தியானிக்கிறேன்."

ஸ்ரீ சத்யசாயிஈஸ்வரன் (கடவுள்) என்பதை நான் அறிந்திருக்கிறேன்

சத்தியத்தின் திருவுருவமான ஸ்ரீ சாயி இறைவன் என் புத்தியை பிரகாசிக்கச் செய்ய பிரார்த்திக்கிறேன்

ஸ்ரீ சத்ய சாயியின் ஸ்வரூபம் முழு பிரபஞ்சமும் வியாபித்துள்ளது என்று தியானிக்கிறேன்.

 

🌷மந்திரம் பிற்ந்த மகிமை தினம்:

ஸ்ரீ கண்டிகோட்ட சுப்ரமணிய சாஸ்திரி, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தெய்வீக சந்நிதியில் “சாயி காயத்திரி” மந்திரம் வெளிப்பட்ட அந்த மகிமையான நாளில்,  அவருக்கேற்பட்ட தெய்வீக அனுபவத்தை அவரே பின்வருமாறு விவரிக்கக் காணலாம்.


 "இடம், பெங்களூருவில் உள்ள த்ரயீ பிருந்தாவனம். பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா, ஒரு சில பக்தர்கள் மற்றும் அவரது மாணவர்களிடையே மயக்கும் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். அது டிசம்பர் 24, 1977 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய தினம். அந்தி சாயும் நேரம், பசுக்கள் மேய்ச்சலில் இருந்து இருப்பிடம் திரும்புகின்ற அழகிய பொன்மாலைப் பொழுது. சூரிய அஸ்தமனம் பிருந்தாவன் வளாகத்தில் மஞ்சள் மற்றும் சிவப்பு கிரணங்களைக்கொண்டு புதிய வண்ணங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தது.  அந்தப் பகுதி முழுவதையும் மாலைக் காற்றும் வானின் வர்ணமும் சொர்க்கமாக மாற்றியிருந்தது.பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா, மஞ்சள் பட்டு அங்கி அணிந்திருந்தார், அவரது அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்; ரத்தினங்கள் பதித்த அற்புத சிம்மாசனம். மஹாவிஷ்ணு தனது பக்தர்களான சனகா, சனந்தனா முனிவர்களுடன் இருக்கும் காட்சிக்கொப்ப  சுவாமியைச் சுற்றி பக்தர்கள், கல்லூரி ஆசிரியர்கள்,  அறிஞர்கள், உத்தமமான பெண்கள் மற்றும் மாணவர்கள் இருந்தனர். பகவான் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும்  என்னை நோக்கி  திரும்பினார். ‘பங்காரு! நீ பேசு!’, அந்த அமிர்த வார்த்தைகள் என் புத்தியைத் தூண்டி, திடீரென்று என் மனதில் ஏதோ பளிச்சிட்டது. அதன் விளைவுதான் எனக்கு சாயி காயத்திரி மந்திரத்தின் தரிசனம்!”


🌷பூரண வாழ்வு வாழ்ந்த புண்ணியவான்:

தொடக்ககாலத்தில் ஒருநாள் சுப்பிரமணிய சாஸ்திரி அவர்கள்


சுவாமியிடம், “நீங்கள் யார்?” என்று கேட்டபோது, ​​சுவாமி, “என்னுடைய நிஜ உருவத்தைப் பார்க்க விரும்புகிறாயா?” என்றவாறு சாயியும் சிவனும் ஒன்று என்பதைக் காட்டும் ஒரு அழகான படத்தை வரவழைத்துக் கொடுத்தார் .

மாநிலம் போற்றும் வேதசாஸ்திர பண்டிதராக உள்ள ஒரு மகானுபாவர், வெகுஜனங்களால் இன்னமும் புரிந்துகொள்ளப்படாத ஒருவரைக் கடவுள் என்று கண்டுகொண்டு பிறர்க்கும் அறிவிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. பின்னர் ஸ்வாமியின் தெய்வீக சமீபத்தில் பிரசாந்தி நிலையத்தில் தனது வாழ்க்கையின் பிற்பகுதியைக் கழித்தார். நூறுவயதை எட்டிய சாஸ்திரிகள், 1986ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, தசரா திருவிழாவின் முதல் நாள் அதிகாலையில் தனது உலகவாழ்வை நிறைவு செய்தார்.

 

பல தசாப்தங்களாக வேத தர்மத்தின் பரவலுக்காக ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் ஆற்றிய மகத்தான சேவையை அங்கீகரிக்கும் வகையில், பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்கள் 1986 அக்டோபர் 14 அன்று… பகவான் தனது தெய்வீகப் பேருறையில், "ஸ்ரீ கண்டிகோட்ட சுப்ரமணிய சாஸ்திரிகள் வேதங்களில் முழுமையாக பழுத்த பழம். நூறு ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். வேதங்கள்உபநிடதங்கள் மற்றும் அதன் உள்ளர்த்தங்களை விளக்கும் சிறந்த வேத அறிஞராக இருந்தார். அவருடைய புலமை பெரும் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.

அவர் தனது வாழ்க்கையை வேதத்தின் அடிப்படையில் மட்டுமல்லமிகுந்த பக்தியுடனும் சரணாகதியுடனும் புனிதப்படுத்தினார். சுவாமி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அனைத்து வேதங்களின் சாரத்தையும் எடுத்துரைக்கக் கூடிய சிறந்த அறிஞராக இருந்த போதிலும்சத்யசாயி சர்வதேவதா ஸ்வரூபம் என்ற உண்மையை உணர்ந்து… சுவாமியின் தெய்வீக சந்நிதியில் தனது வாழ்வின் கடைசி ஆண்டுகளைக் கழித்தார். அந்த அளவுக்கு சுவாமி மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஸ்ரீ சாஸ்திரிகள் தூய்மையான மற்றும் அன்பான இதயத்தை கொண்டிருந்தார். எனவேஅவருக்கு அமரத்துவத்திற்கான உரிமையுண்டு. அவருடைய இலட்சியங்களையும்உன்னத குணங்களையும் முன்மாதிரியாகப்   பின்பற்றிஉலகின் மூலை முடுக்கெல்லாம் வேதங்களைப் பரப்புமாறு அனைவரையும் நான் அறிவுறுத்துகிறேன்”. பகவானிடமிருந்து வரும் ஒரு அசாதாரணமான பாராட்டு அது!


சுவாமியின் வழிகாட்டுதலின் பேரில்... உலக நன்மைக்காக நிகழ்த்தப்படும் யக்ஞங்கள், வேத பாராயணங்கள், மந்திர ஜெபங்கள் தொடர்பான சேவைகளின் மூலம்  வேத உத்தாரணம் (வேத தர்மத்தை உயர்த்துதல்)  செய்யும் ஒவ்வொருவரும் சுவாமியின் பாராட்டுக்கு மட்டுமல்லாமல் அமிர்தத்துவத்திற்கும் நிச்சயம் உரிமையுள்ளவர்களே! 

 

மூலம் : சாயி இலக்கியங்கள் மற்றும் இணையம்

✍🏻 கவிஞர்.சாய்புஷ்கர், பர்த்தி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக