தலைப்பு

புதன், 2 நவம்பர், 2022

மரணத்தை நினைத்து பயப்படுகிறதே மனம், பிறர் மரணமடைந்தால் அழுது புலம்புகிறதே... மரணம் அமங்களமா?

இயற்கையின் தவிர்க்க முடியாத விதிகளில் ஒன்று மரணம்! அது நமது கர்மாவை அனுசரித்தே உடல் தர்மமாக அமைக்கப்பட்ட ஒன்று! தாவரங்களும் பிறந்து அழிகின்றன... பிறக்கும் எதுவும் இறக்கவே செய்யும்! இந்த நிலையற்ற உலகமும் ஒருநாள் அழியவே செய்யும்! ஆக்கல் அளித்தல் அழித்தலே பரமாத்மாவின் லீலை! இறைவனே ஆக்குவதும் அழிப்பதும் எற்பதால் அவனுக்கே அழிக்கவும் உரிமை உண்டு!

மரணத்தைத் தவிர்க்க முயல்வதில் பயனில்லை! எவராயினும் அதற்குப் பணிய வேண்டியவரே! இடுகாட்டை நோக்கிய பயணம் என்பது இறுதி நொடியில் அல்ல பிறக்கின்ற முதல் நொடியிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது! 

உண்மையில் நீங்கள் உடலல்ல.. உடலில் உறைந்திருக்கும் ஆன்மாவே! மரணம் உடலுக்குத்தான் உண்மையான உங்களுக்கல்ல அதாவது ஆன்மாவுக்கல்ல! இந்த ஆடிட்டோரியத்தில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள்.. இந்த ஆடிட்டோரியத்தை இடித்துவிட்டால் அதை உங்களது மரணமாக எண்ணுவீர்களா? இல்லை சௌக்கியமாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைத் தானே செய்வீர்கள்!


உடல் சாவது நிரந்தர அழிவாக வேண்டும்! அந்த அழிவு இனிமேல் பிறக்கவே கூடாது என்பதற்கான பேரழிவு! உடல் எடுப்பதற்கு காரணமாகிய கர்மாவை பாக்கியில்லாமல் தீர்ந்துவிட்டு நீங்கள் அனைவரும் பிறவாமல் இருக்க வேண்டும்! அதை இப்போதிலிருந்தே முயல வேண்டும்! உடம்பை அழியாமல் யாராலும் காப்பாற்ற இயலாது... தேவையில்லாத பாச இழைகளை ஆன்மாவைச் சுற்றி இறுக்கி இறுக்கி கட்டுகளைப் பிணைத்துக் கொள்ளாமல் வாழ இப்போதிலிருந்தே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்!

உடல் அழிவதற்கான காலம் வரும் போது "ஆஹா! பாசம் எல்லாம் அறுத்தோம்! கர்மா யாவும் கழித்தோம்! இந்த உடல் கூண்டிலிருந்து உயிர்ப்பறவை ஆனந்தமாக வெளியேறப் போகிறது! " என்று பேரானந்தமோடு மரணத்தை நீங்கள் வரவேற்க வேண்டும்! காலன் என்பவன் யார்? காலம் தான்! 

கால பாசம் என்றால் யாரோ ஒருவன் நம்மீது பாசக் கயிறு வீசுகிறான் என்பதல்ல அர்த்தம்! உங்கள் உடல் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றே பாசமே காலம் பாசம் எனப்படுகிறது! ஆன்மாவை நாம் என உணராமல் மறந்து இருப்பதே கால பாசத்தால் சாவது! உடலே நாம் என நினைத்து வாழும் மக்களை உபநிஷத் "ஆத்மநஹோ ஜனா:" (ஆன்மாவைக் கொன்ற மக்கள்) என அழைக்கிறது!


உடல் வெறும் கூடே ... மரணத்தில் அது உடைபடுகிறது.. உயிர்ப்பறவை மெல்ல பறக்கிறது! காலம் அதற்கான பணியை மெல்ல மெல்ல செய்து கொள்கிறது! உடல் இறக்கையில் பயப்படவோ அது அமங்களம் என்றோ நீங்கள் நினைக்கத் தேவையே இல்லை! கல்யாணம் , பண்டிகை போன்ற சமயங்களில் சாவு என்ற வார்த்தை கேட்டாலே ஏன் நீங்கள் காதுகளை பொத்திக்கொண்டு அமங்களம் என நினைக்க வேண்டும்? அது அறியாமை! அது தேவையற்றது! சிவ என்கிற நாமம் மங்களத்தை உணர்த்தக் கூடியது... அதே சிவனே அழிக்கும் கடவுளாகவும் இருக்கிறார்! இதனை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்! 

பீஷ்மர் தான் நினைத்த போதே மரணம் அடைந்தார்! ஸ்ரீ கிருஷ்ணர் முக்தி அளித்தார்! அம்புப் படுக்கையில் உடல் உணர்வற்று, துன்பம் தெரியாமல் ,பாண்டவர்க்கு 'சாந்தி பர்வம்' என்கிற தர்ம உபதேசம் செய்து கொண்டே உயிர்ப் பிரிந்தார்! 

அது போல் நீங்கள் 'உடலே நான்' என்கிற அறியாமையிலிருந்து வெளியே வந்து கண்ணன் மோட்சமளிக்கும் நிலையில் உடற்பற்று அற்று இந்த உலகை நீங்கள் ஆனந்தமாகப் பிரிய வேண்டும்! பிரியா விடை தரவேண்டும்! 

ஆக எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் பயமின்றி நீங்கள் மரணம் எய்த வேண்டும்!

கடைசி காலத்தில் தெய்வ நாமம் சொல்லிக்கொண்டு இறந்தால் தெய்வத்தையே அடையலாம் என்று உபன்யாசகர் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க... அதனை போகிற வழியில் கேட்கிறார் ஒரு தனவந்தர்... சரி கடைசி காலத்தில் மட்டும் ஓரிரு முறை சொன்னால் போதும்.. இப்போது தேவையில்லை என வாழ்ந்து வருகிறார்... காலம் கடந்து போகிறது.. அந்த தனவந்தரோ சாவுப்படுக்கையில்..

"கோவிந்தா" என கூப்பிடுகிறார்‌..

"பக்கத்துல தானப்பா இருக்கிறேன்!" என்கிறான் மகன்! 

"நாராயணா!" மீண்டும் அழைக்கிறார்..

"நானும் இருக்கிறேனப்பா!" இது இன்னொரு மகன்... 

"கேசவா" என மீண்டும் ... "இருக்கேன்!" இது மூன்றாவது மகன்... "மதுசூதனா?" "வந்தாச்சுப்பா!" 

"நாலு பேரு இங்க வந்துட்டா... கடை என்ன ஆவது? யாரு போய் கவனிப்பது?" என்று சொல்லிக் கொண்டே இருக்கையில் பரிதாபகரமாய் பணமே வாழ்க்கை என்று வாழ்ந்த அந்த தனவந்தனின் உயிர்ப் பிரிகிறது! 


இறைவன் முன் மனிதனின் தந்திரம் பலிக்குமா? 

வாழ்நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை உச்சரிக்காவிட்டால் மரணத்தருவாயில் இறைவனின் நாமம் உங்களின் நினைவில் தோய்ந்து உங்களிடம் இறைவனை கொண்டு நிறுத்தவே நிறுத்தாது!


(ஆதாரம்: அறிவு அறுபது/ பக்கம் : 93-97/ ஆசிரியர் : அமரர் ரா.கணபதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக